மலிவு விலை காருக்கு தடை!
பணக்கார நாடுகளில் கார் வாங்குகிறவர்கள் முதலில் பார்ப்பது, பேனட்டின் நீளம், காரின் எடை மற்றும் ஏர்பேக்குகளின் தரம். காரணம், பாதுகாப்பு. அங்கே விபத்துகள் அரிதினும் அரிது என்றாலும், வாகனத்தின் தரம் உயிரைப் பறிப்பதாக இருந்துவிடக் கூடாது என அக்கறை காட்டுகிறார்கள். ஆனால் இந்தியாவில் ராக்கெட்டே செய்தாலும் ‘மைலேஜ் எவ்வளவு’ என்பதுதான் முதல் கேள்வி.
 எனவேதான் இங்கே நானோ மாதிரியான கார்கள் ‘மக்கள் கார்’ எனப் பெயர் வாங்குகின்றன. ஆனால், இப்போது நானோவை விடவும் குட்டியாக, அதைவிடவும் விலை மலிவாக, லிட்டருக்கு 35 கி.மீ மைலேஜ் கொடுக்கக் கூடியதுமான ஒரு காரை இந்தியாவில் விற்பனை செய்யத் தடை விதித்திருக்கிறார்கள். காரணம், ‘பாதுகாப்பு இல்லை’ என்பது. ‘பாதுகாப்பா? அதுவும் இந்தியாவிலா? என்ன இது புதுசா?’ எனக் கேள்வியைக் கிளப்பியிருக்கிறது இந்தச் சம்பவம்!
ஸ்கூட்டர், பைக், ஆட்டோ என 2 சக்கர மற்றும் 3 சக்கர வாகனங்கள் மட்டுமே தயாரித்துவந்த பஜாஜ் நிறுவனம்தான் முதன்முறையாக இப்படியொரு கார் புரட்சியில் இறங்கியிருக்கிறது. ‘RE60 க்யூட்’ (RE60 QUTE) என இந்தக் காருக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். கார் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அவர்கள் செய்ததெல்லாம் டூவீலருக்கு பக்கவாட்டில் இன்னொரு ஜோடி வீல்கள் வைத்து மேலே கவர் போட்டதுதான். 4 பேர் பயணிக்கக் கூடிய இந்தக் காரின் எஞ்சின் 200 சிசி திறன் கொண்டது.
 இது ஒரு புல்லட் பைக்கின் திறனை விடக் குறைவு. ஐந்து கியர்களுடன் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய இதன் விலை ஜஸ்ட் 1 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்தான். இந்தியாவில் கூறு கட்டி விற்க வேண்டிய இந்த அசத்தல் அயிட்டத்தை வெளிநாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது பஜாஜ். ஆனால், இந்தியாவுக்குள் போணி பண்ண முடியவில்லை. காரணம், ஒரு பரிசோதனை முடிவு.
புதிய கார்களை சோதனை செய்யும் ஈரோ என்.சி.ஏ.பி (EURO NCAP) எனும் ஐரோப்பிய நிறுவனம் இந்த காரை ‘க்ராஷ் டெஸ்ட்’ (crash test) - அதாவது மோத விட்டுப் பார்க்கும் சோதனை செய்தது. அதில் RE60 க்யூட் அப்பளமாக நொறுங்கியது. இந்த முடிவுகளைக் காட்டி சிலர் பொதுநல வழக்கு போட, விஷயம் உச்ச நீதிமன்றம் வரை சென்றிருக்கிறது.
அதுவரை இந்தக் காரை இந்திய வாடிக்கையாளர்கள் தொட்டுப் பார்க்க முடியாது. ‘‘விலை, பெட்ரோல் சிக்கனம், சுற்றுச்சூழல் நண்பன் என பல ப்ளஸ்கள் இருந்தும் இந்தக் காரிடம் பாதுகாப்பு அம்சங்கள் இல்லை!’’ எனத் துவங்குகிறார் கன்ஸ்யூமர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பின் ப்ராஜக்ட் டைரக்டர் சுவாதி சத்யமூர்த்தி. கார் தொடர்பான பல க்ராஷ் டெஸ்டுகளை நேரடியாகக் கண்ட அனுபவமிக்கவர் இவர்.
‘‘முதலில் இது காரே அல்ல... குவாட்ரிசைக்கிள் (quadricycle)... அதாவது, ‘நான்கு சக்கர வாகனம்’ என்ற வகைக்குள்தான் கொண்டு வருகிறார்கள். அதாவது, நம்ம ஊர் ஆட்டோவும் இல்லாமல் காரும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வகை.
இவற்றை நெடுஞ்சாலைகளில் பயன்படுத்தக் கூடாது என விதி இருக்கிறது. வெளிநாடுகளிலும் இதுபோன்ற சிறிய ரக வாகனங்கள் உள்ளன. ஆனால், போக்குவரத்து போன்ற விஷயங்களில் முன்னேற்றமும், கட்டுப்பாடும் உள்ள நாடுகளில் நகர்ப்புற பயன்பாட்டுக்காகவே இதைப் பயன்படுத்துகிறார்கள்.
