நினைவோ ஒரு பறவை



‘அ’ for அமெரிக்கா

அமெரிக்கா செல்ல கான்சல் க்யூவில் அதிகாலையில் நிற்கும் சுரேஷ்களுக்கும், ரமேஷ்களுக்கும் ஒரு செய்தி!இது ஒருவழிப்பாதை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். ‘திரும்பி வந்து தாய்நாட்டுக்கு சேவை செய்யப் போகிறேன்’ என்று ஜல்லியடிக்காதீர்கள். இந்த நாட்டைப் பொறுத்தவரை நீங்கள் அனைவரும் நடுத்தரக் குடும்பங்களில் பெருமையாக பேசிக் கொள்ளத்தக்க, அதிகம் பயனில்லாத வஸ்துக்கள்தான். ெசன்று வாருங்கள்! குட்லக்!
- எழுத்தாளர் சுஜாதா

மூன்றாவது முறையாக அமெரிக்கா சென்றிருந்தேன். அமெரிக்கா என்றதும் சுதந்திர தேவி சிலை முன்போ, நியூயார்க் வீதிகளிலோ, நயாகரா முன்போ நான் நிற்கும் புகைப்படத்தை பிரசுரிப்பேனோ என்று வாசகர்கள் அச்சப்பட வேண்டாம்.பயணங்களைப் பிடித்த அளவிற்கு பயணங்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் மீது எனக்கு ஈடுபாடில்லை.

பொதுவாக புகைப்படங்களுக்கு சிரித்தபடி நிற்பது என்றாலே எனக்கு அலர்ஜி. சிறு வயதிலிருந்து எந்த ஒரு இடத்தையும் வியந்து, ஆழ்ந்து ரசிக்குமளவிற்கு பொறுமையற்றவன் நான். பாண்டியன் எக்ஸ்பிரஸ் ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் மூன்றே நிமிடங்கள் நிற்பது ேபால, என்னுடன் சுற்றுலா வந்தவர்களை அவசரப்படுத்திக்கொண்டே இருப்பேன். எதையும் பெரிதாக வியத்தல் இல்லையாதலால், கடவுள் எதிரே வந்து நின்றாலும் ஓரிரு நிமிடங்கள் உரையாடி விட்டு, காபி சாப்பிடக் கிளம்பிவிடுவது என் இயல்பு.

அமெரிக்கா என்றதும் உடனே என் நினைவுக்கு வந்தது கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்திதான். காஞ்சிபுரத்தில் நான் ஒன்பதாம் வகுப்பு டியூஷன் படிக்கையில் உடன் படித்த வெங்கி என்கிற வெங்கட்ராமனின் அண்ணன் கிச்சா. கல்லூரி முடித்து வேலை தேடிக்கொண்டே ஏதேதோ ஆங்கில வகுப்புகளுக்குச் சென்று கொண்டிருந்தான்.

மாலை நேரங்களில் பெருமாள் கோயிலின் நாமக்கோடுகளை ஸ்டெம்ப்பாக்கி நான், கிச்சா, வெங்கி, இன்னும் சில நண்பர்கள் கிரிக்கெட் ஆடுவோம். முன் நெற்றியில் இருந்தே தொடங்கி விடுகிற குடுமி இடமும் வலமும் ஆட, கிச்சா பந்து வீசுவான். எத்தனை கவனமாக இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவன் குடுமியின் ஊஞ்சல் ஆட்டத்தை வேடிக்கை பார்த்தபடி நான் என் விக்கெட்டை கோட்டை விடுவேன்.

வயதில் மூத்தவன் என்றாலும், கிச்சாவை நாங்கள் பெயர்  சொல்லியே அழைப்போம். கிச்சாதான் எங்களுக்கு செஸ் விளையாடவும், ஸ்பின் பால் போடவும், கிராஸ் வேர்டு நிரப்பவும் சொல்லிக் கொடுத்தது.நாங்கள் பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு மும்முரமாகப் படித்துக் கொண்டிருந்தபோது கிச்சாவுக்கு அமெரிக்காவில் ஸ்காலர் ஷிப்புடன் மேற்படிப்பு படிக்க வாய்ப்பு வந்தது.

