மருத்துவர் கு.சிவராமன் IN மனசு Download



இளமைப் பருவம்

அப்பா நேர்மையான அரசு அதிகாரி. சொந்தமென ஒரு காணி நிலமோ, வீடோ இல்லை. அப்பா கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர்... அம்மா கூடப் பிறந்தவர்கள் ஒன்பது பேர். பெரிய குடும்பத்தைக் காப்பாற்றுகிற பல பொறுப்புகள் அப்பாவிடம்.

ஆறு தங்கைகளுக்கு கல்யாணம் செய்து கொடுத்தார் அப்பா. படிப்பு ஒன்றுதான் வாழ்க்கையை சீரமைக்கிற விஷயம் என நம்பினார். கட்டுப்பாடு, கெட்ட பழக்கம் இல்லாத நடைமுறை எல்லாம் எனக்கு அவரிடமிருந்து வந்துவிட்டது. மருத்துவராக வேண்டும் என்பதுதான் மொத்த கனவாக இருந்தது. ஆனால் என் வகுப்பில் 17 பேர் எம்.பி.பி.எஸ் படிக்கப் போய்விட, நான் மட்டும் சித்த மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தேன்.

கேட்க விரும்பும் கேள்வி

  தமிழுக்கு அவ்வளவு மாண்பு இருக்கிறது. பெரியார் இருந்த மண்ணில் ஏன் நேர்மை குறைந்தது? பொல்லாத மனிதர்களாக ஏன் நிறையப் பேர் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்? தான், தன் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்ற மனப்பாங்கு இந்தச் சமூகத்திற்கு வந்துவிட்டதே... ஏன்? ‘நமக்கேன் வம்பு’, ‘உனக்கு மட்டும் என்ன வந்தது’ என்று சொல்வது வழக்கமாகிவிட்டதே!

மாண்பு உள்ள இந்த பூமியில் இப்போதும் கௌரவக் கொலைகள், சாதீய அடிப்படையில் அரசியல் ஏன்? என்னுடையது காதல், கலப்புத் திருமணம். என் அப்பா எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், மனதிற்குப் பிடித்திருந்தால் போதும் என அனுமதித்தாரே! வலி மிகுந்த கேள்விதான்... ‘இந்த சமூகம் நல்ல மதிப்பீடுகளில் முன்னேற்றம் பெறுவது
எப்போது?’

பாதித்த விஷயம்

குன்றத்தூரில் நிகழ்ந்த ஒரு கொலை பற்றிப் படித்தேன். வீட்டில் நம்பிக்கையாக இருந்த வேலைக்காரப் பெண், அந்த வீட்டின் வயதான பெண்மணி, அவரின் மகள் என இருவரைக் கொலை செய்த சம்பவம்.

ஒரு சின்னக் குழந்தையையும் கொலை செய்ய முயற்சித்து இன்னும் அந்தக் குழந்தை ICUவில் இருக்கிற கொடுமை. பொருள் மீதும், பணத்தின் மீதும் இருக்கிற இவ்வளவு ஆசை... பொருள் இருக்கிறவர்களுக்கும், இல்லாதவருக்கும் நேர்ந்துவிட்ட இந்த இடைவெளி... பணம் இந்த அளவுக்கு மனிதர்களின் குணத்தைக் கொன்று போட்டுவிட்டதா?

கடைசியாக அழுதது!

அப்பா இறந்தபோது... எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் எப்படியாவது எனக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார். எவ்வளவு வருவாய் குறைவிலும் அவரின் நேர்மை தவறாத பிடிவாதம் என்னை மலர்த்திவிட்டது.

நிறைய நாட்கள் அவர் நோயின் பிடியில் இருந்தார். அதை ஏற்றுக்கொண்டார். எங்களால் ஏதும் செய்ய முடியாத நிலை. கடைசியில் மரணம் வந்து சேர்ந்தது. அவர் என்னிடம் விட்டுச் சென்றது பெரிய வெற்றிடம்... அந்த இடத்தை நிறைவு செய்ய யாரும் வரவில்லை. நெஞ்சு வலிக்கக் கதறி அழுதது அன்றுதான்.

 மறக்க முடியாதவர்கள்

என்னை சித்த மருத்துவத்தில் வழி நடத்தியவர் மறைந்த டாக்டர் தெய்வநாயகம். தமிழ் மருத்துவத்தை எப்படி அறிவியல்பூர்வமாக எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்பதையும், எந்த அளவுக்கு பாரம்பரிய அனுபவங்களையும் நவீன பார்வையையும் அதில் கலக்க வேண்டும் என்பதையும், தெய்வநாயகம் ஐயா விளக்கினார். 16 ஆண்டுகள் அவர் கூடவே இருக்கிற வாய்ப்பு கிடைத்தது பெரும் பேறு.

 பாரம்பரிய உணவுகள் பற்றி ஆய்வு செய்யும்போது நம்மாழ்வாரிடம் தொடர்புகொள்ள ஆரம்பித்தேன். அவரிடம் உரையாடிய பிறகுதான், வேளாண்மை எந்த அளவுக்கு வணிகமயமாக்கப்படுகிறது என்பது தெளிவானது.

