ஃபேண்டஸி கதைகள்



செல்வு @selvu

நாற்காலிக் கனவுகள்


இரண்டு நாற்காலிகள் இருந்தன. (‘அவை ஒவ்வொன்றிற்கும் தலா நான்கு கால்கள்’ என்று சொன்னால் உங்களுக்குக் கோபம் வரலாம். ஆனால் அதுதான் உண்மை!) ஒன்று புளிய மரத்தினால் செய்யப்பட்டது. மற்றொன்று வேப்ப மர நாற்காலி.

அந்தக் குடும்பத்தில் இருப்போருக்கு மிகப்பெரிய பாரமாக இவை இருந்து வந்தன. அவற்றை அவர்கள் தோளில் சுமந்து திரியவில்லைதான். ஆனாலும் ஒருவகையில் மாபெரும் பாரமாகத்தான் இருந்தன. ‘பாரம்’ என்று சொல்வதைக் காட்டிலும் ‘இந்த நாற்காலிகள் அவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தன’ என்பதுதான் சரியாகப் பொருந்தும்.

சரியாகப் படுக்கையறையின் வாயிலருகில் எதிரெதிராக காவலுக்கு நிற்பவை போல அவை இருந்தன. அவை அங்கு இருப்பதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. ஆனால், யாராவது அவற்றில் உட்கார்ந்தாலோ, அல்லது அவை அந்த வீட்டிலுள்ள மனிதர்களின் உடலில் பட்டாலோதான் பிரச்னை. வேப்ப மர நாற்காலியில் அமர்ந்தால், அன்றிரவு சாமி கனவுகள் வரும்.

புளிய மர நாற்காலியில் உட்கார்ந்தாலோ, உரசினாலோ, அன்றிரவு பேய்க் கனவுகள் வரும். இதுதான் பிரச்னையே. இரண்டு நாற்காலிகளிலுமே உட்கார்ந்திருந்தால், எதில் முதலில் உட்கார்ந்தார்களோ அந்த சீனியாரிட்டியின் படி கனவுகள் வரும். உதாரணமாக, முதலில் வேப்ப மர நாற்காலியில் அமர்ந்திருந்தாலோ, உரசியிருந்தாலோ, தூங்கியதும் சாமி கனவு வரும். பிறகு பாத்ரூம் போக வேண்டி வரும். போய்விட்டு வந்து படுத்தால் அடுத்ததாகப் பேய்க் கனவு வரும்.

நாற்காலிகளில் உட்கார்வதைக்கூட கட்டுப்படுத்திக்கொள்ளலாம். ஆனால், படுக்கையறைக்குச் செல்லும் கதவிற்கு வெளியே இருப்பதால், இவற்றைத் தாண்டித்தான் உள்ளே போக வேண்டியிருக்கும். காலையிலிருந்து மாலை வரையிலும் அவற்றில் யாரும் உட்காராமலோ, அல்லது உரசாமலோ இருந்தால், இரவு படுக்கப் போகும்போது வாயிலுக்கு முன்பாக ரொம்பவும் நெருங்கி வந்துவிடும். அப்பொழுது அவற்றில் உரசாமல் உள்ளே போக முடியாது.

பேய்க்கனவுகளைக்கூட சகித்துக் கொள்ளலாம். இரண்டு மண்டையோடுகளோடு வந்து தூரத்தில் நின்றுகொண்டு, பயமுறுத்துவதைப் போல எதையோ செய்துவிட்டுப் போகும். ஆனால் சாமி கனவுகள்தான் எரிச்சலை உண்டாக்குவதாக அமைந்தன.

சூலம், வேல், வில், வாள் என்று ஒரு பழைய இரும்புக் கடையையே எடுத்துவந்து ஆடிக் கொண்டிருக்கும். எப்பொழுதேனும் ஸ்டெப் மிஸ்ஸாகி, வழுக்கி விழுந்து, கதைகளில் சொல்வதைப் போல நிஜமாகவே அந்த ஆயுதங்கள் கண்களைக் குத்தி விடுமோ என்ற பயத்திலேயே வாழ்ந்து வந்தனர் அந்த வீட்டினர்.

