ஐ.ஏ.எஸ் தேர்ச்சி என்பது தொடக்கம்தான்!
சிவில் சர்வீஸில் சாதித்த தமிழர்கள்
‘‘பொதுவா, ‘நம்பிக்கை இருந்தா போதும்... எதிலும் ஈஸியா ஜெயிக்கலாம்’னு நம்பிக்கை ஊட்டுவாங்க. ஆனா, கான்ஃபிடன்ஸை விட காம்பிடன்ஸ்தான் ரொம்ப முக்கியம். அதாவது, திறன் வேணும். அப்போதான் ஐ.ஏ.எஸ் மாதிரியான தேர்வுகள் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் வெற்றி பெற முடியும்!’’ - நம்பிக்கை பொங்க பேசுகிறார் பால நாகேந்திரன். சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றிருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி. இந்திய அளவில் 923வது ரேங்க்!
 ஒடுங்கியிருக்கும் வடசென்னை, ஓட்டேரியில் இருக்கிறது இவரது வசிப்பிடம். அந்தத் தெருவே பால நாகேந்திரனுக்காக கோலாகலம் பூண்டிருக்கிறது! ‘‘எங்களுக்கு மூணு பசங்க. மூத்தவனும், இளையவனும் நல்லபடியா பிறந்தாங்க. ஆனா, இவனுக்குத்தான் பொறந்தப்பவே பார்வை இல்லை. ஆனா, இன்னைக்கு...’’ எனப் பேச முடியாமல் ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார்கள் பால நாகேந்திரனின் பெற்றோர் தேவதாஸ் - சுந்தரி.
 ‘‘அஞ்சாம் வகுப்பு வரை லிட்டில் ஃப்ளவர் பள்ளியில படிச்சான். அப்புறம், புனித லூயிஸ் பள்ளி. அங்கே பத்தாம் வகுப்புல பிளைண்ட் பிரிவுல ஸ்கூல் ஃபர்ஸ்ட்! மாவட்ட அளவுலயும் முதலாவதா வந்தான். அதுவரை தமிழ் மீடியம் படிச்சவனை பிளஸ் ஒன்ல இங்கிலீஷ் மீடியம் சேர்த்தோம். அதுவும், நார்மல் பசங்க படிக்கிற தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளியில. அவங்களே ‘முடியுமா’னு யோசிச்சாங்க. ஆனா, இவனோட நம்பிக்கையான பேச்சை வச்சு உடனே கேட்ட குரூப்பை கொடுத்தாங்க. 75 சதவீத மார்க் வாங்கி பாஸானான். அப்புறம், லயோலா காலேஜ்ல பி.காம். அங்கேயும் ஃபர்ஸ்ட் கிளாஸ்ல பாஸானான்!’’ என்கிறார் அப்பா தேவதாஸ்.
அவரைத் தொடர்கிறார் பால நாகேந்திரனின் தம்பி வேம்புலி மணிகண்டன். ‘‘அண்ணனுக்கு தமிழ், இங்கிலீஷ், சமஸ்கிருதம், இந்தினு நாலு மொழி நல்லா தெரியும். எல்லாமே அவரா கத்துக்கிட்டது. இப்போ ஸ்பானிஷ் கத்துட்டு இருக்கார். எதையுமே ஈஸியா புரிஞ்சுக்குவார். செஸ் விளையாட்டுல கூட மாநில அளவுல போயிருக்கார். 2010ல பி.காம் முடிச்சதுல இருந்து ஐ.ஏ.எஸ்., கோச்சிங் ஆரம்பிச்சார். இதுக்கிடையில, நிறைய பேங்க் எக்ஸாம்ல பாஸானார். ஆனா, எதுக்கும் இன்டர்வியூ போகலை. ஏன்னா, அவர் லட்சியம், ஐ.ஏ.எஸ். அது ஒண்ணு மட்டும்தான். அதில் இப்போ சாதிச்சுட்டார்’’ என்கிறார் அவர் உற்சாகமாக!
