24
காலத்தை மாற்றி அமைக்கும் இயந்திரம்... அதை அடையத் துடிக்கும் வில்லன்... விஞ்ஞானியின் வாரிசு... தலைமுறைகள் தாண்டித் தொடரும் தேடல்... இதன் சடுகுடு ஆட்டமே ‘24’.ஹீரோயிசம் பளிச்சென்று தலை காட்டாத கதையில், வழக்கத்திற்கு மாறாக நடிக்கத் துணிந்த வகையில் சூர்யாவுக்கு இது நிச்சயம் ஸ்பெஷல்.
 பார்த்துச் சலித்த ஆட்டம், பாட்டம், ஆக்ஷன்களை வரையறுத்து ஒதுக்கி விட்டு, மூன்று வித்தியாச ரோல்களை அனாயாசமாக செய்து காட்டிய வகையிலும் கனத்த பூங்கொத்து! இத்தனை வண்ணமும் சயின்ஸ் த்ரில்லரில் சேர்த்துக் குழைத்த விக்ரம்குமாருக்கும் இது வெற்றிப் படிக்கட்டு!
மலை கிராமத்தில் ஒதுங்கி, ஒரு கால இயந்திரத்தை வாட்ச்சாக வடிவமைக்கிறார் விஞ்ஞானி சூர்யா. அவர் அண்ணனே வில்லனாகி அதைக் கைப்பற்ற முயல, கடைசிக்கட்ட தப்பித்தல் முயற்சியில் மனைவி நித்யா மேனன் ரத்தத்தில் சாய்கிறார்.
ரயிலில் பார்த்த சரண்யாவிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு வில்லன்களிடம் பலியாகிறார் விஞ்ஞானி சூர்யா. தப்பித்த கால இயந்திரம், மகன் சூர்யாவிடம் வந்து சேர்கிறது. திரும்பவும் அதை அடையும் முயற்சியில் வில்லன் சூர்யா இறங்க, அவருக்கு அது கிடைத்ததா? என்பதே ரசனையும், த்ரில்லும் கூட்டும் மீதிக் கதை!
கொடூர வில்லன், அன்புத் தகப்பன், அப்பாவிக் காதல் இளைஞன் என மூன்று ரோல்களிலும் முழு வித்தியாசம் காட்டி வெளுத்துக் கட்டியிருக்கிறார் சூர்யா. அதுவும் அந்த ஆத்ரேயா, ரொம்ப ஸ்மார்ட்! கொத்துச்சிகை நெற்றியில் விழ, எப்படியாவது அந்த ‘கடிகாரத்தை’ கைப்பற்றிவிட வேண்டும் என்ற துடிப்பு.
எது மாதிரியும் இல்லாத அசல் சூர்யாவை பார்க்கப் புதுசு. கொடும்பார்வையில் தம்பியை உயிரோடு சாய்க்கப் போராடும் தீவிரத்தில் பின்னுகிறார் என்றால், அம்மாவின் மீது உயிரை வைத்திருக்கும் பாசம், காதலி சமந்தாவிடம் காட்டும் செல்லக் கோபம், சின்னச் சின்ன சீண்டலில் அப்படியே பொருத்தம். சூர்யாவின் பட்டியலில் ‘24’க்கு இருக்கிறது முதலிடம்!
சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லரில் பெரும் ஆறுதல் சமந்தா! பொங்கி வழியும் காதலில், வகைதொகை இல்லாத சில்லிடும் பிரியத்தைக் காட்டும் தினுசுக்கு ஆயிரம் லைக்ஸ். சூர்யாவும், சமந்தாவும் சந்திக்கும் காட்சிகளில் எல்லாம் இளமை மழை! கொஞ்ச நேரமே வந்தாலும் நித்யா... க்ளாஸ்!
டைம் மெஷின் கடிகாரத்தை சூர்யா கண்டுகொண்ட பிறகு ஆரம்பிக்கிறது களேபரம்! நிமிர்ந்து உட்கார்ந்த கணத்தில் ஆரம்பித்து கடைசிவரை தொடர்கிறது, துறுதுறு விறுவிறு பயணம்! வழக்கமான அம்மாதான் சரண்யா! இருப்பினும் இன்னும் அவரிடம் பாசமும் நேசமும் புதிதாகக் கிளைவிடுகிறது. மொத்தப் படத்தின் மர்ம முடிச்சுகளும் இறுதியில் ஒவ்வொன்றாக அவிழும்விதமாக... செம ஃப்ரெஷ் ஸ்கிரீன்ப்ளே!
ஏ.ஆர்.ரஹ்மானின் இசை, பின்னணியிலும் களைகட்டுகிறது. ‘ஆராரோ’, ‘புன்னகையே’ பாடல்கள் ஆஹா! முதல் ஷாட்டில் விஞ்ஞானியின் ஆராய்ச்சிக் களத்தில் ஆரம்பித்து, எல்லா இடங்களிலும் வசியம் செய்கிறது ‘திரு’ கேமிரா. ஆனாலும், ஆத்ரேயா சூர்யா போடுகிற ட்விஸ்ட் வேடங்களில் நமக்கு சற்றே குழப்பம்! சயின்ஸ் ஃபிக்ஷனின் நேர்த்தியான கதை சொல்லல் உத்தி இல்லாதது பலவீனமாக இடறுகிறது. விஷுவல் ட்ரீட், புது நடிப்பு, பளிச் திரைக்கதை என ஈர்க்கிறது ‘24’!
- குங்குமம் விமர்சனக் குழு
|