இந்த நட்பு காதலாக மாறலாம்! அஞ்சலி Open Talk



சூர்யா - ஜோதிகா போல அடுத்த ஜோடி ஜெய் - அஞ்சலி என கிசுகிசுக்கிறது கோடம்பாக்கம். ‘‘எங்களுக்கு இடையே நல்ல நட்பு இருக்கு. அது காதலா மாறினாலும் மாறலாம்!’’ என ஜெய்யும் சின்ன க்ளூ கொடுத்திருந்தார்.

இதற்கு அஞ்சலி தரப்பு பதில்..? அதற்கென்ன... கேட்டுட்டா போச்சு. ‘ஆல்வேஸ் ஃப்ரெண்ட்லி ஹீரோயின்’ அஞ்சலி. எதைக் கேட்டாலும் மழுப்பாமல், நறுக்கென்று பதில் வரும்.‘‘ஐதராபாத்லயே செட்டில் ஆகிட்டீங்களா அஞ்சலி?’’

‘‘ஹலோ... நான் எங்கே ஐதராபாத்ல இருக்கேன்? எப்பவும் ட்ராவல்லதானே இருக்கேன். தெலுங்குப் பட ஷூட்டிங் கூட இப்ப பெரும்பாலும் ஐதராபாத்ல நடக்குறதில்ல. தமிழ்லேயும் படங்கள் பண்றதால மோஸ்ட்லி சென்னையிலதான் இருக்கேன். இப்பல்லாம் நான் ஐதராபாத்ல அதிக பட்சம் ரெண்டு நாள் தங்கியிருந்தாலே, பெரிய விஷயமாகிடுச்சு!’’

‘‘ ‘அங்காடித்தெரு’ மாதிரி பர்ஃபார்ம் பண்ற அஞ்சலியை இப்போ காணோமே..?’’‘‘அந்த அஞ்சலி எங்கேயும் போயிடல. ‘கற்றது தமிழ்’ அப்போ சினிமா பத்தி எனக்கு அவ்வளவா தெரியாது. கொஞ்சம் கொஞ்சமா கத்துக்கற டைம்ல ஒரு சின்ன இடைவெளி விழுந்திடுச்சு.

அதுக்காக யார் மீதும் பழி சொல்ல முடியாது. அந்த இடைவெளிக்குப் பிறகு கமர்ஷியல் பட வாய்ப்புகள் வந்துச்சு. கிளாமர் ரோல் பண்ணினேன். நல்ல நேரம் தொடங்கிச்சு. ‘கற்றது தமிழ்’,  ‘அங்காடித்தெரு’வுக்குப் பிறகு மறுபடியும் என்னை நிரூபிக்கற மாதிரி கேரக்டர்கள் தெலுங்கில் நிறைய வர ஆரம்பிச்சிருக்கு.  

இப்ப ‘இறைவி’யில் என்னோட கேரக்டர் பேசப்படும். கார்த்திக் சுப்புராஜ் படத்தோட கதையைச் சொல்லும்போதே, சேலஞ்சிங்கான ஸ்கிரிப்ட்டா தெரிஞ்சுச்சு. எஸ்.ஜே.சூர்யா, விஜய் சேதுபதி, பாபிசிம்ஹானு மூணு பேரும் ஈகோ இல்லாமல் நடிச்சிருக்காங்க. எல்லாரோடவும் எனக்கு காம்பினேஷன் சீன் இருந்தது. ஒரு நல்ல படத்துல நடிச்ச திருப்தியான ஃபீல்.

தெலுங்கில் ‘சித்ரங்கதா’, முழுக்க முழுக்க ஹீரோயின் ஃபிலிம். அதுக்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கேன். தமிழ்ல கூட அது, ‘யார் நீ’னு வருது. அந்தப் படத்தோட பெரும்பகுதி அமெரிக்காவில் ஷூட் பண்ணினாங்க! அடுத்து ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கத்தில் ‘தரமணி’, ‘பேரன்பு’ படங்கள்ல நடிக்கறேன். ‘பேரன்பு’வில் மம்மூட்டி சார் நடிக்கறார். எனக்கு அதில் ரொம்பவே அசத்தலான கேரக்டர்!’’‘‘எப்படி இருந்துச்சு, அமெரிக்கா ட்ரிப்?’’

‘‘முதல் தடவையா ‘சித்ரங்கதா’ ஷூட்டிங்குக்காகத்தான் அமெரிக்கா போனேன். நாங்க போனப்ப கடுமையான பனிப்பொழிவு. தங்கி யிருந்த ஹோட்டல், கார் எல்லாத்தையும் பனி மூடிடுச்சு. அதைப் பார்த்ததும் எனக்கு உதறல்.