‘‘இது என் சின்ன வயசு ஆசை. ஒண்ணாம் வகுப்பு படிக்கிறப்போ டீச்சர்கிட்ட நிறைய கேள்வி கேட்டேன். அவங்க, ‘என்ன பெரிய ஐ.ஏ.எஸ் மாதிரி கேள்வி கேட்குறே’னு சொல்லிச் சிரிச்சாங்க. அப்போதான் ‘ஐ.ஏ.எஸ்.னா பெரிய வேலை’னு மனசுல பதிஞ்சது. அதை நோக்கி ஓடினேன். இப்போ, என் கனவு நிறைவேறியிருக்கு!’’ என மெல்லிய குரலில் ஆரம்பிக்கிறார் பால நாகேந்திரன்.
‘‘காலேஜ்ல படிக்கும்போதே நிறைய விஷயங்களை அப்சர்வ் பண்ண ஆரம்பிச்சிட்டேன். ஒரு விஷயத்தைப் பத்தி படிக்கும்போது அதுக்குப் பின்னாடி இருக்கிற பின்புலத்தையும் பார்க்கணும். அப்படித்தான் படிச்சேன். ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக மனிதநேய மையத்துல சேர்ந்து என்னை மேம்படுத்தினேன். அப்டிடியூட் டெஸ்ட் பயிற்சிக்காகத்தான் நிறைய வங்கித் தேர்வுகளை எழுதினேன். மற்றபடி வேற வேலையில விருப்பம் இல்லை. இப்பவும், என் ரேங்க்குக்கு ஐ.ஏ.எஸ்., கிடைக்கும்னு நினைக்கிறேன். ஒருவேளை கிடைக்கலைன்னா மறுபடியும் தேர்வெழுதுவேன்!’’ என்கிறவரிடம், ஐ.ஏ.எஸ்., ஆன பிறகு செயல்படுத்த நிறைய திட்டங்களிருக்கின்றன.
‘‘கோயில் இல்லாத இடத்துல குடியிருக்க வேண்டாம்னு சொல்வாங்க. ஆனா, என்னைக் கேட்டா பள்ளிகள் இல்லாத இடத்துல குடியிருக்கக் கூடாதுனு சொல்வேன். கல்விக்குத்தான் நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அடுத்து, ‘எந்தச் சமூகத்துல பெண்கள் முன்னேற்றம் இல்லையோ அந்தச் சமூகம் வளர முடியாது’னு அம்பேத்கர் சொல்லியிருக்கார். அதனால, பெண்கள் முன்னேற்றத்துக்கும் என்னோட பணி அளப்பரியதா இருக்கும்!’’ என்கிறார் அவர் நிறைவாக! வீட்டுச் சுவரில் படமாக இருக்கும் அம்பேத்கர், ஒரு வாழ்த்துப் புன்னகையை உதிர்க்கிறார்!
அயல்நாட்டுப் பணி To ஆட்சிப்பணி!
இந்திய அளவில் ஏழாவது இடமும், தமிழகத்தில் முதலிடமும் பிடித்திருக்கும் சரண்யா அக்மார்க் சென்னைப் பொண்ணு. தனியார் கல்லூரியில் பி.டெக்., ஐ.டி முடித்துவிட்டு வெளிநாடு பறக்க இருந்தவர். இப்போது பெற்றோரின் ஆசையை நிறைவேற்றியிருக்கிறார். நான்காவது முயற்சியில் கிடைத்திருக்கிறது இந்த வெற்றி.
