உயிர் பிழைச்சதே போதும்!



வித்யுலேகாவின் வியன்னா விபரீதம்

காமெடியில் கலக்கியெடுக்கும் கலகல வித்யுலேகாவைத்தான் நமக்குத் தெரியும். சுற்றுலா போன அயல்நாட்டில் பணத்தையும் பாஸ்போர்ட்டையும் பறிகொடுத்து பெரும் பாடுபட்டு வந்து சேர்ந்திருக்கும் வித்யுலேகா வேறு வகை. அந்த படக் படக் தருணம் இன்னும் படக்காட்சி போல மனதில் ஓடி தகிக்கிறது பொண்ணுக்கு!

‘‘என்னோட ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் செக் குடியரசு தலைநகர் பிராக், ஆஸ்திரியா தலைநகர் வியன்னா என சுற்றுலா போயிருந்தோம். வியன்னாவில் ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல தங்கியிருந்தோம். அன்னிக்கு காலையில ஷாப்பிங் முடிச்சிட்டு, ஹோட்டல் வாசல்ல நின்னுக்கிட்டிருந்தேன்.

ரெண்டு பேர் எங்கிட்ட வந்து, ‘இந்த அட்ரஸ் எங்க இருக்கு?’னு கேட்டாங்க. ‘நானும் டூரிஸ்ட்தாங்க’னு பொறுப்பா பதில் சொல்லி அனுப்பினேன். அப்புறம் நான் ஹோட்டல் லாபியில வெயிட் பண்ணிட்டிருந்தேன். அப்பவும் அதே ரெண்டு பேர் வந்து ‘இந்த அட்ரஸ் எங்கே இருக்கு?’னு கேட்க, நான் டென்ஷாகிட்டேன். ‘உங்களுக்கு இங்கிலீஷ் புரியாதா? நான் டூரிஸ்ட்!’னு சொன்னேன். அவங்க கிளம்பிட்டாங்க.

அப்புறம் நான் ஹோட்டலை வெக்கேட் பண்றதுக்காக என்னோட ஐ.டி., பாஸ்போர்ட்டைத் தேடினா என் ஹேண்ட் பேக்கையே காணோம். அதில்தான் மொத்தப் பணமும் இருந்தது. வெளிநாட்டுல நமக்கு இருக்குற அடிப்படை அடையாளமும் ஆதாரமும் பாஸ்போர்ட், விசாதான். ரெண்டும் இல்லாட்டி அகதினு அர்த்தம்.

எனக்கு கையும் ஓடல, காலும் ஓடல. ஷாப்பிங் முடிச்சிட்டு வந்து இறங்கும்போது டாக்ஸி டிரைவருக்கு கூட ஹேண்ட் பேக்கில் இருந்துதான் பணம் எடுத்துக் கொடுத்தேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட அதிலிருந்து செல்போனை வெளியே எடுத்து பேசினேன். அப்போ கண்டிப்பா ஹோட்டல் லாபியிலதான் ஹேண்ட் பேக் மிஸ் ஆகியிருக்கணும்னு தோணுச்சு. ஹோட்டல் டூட்டி ஆபீஸர்கிட்ட, ‘உடனே சி.சி.டி.வியில செக் பண்ணுங்க’னு கேட்டேன்.

ஆனா, அவங்க நடந்துக்கிட்ட விதம்தான் ரொம்ப வருத்தம். இவ்வளவு பணத்தைக் காணோம்... பாஸ்போர்ட் மிஸ்ஸிங்... ஆனா, அந்த ஹோட்டல்காரங்க முகத்தில் சீரியஸ்னஸ்ஸே இல்லை. எங்கிட்ட அட்ரஸ் கேட்ட கும்பல்தான் ஹேண்ட்பேக்கை திருடியிருக்காங்கனு சி.சி.டி.வி காட்டிக் கொடுத்துடுச்சு. ஒரு ஸ்டார் ஹோட்டல்ல யாரை வேணாலும் லாபி வரை அனுமதிச்சிடுவீங்களானு நான் கேக்கறேன். ‘பார், பப் ரெண்டும் வெளியே இருக்கு. ஸோ, பப்ளிக் வரத்தான் செய்வாங்க. நீங்க வேணும்னா போலீஸ்ல புகார் கொடுங்க’னு கூலா சொல்லிட்டாங்க.

