முகங்களின் தேசம்



ஜெயமோகன் 19

மணிப்பூரி மணம்

சென்ற 2015 பிப்ரவரியில் வடகிழக்கு மாநிலங்கள் வழியாகச் சென்ற பயணத்தில், மணிப்பூரின் லோக்தக் என்னும் ஏரிக்குச் சென்றோம். உலகின் மிக அபூர்வமான சூழியல் அதிசயங்களில் ஒன்று இந்த ஏரி. ‘லோக தடாகம்’ என புராண காலத்திலேயே அறியப்பட்ட இப்பெரிய ஏரி, இரு ஆறுகள் வந்து கலந்து ஒன்றாகிக் கிளம்பும் இயற்கையான மலைநடுப்பள்ளம்.

பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த ஏரியில் உருவாகி வந்த ஒரு வகை நீர்நாணல் செடிகள், அடர்ந்து சிறிய பச்சைத்தீவுகளாக மாறி நீர்மேல் மிதந்து அலைகின்றன. சில தீவுகள் ஒரு ஏக்கர் அளவுக்குக்கூட பெரியவை. நீர்நாணல் மட்கி உருவான கனத்த படலத்தின் மேல் புல்லும், செடிகளும், சில இடங்களில் சிறிய மரங்களும்கூட முளைத்து நின்றிருக்கின்றன. பறவைகள் கூடு கட்டிக் குஞ்சு பொரிக்க மிக வசதியானவை இத்தீவுகள்.

லோக்தக் ஏரியைச் சூழ்ந்து ஒரு பெரிய நாகரிகமே உருவாகியிருக்கிறது. குறுகலான தெருக்களில் செறிந்த இல்லங்களில் தாய்லாந்து சாயல் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். மணிப்பூரின் நாகரிகம் இரண்டு பண்பாடுகளால் ஆனது. அங்கே வாழ்ந்த தொன்மையான குக்கிகள், அங்கமிகள், நாகர்கள் போன்ற பழங்குடிகள் ஒரு பக்கம்; தாய்லாந்தில் இருந்து குடியேறி அரசமைத்தவர்கள் இன்னொரு பக்கம்.

நம் விழிகளுக்கு இருசாராருமே ஒரேபோல மஞ்சளினம்தான். ஆனால் அவர்களுக்கு அவர்கள் முற்றிலும் வெவ்வேறு இனங்கள். இன்னும் ஓர் ஆச்சரியம், தாய்லாந்திலிருந்து குடியேறிய அகோம் இன மக்கள் பெரும்பாலும் இந்துக்கள், வைணவர்கள். மணிப்பூரின் மையப் பண்பாடே அவர்களுடையதுதான். மணிப்புரி நடனம், முகமூடிக்கலை போன்றவை உலகறிந்தவை. வைணவ மதத்துடன் கலந்தவை இக்
கலைகள். இவர்கள் இந்திய தேசியத்தின் மீதும், மையப் பண்பாட்டின் மீதும் ஆழமான பற்றுகொண்டவர்கள்.

மணிப்பூரின் பழங்குடிகள், மணிப்பூரின் மையப் பண்பாடான இந்து மதத்தை தாய்லாந்திலிருந்து வந்த மக்களின் மதமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் பர்மிய இனக்குழுக்களுடன் தங்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். அந்த இனக்குழுக்களின் உதவியுடன் மணிப்பூரின் அதிகாரத்தைக் கைப்பற்ற போரிடுகிறார்கள். முடிவிலாது நீளும் அந்தப் போரே மணிப்பூரின் சாபம். நம் ஊர்களிலெல்லாம் ஓட்டல்களில் பணிபுரிய வரும் மணிப்பூர் இளைஞர்கள், அங்கே தீவிரவாதம் உருவாக்கிய பொருளியல் பேரழிவின் சாட்சியங்கள்.

