கவிதைக்காரர்கள் வீதி
தினமும் அலுவலகம் செல்லும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரத்தின் முக்கிய சாலை அது.
 நகரமயமாதலால் இறந்தால் புதைப்பதற்குக்கூட இடமின்றிப் போன மாநிலத்தின் தலைநகரில் நாகரிக மாற்றத்தைப் பற்றி அறிந்திராத பெண்ணொருத்தி அந்நடைபாதையில் கூடாரம் அமைத்திருக்கிறாள்.
அவள் பஞ்சம் பிழைக்க வந்த பரதேசியாகவோ சொந்த மண்ணைவிட்டு புலம் பெயர்ந்த அகதியாகவோ இருக்கலாம்.
மழையோ வெயிலோ வாழ்க்கையை நகர்த்த நான்கு ஆணிகளும் ஒரு தார் பாயும் அவளுக்குப் போதுமானதாக இருக்கிறது.
கா... கா...வென்று கூவியபடி வந்தமர்ந்த காகங்களுக்கு விருந்து வைக்கிறாள், ‘விளம்பரம் செய்யாதீர்’ என அறிவிக்கப்பட்டிருக்கும் அம்மதில் சுவர் மீது!
விபத்தொன்றில் சதை கிழிந்து உடலெங்கும் உதிரம் வழிந்த நிலையில் சாலையிலே உயிருக்குப் போராடி ஓய்ந்த பிரேதமொன்று அரசாங்க மருத்துவமனை கொண்டு செல்ல ஆம்புலன்ஸில் ஏற்றப்படுகிறது
உயிருக்குப் போராடியபோது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மனிதநேயம் இல்லாத இவ்வுலகை ஆம்புலன்ஸின் கண்ணாடி வழியே கடைசியாக ஒரு முறை தலை தூக்கிப் பார்த்து சிரித்துவிட்டு படுத்துக் கொண்டது...
தரணி வேந்தன்
|