இனி அமெரிக்கா வருவியா? வருவியா?



விசாவால் அடிக்கும் அமெரிக்கா

ஒரு காலத்தில் நம்மூரில் அமெரிக்க வேலை என்றாலே வாயைப் பிளப்பார்கள். ஆனால் இப்போதோ ‘ஆன் சைட்’, ‘ஆஃப் சைட்’ என அடிக்கடி அமிஞ்சிக்கரைக்குப் போவது போல அமெரிக்கா போய் வருகிறார்கள் இந்திய ஐ.டி இளைஞர்கள்.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில்தான் புதிதாக ஒரு முட்டுக்கட்டையைப் போட்டிருக்கிறது அமெரிக்கா, புதிய விசா நடைமுறை என்ற பெயரில்!

ஹெச் 1 பி, எல் 1 போன்ற விசாக்கள் மூலம்தான் ஐ.டி. நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி வருகின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த விசா கட்டணங்களை இரண்டு மடங்காக உயர்த்திவிட்டது அமெரிக்கா!

இதன்படி, ஏற்கனவே இருக்கும் கட்டணத்தோடு கூடுதலாக நான்காயிரம் டாலர் செலுத்த வேண்டும். அதாவது, இந்திய மதிப்பில் இரண்டு லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் அதிகம். இதனால் இந்திய ஐ.டி துறையே கதிகலங்கிப் போயிருக்கிறது.

விசா கட்டணச் சுமை தாங்காமல் பல நிறுவனங்களும், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஆன் சைட் பணிகளுக்காகச் செல்லும் பணியாளர்கள் எண்ணிக்கையை இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே கணிசமாகக் குறைத்திருக்கின்றன. பல்வேறு தலைவர்களும் அமெரிக்காவின் இந்த விசா கட்டண உயர்வைக் கண்டித்திருக்கிறார்கள். நிதி அமைச்சர் அருண் ஜெட்லியே ‘‘இது பாரபட்சமானது’’ எனக் கொதித்திருக்கிறார்.

இது பற்றி இந்திய ஐ.டி நிறுவனங்கள் அரசிடம் முறையிட்டன. உடனடியாக விஷயம் உலக வர்த்தக நிறுவனத்திடம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால், ‘இந்த ஆண்டு நவம்பரில் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வரை இந்தப் பிரச்னைக்கு முடிவு கிடைக்காது’ என்கிறார்கள் விசா விவரம் அறிந்தவர்கள். 

‘‘அமெரிக்காவுல சுமார் முப்பது லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கிறாங்க. இதுல, பாதிப் பேர் ஆன் சைட்ல போய் வர்றவங்க. இந்த விசா உயர்வால நிறுவனங்கள் இவங்களைத் திரும்ப அழைக்க சான்ஸ் இருக்கு!’’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த அயல்நாட்டுப் பணி ஆலோசகர் நிவாஸ் சம்பந்தம்.

‘‘அமெரிக்காவுக்குப் போக நிறைய விசா டைப் இருக்கு. குறிப்பா, ஹெச்1 பி, எல்1 ஏ, எல்1 பி மூணும் முக்கியமானவை. இந்த மூணும்தான் ஐ.டி நிறுவனங்களால அதிகம் பயன்படுத்தப்படுது. இந்த மூணு விசாக்களுக்கு மட்டும்தான் கட்டணத்தை அதிகரிச்சிருக்கு அமெரிக்கா. இதன்படி ஒரு இந்திய ஐ.டி நிறுவனத்தோட ஊழியர்கள் ஐம்பது பேருக்கும் மேல அமெரிக்காவுல பணியாற்றினா, அந்த நிறுவனம் கூடுதல் கட்டணம் செலுத்தணும்.

அல்லது ஒரு நிறுவனத்தின் ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமான ஊழியர்களிடம் ஹெச்1 பி விசாவோ, எல்1 விசாவோ இருந்தாலும் கூடுதல் கட்டணம் செலுத்தணும். ஹெச்1 பி விசாவுல ஒரு பணியாளரை அமெரிக்கா அனுப்பணும்னா பழைய முறைப்படி, சுமார் ரெண்டு லட்ச ரூபாய்தான் விசா கட்டணம்.

ஆனா, இப்ப நான்கரை லட்சம் வரை கட்ட வேண்டியிருக்கு. இதே எல்1 விசாவுக்கு முன்னாடி வெறும் 97 ஆயிரம் ரூபாய் கட்டினா போதும். இப்ப அது மூணு லட்சத்து 93 ஆயிரம் ரூபாயா உயர்ந்திருக்கு. இங்கிருக்கிற நிறுவனங்கள் குறைஞ்சது ஐநூறு ஊழியர்களையாவது ஆன் சைட்ல வச்சிருப்பாங்க. ஒவ்வொருத்தருக்கும் இவ்வளவு கட்டணம்னா சமாளிக்க முடியுமா?’’ என்றவரிடம், ‘ஏன் அமெரிக்கா இப்படியொரு முடிவை எடுத்திருக்கிறது?’ என்ற கேள்விக்கும் பதிலிருக்கிறது.

‘‘இதை ரெண்டு கோணத்துல பார்க்க வேண்டியிருக்கு. முதல்ல, அமெரிக்கர்கள் நம்மவர்களைவிட திறன் குறைஞ்சவங்களா இருக்காங்க. அதனாலதான் அதிகமான வேலை நமக்குக் கிடைக்குது. இப்போ, அங்க வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டிருக்கு.

அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் கூட, ‘இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து வேலைவாய்ப்பைப் பறிச்சு அமெரிக்கர்களுக்கு வழங்குவேன்’னு முழங்கியிருக்கிறார். அதுக்கான முன்னோட்டமாவும் இதை எடுத்துக்கலாம்.

அடுத்ததா, அமெரிக்க நிறுவனங்கள் ஒரு மணி நேரத்துக்குனுதான் இங்கிருக்கிற ஊழியர்களுக்கு சம்பளம் தருகின்றன. அதை நம்ம நிறுவனங்கள் மாசச் சம்பளமா கொடுக்குறாங்க. இதுல நிறுவனங்களுக்கு கணிசமான லாபம் இருக்கு.

அந்த லாபத்துல கொஞ்சத்தை பங்கு போட்டுக்குற திட்டமும் இதில் இருக்கு. இப்ப இருக்குற நிலவரப்படி, இந்தக் கட்டண உயர்வு 2025 வரை பத்து வருஷம் நடைமுறையில் இருக்கப் போகுது. இதன் மூலமா அமெரிக்கா 140 முதல் 160 கோடி டாலர் வரை நிதி திரட்ட திட்டமிட்டிருப்பதாகச் சொல்லப்படுது.

அதுமட்டுமில்ல... இதுல கிடைக்கிற நிதியை அமெரிக்க ஹெல்த்கேர் சட்டத்துக்கும், பயோமெட்ரிக் டிராக்கிங் சிஸ்டத்துக்கும் பயன்படுத்தப் போறதாவும் செய்திகள் வருது. ஆனா, ஏற்கனவே ஹெச்1 பி விசா வச்சிருக்குறவங்க செக்யூரிட்டி மற்றும் மெடிகேருக்குனு கடந்த பத்து வருஷங்களா வரி கட்டிட்டு வர்றாங்க.

அது போதாதுனு இப்படியெல்லாம் வேற நிதி திரட்டி நம்மளை வதைக்கிறாங்க. நம்ம ஊர்ல பல ஐ.டி. இளைஞர்களின் கனவே யு.எஸ். போவதுதான். அதுவும், பல கட்ட தடைகளுக்குப் பிறகே கிடைக்கும். ஆனா, இப்போ அந்தக் கனவும் கானல் நீரா மாறிடுச்சு என்பதுதான் வேதனை!’’ என்கிறார் அவர்.

இதில் நல்லதும்   இருக்கு!

‘‘இதில் அமெரிக்காவை மட்டுமே முழுக்கக் குறை சொல்ல முடியாது!’’

என்கிறார், சாஃப்ட்வேர் நிறுவனம் ஒன்றின் பொது மேலாளராக இருக்கும் சேவியர். ‘‘அமெரிக்க விசாவுல பி1 என சொல்லப்படுற பிசினஸ் விசா ஒண்ணு இருக்கு. இந்த பி1 விசாவுல ஆறு மாசம் வரை தங்கிக்கலாம். ஆனா, வேலை எதுவும் பார்க்கக் கூடாது. அதனால, இந்த விசா அமெரிக்காவின் வரி வட்டங்களுக்குள்ள வராது.

இங்கே சில ஐ.டி நிறுவனங்கள் இதைப் பயன்படுத்திக்கிட்டு, தங்கள் பணியாளர்களை இந்த விசாவின் கீழ் அனுப்பி வைக்க முயற்சிக்கிறாங்க. சமீபத்துல கூட ஒரு முன்னணி ஐ.டி நிறுவனம் இப்படி பணியாளர்களை அனுப்பினப்போ மாட்டிக்கிட்டாங்க.

இதனால, அமெரிக்கா சில கெடுபிடிகளைக் கொண்டு வந்தது. விசா காலத்தைக் குறைச்சு, கண்காணிப்பைப் பலப்படுத்திச்சு. இப்போ, விசா கட்டணத்தையே உயர்த்தியிருக்காங்க.  இது பெரிய நிறுவனங்களை நிச்சயம் பாதிக்காது. அவங்களுக்கு நாலாயிரம் டாலர் என்பது பெரிய விஷயமே கிடையாது. பாதிக்கப்படுறதெல்லாம் சின்ன நிறுவனங்கள்தான்.

அப்புறம், இந்த விசா கட்டணத்தை உயர்த்துறதுக்கு முன்னாடியே ஒரு நல்ல விஷயத்தையும் அமெரிக்கா பண்ணியிருக்கு. இங்கிருந்து வேலை விஷயமா போறவங்க, தங்கள் மனைவியை டிபெண்டென்ட் விசாவுல அழைச்சிட்டு போவாங்க.

அப்படிப் போறதால அவங்க அங்க வேலை பார்க்க முடியாது. ஆனா, இப்போ அவங்களும் வேலை பார்க்கலாம்னு ‘யு.ஐ.டி’ நம்பர் கொடுக்க அரசே சப்போர்ட் பண்ணுது!’’ என்கிறார் அவர் பாஸிட்டிவாக!இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து  வேலைவாய்ப்பைப் பறிச்சு அமெரிக்கர்களுக்கு வழங்குவதற்கான முன்னோட்டமாகவும் இதை எடுத்துக்கலாம்!

- பேராச்சி கண்ணன்