லோக்தக் ஏரியைச் சூழ்ந்து கிடந்த சாலைகளில் சென்றுகொண்டிருந்தபோது, மணிப்பூரி பெண்கள் வெண்ணிற ஆடை அணிந்து நெற்றியில் சந்தனத்தாலான நாமம் போட்டு பஜனை பாடியபடி செல்வதைக் கண்டேன். அவர்களின் தாய்லாந்து இனத்தோற்றம் காரணமாக, உடனடியாக ‘அவர்கள் பௌத்தர்களோ’ என்ற எண்ணம் ஏற்பட்டது. கிருஷ்ணனைப் பற்றிய வரிகள் சற்று பிந்தித்தான் காதில் விழுந்தன. ‘க்ரிஸ்ஷ்ணோய்’ என்கிறார்கள். அவர்களின் வைணவம் தனித்தன்மை வாய்ந்தது. அது விஷ்ணுவைவிட கிருஷ்ணனையே முழுமுதல் கடவுளாக எண்ணுவது.

மணிப்பூரின் உள்ளரசியல் தெரிந்த எவரையாவது சந்திக்க விழைந்தோம். திருவனந்தபுரத்திலிருந்து ஓர் இதழியல் நண்பர் அளித்த எண்ணில், ஜீவன் என்னும் மணிப்பூர் நண்பரின் தொடர்பு கிடைத்தது. ஜீவனின் மனைவி டெல்லியில் சங்கீத நாடக அகாதமியில் மணிப்பூரி நடனத்தைக் கற்று அங்கேயே ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். தொடர்பு எண் தந்த நண்பர், சங்கீத நாடக அகாதமியில் கதகளி பயிற்றுவித்தவர்.

நாங்கள் ஜீவனைத் தொடர்புகொண்டோம். அவர் சொன்ன வழிகாட்டலில்  சிறிய சாலைகள் வழியாக வந்து லோக்தக் அருகே உள்ள சிறிய ஊரின் சாலையில் நின்று அவருக்காகக் காத்திருந்தோம். எங்கள் விழி பழகியிருந்தமையால், நாங்கள் ஜாக்கி சான் போன்ற தோற்றத்தில் ஒருவரை எதிர்பார்த்தோம். கரிய நிறத்தில் எங்களைப் போன்ற முகத்துடன் ஒருவர் வந்து கார் அருகே குனிந்து ‘‘நான் ஜீவன்’’ என்றபோது ஆச்சரியம் ஏற்பட்டது.

ஜீவன் எங்களை தன் இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். செல்லும் வழியிலேயே ஒரு சந்தைக்குள் நுழைந்தார். மணிப்பூரில் அத்தனை சந்தைகளிலும் பெண்கள்தான் வணிகர்கள். அப்பெண்களைப் பார்த்தபடியே செல்வது தென்னிந்தியர்களுக்கு வினோதமான அனுபவம். துல்லியமான சீன முகங்கள். ஆனால் செந்தூரமும் நாமமும் அணிந்திருந்தன. அங்கே எவரையும் கூவி அழைக்கும் வழக்கமெல்லாம் கிடையாது.

ஒரு கடையில் ஜீவன் பக்கோடாவும் வடையும் வாங்கிக்கொண்டார். ‘‘எங்களூரின் பக்கோடா சிறப்பானது’’ என்றார். அவரது இல்லம் அவர் நடத்திவரும் பல்பொருள் கடைக்குப் பின்னால் இருந்தது. கடையும் வீடும் கட்டி முடிக்கப்படவில்லை. ஜீவன் அக்கடையை மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்து வாழ்க்கையில் முன்னேறிக்கொண்டிருந்தார். ‘‘கொஞ்ச நாட்களாகத்தான் இங்கே அமைதி உருவாகியிருக்கிறது.

ஆகவே வணிகமும் வளர்கிறது. ஐந்து வருடம் வன்முறை இல்லாத ஆட்சி நடந்தால் போதும்... மீண்டுவிடுவோம். மணிப்பூர் அனைத்து வளங்களும் கொண்ட பகுதி’’ என்றார்.அவரது மனைவி  டீயும் பழங்களும் தந்து உபசரித்தார். அவரைப் பார்த்ததும் மீண்டும் ஆச்சரியம்... மிகச் சரியான தாய்லாந்து முகம். வெண்மஞ்சள் நிறம். குழந்தை பிறந்து நடனத்தை சில ஆண்டுகளாக நிறுத்திவிட்டிருந்தமையால் எடை போட்டிருந்தார். நாங்கள் அவரைப் பார்ப்பதைக் கண்டு சிரித்தபடி, ‘‘காதல் திருமணமெல்லாம் இல்லை. நாங்கள் ஒரே குலம்தான்’’ என்றார்.