சினிமா போலீஸ் மாதிரி, புகார் கொடுத்து ஒன்றரை மணி நேரம் கழிச்சு வியன்னா போலீஸ் வந்தாங்க. எஃப்.ஐ.ஆர் காப்பி கொடுத்துட்டு, ‘இந்திய தூதரகத்துல எமர்ஜென்சி பாஸ்போர்ட் அப்ளை பண்ணுங்க’ன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாங்க. ‘தூதரகம் போனால் டாகுமென்ட், ஃபார்மாலிட்டீஸ்னு இன்னும் ரெண்டு நாள் நீ வியன்னாவுலயே தங்க வேண்டியிருக்கும்’னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொன்னாங்க. ரொம்ப பயந்துட்டேன்!’’ என்கிற வித்யுலேகா, அப்போதுதான் தன் நிலைமையை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார். உடனே கோலிவுட் வட்டாரம் பரபரப்பாகிவிட்டது.

‘‘உடனே ஐஸ்வர்யா தனுஷ், குஷ்பு எல்லாரும் போன் பண்ணிட்டாங்க. ‘அங்கே யார்கிட்டயாவது பேசணுமா?’னு கேட்டாங்க. அது தேவைப்படல. தூதரகம் கேட்ட டாகுமென்ட்ஸை ரெடி பண்ணி பிரின்ட் அவுட் எடுத்து முடிக்கவே ராத்திரி ரெண்டரை மணியாச்சு. அடுத்த நாள் ராத்திரி எனக்கு ஃப்ளைட். அதுக்குள்ள பாஸ்போர்ட் கிடைக்கும்னு சுத்தமா நம்பிக்கை இல்லை. ஆனா, தூதரகத்துல எமர்ஜென்சி  பாஸ்போர்ட் ரெடி பண்ணி மாலை 4 மணிக்கெல்லாம் கையில கொடுத்துட்டாங்க. அந்த அதிகாரிகளுக்கும் இங்கே எனக்காகக் கவலைப்பட்ட மனங்களுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கேன்.

பணம் போனது பத்தியோ, பாஸ்போர்ட் போனது பத்தியோ நான் கவலைப்படல. கத்தி காட்டி மிரட்டுறது, துன்புறுத்துறதுனு இல்லாம உயிர் பிழைச்சதே பெரிய விஷயம்னு நினைச்சேன். ஏன்னா, அவ்வளவு கேள்விப்படுறோம்! எங்க அண்ணன் ஒரு தரம் பாரீஸ் போயிருக்கும்போது போலீஸ் உடையில வந்தே கிட்டத்தட்ட 75 ஆயிரம் ரூபாயைப் பறிச்சிட்டுப் போயிருக்காங்க.

கொள்ளை கும்பல்கிட்ட சிக்குறதை விட திருட்டுக் கொடுக்குறது பெஸ்ட்தான். வெளிநாடுகளுக்கு டூர் போகும்போது இன்னும் எச்சரிக்கையா இருக்கணும்னு புரிஞ்சுக்கிட்டேன். அந்தக் கசப்பான அனுபவத்திலிருந்து மீண்டு வரணும்னு அப்பா எங்களை எல்லாம் கொடைக்கானல் அழைச்சிட்டு வந்திருக்காங்க. நம்ம ஊரோட அருமை இப்போதான் தெரியுது!’’ - நெகிழ்கிறார் வித்யு.

- மை.பாரதிராஜா