ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர் 8

விஜய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே காரில் இருந்தவர்களில் ஒருவன் ஒரு சிகரெட்டை உதடு களில் பொருத்தி, லைட்டரை உயிர்ப்பித்தான். அந்த வெளிச்சத்தில் காருக்குள் இருந்தவர்களின் முகங்கள் இன்னும் தெளிவாகத் தெரிந்தன.

விஜய் குரலைத் தழைத்துக்கொண்டு சொன்னான்... “நந்து... சட்டுனு திரும்பிப் பாக்காத! ரோடு முனையில ஒரு ஐ-20 நிக்குதில்ல... அந்தக் காருல இருக்கற ரெண்டு பேரும்தான் அன்னைக்குக் கல்யாணியை வெட்டினவங்க!”

“என்னடா சொல்ற..?” நந்தினி பயத்தில் அவன் கைகளை இறுகப் பற்றினாள். “எதை வெச்சு சொல்றே..? வெட்டினவங்க முகத்தை மூடி துணி கட்டியிருந்தாங்கனு நீ சொல்லல..?”“என்னதான் முகத்தை மறைச்சிருந்தாலும், புருவமும், நெத்தியும், தலைமுடியும் அடையாளம் காட்டுது... இவங்கதான்!”“இப்ப என்ன செய்யப் போறே..?”“என்ன செய்யச் சொல்றே..?”“உடனே போலீஸுக்கு போன் பண்ணுடா...”

“வெயிட்... போலீஸுக்கு ஃபோன் பண்ணி, அவங்க நூறு கேள்வி கேட்டு, கிளம்பி வந்து சேர்றதுக்குள்ள, இவங்க புறப்பட்டுப் போயிட்டா..? ‘பொய் சொல்லி எங்களை வரவழைச்சு, நீ குழப்பப் பாக்கறே’னு என்னைதான் அரெஸ்ட் பண்ணி இழுத்துட்டுப் போவாங்க!”
சொல்லிக்கொண்டே, விஜய் தன்னுடைய செல்போனை எடுத்து அதன் கேமராவை ஆன் செய்தான். ஜூம் செய்து பார்த்தான். காருக்குள் போதிய வெளிச்சம் இல்லாவிட்டாலும், அந்த முகங்கள் அடையாளம் புரிந்தன.

“எல்லா சேனல்லயும் ஒரு குருக்கள் செத்தாரு, ஒரு பொண்ணு செத்துச்சுனு ஒரு நாள் முழுக்க நியூஸா போட்டுத் தள்ளினாங்க. அதோட மறந்துட்டு அடுத்த வேலையைப் பாக்கப் போயிட்டாங்க.. நான் அப்படிப் போக முடியாது...”“டேய்... ஒரு சேனல் ரிப்போர்ட்டரா எவ்ளோ செய்தியை நீ கவர் பண்ணியிருக்க! அதெல்லாம் என்னாச்சுன்னு ஃபாலோ அப் பண்ணியிருக்கியா? அடுத்த நியூஸ் கிடைச்சவுடனே அது பின்னால துரத்திட்டு நீயும்தானே ஓடியிருக்கே..?”

“செத்தது யாரோ ரோடுல போற பொண்ணு இல்ல, நந்து... என் கூட வெயில்லயும், மழைலயும் தோள் கொடுத்த கல்யாணி. எனக்கு இது வெறும் செய்தி இல்ல... என் வாழ்க்கையப் புரட்டிப் போட்ட அனுபவம். இவனுங்க தப்பிச்சுப் போக நான் விட முடியாது...”“கல்யாணி உன் மனசுல எவ்ளோ அழுத்தமா இடம் பிடிச்சிருக்கானு யோசிச்சா, எனக்கு திக்குனு இருக்கு விஜய்...”போனில் பதிவாகும் வீடியோவிலிருந்து கண்ணை எடுக்காமல், “ப்ளீஸ்! இப்ப அந்தப் பேச்சை எடுக்காத...” என்று விஜய் சற்று அதட்டலாகச் சொன்னான்.

“கொலைகாரனுங்களைப் பிடிக்க வேண்டியது போலீஸோட வேலை...” என்று நந்தினி ஏதோ சொல்ல முனைய, கை உயர்த்தி அவளை அடக்கினான், விஜய். காரணம், காருக்குள் இருந்தவர்களில் ஒருவன் தன் போனை எடுத்து யாரிடமோ பேச ஆரம்பித்தான். அவன் பேசுவது கேட்கவில்லை என்றாலும், அடுத்தவனிடம் சைகையிலேயே ‘வண்டியை எடு’ என்று அவன் சொல்வதும், அவன் இருக்கையில் சரியாகப் பொருந்தி அமர்வதும் இங்கிருந்து தெரிந்தது.

