கணக்கு
மூர்த்தி, டீக்கடை எப்படிப் போகுதுப்பா?’’ - மூர்த்தி போட்டுக் கொடுத்த டீயைக் குடித்தபடியே கேட்டார் மகாலிங்கம்.‘‘வியாபாரத்துக்கு குறைச்சல் இல்லேங்க. காரணம், நம்ம கடைப் பையனுங்கதான். நாலு பேருமே கெட்டிக்காரங்க.
 டீயோடு இட்லி, வடைனு டிபன்... பகலில் சம்சா, மசால் வடை... சாயங்காலமா பஜ்ஜி, மெதுவடைனு ஜமாய்க்கிறாங்க!’’ - பாராட்டுகளை அள்ளி விட்டார் மூர்த்தி. புறப்படும்போது புருவம் சுருக்கி மெதுவாகக் கேட்டார் மகாலிங்கம், ‘‘ஆமாப்பா! வேலை செய்றவங்களுக்கு என்ன சம்பளம் கொடுக்கறே?’’‘‘ஆளுக்கு எண்ணூறு ரூபா கொடுக்கறேன்!’’மகாலிங்கம் அதிர்ந்துபோனார்.
‘‘என்னப்பா சொல்றே... எண்ணூறு ரூபா நாள் சம்பளமா? அப்போ மாசம் 24 ஆயிரம் ரூபாவா? அரசு ஊழியர் சம்பளத்தை எல்லாம் தாண்டிடுச்சே?’’ ‘‘இதுல என்னண்ணே இருக்கு? காலையில் இருந்து ஓய்வில்லாம வேலை செய்றாங்க. அதனால எனக்கும் தினம் இருபதாயிரம் ரூபாய் வரை வியாபாரம் நடக்குது. கிடைக்கிற லாபத்துல உரிய பங்கை அவங்களுக்குக் கொடுக்கறேன்.
வியாபாரம் இன்னும் உயர்ந்தா இன்னும் கொடுப்பேன்னு அவங்க மேலும் உற்சாகமா வேலை செய்றாங்க. இது நமக்கு லாபம்தானே! நான் சம்பளக் கணக்கு பார்க்குறது இப்படித்தான்!’’ என்றார் மூர்த்தி.இந்தக் கணக்கை எண்ணிப் பூரித்துப் போனார் மகாலிங்கம்.
கு.அருணாசலம்
|