ஜீவனின் முன்னோர்கள் எப்போதோ வங்காளத்திலிருந்து வந்தவர்கள். அவர்களும் வைணவர்களாதலால், மணிப்பூரின் அகோம்களுடன் இணைந்துவிட்டனர். ‘அக்குலத்தில் ஏராளமான கரியவர்கள் உண்டு’ என்றார் ஜீவன். ‘‘இந்தியாவில் எங்கும் பழங்குடிகளில் தவிர, தூய இனம் என்பது இருக்காது. பர்மியப் பழங்குடிகளிலேயே கூட பல வகையான இனக்கலப்பு உண்டு. இனமென்பதெல்லாம் உண்மையான நம்பிக்கைகள் அல்ல. இங்கே ஊடுருவிய ஐரோப்பியர்களால் இம்மக்களிடம் பரப்பப்பட்டவை அவை’’ என்றார்.

ஜீவனின் மனைவி நம்மூர் நாடக - சினிமா நடிகர் ஷண்முகராஜனின் சக மாணவி என்று தெரிய வந்ததும் நெருங்கி விட்டோம். ஷண்முகராஜன் எனக்கு அணுக்கமானவர். அங்கே அவர் ஒரு நடனப்பள்ளி நடத்தி வருகிறார். ஜீவனின் இரு குழந்தைகளும் மங்கோலியச் சாயல் கொண்டவர்களாக இருந்தனர். மூத்த பெண் சீனக் குழந்தைகள் போல இரட்டைக் கொண்டை போட்டு சிறிய கண்களுடன் புத்தாடை அணிந்து நின்றிருந்தாள். அவளுக்கு அன்று பிறந்தநாள்.

ஜீவனின் வீட்டில் வேலை செய்பவர், குக்கி இனத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்மணி. அவளிடமே அக்குழந்தை மிக அணுக்கமாக இருந்தது. ஜீவனுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் இரண்டாவது குழந்தை பிறந்திருந்தது. குழந்தையின் பெயர், பினாயக். சீன வினாயகரை என் கையில் எடுத்து முகத்தோடு சேர்த்துக்கொண்டேன். சீன வெண் களிமண் பாவை போன்ற தோற்றம். கண்ணே வெளியில் தெரியவில்லை, இரு மணிகளை ஒட்டி வைத்தது போல.  ரத்தச்சிவப்பு உதடுகள், மூக்கில்லாத உருண்டை முகம்.

யார் கையில் எடுத்தாலும் போகும் வயது. என் முகத்தை மலங்க மலங்க நோக்கினான். பையனின் மணமே வேறுமாதிரி இருப்பதாகத் தோன்றியது. ஒவ்வொரு சமூகத்திலும் பினாயக் போன்ற பிள்ளைகள் பிறந்து பெருகிக்கொண்டே இருக்கின்றன. அவனை திராவிடன் என்பதா? ஆரியன் என்பதா? மங்கோலியன் என்பதா? ஆனால் உலகமெங்கும் இனவாதமும் கூடவே வளர்ந்துகொண்டிருக்கிறது.

ஜீவன் மணிப்பூரின் அரசியல் பற்றி சொல்லிக்கொண்டே இருந்தார். இனக்குழுச் சிக்கல் என்பதே மணிப்பூரின் உண்மையான பிரச்னை. இந்தியாவின் மற்ற இடங்களில் உள்ள சாதிப் பிரச்னைகளுக்கு நிகரானதுதான் அது. ஆனால் பழங்குடி இனக்குழு என்பது மிகத்தனித்த உடல்கூறு அடையாளமும் பண்பாடும் கொண்டது. ஆகவே அவர்கள் பொதுவாக ஒன்றிணைவது மிகக் கடினம்.

அந்த வேறுபாடுகளை ஜனநாயகமும் பொதுவான அதிகார அரசியலும் இணைக்க முடியும், பிற பகுதிகளில் நிகழ்ந்தது போல! ஆனால் ‘‘அதை வளர்க்கவும் தூண்டி விடவும் ஆயுதம் அளிக்கவும் அன்னிய சக்திகள் முயலுமென்றால் மேலும் மேலும் சிக்கலாகிக்கொண்டேதான் செல்லும்’’ என்றார்.