அந்த நாற்காலிகளை அகற்ற எத்தனையோ முயற்சிகளைச் செய்தனர். வெட்டுதல், எரித்தல், உடைத்தல் என்ற எதனாலும் அதன் முடியைக் கூடப் பிடுங்கமுடியவில்லை. ‘அதற்குக் காரணம் நாற்காலிக்கு முடியில்லாததுதானே’ என்று டைரக்டாகப் புரிந்துகொள்பவர்களுக்கு நன்றி சொல்லவேண்டியது எனது கடமை. ‘சரி, அகற்றத்தான் முடியவில்லை... வேறு வீட்டிற்குப் போய் விடலாம்’ என்றாலும் இதே நாற்காலிகள் அங்கும் வந்துவிடும். இப்படிச் சில தடவை வீட்டையும் மாற்றிப் பார்த்தனர். வந்துவிட்டன.

மற்றவர்களிடம் இவற்றின் தொல்லைகளைச் சொல்லி ஏதேனும் உதவிகளைக் கேட்கலாம்தான். ஆனால், மற்றவர்களிடம் இவற்றைப் பற்றிச் சொல்ல நினைத்தால் யாருக்கும் பேச்சே வருவதில்லை. அப்படி மீறி வந்தாலும் இவர்கள் சொன்னது ஒன்றாகவும், வெளியில் வந்த வார்த்தைகள் வேறாகவும் இருந்தன. உதாரணமாக, ‘‘இந்த நாற்காலியால ரொம்ப பிரச்னையா இருக்கு.

இத எப்படித் தூக்கி வீசுறதுனே தெரியலை’’ என்று சொல்ல நினைத்துப் பேசினால், ‘‘இந்த நாற்காலியைத் திருடிட்டுப் போகத்தானே வந்திருக்கீங்க?’’ என்று வார்த்தைகள் வெளியே வரும். இப்படி சில தடவைகள் நடந்து, ஓரிரு உறவினர்கள் இவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு சென்றுவிட்டார்கள். அதிலிருந்து யாரிடமும் உதவிகளைக் கேட்பதில்லை. எழுத்து வடிவக் கருத்துப் பரிமாற்றமும் இப்படித்தான்.

கனவு வருவது மட்டும்தான் இவற்றால் நேரும் பிரச்னை. மற்றபடி எல்லா வேலைகளுக்கும் சாதாரண நாற்காலிகளைப் போலவே பயன்பட்டு வந்தன. உட்காரலாம்; அவற்றின் மீது நின்று ஒட்டடை அடிக்கலாம்; சாப்பாட்டு மேஜைக்கருகில் இழுத்துப்போட்டு அவற்றின் மேலே உட்கார்ந்து சாப்பிடலாம்; சண்டைகளின்போது எதிராளியின் மீது தூக்கி வீசலாம். அதிலெல்லாம் அவை எந்த வஞ்சனையும் செய்வதில்லை.

உறவினர்கள் யாரேனும் வந்து இந்த சேரில் உட்கார்ந்தாலோ, உரசினாலோ அவர்களுக்கு எந்தக் கனவும் வருவதில்லை. ‘கனவு வருவதெல்லாம் ஒரு பிரச்னையா?’ என்று நினைக்கலாம். ஒரு நாளென்றால் பிரச்னை இல்லைதான். ஆனால், வருடத்தில் இருக்கும் அத்தனை நாட்களிலும் தூங்கும் நேரம் முழுவதிலும் கனவுகள் வந்துகொண்டிருந்தால் என்ன செய்ய முடியும்?

‘இதற்கு என்னதான் தீர்வு’ என்பது அந்த வீட்டில் உள்ள யாருக்குமே தெரியவில்லை. எத்தனையோ முயற்சிகளைச் செய்து பார்த்தனர். மந்திரம் ஏதாவது செய்து பார்க்கலாம் என்று நினைத்து மந்திரவாதியிடம் சென்றால் அதே பழைய பிரச்னைதான். பேச்சு வருவதில்லை. சாமி கும்பிட்டுப் பார்த்தார்கள். சாமியிடம் கோரிக்கை வைக்கும்போதும், ‘‘எங்க வீட்டுல இருக்கிற சேர் ரொம்ப நல்ல சேர்... அது நல்லா இருந்தா மொட்டையடிச்சுக்கிறேன்’’ என்று கோரிக்கை முடிந்தது.

