குட்டிச்சுவர் சிந்தனைகள்



எந்த ஒரு மகனுக்கும் வேலைக்குப் போகும் முன் அப்பாவிடம் செலவுக்குப் பணம் கேட்கும்போது இல்லாத தயக்கம், வேலைக்குப் போய் நிறைய சம்பாதிக்கும்போது அம்மாவிடம் செலவுக்குப் பணம் தரும்போது வந்துவிடுகிறது.

அம்மாவின் செலவுக்கு மீறியும் சேர்த்து தந்திருக்கிறோமென தெரிந்தும், ‘போதுமா?’ என்றே கேட்க முடிகிறது, சாப்பாடு போடும்போதெல்லாம் நமக்கு பசி போனது என தெரிந்தும் இன்னமும் வேணுமா என அம்மாக்கள் கேட்பதைப் போல.

ஒரு மகன் எவ்வளவு சம்பாதிக்கிறான் என்பதே அப்பாவுக்குப் பெருமை. ஆனால், மகன் சம்பாதிக்கிறான் என்பதே போதும் அம்மாக்கள் பெருமைப்பட! கடவுளிடம் கேட்டுப் பெறும் வரங்களை விட, மகனிடம் கேட்காமல் கிடைக்கும் சிறு அளவு பணம் கூட அம்மாக்களுக்கு பெருசுதான். தனது கல்யாண பட்டுப்புடவையை விட முதல் மாத சம்பளத்தில் மகன் வாங்கித் தரும் புடவையைத்தான் அதிகம் பேருக்குக் காட்டுவார்கள் அம்மாக்கள்.

மகன் வேலைக்குப் போகாததை பெரிதாகப் பேசுவார் அப்பா என்றால், மகன் வேலைக்குப் போவதைத்தான் பெரிதாகப் பேசுவார் அம்மா. ஆனால், பிரச்னை என்னவென்றால், இத்தனை அனுபவப்பட்டும், பிறிதொரு நாளில், மகன் அப்பாக்களின்  மென்டாலிட்டிக்கு போவானே தவிர, அம்மாக்களின் மென்டாலிட்டிக்கு மாறமாட்டான். அதனால்தான் அவர்கள் அம்மாக்கள்!

‘24’  படத்துல வர்ற மாதிரி, இறந்த காலம் - எதிர்காலம்னு பயணம் போற, நிகழ்காலத்தை நிறுத்தி வைக்கிற ஒரு டைம் மெஷின் கண்டுபிடிக்கணும். அப்படி மட்டும் கண்டுபிடிச்சிட்டா, நான் என்னென்ன செய்வேன்னு கேளுங்க! இல்ல, நீங்க கேக்காட்டியும் நான் சொல்வேன்.

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப்ல இவனுங்க இப்படி சாதி, மதம்னு அடிச்சுக்குவானுங்கனு இப்ப தெரிய வர்றதுனால, தந்தை பெரியாரின் பிறப்பு தேதிக்குச் சென்று மாத்தி, அவரை இன்னமும் 50 வருடங்கள் கழித்து மண்ணில் பிறக்க வைத்திருக்கலாம், கல்விக்கண் திறந்த காமராஜரை இன்னமும் முப்பது வருடங்கள் வாழ வைத்திருக்கலாம்... இப்படியெல்லாம் செய்வேன்னு மட்டும் நினைச்சுடாதீங்க. ஏன்னா, அதை விட முக்கியமான பல விஷயங்களை தமிழக மக்களுக்காக செஞ்சாகணும்.

‘பருத்திவீரன்’ க்ளைமேக்ஸ பார்த்துட்டு மொத்த தமிழ்நாடே அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுச்சு.   அதனால க்ளைமேக்ஸ்க்கு முன்னால, கார்த்தி ப்ரியாமணியோட தப்பிச்சு வர்றப்ப, ‘‘தம்பி, பாப்பாவா தனியா விட்டுட்டுப் போயிடாதே’’னு சொல்லி, பாண்டிச்சேரிக்கு பஸ் டிக்கெட் எடுத்துக் கொடுத்து முத்தழகுவ காப்பாத்தியிருப்போம்.

பெண்களை நம்பினாலே நாம மென்டலாதான் அலைவோம் என்பதை புரிந்து, ‘மூன்றாம் பிறை’யில் தேவியை கூட்டிப் போய் நல்ல ஹாஸ்டலாவோ ஹாஸ்பிட்டலாவோ சேர்க்கச் சொல்லி, கமல் க்ளைமேக்ஸில் குண்டா தூக்கி குட்டிக்கரணம் அடிக்கவிடாமல் காப்பாத்தியிருப்போம். 

