கண்ணதாசனும் வாலியும் எங்க பேனாவில்தான் பாட்டெழுதினாங்க!
‘பேனா ரிப்பேர் கடை’ என்ற வார்த்தையே இப்போதைய இளசுகளுக்கு சிரிப்பை வரவழைக்கலாம். கார், டூ வீலர்களே யூஸ் அண்ட் த்ரோ ஆகிவிட்ட இந்த யுகத்தில் ஒரு பேனாவை வாங்கி அதை ஆயுசுக்கும் பயன்படுத்திய வரலாறெல்லாம் ஃபேன்டஸி கதைதான். ஆனால், இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் சென்னை மயிலாப்பூரில் கம்பீரமாய் வீற்றிருக்கிறது ‘தாஜ் பென்ஸ்’... இங்க் பேனா பழுது பார்க்கும் கடை!
 ‘‘2010 வரைக்கும் கூட ஓரளவுக்கு இங்க் பேனாக்கள் விற்பனை ஆச்சுங்க. கடந்த அஞ்சு வருஷமாத்தான் ரொம்பக் குறைஞ்சு போச்சு. எல்லாரும் பால் பாயின்ட், ஜெல் பேனாக்களுக்கு மாறிட்டாங்க. அதெல்லாம் பிடிச்சி எழுதும்போதே உடைஞ்சு போகுற தரத்தில் வருது. இங்க் பேனாக்களோட அருமை இப்ப யாருக்கும் தெரியலை!’’ எனக் கவலையுடன் தொடங்குகிறார் எழுபது வருடப் பாரம்பரியமுள்ள இந்தக் கடையின் உரிமையாளர் முஹமது மூசா.
 ‘‘1947ல எங்க அப்பா ஷேக் அப்துல்லா இந்தக் கடையைத் தொடங்கினார். மயிலாப்பூர்ல அப்ப இருந்த பத்துப் பதினஞ்சு கடைகள்ல இதுவும் ஒண்ணு. எப்படிப்பட்ட இங்க் பேனாவையும் எங்க அப்பா சரி பண்ணிக் கொடுத்துடுவார். அவர்கிட்ட இருந்து நான் அதைக் கத்துக்கிட்டேன். இப்பவும் சிலர் பொக்கிஷமா பாதுகாக்குற வெளிநாட்டுப் பேனாக்கள் என்கிட்ட ரிப்பேருக்கு வருது.
சில பேனாக்களுக்கு உதிரிப் பாகங்கள் கிடைக்காது. அதை நானே தயாரிச்சு மாட்டி சரி செய்வேன். அதனால வெளிமாவட்டத்துல இருந்தெல்லாம் என்னைத் தேடி வருவாங்க. ரிப்பேருக்கு பெரும்பாலும் அஞ்சு பத்துதான். வேலையைப் பொறுத்து 200 ரூபாய் வரைக்கும் வாங்குறதுண்டு. எங்க கடையில வாங்குற பேனா எல்லாத்துக்கும் ஆறு மாசம் வரை சர்வீஸ் ஃப்ரீ.
கவிஞர் கண்ணதாசன், வாலி, நடிகர் நாகேஷ், பூர்ணம் விஸ்வநாதன், வி.எஸ்.ராகவன்... இவங்கல்லாம் அந்தக் காலத்தில் இருந்தே எங்க கடைக்கு ரெகுலர் கஸ்டமர்ஸ். கவிஞர் கண்ணதாசன் பேனா வாங்க வரும்போதெல்லாம் ரொம்ப நேரம் கடையில் இருப்பார். பெண்கள் புடவையைத் தேர்ந்தெடுக்குற மாதிரி, எல்லா பேனாக்களையும் எடுத்துப் போட்டு பல முறை எழுதிப் பார்த்துச் சோதிச்சுத்தான் வாங்குவார்.
கலைஞர் ஐயா, ‘வால்டி’ என்னும் குண்டுப் பேனாவை இங்கதான் வாங்குவார். ஒரு முறை கவிஞர் வாலிக்கு அன்பளிப்பு தரணும்னு அந்தப் பேனாவை வாங்கிட்டுப் போனார். நடிகர் நாகேஷ் கடைக்கு வந்தா கலகலப்பா பேசுவார். அத்தனை கவலையும் மறந்துடும். இசை அமைப்பாளர் தேவா வரும்போதெல்லாம் பச்சை கலர் பேனாவை மட்டும்தான் வாங்குவார். அவருக்காக அந்தக் கலரை தனியா எடுத்து வைப்பேன்!’’ என்கிற மூசாவின் பழமையான பேனா கலெக்ஷன் மனசை அள்ளுகிறது.
மான்ட் ப்ளா, பெலிக்கன், ஆலிவர், பார்க்கர், ஹீரோ என அனைத்து பிராண்ட்களும் ஷோகேஸில் சிரிக்கின்றன. இவற்றில், மரத்தால் ஆன இங்க் பேனா ஒன்று - வேறெங்கும் கிடைக்காது. அது மூசாவின் சொந்தத் தயாரிப்பு!
‘‘இப்ப முன்ன மாதிரி வியாபாரம் இல்ல. பெரிய அளவில் வருமானமும் இல்ல. கண்ணதாசன், வாலி எல்லாம் எழுதின வைர வரிகளுக்கு எங்க கடை பேனாக்கள்தான் வடிவம் கொடுத்துச்சு அப்படிங்கறதில் ஒரு பெருமை, அவ்வளவுதான்.
என்னை நம்பி இருக்குற வாடிக்கையாளர்களுக்காகவும், பேனாக்கள் மேல எனக்கு இருக்குற காதலாலும்தான் இந்தக் கடையை நடத்திக்கிட்டிருக்கேன். நான் எனக்காகவோ இந்தத் தொழிலுக்காகவோ சொல்லலை. ஆனா, இங்க் பேனாவில் எழுதுறதுதான் நமக்கு நல்லது.
பால் பாயின்ட் பேனாவை அழுத்தி எழுத வேண்டி வரும். அதனால சீக்கிரமே கை நடுக்கம், வலி எல்லாம் ஏற்படும். இங்க் பேனாவில் அழுத்தம் தர வேண்டிய அவசியமே இல்லை. இங்க் பேனா கையெழுத்து எப்பவுமே மாறாது.
இருபது ரூபாய்க்கு இங்க் வாங்கினா ஆறு மாசத்துக்கு மேல வரும். செலவும் குறைவு!’’ என்கிறார் அவர் புன்னகை மாறாமல்! பாக்கெட்டில் பேனா வைத்திருப்பதே கௌரவக் குறைச்சல் என்கிற இந்தத் தலைமுறையிடம் இதில் எதைச் சொல்ல!இங்க் பேனாவில் எழுதுறதுதான் நமக்கு நல்லது. பால் பாயின்ட் பேனாவை அழுத்தி எழுத வேண்டி வரும்.
- புகழ் திலீபன் படங்கள்: ஆர்.சந்திரசேகர் மாடல்: கிருத்திகா
|