குடும்பத்தினர் புடைசூழ கிச்சா மீனம்பாக்கம் புறப்பட்ட வேனில் அடியேனுக்கும் இடம் கிடைத்து, விண்ணில் ஏறி இறங்கும் விமானங்களை மிக அருகில் பார்த்து, டாட்டா காட்டிவிட்டு வந்தேன். வருடங்கள் கடந்து, கிச்சா குடுமி தொலைந்து கிராப் முடியுடனும், டைட் ஜீன்ஸுடனும் திரும்பி வந்தான். அவன் தந்த அமெரிக்க சாக்லெட்களின் தித்திப்பு ஆறேழு நாட்களுக்கு எங்கள் உள்நாக்கில் ஒட்டிக் கொண்டிருந்தது. நாங்கள் ‘A for Apple’க்கு பதில் ‘அ for அமெரிக்கா’ என்றோம்.

முதல்முறை நான் அமெரிக்கா சென்றது வட அமெரிக்கா தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பான ‘ஃபெட்னா’வின் பொங்கல் விழாவில் கலந்துகொள்வதற்காக! சவுத் கரோலினாவில் நடந்த அந்த விழா தொடங்குவதற்கு பத்து நாட்களுக்கு முன்பே கிளம்பிச் சென்று விட்டேன். காரணம், அமெரிக்காவில் வசிக்கும் நண்பர்களைச் சந்திப்பதற்காக!

இந்த இடத்தில் என் அமெரிக்க நண்பர்கள் சுதாகரையும், ஹரியையும் வாசகர்களுக்கு கழுகுப் பார்வையில் அறிமுகப்படுத்த விரும்புகிறேன்.
இருவரும் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் என்னுடன் படித்தவர்கள். நான் தமிழ் இலக்கியமும், அவர்கள் முறையே இயற்பியலும் கணிதமும் கற்ேறாம். அதையும் விட என் தாயின் பிறந்தகமான சூளைமேட்டிலேயே அவர்களும் வசித்ததால் சிறு வயதிலிருந்தே கோடை விடுமுறையின் விளையாட்டுத் தோழர்கள்.

சுதாகரின் அப்பா பள்ளி ஆசிரியர். சுதாகர் ஒரே பையன். ஒவ்வொரு வீட்டிலும் கிளி வளர்ப்பது போல்; புறா வளர்ப்பது போல்; சுதாகர் வீட்டில் சிறு வயதிலிருந்தே அவன் மாமா பெண்ணையும் உடன் வளர்த்தார்கள். சுதாகர் அமெரிக்காவில் வேலை கிடைத்து மாமா பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு ஒரு நள்ளிரவில் மீனம்பாக்கத்தில் இருந்து வாஷிங்டன் டி.ஸி கிளம்பிப் போனான். நான் மீண்டும் ஒரு முறை, விண்ணில் ஏறி இறங்கும் விமானங்களை மிக அருகில் பார்த்து டாட்டா காட்டிவிட்டு வந்தேன்.

சுதாகர் அமெரிக்காவிற்குச் சென்ற இரண்டாவது மாதம், அவன் அப்பா மாரடைப்பில் இறந்து போனார். ‘‘கடனை உடனை வாங்கி இப்பதான் உன்னை அமெரிக்கா அனுப்புனோம். நீ வரலைன்னா பரவாயில்லை!’’ என்று சுதாகரின் அம்மா தொலைபேசியில் சொன்னதும், மறுமுனையில் சுதாகர் வெடித்து அழுததும் இப்போதும் என் காதிற்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. நண்பர்கள் சேர்ந்து சுதாகரின் அப்பாவை நல்லபடி அடக்கம் செய்தோம். சுதாகரின் அம்மாவிற்கு கடந்த பதினைந்து ஆண்டுகளாக விசா கிடைக்காமல் சமீபத்தில் கிடைத்து அமெரிக்கா சென்று வந்தார்.