‘ஜித்தன் 2’னு ஒரு படம் எடுக்கணும்னு ஜித்தன் ரமேஷ் மனசுல உதிச்ச அந்த மணித்துளிக்கு முன்னாடி சென்று, அப்படி ஒரு ஐடியா வராம தடுத்து மக்களையும் அவரையும் காப்பாத்தியிருப்போம். இதையெல்லாம் விட, பல நடிகைகளை பத்தாவது மற்றும் +2வில் நல்ல மார்க் எடுக்க வைத்து, அவர்கள் ‘நடிக்க வராட்டி டாக்டராகி இருப்பேன்’ என்று சொல்ற வழக்கமான கூற்றை மெய்ப்பித்து இந்திய மக்களின் புண்ணியத்தைப் பெற்றிருப்போம்.

 அதிமுகவில் அமைச்சராக இருக்கிறவங்க பல பேருக்கு அவங்க பதவியேற்பதற்கு முன்னாடியே இடுப்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தி இருப்போம்.  பாதையில போகாம பிளாட்பாரத்துல போன சல்மான்கான் காரை பஞ்சராக்கி, ரோட்டுலயே ரோலாகாம வைத்திருப்போம். விஜய் மல்லையா கடன் வாங்க கையெழுத்து போடும்போதெல்லாம், கையெழுத்திடும் கடைசி நொடியில் பேனாவுல இங்க் தீர்ந்து போற மாதிரி செய்து இந்திய வங்கிகளைக் காப்பாத்தியிருப்போம்.

சென்ற உலகக்கோப்பை அரையிறுதி ஆட்டத்தின்போது விராட் கோலியின் கேட்ச்சை பிடிக்க வந்த ஃபீல்டர்களின் அருகே சென்று கிச்சுகிச்சு மூட்டி கேட்ச்சை தவறவிடச் செய்திருப்போம். அடுத்த முறை சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழும்போது, யார் மீதும் விழுந்து விடாமல், ஆள் நடமாட்டமற்ற  நேரம் பார்த்து விழ வைத்திருப்போம். தமிழகத்தின் எந்த டாஸ்மாக்கில் சரக்கு லோடு இறங்கினாலும், இறக்கும்போது கை தவறி பெட்டியைக் கீழே விட்டு புட்டிகளை காலி பண்ணியிருப்போம்.

பல காலமாகக் கழுவப்படாத இந்திய ரயில் பெட்டிகளை, ஷங்கர் எப்போ பாடல் காட்சிகளுக்கு ஷூட்டிங் வைப்பாரென அறிந்து பக்கத்துல கொண்டு போயி நிறுத்தி, அவர் புண்ணியத்தில் கலர் கலர் பெயின்ட் அடித்து பளிச் என்று ஆக்கியிருப்போம்.

அதென்ன எப்ப பார்த்தாலும் டீசல் விலை நள்ளிரவா பார்த்து உயருது? அப்படி டீசல் விலை உயரும் ஒரு நள்ளிரவை கொஞ்சம் வேகமாக ஓட்டி வைப்போம். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் கண நேரத்தில் ஸ்பைடர்மேனை வரச்செய்து அவனுங்க கை கால்களைக் கட்டிப் போட வைப்போம்.

வானில் பறந்துகொண்டிருந்த விமானம் கீழே விழுந்து உடைந்ததுனு சொல்லுங்க, நம்புறோம். பைசா நகரின் சாய்ந்த கோபுரமோ இந்தியாவின் குதுப்மினாரோ சாய்ஞ்சு விழுந்து உடைஞ்சதுன்னு சொல்லுங்க, நம்புறோம்.

அட, சென்னை விமான நிலைய மேற்கூரையோ, இல்ல அதை விட பல மடங்கு தரமான ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட், அமெரிக்காவின் JFK விமான நிலையத்தின் மேற்கூரைகளோ இடிஞ்சு விழுந்து உடைஞ்சதுன்னு  சொல்லுங்க, நம்புறோம். டான்ஸ் பிராக்டீஸ் பண்றப்ப பவர் ஸ்டாருக்கு கை கால் எலும்பு உடைஞ்சுதுனு சொல்லுங்க, நம்புறோம்.

அடிக்கிற வெயில்ல ஹெல்மெட் உடைஞ்சுச்சுனு சொல்லுங்க, நம்புறோம். நம்ம நெருப்பு நெஹ்ரா பவுலிங் போட்டு ஸ்டம்ப்ஸ் உடைஞ்சு போச்சுன்னு சொல்லுங்க, நம்புறோம். நம்ம மனோபாலா சார் உட்கார்ந்து பனகல் பார்க் பெஞ்சு உடைஞ்சு போச்சுனு சொல்லுங்க, நம்புறோம். ஆனா இந்த சரத்குமார் கட்சி, நடிகர் கார்த்திக் கட்சி, டி.ராஜேந்தர் கட்சியெல்லாம் உடைஞ்சு போச்சுனு சொல்லாதீங்கப்பா... ரொம்ப சின்னப்புள்ளத்தனமா இருக்கு!

ஓவியங்கள் அரஸ்
ஆல்தோட்ட பூபதி