‘‘நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு. அப்பா அறிவழகன் ராணுவத்துல விங் கமாண்டரா இருந்தவர். அம்மா சத்யப்ரியா கிழக்கு தாம்பரம் அரசுப் பள்ளியில பி.ஜி டீச்சரா இருக்காங்க. நான் ஐ.ஏ.எஸ் ஆகி நாட்டுக்கு சேவை செய்யணும்ங்கிறது அப்பாவோட கனவு. அதுக்காக கடைசி நிமிஷத்துல ஃபாரின் போற ப்ளானை கேன்சல் பண்ணினேன். அப்புறம் நிறைய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சந்திச்சேன். எல்லோரும் கொடுத்த உற்சாகம்தான் என்னை முதலிடத்துக்கு கொண்டு வந்திருக்கு!’’ எனப் பூரிக்கும் சரண்யாவுக்கு அடுத்த மாதம் ஆறாம் தேதி திருமணமாம். இரட்டிப்பு சந்தோஷம்!
சிவில் சர்வீஸ்... இந்த ஆண்டு!
* இந்த முறை சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து 2,797 பேர் தேர்வானார்கள். இதில் 1,078 பேர் பாஸாகி உள்ளனர். தமிழகத்திலிருந்து 82 பேர்.
* டில்லியைச் சேர்ந்த டீனா தாபி என்ற பெண் தனது முதல் முயற்சியிலேயே இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார்.
* தமிழகத்தில், சரண்யாவைத் தொடர்ந்து தமிழக அளவில் இரண்டாவது இடத்தை வைத்தியநாதன் என்பவரும், மூன்றாவது இடத்தை சென்னையைச் சேர்ந்த சிபி ஆதித்யா செந்தில்குமாரும் பிடித்துள்ளனர்.
* கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தமிழகத்தின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. ‘‘கடந்த முறை 119 பேர் தேர்வாகினர். ஆனால், இந்த முறை 82 பேர்தான். இதற்கு மழை ஒரு முக்கிய காரணம். டிசம்பர் மாதம்தான் முதன்மைத் தேர்வு நடந்தது. அப்போது, படிக்க முடியாமல் மாணவர்கள் சிரமப்பட்டனர். அடுத்து, இந்த முறை விருப்பப் பாடத்தில் நிறைய மார்க் வரவில்லை என்பதும் மற்றொரு காரணம்!’’ என்கிறார் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் சங்கர்.
ஏழையே அம்பலம் ஏற வேண்டும்!
அகில இந்திய அளவில் 117வது இடமும், தமிழக அளவில் நான்காவது இடமும் பிடித்திருக்கும் இளம்பகவத், தமிழ் வழியில் சிவில் சர்வீஸ் தேர்வெழுதியவர். சொந்த ஊர், தஞ்சாவூர் அருகே சோழகன்குடிகாடு. தொலைநிலைக் கல்வியில் பி.ஏ. முடித்து ஆறு முறை வெவ்வேறு அரசுப் பணிகளில் இருந்தவர். தற்போது ஐ.ஆர்.எஸ். பயிற்சியில் இருக்கிறார்.
‘‘ஐ.ஏ.எஸ் தேர்ச்சி என்பதே சாதனை அல்ல... அது ஒரு தொடக்கம்தான். இந்த மனமுதிர்ச்சி வந்து பல ஆண்டுகள் ஆகின்றன. என் தந்தை கந்தசாமி வருவாய்த் துறையில் பணியாற்றி இறந்துவிட்டார். அவரது வேலையை வாரிசு அடிப்படையில் பெறவே அரசு அதிகாரிகளிடம் அலைந்து ஓய்ந்தவன் நான். தாய்தான் குடும்ப பாரத்தை சுமந்தார்.
இங்கே ஏழைச் சொல் அம்பலம் ஏற வேண்டுமெனில், ஏழையே அம்பலம் ஏற வேண்டிய நிலைமை! சிவில் சர்வீசஸ் பணிகளை வெகுஜனப்படுத்த வேண்டும் என்பதே என் வேண்டுகோள்’’ என்கிறார் அவர் அழுத்தமாக!
- பேராச்சி கண்ணன் படங்கள்: புதூர் சரவணன்
|