‘‘அமெரிக்கா எப்படி இருக்கும்மா?’’ என்றேன். ‘‘ஊரா அது? ஒரே குளிரு. பேச்சுத் துணைக்குக்கூட ஆளே இல்ல!’’ என்றார்.
அடுத்து ஹரி. ஒரு மனிதன் 24 மணி நேரமும் உற்சாகமாக இருக்க முடியும் என்றால், அதற்கு உதாரணம் ஹரி. எந்த வேலையையும் ஈகோ பார்க்காமல் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வான். பார்ப்பதற்கு ஹிந்தி நடிகர் போலிருப்பதால் ‘‘பாம்பே பக்கம் போயிடாதடா! சல்மான்கான்னு நெனச்சி கூட்டம் கூடிடப் போகுது’’ என்பேன். என் கிண்டலைப் புரிந்து கொள்ளாமல் ‘‘அப்படியா மச்சான்? அப்படின்னா நான் பாம்பேக்கு போகலை!’’ என்பான் வெள்ளந்தியாக!

ஒரு முறை நாங்கள் நான்கைந்து நண்பர்களின் குடும்பங்கள் கடற்கரைக்குச் சென்றிருந்தோம். அவசரமாக சில தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்ல வேண்டி இருந்ததால், நான் காரிலேயே இருந்து கொண்டேன். ஹரியை அழைத்து, ‘‘டேய்... நாலஞ்சு பொண்ணுங்க ஒண்ணா சேர்ந்திருக்காங்க. நெறைய கதை பேசுவாங்க! நீதான் குழந்தைங்க தண்ணியில எறங்காம பார்த்துக்கணும்!’’ என்றேன்.இரவு வீடு திரும்பியதும் மனைவி என்னிடம் கேட்டாள், ‘‘ஹரி அண்ணாகிட்ட என்ன சொன்னீங்க?’’ சொன்னேன்.

மனைவி சொன்னாள் ‘‘அவரு எங்ககிட்ட சொல்றாரு... நீங்க எல்லாம் கதை பேசுவீங்களாம்! அவனுக்குத் தெரியாது உங்களைவிட நான்தான் அதிகமா கதை பேசுவேன்னு!’’அதுதான் ஹரி. பழகிய பத்தாவது நிமிடத்திலேயே உங்கள் மாமனாரின் மூட்டுவலியில் தொடங்கி, ஒன்றுவிட்ட சித்தப்பாவின் இடுப்பு வலி வரை அவர்களிடம் விசாரித்து அதற்கு நிவாரணமும் அளித்து, உங்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி அட்டகாசமாகப் புன்னகைப்பான்.
இவர்களை நம்பித்தான் நான் அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலையத்தில் தரை இறங்கினேன்.

பொதுவாக, பயணங்களில் நான் அதிக சுமைகளை எடுத்துக் கொள்வதில்லை. ஒரு மாத அமெரிக்கப் பயணத்திற்கு நான் எடுத்துச் சென்றது நான்கைந்து ஜீன்ஸ்கள், ஆறேழு சட்டைகள், அவ்வளவுதான். முதுகில் மாட்டக்கூடிய ஒரு லெதர் பேக்குடன் நான் இறங்கியபோது, ‘‘மத்த லக்கேஜ் எங்கடா?’’ என்றான் ஹரி.‘‘இவ்வளவுதான்டா’’ என்றேன்.

‘‘உண்மையாதான் சொல்றியாடா?’’ என்று ஆறேழு முறை கேட்டுவிட்டு, ‘‘உன்னைத் திருத்த முடியாதுடா’’ என்றான்.‘‘மச்சி! நாளைக்கு நயாகரா போகலாம்’’ என்றான் சுதாகர்.‘‘நயாகரா எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். முதல்ல நான் தூங்கணும். அதுவும் ரெண்டு மூணு நாளைக்கு!’’ என்றேன்.

கடவுள் எதிரே வந்து நின்றாலும் ஓரிரு நிமிடங்கள் உரையாடி விட்டு, காபி சாப்பிடக் கிளம்பிவிடுவது என் இயல்பு.சுதாகரின் அம்மா தொலைபேசியில் சொன்னதும், மறுமுனையில் சுதாகர் வெடித்து அழுததும் இப்போதும் என் காதிற்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

(பறக்கலாம்...)

நா.முத்துக்குமார்

ஓவியங்கள்: மனோகர்