“நந்தினி, நீ ஒரு ஆட்டோ பிடிச்சு வீட்டுக்குப் போயிடு...” என்றபடி விஜய் கடற்கரை மணலில் கையூன்றி எழுந்தான். “நீ..?”“அவங்க எங்க போறாங்கனு பார்க்கப் போறேன்...”அவன் பார்க்கும்போதே, கார் ரிவர்ஸ் எடுத்து 180 டிகிரி சடக்கெனத் திரும்பியது. நந்தினி அவன் கையை இறுகப் பற்றினாள். “வேணாம் விஜய்! கொலை செய்ய அஞ்சாதவங்கனு தெரிஞ்சும், எதுக்குடா ரிஸ்க் எடுக்கற..? போலீஸ்கிட்ட பேச உனக்குப் பிடிக்கலைனா, நான் பேசறேன்...”

“இந்த ரிஸ்க் கூட எடுக்கலைனா, வாழ்க்கையே வேஸ்ட்... எப்ப கூப்புடணுமோ அப்ப போலீஸை நானே கூப்புடுவேன். நீ புறப்படு... ஜாக்கிரதையா வீட்டுக்குப் போய்ச் சேரு!”சொன்ன வேகத்திலேயே மோட்டார் சைக்கிளை நிறுத்திய இடத்துக்கு விஜய் ஓடினான். ஹெல்மெட்டை அணிந்து, தன் பைக்கைக் கிளப்பினான்.

நந்தினி பதைக்கும் நெஞ்சுடன் பைக்கின் சிகப்பு விளக்கு மறையும்வரை பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஜோஷ்வா போனை அணைத்ததும், காரைச் செலுத்திக்கொண்டே லியோ அவன் பக்கம் திரும்பினான்.
“போன்ல யாரு..?”

“பார்ட்டிதான்...”“என்னவாம்..?”
“திடீர்னு ‘திருவான்மியூர் வேணாம், புலிக் குகை தாண்டி சவுக்குத் தோப்பு இருக்கு, அங்க மீட் பண்ணலாம்’னு சொல்றான்... இந்தப் பக்கம் செக்போஸ்ட் நெறைய இருக்காம். போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்கும்னு பயமா இருக்காம்...”“நடராஜர் இருக்கறது நம்ம வண்டில! நாமளே பயப்படல... தாட்பூட்னு பேசுவானுங்களே தவிர, இந்த வெள்ளைக்காரனுங்க தொடைநடுங்கிப் பசங்க...” என்று சிரித்துவிட்டு, லியோ காரின் வேகத்தைக் கூட்டினான்.

விஜய் முகத்தை மூடும் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், அந்தக் காரை நெருங்கிவிடாமல், போதிய இடைவெளி விட்டுத் தொடர்ந்தான்.
வானில் இருள் கூடியது. கிழக்குக் கடற்கரைச் சாலையில் விளக்குகள் விழித்தன. கிட்டத்தட்ட நாற்பது நிமிடப் பயணத்துக்குப் பின், புலிக் குகை தாண்டியதும், மகாபலிபுரத்துக்கு முன்பாக இடது புறம் இருந்த சவுக்குத் தோப்புக்குள் அந்தக் கார் நுழைவதை விஜய் பார்த்தான். தன் பைக்கை சற்றுத் தள்ளி சாலையின் விளிம்பில் நிறுத்திவிட்டு இறங்கினான்.

அவனுடைய இதயம் உச்ச வேகத்தில் அடித்துக்கொண்டிருந்தது. தான் செய்வது புத்தி சாலித்தனமா, முட்டாள்தனமா என்று அவனுக்குப் புரியவில்லை. ‘போலீஸுக்குத் தகவல் கொடுத்து அவர்கள் உதவியை நாடுவதே நியாயம்’ என்று ஒருபுறம் தோன்றினாலும், ஏதோ ஒரு சக்தி அவனைச் செலுத்தியது போல் குருட்டுத் துணிச்சலுடன் விஜய் மெல்ல இருளில் கலந்து அதே சவுக்குத் தோப்புக்குள் நுழைந்தான். காய்ந்த சருகுகள் காலடியில் சப்தம் எழுப்ப, நுனிக்காலால் மெல்ல மெல்ல நடந்தான்.