‘நமது விதி இதுதான்’ என்று நினைத்து வாழப் பழகி விட்டனர். ‘கனவுகள் என்பவை தாமே வருவதில்லை, அவை நாற்காலிகளால் உருவாக்கப்படுபவை’ என்பது அவர்களது துயரத்திற்குக் காரணமாக அமைந்தது. ஒரு நாள் அவர்களது வீட்டிற்கு நெருங்கிய உறவினர் ஒருவர் திருமண அழைப்பிதழுடன் வந்திருந்தார்.

பேச்சுகளுக்கு இடையில் இனிமேல் தனக்குப் பொறுப்புகள் கூடிவிட்டதாகவும், இரவில் சரியான நேரத்திற்கு வீட்டிற்குச் செல்ல வேண்டுமென்றும், அவசியமின்றி வேறெங்கும் தங்கவோ, சுற்றிக் கொண்டிருக்கவோ முடியாதென்றும் சொன்னார். பிறகு சிறிது நேரத்தில் அவர் கிளம்பிவிட்டார்.

இப்பொழுது அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவருக்கும் ஒரு ஐடியா உருவாகியிருந்தது. அதாவது, இரண்டு நாற்காலிகளுக்கும் திருமணம் செய்து வைப்பது. ‘பச்சை முட்டாள்தனம்’தான்.

சரி, உங்களுக்குப் பிடித்த கலர் முட்டாள்தனம் என்று கூட வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் நாகப்பாம்பு படங்களையோ, அனுமன் படங்களையோ பத்து பேருக்கு ஃபார்வேர்ட் செய்தால் பத்து நிமிடத்தில் நல்ல செய்தி வரும் என்று நீங்கள் நம்புதற்கு மட்டும் என்ன பெயர்?

திருமணம் நடந்தது. இதனால் தங்களது பிரச்னைகள் கண்டிப்பாகத் தீரும் என்றெல்லாம் அவர்கள் நினைக்கவில்லை. ஏனெனில், இதே போல எத்தனையோ முட்டாள்தனங்களை அவர்கள் செய்துவிட்டார்கள்.

அது போல இதையும் செய்து பார்த்தனர். ஆனால், ஏதோ ஒரு மூலையில் இருந்த நம்பிக்கை அவர்களைக் கைவிடவில்லை. அன்று இரவே அவர்களுக்கு விடுதலை கிடைத்தது. எந்தக் கனவும் வரவில்லை. ஆச்சர்யம். தொடர்ந்து ஒரு வாரம் எந்தக் கனவும் வரவில்லை.

 ‘திருமணம் செய்து வைத்ததால் இரண்டு நாற்காலிகளுக்கும் பொறுப்பு வந்து அடுத்தவர் கனவில் வராமல் இருக்கின்றன’ என்று நினைத்துக் கொண்டனர். மகிழ்ச்சி தான். ஆனாலும் அந்த நாற்காலிகளை அங்கே வைத்திருக்க விரும்பவில்லை. உடனே உடைத்து, எரித்து விட்டனர்.இதெல்லாம் நடந்து பல நாட்களுக்குப் பிறகு ஒருநாள் தூங்கி எழுந்து வெளியே வந்தவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

அதே பழைய அந்த இரண்டு நாற்காலிகளுடன் இப்பொழுது குட்டியாக இன்னொரு நாற்காலியும் வெளியில் இருந்தது. காலண்டரைப் பார்த்ததில், அந்த இரண்டு நாற்காலிகளுக்கும் திருமணம் முடிந்து அன்றோடு சரியாகப் பத்து மாதங்கள் ஆகியிருந்தன. 

பேய்கள் பரவாயில்லை... இரண்டு மண்டையோடுகளோடு வந்து, பயமுறுத்துவதைப் போல எதையோ செய்து விட்டுப் போகும்.  ஆனால் சாமிகள்தான் எரிச்சல்... சூலம், வேல்,  வில், வாள் என்று ஒரு பழைய இரும்புக் கடையையே எடுத்துவந்து ஆடிக்கொண்டிருக்கும்.

கனவுகள் என்பவை தாமே வருவதில்லை, அவை நாற்காலிகளால் உருவாக்கப்படுபவை’ என்பது அவர்களது துயரத்திற்குக் காரணமாக அமைந்தது.