சிக்னலில்கூட நிற்கும் பொறுமை இல்லாத மக்கள் கொண்ட, நெரிசலான சந்துகளில்கூட எப்போதும் வாகனங்கள் நெருக்கியடிக்கும் போக்குவரத்து கொண்ட, எந்த அடிப்படைப் பாதுகாப்பும் இல்லாத சூழலில் இதுபோன்ற இரண்டும்கெட்டான் கார்களை ஓட்டிச் செல்வதில் உள்ள ஆபத்துகளை நாம் உணர வேண்டும்.
விபத்து என்று நேர்ந்துவிட்டால் இந்தக் காருக்குள் பயணிப்பவர்கள் என்ன கதியாவார்கள் என்பதைத்தான் அப்பளமாக நொறுங்கிய அந்த க்ராஷ் டெஸ்ட் காட்சி காட்டியது!’’ என்கிற சுவாதி, பெரியதோர் அதிர்ச்சித் தகவலை அடுத்து தருகிறார்.
‘‘இந்த வாகனத்தை விடுங்கள்... நம் ஊரில் கார் என்ற பெயரிலேயே விற்கப்படும் ஹுண்டாய் ஐ10, நானோ, ஃபோர்டு ஃபிகோ, வோக்ஸ்வேகன் போலோ, மாருதி ஆல்டோ 800 போன்றவையே இந்த டெஸ்ட்டில் பாஸாகவில்லை. இருந்தும் இவற்றை மார்க்கெட்டுக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள்.
இதற்கெல்லாம் முற்றுப் புள்ளியாக இந்திய மோட்டார் சட்டம் வரும் அக்டோபரிலிருந்து மாறப்போவதாகச் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு இந்தியாவில் எந்த நான்கு சக்கர வாகனத்தையும், பயணிகளுக்கு பாதுகாப்பானவையா என பரிசோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெற்றால்தான் விற்க முடியும்!’’ என்கிறவர், ‘விலை மலிவு என்ற கான்செப்ட்டே கார் விஷயத்தில் தவறு’ என வலியுறுத்துகிறார்.
‘‘ஒரு காரின் பாதுகாப்பில் முக்கியமான அம்சம் ஏர்பேக் எனப்படும் காற்றுப் பை. மோதல் ஏற்படும்போது இது தானாக ஊதப்பட்டு டிரைவரையும் பயணிகளையும் காப்பாற்றும். இந்த ஏர்பேக் ஒன்றின் விலை சுமார் 6000 ரூபாயிலிருந்து 7000 ரூபாய்க்குள் வரும். ஆனால், விலை குறைவான கார்களில் இந்த வசதியைச் செய்து தருவதில்லை. நுகர்வோரும் இது வேண்டும் என்று கேட்பதில்லை.
அடுத்து, ஒரு காரின் கட்டமைப்பு உறுதியாக இருந்தால்தான், அது மோதல்களைத் தாங்கி நின்று பயணிகளைக் காப்பாற்றும். ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய்க்குள் காரைத் தயாரிக்க வேண்டும் என்றால் அதில் தரமான இரும்புப் பொருட்களையோ தகடுகளையோ பயன்படுத்த முடியுமா? பிளாஸ்டிக்கைத்தான் பயன்படுத்துவார்கள்.
வண்டியின் அடிப்படையான சேஸிஸ் கூட எடை குறைவான தரமற்ற இரும்பில்தான் இருக்கும். இத்தனை தரமற்று இருக்கும் வாகனம் வேகமான பயணத்தின்போது ஒரு அவசரம் என்று பிரேக் அடித்தால் நிற்குமா? வண்டி கட்டுப்பாட்டுக்குள் இருக்குமா? இதையெல்லாம் யோசிக்க வேண்டும். காரணம், நம் உயிர் எல்லாவற்றையும் விட மதிப்பு வாய்ந்தது. இப்படிப்பட்ட கார்கள் இந்திய வீதிகளில் பெருகி, பாதசாரிகள் முதல் வாகனங்களில் போகிறவர்கள் வரை பலரையும் அச்சுறுத்தும் கொலை ஆயுதங்களாக வலம் வருகின்றன. புதிய வாகனச் சட்டம் வந்தால், தரம் காரணமாக கார்கள் விலை உயரலாம்.
நடுத்தர மக்கள் கார் வாங்க முடியாமல் தவிக்கலாம். ஆனால், அடிக்கடி விபத்து, அகால மரணம் போன்ற செய்திகள் எல்லாம் முற்றிலும் குறையும்!’’ என முத்தாய்ப்பாக முடிக்கிறார் சுவாதி சத்யமூர்த்தி.கார் என்பது ஊருக்குப் போகத்தான் பாஸ்... உலகத்தை விட்டுப் போக அல்ல!
தரமற்று இருக்கும் வாகனம் வேகமான பயணத்தின்போது ஒரு அவசரம் என்று பிரேக் அடித்தால் நிற்குமா? இப்படிப்பட்ட பயணம் தேவையா? நம் உயிர் எல்லாவற்றையும் விட மதிப்பு வாய்ந்தது.
- டி.ரஞ்சித்
|