லீவ்



கல்யாணமான நாளில் இருந்து மனைவி மங்களாவை நெருங்க முடியவில்லை கோபியால். ஆபீஸில் அவ்வளவு வேலை. ஐ.டி கம்பெனியில் வேலை பார்க்கும் அவன், நான்கு நாட்களாக இரவு வீட்டுக்குக் கூட வரவில்லை.

வேலையை முடித்துவிட்டால் இரண்டு நாள் லீவ் எடுத்துக்கொண்டு ஜமாய்க்கலாம் என்றிருந்தான். ஆனால், ஒவ்வொரு வேலை முடியும்போதும், புதுப்புது அசைன்மென்ட்களை மேனேஜர் கொடுத்துக்கொண்டே இருந்தார். திட்டமிட்டுச் செய்வது புரிந்தது.

பொறுமை இழந்திருந்த நேரத்தில், ‘‘இன்னிக்காவது நைட் வீடு வருவீங்களா? ஆபீஸ்லேயே ஹால்ட்டா?’’ என்று மங்களா போனில் கேட்டாள்.
எதுவும் சொல்லாமல் அன்று மதியமே வீடு வந்தான் கோபி.
‘‘லீவ் கொடுத்துட்டாங்களா?’’ - மங்களா கேட்டாள்.
‘‘இனி எப்பவுமே லீவ்தான். ரிசைன் பண்ணிட்டேன்!’’
‘‘அப்போ அடுத்த மாச சாப்பாட்டுக்கு வழி?’’

‘‘அவங்களே ஒரு மாசத்துல கூப்பிட்டு வேலை கொடுப்பாங்க?’’
‘‘எப்படி?’’ - மங்களாவுக்குப் புரியவில்லை.

‘‘நானே கண்டுபிடிச்ச ஒரு வைரஸை ஆபீஸ் சர்வர்ல அப்லோட் பண்ணியிருக்கேன்! அதை என்னைத் தவிர யாராலும் சரி பண்ண முடியாது. ஒரு மாசம் கழிச்சு அவங்களே என்னைக் கூப்பிடுவாங்க. அப்ப டிமாண்ட் பண்ணி புரமோஷன், இன்கிரிமென்ட் எல்லாத்தையும் சேர்த்து வாங்கிடுவேன்! அதுவரைக்கும் ஜாலிதான்!’’ என்று மங்களாவை நெருங்கினான் கோபி.        

பா. விஜயராமன்