துப்பு
‘‘ேமடம்... போன வாரம் தற்கொலை செஞ்சுக்கிட்ட உங்க கணவர் பாஸ்கர், ‘எனக்கு ஏதாவது நடந்தா என் இரண்டாவது மனைவி நித்யாதான் காரணம்’னு ஒரு லெட்டர்ல எழுதியிருக்காரு. அதை வச்சி நான் உங்களைக் கைது செய்யாம இருக்கணும்னா நீங்க எனக்கு இருபது லட்ச ரூபாய் தரணும். என்ன சொல்றீங்க..?’’ - சுற்றி வளைக்காமல் நித்யாவிடம் கேட்டார் இன்ஸ்பெக்டர்.
 ‘‘அப்படி ஒரு லெட்டர் அவர் எழுத வாய்ப்பே இல்லை சார். அப்படி எழுதியிருந்தா நான் கைதாகவும் தயார்!’’ - கறாராகச் சொல்லி அனுப்பிவிட்டாள் நித்யா.அத்தனையையும் பார்த்துக்கொண்டிருந்த நித்யாவின் தம்பி சந்தேகமாகக் கேட்டான்... ‘‘அக்கா, இந்தாளு லெட்டரோட வந்தா என்ன செய்வே?’’‘‘போடா முட்டாள்! ‘என் தற்கொலைக்கு யாரும் காரணமில்ல’னுநான்தானே அடியாட்களை வச்சு அவரை மிரட்டி எழுத வச்சேன். இந்த ஆள் சும்மா போட்டு வாங்கப் பாத்தான். சிக்குவேனா நான்..?’’ - சிரித்தாள் நித்யா.
மீண்டும் காலிங் பெல் அடிக்க, கதவைத் திறந்தால் இன்ஸ்பெக்டர் உள்ளே நுழைந்தார், கிண்டலாகச் சிரித்துக்கொண்டே! ‘‘மன்னிக்கணும்... என் செல்போனை இங்கயே வச்சிட்டுப் போய்ட்டேன். அதுல ஆடியோ ரெக்கார்டர் வேற ஆன்ல வச்சிட்டேன். எடுத்துக்கறேன்!’’ என்று சோபாவின் ஓரத்தில் இருந்த தன் போனை எடுத்துக்கொண்டார்.நித்யாவும் தம்பியும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கீதா சீனிவாசன்
|