வானின் விளிம்பும் வெளிச்சம் இழந்து முற்றிலும் இருளாகிவிட்டிருக்க, நெருக்கமான சவுக்கு மரங்களுக்கு இடையில் சுத்தமாக வெளிச்சம் இல்லை. கண்கள் இருளுக்குப் பழக்கமாயின. ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும், காற்றில் பெட்ரோல் புகையின் வாசம் கலந்திருந்தது.கார் அங்கேதான் நின்றிருக்க வேண்டும் என்று விஜய் சுற்றுமுற்றும் பார்த்தான். சவுக்கு மரங்களுக்கு இடையில் ஒரு சிறு வறட்டு மணல் மைதானம். அங்கே ஐ-20 நின்றிருந்தது, பார்க்கிங் விளக்குகளை மட்டும் எரியவிட்டு.

எதிரில் அதேபோல், பார்க்கிங் விளக்குகள் மட்டும் விழித்திருக்க, இன்னொரு கார் நின்றிருந்தது. பாலைவனங்களிலும், மலை மேடுகளிலும், மணல்வெளிகளிலும் சுலபமாகப் பயணம் செய்யும் வகையில் நான்கு சக்கரங்களையும் இயக்கக்கூடிய வெளிநாட்டு வோல்வோ கார் அது.
அந்தக் காரின் கதவு திறந்தபோது, உள்ளே விளக்கு எரிந்து, அந்த வெளிச்சத்தில் அமெரிக்கன் போல் ஒருவன் தென்பட்டான். முப்பது வயதுக்குள் இருக்கும். செவேல் என்று சிவந்த சருமத்தில் வெயில் புள்ளிகள். செம்பட்டையான தலைமுடி. உயரமானவன். திடகாத்திரன். கைகளில் கையுறைகள் அணிந்திருந்தான்.

விஜய் மரங்களுக்கிடையில் நகர்ந்தான். சவுக்கு மரங்களுக்கிடையில் அவனுக்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது போல், திடீரென்று முளைத்திருந்த ஒரு புளிய மரம் தென்பட்டது. பள்ளிக்கூட வாழ்க்கையை கிராமத்துத் தோப்புகளிலும், தோட்டங்களிலும் கழித்திருந்ததால், சத்தமில்லாமல் மரம் ஏறுவது விஜய்க்கு சவாலாக இல்லை. வசதியான கிளைகளைக் கால்களால் பற்றிக்கொண்டு, ஒலியெழுப்பாமல் அமர்ந்தான்.

அவனுடைய கோணத்திலிருந்து இரு கார்களும், மூன்று நபர்களும் தெளிவாகத் தெரிந்தனர். தன்னுடைய செல்போனை மீண்டும் எடுத்து, வீடியோவை இயக்கினான். ஜூம் செய்து அவர்களை கவனித்தான்.“ஹாய்... ஐ’யாம் ஜோஷ்வா. திஸ் இஸ் லியோ!”
“ஹாய்..!” என்று அமெரிக்கன் கை குலுக்கினான். “ஐ’யாம் ஜார்ஜ்... அந்தச் சிலையை நான் பார்க்கலாமா?”
லியோ, பக்கத்தில் இருந்த ஜோஷ்வாவை ஆச்சரியத்துடன் பார்த்தான்.

“தமிழ்ல பேசறீங்க..?”“நான் பாண்டிச்சேரில இருந்த ஆளு... தமிழ், தெலுங்கு, ஹிந்தி எல்லாமே நல்லா பேசுவேன். குறள் சொல்லவா..?  அகர முதள எழுத்தெள்ளாம் ஆதி பகவன் முதற்றே உளகு...”“அப்ப குழப்பமில்லாம விலை பேசலாம்...” என்றான் ஜோஷ்வா.
“வெலை ஏற்கனவே பேசிட்டோம்..!”