மணிப்பூரின் தீவிரவாத அரசியலை நவீன தொழில்நுட்பமும் பொருளியல் மாற்றமும் ஓரளவு மாற்றிவிட்டிருக்கின்றன. என்றாலும் சிறிய போராளிக் குழுக்கள் இன்றும் பெரிய சவாலாகவே உள்ளன. அவை ஆயுதமேந்தியவை என்பதனாலேயே, அவற்றால் வணிகர்களையும் தொழிற்சாலைகளையும் எளிய மக்களையும் மிரட்ட முடியும். அரசு, ராணுவம் போன்றவை அந்த மிரட்டலை எதிர்கொள்வது கடினம். தொடர்ச்சியான கண்காணிப்பு மட்டும்தான் சாத்தியம்.

ஜீவன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் சொல்லிய அனைத்துப் பிரச்னைகளுக்கும் அவர் குடும்பத்திலேயே தீர்வு இருப்பதை நான் எண்ணிக்கொண்டிருந்தேன்.  ‘‘உலகம் எங்கோ சென்றுகொண்டிருக்கிறது சார். எங்கிருந்தோ இங்கு வந்த நீங்கள் எனக்கு மிகமிக அணுக்கமானவராக ஆகிவிட்டீர்கள். எங்கள் இளைஞர்கள் அங்கே இயல்பாக வாழ்க்கையை அமைத்துக்கொள்கிறார்கள். பலர் திரும்பி வருவதுமில்லை. இங்கே இனவாதம் பேசுகிறவர்களுக்கு மானுடம் செல்லும் பாதையே தெரியவில்லை’’ என்றார் ஜீவன்.

‘‘ஆகவே அவர்கள் முதலில் செய்வது வாசல்களை மூடுவதுதான். மணிப்பூருக்கு பிறர் வருவதையும் மணிப்பூர்க்காரர்கள் வெளியே செல்வதையும் தடுப்பதே தீவிரவாதிகளின் முதல் வேலையாக இருக்கிறது. இங்கே இந்தி சினிமாக்களுக்குத் தடை இருக்கிறது’’ என்றவர், உடனே வெடித்துச் சிரித்து, ‘‘முட்டாள்கள். இந்தி சினிமாக்களை தடை செய்யலாம். டிவியை என்ன செய்ய முடியும்? இங்கே மணிப்பூரில் அத்தனை பெண்களும் இந்தி சீரியல்களுக்கு அடிமைகள். இணையத்தை என்ன செய்ய முடியும்? உலகம் உருகி ஒன்றாகிக்கொண்டிருக்கிறது. இவர்கள் அதை கையால் அணை கட்டி நிறுத்த நினைக்கிறார்கள்!’’

ஜீவனிடம் விடைபெற்று காருக்கு வந்தோம். எங்களைக் காரில் ஏற்றிவிட்டு, ‘‘பார்த்துச் செல்லுங்கள். இங்கே நீங்கள் வந்தது இதற்குள் எவருக்கோ தெரியும். உங்களை எவரோ வேவு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்’’ என்றார். நான் புன்னகை செய்து விடைபெற்றுக்கொண்டேன். பினாயக்கின் பால்மணம் நாசியில் இருந்துகொண்டிருந்தது.

பல ஆயிரம் ஆண்டுகளாக லோக்தக் ஏரியில் உருவாகி வந்த ஒரு வகை நீர்நாணல் செடிகள்,  அடர்ந்து சிறிய பச்சைத்தீவுகளாக மாறி நீர் மேல் மிதந்து அலைகின்றன.

நம் ஊர்களிலெல்லாம் ஓட்டல்களில் பணிபுரிய வரும் மணிப்பூர் இளைஞர்கள், அங்கே தீவிரவாதம் உருவாக்கிய பொருளியல் பேரழிவின் சாட்சியங்கள்.இந்தியாவில் எங்கும் பழங்குடிகளில் தவிர, தூய இனம் என்பது இருக்காது.  இனமென்பதெல்லாம்  உண்மையான நம்பிக்கைகள் அல்ல. இங்கே ஊடுருவிய ஐரோப்பியர்களால் நம்மிடம்  பரப்பப்பட்டவை அவை!

(தரிசிக்கலாம்...)

ஓவியம்: ராஜா