பிறகு ‘பூவுலகின் நண்பர்கள்’ நெடுஞ்செழியனோடு நேர்ந்த பழக்கம் முக்கியமானது. பி.டி கத்தரிக்காய்க்கு தடை வேண்டி, அதன் பூதாகாரமான விளைவுகளை எடுத்துரைக்க முதல்வர் கலைஞரைச் சந்தித்தோம். அவர் கொடுத்த தடை உத்தரவு, ஜெய்ராம் ரமேஷ் வரைக்கும் போய் பி.டி கத்தரிக்காய் ஆபத்து விலகியது சந்தோஷமான விஷயம்.

வடிவம் கொடுத்தவர்கள்

அம்மா வேலம்மாள். அவர்தான் என்னை புத்தகங்கள் படிக்க வைத்தார். கலை நிகழ்ச்சி, பேச்சுப் போட்டி என எல்லாவற்றிலும் கலந்துகொள்ளச் செய்தார். அம்மா தோழி மாதிரியே இருந்தார். ஒரு வசைச் சொல் கேட்டது கிடையாது. எப்போதும் கூடுதல் அன்புதான்.

சிறு வயதில் நான் தீவிரமான ஆஸ்துமா நோயாளி. ஏழாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரைக்கும் ஒடுங்கிப் போய் இருந்தேன். என் வீட்டில் சைக்கிள் இருக்கும். ஆனால், பள்ளிக்கூடம் உள்ளிட்ட பிற இடங்களுக்கு என்னை சைக்கிளில் கூட்டிப்போனது என் நண்பன் பாபுதான். என் அருமை நண்பா! நீ எங்கிருக்கிறாய்? உன்னை எவ்வளவு நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன் என நீ அறிவாயா?

என் வகுப்புத் தோழியாக இருந்த ராஜலட்சுமியைக் காதலித்து மணந்தேன். அவர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருக்கிறார். இன்று வரைக்கும் எனது பக்கத்துணை.  நானும் அவ்வாறே! எனது விருப்பங்கள், சமூகப் பணிகளை முன்னிட்டு நிறைய பயணங்கள். நாடோடி மாதிரி அலைந்திருக்கிறேன். சாமான்ய கணவனாக இருந்ததே இல்லை. ‘என்னங்க இது’ என ஒரு நாளும் முகம் சுளித்ததில்லை.

ஒரு நாள் உணவு

காலையின் மிகச் சிறந்த பானம் தேநீர்தான். அதை எடுத்துக்கொள்ளலாம். பால் கலக்காத, சர்க்கரை கலக்காத தேநீர் நல்லது. இனிப்புக்கு பனை வெல்லம் போதும். வாய்ப்பு இருந்தால், நெல்லிக்காய் சாறு. காலை உணவு முக்கியமானது. 60% பழங்களாகவும், 40% ஆவியில் வெந்த பாரம்பரிய உணவாகவும் இருக்க வேண்டும்.

பப்பாளி, கொய்யா, வாழைப்பழத் துண்டுகளோடு கைக்குத்தல் மாப்பிள்ளை சம்பா அவல் எடுத்துக் கொள்ளலாம். வரகு அரிசியில் உப்புமா அல்லது குதிரைவாலி அரிசியில் செய்த இட்லி. 11 மணிக்கு அலுவலகத்தில் அல்லது வீட்டில் கிரீன் டீ. கோடையில் மோர் போதுமானது.

மதிய உணவு  மூன்று பங்குகளாய், ஒரு பங்கு முழுக்க காய்கறித் துண்டுகளில் நிறைய சின்ன வெங்காயம், வெள்ளரி, தக்காளி, அதுவும் வீட்டுத் தோட்டத்தில் விளைந்தது என்றால் சிறப்பு. ஏதாவது ஒரு கீரை அவசியமானது. ஒரு கப் மோர். புலால் உணவு விருப்பம் என்றால் மீன் அல்லது நாட்டுக்கோழி. சாயங்காலம் சுண்டல், இரவு கம்பு - சோள தோசைக்கு நிலக்கடலை சட்னி வைத்துச் சாப்பிடலாம்.

மீட்க விரும்பும் இழப்பு

  மருத்துவத்துறையில் பல சங்கடங்களைப் பார்க்கிறேன். இங்கே பல மருத்துவ முறைகள் இருக்கு. அதில், Best of everything என்று சொல்லக்கூடிய ‘அனைத்தையும் நோயாளிக்கு வேகமாக கொடுக்கக்கூடிய முயற்சிகள்’ இங்கே இல்லவே இல்லை.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், புற்றுநோய், மாரடைப்பு போன்ற வாழ்வை மாற்றும் நோய்களுக்கு எந்த மருத்துவத்திலும் முழுமையான மருந்துகள் இல்லை. ஆனால், ஒவ்வொரு மருத்துவத்திலும் சிறந்த வழிகாட்டுதல்கள் இருக்கின்றன.

மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்ந்து நோயாளியை அங்கே இங்கே அலையவிடாமல், பெரும் பொருள் இழப்பு, கால இழப்பை ஏற்படுத்தாமல் நோயாளிகளின் அவஸ்தையைக் குறைக்கலாம். நோயின் ஆரம்பச் சுவடை எளிதாகக் கண்டறியலாம்.

பல நோய்களின் பக்க விளைவுகளைத் தவிர்க்கலாம். ஆனால், இந்த விஷயத்தில் நாம் முழுமையாக எல்லாவற்றையும் இழந்து நிற்கிறோம். என்னுடைய மீதிக் காலத்தில் இது மாதிரி கூட்டு மருத்துவ சிகிச்சையைக் கொண்டு வர வேண்டும், அதற்கான மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

 - நா.கதிர்வேலன்
  படங்கள்: புதூர் சரவணன்