“நாங்க அந்த சிலையை எடுக்கறதுக்கு ரொம்பக் கஷ்டப்பட்டோம்... இந்த வீடியோவைப் பாருங்க, தெரியும்...” என்று லியோ தன் போனில் வீடியோவை ஓட்டினான். மரத்தின் மேலிருந்து பார்த்த விஜய் தவித்தான். அது, அவன் பெண்ணையாற்றங்கரையில் எடுத்த விடியோ. ஜார்ஜ், வீடியோவைப் பார்க்கப் பொறுமையில்லாமல் கிளவுஸ் அணிந்த ஒற்றைக் கையால் அதை ஒதுக்கினான்.  “மேட்டர் தெரியும்... பார்க்கறவங்களை எல்லாம் டப்பு டிப்புனு கொன்னு போட்டுட்டு வந்திருக்கீங்க..!”“அதனால பழைய ரேட்டு கட்டுப்படியாகாது... விலை கூடிப்போச்சு!” என்றான் லியோ, தீர்மானமான குரலில்.

“எங்க பாஸ் ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு... பேசின விலைக்கு மேல பத்தாயிரம் டாலர் குடுத்தாதான், சிலையைக் குடுக்க முடியும்...” என்று ஜோஷ்வா அனுபல்லவி பாடினான். நிக்கோடின் கறை படிந்த பற்கள் தெரிய, ஜார்ஜ் வாய்விட்டுச் சிரித்தான். “அந்த பத்தாயிரம் டாலரை நீங்க பாக்கெட்ல போட்டுக்க பிளான் பண்ணியிருக்கீங்க! ஆனா, பிரதர்ஸ்... எப்பவுமே ரத்தக் கறை படிஞ்சா, அந்த ஐட்டத்துக்கு சர்வதேச மார்க்கெட்ல வெலை குறையும்... தெரியாதா? உங்ககூட ரெகுலரா நிறைய வியாபாரம் பண்ணணும்னு ஆசைப்படறேன். அதனாலதான் வெலையை நான் குறைச்சுக் கேக்கல...”

லியோவும், ஜோஷ்வாவும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.“டயத்தை வேஸ்ட் பண்ணாம சிலையைக் காட்டுங்க...”மரத்தின் மீது அமர்ந்திருந்த விஜய் பரபரப்பானான். ஜோஷ்வா தங்கள் காருக்குப் போய், பின் இருக்கையைத் தூக்கி, அதனடியில் பதுக்கியிருந்த அழுக்குத் துணிப்பையை எடுத்து வந்தான். பிரித்தான். நடராஜர் சிலை வெளியே வந்தது. ஜார்ஜ் தன் போனில் இருந்த டார்ச்சை இயக்க, அந்த வெளிச்சத்தில் நடராஜரின் வைரக் கண்கள் மின்னல்களை வாரி இறைத்தன.

“அருமையா இருக்கு...” என்றான் ஜார்ஜ். தன் காரிலிருந்து ஒரு கேன்வாஸ் பையை எடுத்து அவர்களுக்கு நடுவில் போட்டான். “பேசுன தொகை. டாலரா இருக்கு... எண்ணிக்குங்க!”ஜோஷ்வாவும், லியோவும் ஆளுக்கு ஒரு டாலர் கட்டு எடுத்துப் பிரித்து எண்ண ஆரம்பித்தார்கள். ஜார்ஜ் நிதானமாக நடந்து நடராஜர் சிலையைத் தன் வோல்வோவின் பின் இருக்கையில் கிடத்தினான். டேஷ்போர்டு திறந்து ஏதோ எடுத்து வந்தான். அது ஏதோ இல்லை, சைலன்ஸர் பொருத்திய ஒரு பிஸ்டல் என்று அதை நிமிர்த்தி அவன் குறிபார்த்தபோதுதான் விஜய்க்குத் தெரிந்தது.
விஜய் மூச்சை இழுத்துப் பிடித்தான்.

“ஹலோ...” என்று ஜார்ஜ் கூப்பிட்டதும், ஜோஷ்வாவும், லியோவும் சந்தேகமின்றி நிமிர்ந்து பார்த்தார்கள். ஜார்ஜ் ‘டப்... டப்...’ என்று சுட்டான். சோடா பாட்டில் மூடியைத் திறக்கும் ஒலி மட்டுமே கேட்டது. லியோவும் ஜோஷ்வாவும் மல்லாந்து சரிந்தனர். ஜோஷ்வாவின் உயிரற்ற விழிகள் மரத்தில் ஒளிந்திருந்த விஜய்யையே பார்த்தன. விஜய் மிரண்டான். ஜார்ஜ் அவர்களை நெருங்கி நின்று மீண்டும் இரு தோட்டாக்களை செலவு செய்தான். பிஸ்டலைத் தன் பேன்ட்டுக்குள் செருகினான். அவர்கள் எண்ணிக்கொண்டிருந்த பணத்தை அள்ளி கேன்வாஸ் பையில் திணித்தான்.

