சந்தோஷம் அருளும் ஸ்படிக லிங்கம்!



லிங்கதஹள்ளி

உலகெங்கும் பலதரப்பட்ட லிங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. அவை பெரும்பாலும் கல், மரம் மற்றும் உலோகத்தினால் ஆனவை. மரகதம் (பச்சை), ஸ்படிகம், சாளக்கிராமத்தினால் ஆன சிவலிங்கங்கள் சில க்ஷேத்திரங்களில் மட்டும் காணக்கிடைக்கின்றன. பொதுவாக தென்னிந்தியாவில் ஸ்படிக லிங்கங்கள் குறைவு. ராமேஸ்வரத்தில் மிகச்சிறிய ஸ்படிக லிங்கம் இருக்கிறது. சிதம்பரத்தில் உள்ள ஸ்படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றளவும் பூசிக்கப்படுகிறது. ஆனால் தென்னிந்தியாவின் மிகப் பெரிய ஸ்படிக லிங்கம் கர்நாடக மாநிலத்தில் இருப்பது சிலர் மட்டுமே அறிந்தது.

இது உத்தர கன்னடம் ஹாவேரி ஜில்லாவில் ராணிபென்னூரு தாலூகாவில் லிங்கத ஹள்ளி என்ற கிராமத்தில், ஹிரே மடத்தில் உள்ளது. இந்த லிங்கம் தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய ஸ்படிக லிங்கம் மட்டுமல்ல, உலகின் பத்து பெரிய ஸ்படிக லிங்கங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. ஸ்படிக லிங்கம் ஏன் மற்ற லிங்கங்களைவிடச் சிறப்பானவை? ஸ்படிகத்திற்கு எதிர்மறை அதிர்வுகளைக் களைந்து நேர்மறை அதிர்வுகளை வளர்க்கும் சக்தி இருக்கிறது. விஞ்ஞான ஆய்வுகளும் ஸ்படிகத்திற்கு உடல் மற்றும் மனோரீதியான ஆரோக்கியத்தை அதிகரித்து உடல் உஷ்ணத்தைச் சமநிலையில் வைக்கும் சக்தி இருப்பதாகச் சொல்கின்றன. இதே காரணத்தினால் யோகிகள் மற்றும் சன்னியாசிகள் ஸ்படிக மாலை தரித்து தியானம், ஜபம் செய்கின்றனர்.

யஜுர் வேதத்தில் ‘ஜ்யோதி ஸ்பாடிக லிங்க’ என்று, சிவன் ஸ்படிக ரூபத்தில் இருப்பதாகச் சொல்கிறது. ‘சுத்த ஸ்படிக சங்காஸம், வித்யா ப்ரதாயகம் சுத்தம் பூர்ண சிதானந்தம் சதாசிவமஹம் பஜே’ என்று ருத்ராத்யாயத்தின் தியானத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘சுத்தமான ஸ்படிகத்தின் ஒளியுடையவரும், வித்யையைக் கொடுப்பவரும், சுத்தம், பூர்ணத்துவம், சித்தத்தில் ஆனந்தமுமான சதாசிவனைத் துதிக்கிறேன்’ என்பது இதற்கான பொருள்.

சூர்யோதயம், அஸ்தமன நேரங்களில் ஸ்படிக லிங்க பூஜை செய்தால் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஹிரே மடத்தில் எந்த பேதமுமின்றி அனைத்து மத பக்தர்களுக்கும் ஸ்படிக லிங்கத்தைப் பூஜித்துப் பயனடையும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. பெங்களூருவிலிருந்து 320 கி.மீ. தூரத்திலுள்ள லிங்கதஹள்ளிக்கு, நேஷனல் ஹைவே 48 வழியாக ராணிபென்னூரை அடைந்து, அங்கிருந்து 20 கி.மீ. பஸ் அல்லது டாக்சி மூலம் லிங்கதஹள்ளியை அடையலாம்.

- கே.நிருபமா, பெங்களூரு.