கனவு
‘‘ஏங்க தினம் நடுராத்திரியில் என்னை எழுப்பி, நீங்க கண்ட கனவை திரும்பத் திரும்பச் சொல்லி என் கழுத்தை அறுக்கறீங்க?’’ - அலமேலு தன் கணவர் பரமசிவத்திடம் அலுத்துக்கொண்டாள்.
 ‘‘நான் என்ன பண்றது அலமு... தினம் ஒரே கனவுதான் வருது. நான் எம்.எல்.ஏ ஆகி சட்டசபைக்குப் போற கனவு. அதுக்கு அப்புறம் கவலையில தூக்கமே வர மாட்டேங்குது!’’‘‘விடிஞ்சதும் முதல் வேலையா டாக்டரைப் பாருங்க!’’ - உத்தரவு போட்டாள் அலமேலு.
காலையில் டாக்டரைச் சந்தித்து தன் கனவைப் பற்றிச் சொன்னார் பரமசிவம். பொறுமையாகக் கேட்ட டாக்டர், ‘‘காசு செலவில்லாம தினமும் சட்டமன்றத்தில் போய் உட்கார்றீங்க. இது சந்தோஷமான கனவுதானே! இதுக்கு ஏன் கவலைப்படுறீங்க?’’ என்றார்.‘‘பிரச்னை அது இல்லை டாக்டர். நான் சட்டசபையில உட்கார்ந்த சில நிமிஷங்கள்லயே சபைக் காவலர்கள் நெருங்கி வந்து, என்னை குண்டுக்கட்டா தூக்கிட்டு போய் வெளியே போட்டுடுறாங்க. அதனாலதான் கவலை!’’
‘‘சரி, கனவு வராம இருக்க மாத்திரை தரவா?’’‘‘சேச்சே! வேண்டாம் டாக்டர். நான் ஆளுங்கட்சி வரிசையில் அமைச்சரா இருக்குற மாதிரி கனவில் ஒரு சின்ன மாற்றம் வந்தா போதும். அதுக்கு ஏதாச்சும் மாத்திரை கொடுங்க, ப்ளீஸ்!’’ - பரமசிவம் கேட்டார்.டாக்டர் விக்கித்து நின்றார்.
நாஞ்சில் சு.நாகராஜன்
|