கதைப்படி நான் அமெரிக்காவில் இருக்கற பொண்ணுங்கறதால, ஒரு மாசத்துக்கு மேல அங்க தங்க வேண்டியிருந்தது. ரெண்டாவது நாள்ல இருந்து அந்த ஸ்நோ, வின்டர் எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பிச்சிட்டேன்!’’
‘‘தெலுங்கில் பேய்ப்பட டிரெண்டை துவக்கி வச்சது நீங்கதானே?’’

‘‘அதுல ரொம்ப சந்தோஷம்தான். ரெண்டு வருஷத்துக்கு முன்ன வந்த ‘கீதாஞ்சலி’... தெலுங்கில் ஹீரோயின்கள் பொதுவா கமர்ஷியல், மசாலா படங்கள்தான் பண்ணுவாங்க என்ற இமேஜை மாத்தின படம்.  அந்தப் படத்துக்கு அப்புறம்தான் நிறைய ஹீரோயின்கள் அதுமாதிரி கேரக்டர்கள் பண்ணணும்னு விரும்பினாங்க. ‘கீதாஞ்சலி’யில் நான் பேயா நடிச்சிருந்தாலும், நிஜத்துல பேய்க்கு பயப்பட மாட்டேன். தைரியமான பொண்ணு நான்!’’
‘‘சம்பளம் அதிகம் கேக்கறீங்கன்னு...’’ 

‘‘அப்படியெல்லாம் இல்லீங்க. நயன்தாரா மாதிரி நானும் சம்பளம் கேக்கறேன்னு கூட  மீடியாக்கள்ல செய்தி வந்ததா, கேள்விப்பட்டேன். சம்பளத்தை பெருசா நினைச்சிருந்தா, ‘அங்காடித்தெரு’, ‘எங்கேயும் எப்போதும்’ மாதிரி படங்கள்ல என்னை நீங்க பார்த்திருக்க முடியாது.

இவ்ளோ பிரச்னைகளுக்குப் பிறகும் நல்ல கதைகளோடு இயக்குநர்கள் என்னைத் தேடி வர்றாங்க. எனக்கான சம்பளத்தைத்தான் வாங்குறேன். நல்ல கதைக்காக என்னோட சம்பளத்தைக் கூட விட்டுக் கொடுத்திருக்கேன். அதைப் பத்தியெல்லாம் வெளிப்படையா பேசறது சரியா இருக்காது!’’‘‘எப்படி இருக்கு சம்மர்?’’

‘‘ஒவ்வொரு சம்மரிலும்  ஷூட்டிங்கில் இருந்து சின்னதா ஒரு பிரேக் எடுப்பேன். அழகழகான கடற்கரை ஏரியாக்கள், குளிர்ப்  பிரதேசங்கள்னு மனசை ரம்மியமாக்குகிற  இடங்களுக்குப் போய் கொஞ்சம் ரெஃப்ரஷ்  ஆகுறது ரொம்பப் பிடிக்கும். போன சம்மர்ல ஷூட்டிங்குக்காக சுவிட்சர்லாந்து போக வாய்ப்பு வந்துச்சு. இந்த  சம்மருக்காக சில சில்அவுட் ஐடியாஸ் யோசிச்சு வச்சிருக்கேன்.இப்போ ‘இறைவி’ ரிலீஸ் ஆகுது.  ஸோ, ரொம்பவே ஹேப்பி மூட்!’’

‘‘உங்களோட இருக்கற நட்பு காதலாக மாறலாம்னு ஜெய் சொல்லியிருக்காரே?’’‘‘ஜெய் எனக்கு முக்கியமான ஃப்ரெண்ட். என் மனசில இருக்கற எல்லாத்தையும் அவர்கிட்ட ஷேர் பண்ணிக்குவேன். நான் சென்னை யில் இருந்தாலும் இல்லாட்டாலும் தினமும் அவர்கிட்ட  பேசிடுவேன். அதுக்கு அவர் என் பக்கத்துல இருக்கணும்னு கூட அவசியம் இல்ல. ஜெய்கிட்ட நிறைய விஷயங்கள் பிடிக்கும். நான் அவர் சொல்றதையே ரிப்பீட் பண்றேன். இப்போ இருக்கற நட்பு காதலா மாறினாலும் மாறலாம். யாருக்குத் தெரியும்!’’ - அஞ்சலியின் முகத்தில் ‘ஜெய்’ஜான்டிக் புன்னகை!

- மை.பாரதிராஜா
அட்டை மற்றும் படங்கள்: புதூர் சரவணன்