திடுக்கிடலில் விஜய்யின் இதயம் ஒரு நிமிடம் நின்றுபோனது. விஜய்யின் போன் பேட்டரி ஓய்ந்து அணையப் போகிறேன் என்று மினுக்கி, மினுக்கி எச்சரித்தது. அச்சத்தில் அவன் உடலெங்கும் வியர்வை சுரந்தது.ஜார்ஜ் தன் வோல்வோ காரில் ஏறினான். ரிவர்ஸ் எடுத்தான். டயர்கள் திணறாமல் மணலை உழுது திரும்பின.

சில சினிமாக்களில் பார்த்திருந்த காட்சி போல் இப்படியொரு காட்சியை இவ்வளவு அண்மையில் காண்போம் என்று அவன் நினைத்ததேயில்லை. அத்தனைக் காட்சிகளையும் தன் செல்போன் கேமிரா பதிவு செய்திருப்பதை விஜய் திருப்தியும், பெருமிதமுமாக உணர்ந்தான்.

போன் பேட்டரி தீர்ந்து செத்துப் போவதற்குள் வோல்வோவின் நம்பர் பிளேட்டைப் படம் எடுத்துவிட வேண்டும் என்று சற்றே அவன் போனைத் திருப்பினான். அவன் சற்றும் எதிர்பாராத விதமாக வியர்வையில் நனைந்திருந்த அவன் கையிலிருந்து செல்போன் வழுக்கியது. நழுவிக் கீழே விழுந்தது.
‘சரக்’ என்று சருகுகளில் ஏதோ விழும் சத்தம் கேட்டதாலோ, ரியர்வியூ கண்ணாடியில் விழுவது கவனிக்கப்பட்டோ, வோல்வோ சட்டென்று நின்றது.
மரக் கிளைகளுக்குள் விஜய் ஒன்றிக்கொண்டான். காரிலிருந்து ஜார்ஜ் பிஸ்டலுடன் இறங்கினான். டார்ச் வெளிச்சத்தை விஜய் இருந்த பக்கம் திருப்பினான். சருகுகளை மிதித்துக்கொண்டு, அந்தப் புளிய மரத்தை நெருங்கினான்.

‘‘வேறு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா..?’’
‘‘என்னோட தேர்தல்
அறிக்கையில
கோர்ட்டுகளுக்கு தனி
வாக்குறுதி
கொடுத்திருக்கேன்
யுவர் ஆனர்!’’

‘‘தலைவர் டிரெண்டியா இருக்காரா... எப்படிச் சொல்றே?’’
‘‘நெட்டிசன்களுக்கு தனியா தேர்தல்
வாக்குறுதி
கொடுக்கறார்!’’

‘‘தலைவரே!
தேர்தல் பயம்
இல்லாம
எப்படி இருக்கீங்க..?’’
‘‘அதை விட
அதிகமா
கோர்ட் பயம்
இருக்கே!’’

‘‘அந்த வாக்காளர் மேல தலைவர் ஏன்
பாயறார்..?’’
‘‘தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது
தலைவர் உடம்புல உண்மை கண்டறியும் மெஷினை மாட்டணும்னு சொல்லியிருக்கார்!’’

‘‘கூட்டணி
அமையாததால தலைவர் வேதாந்தி
ஆகிட்டாரா...
எப்படிச் சொல்றே?’’
‘‘தேர்தலும் கடந்து போகும்னு
சொல்றாரே..!’’

‘‘தலைவர்
மேல என்ன புகார்..?’’
‘‘ஓட்டுக்குப்
பணம் வாங்கின
வங்களுக்கு
பச்சை குத்தி
விட்டிருக்கார்..!’’

‘‘தலைவருக்கு
வந்த மீம்ஸை
பார்த்து அதிர்ச்சி
யாகிட்டாரே...
அப்படி என்ன வந்தது?’’

‘‘தலைவர்
படம் போட்டு,
‘கோட்டை லட்சியம்... கோர்ட் நிச்சயம்’னு
வந்திருக்கு!’’
- அம்பை தேவா, சென்னை-116.

(தொடரும்...)

சுபா

ஓவியம்: அரஸ்