அவர்கள் விதைத்தார்கள், நாம் கனிகளை சுவைக்கிறோம்!பகவத் கீதை - 61

யக்ஞசிஷ்டாம்ருதபுஜோ யாந்தி பிரஹ்ம ஸநாதனம்நாயம் லோகோஸ்த்யயக்ஞஸ்ய குதோன்ய குருஸத்தம (4:31)

‘‘குருகுல முதல்வனே, அர்ஜுனா, யக்ஞம் இயற்றும் யோகிகள் அதன் விளைவான ஞான அமிர்தத்தை அனுபவிக்கிறார்கள். இந்த அனுபவத்தால் அவர்களால் பரப்பிரம்மமான பரமாத்மாவை அடைய முடிகிறது. ஆனால், யக்ஞம் இயற்றாதிருக்கும் மக்களால், இவ்வுலகத்தின் சுகத்தையே அனுபவிக்க இயலாது என்னும்போது இவர்களால் பரலோக சுகத்தை எப்படி அனுபவிக்க முடியும்?’’யக்ஞம் என்பது என்ன? கடமை, அப்பழுக்கற்றதாக நிறைவேற்றப்படும் கடமை. இத்தகைய யக்ஞத்தில் சுயலாபம் இல்லை, பொதுநல விழைவுதான் உண்டு. பரந்தாமனில் போய் முடிவதுதான் இவ்வாறு கடமையாற்றுவதன் நோக்கம். பரம்பொருளில் முடியும் இந்தக் கடமைகளால் விளைவது பொது நன்மைகளே.

இத்தகைய யக்ஞத்தின் மூலமாக மிகவும் அரிதான பிரம்மத்தையே அடையமுடியும் என்னும்போது, பிற எல்லா நன்மைகளும் அந்த பிரம்மத்துக்கு அடுத்தவைதான் என்றாலும், அவையும் அடையப் பெறும் என்பதும் குறிப்பாக உணர்த்தப்படுகிறது. கோயிலுக்குச் செல்வதாகிய ஒரு கடமையை எடுத்துக்கொள்வோம். கோயிலினுள் உள்ள ஒவ்வொரு சந்நதியையும் வலம் வருகிறோம். அங்கே நம்மால் பக்தி அதிர்வலையை உணர முடிகிறதா, அப்படியானால் அங்கே நம் முன்னோர்கள் யக்ஞம் இயற்றியிருக்கிறார்கள் என்று அர்த்தம்.

வெறுமனே சுற்றி வராமல், ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும், இதே பாதையில் நம் முன்னோர்கள் சென்றிருக்கிறார்கள், அவர்களுடைய ஆன்மிக அடிச்சுவட்டில் நாம் பயணிக்கிறோம் என்ற உண்மை நம் மனம் மற்றும் உடலெங்கும் வியாபிப்பதால், நம்மால் அந்த அதிர்வை உணர முடிகிறது. ஆனால், அந்த முன்னோர்கள் எதை எதிர்பார்த்து அல்லது என்ன நோக்கம் கொண்டு இப்படி கோயிலை வலம் வருவதாகிய யக்ஞத்தை மேற்கொண்டிருந்திருப்பார்கள்? பின்னாளில் தங்களுடைய வாரிசுகள் இதே கோயிலுக்கு வருவார்கள், தம் பாணியிலேயே இறைப்பணி மேற்கொள்வார்கள்.

அப்போது தாம் ஜபித்த மந்திரங்களாலும், மேற்கொண்ட பக்தியுணர்வாலும் ஏற்படக்கூடிய அதிர்வலைகளை அனுபவிக்கட்டும் என்று நினைத்திருப்பார்களா? இருக்காது. அவர்கள் தம் கடமையாக, யக்ஞமாக இறைவழிபாட்டைக் கோயிலில் மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். அதன் பலாபலன்களைப் பற்றிச் சிந்தித்திருக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் விதைத்ததை, இன்று நாம் கனிகளாக சுவைத்துக் கொண்டிருக்கிறோம். அவர்களைப் போலவே நாமும் தன்னலம் கருதாமல் கடமை ஆற்றினோமென்றால், நம் சந்ததியும் நலமடையும். நகைச்சுவையாகச் சொல்வார்கள்: ஒரு ஓட்டலில், ‘நீங்கள் வயிறார சாப்பிடுங்கள், உங்களுக்காகும் செலவை உங்கள் பேரப்பிள்ளையிடமிருந்து நாங்கள் வசூலித்துக்கொள்கிறோம்!’ என்று அறிவிப்புச் செய்திருந்தார்கள்.

இதைப் பார்த்த ஒருவர் அந்த ஓட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டார். அப்பாடா! பணம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்துக்கொண்டார். ஆனால், பணியாளர் பெரிய ஒரு தொகைக்கு பில் கொண்டுவந்து கொடுத்தார். ‘இதை நான் கட்டவேண்டியதில்லையே, என் பேரப்பிள்ளையிடமிருந்து வசூலித்துக்கொள்வீர்கள்தானே?’ என்று கேட்டார் சாப்பிட்டவர்.‘இல்லை, சார், இது உங்கள் தாத்தா சாப்பிட்டதற்கான பில்’ என்று அமைதியாகச் சொன்னார் பணியாளர். இந்த நகைச்சுவை ஒருபக்கம் இருக்கட்டும், முன்னோர் செய்த எந்த காரியத்துக்கும், கடமைக்கும் விளைந்த பலன்களை அவர்களுடைய எச்சமாகப் பிறந்திருக்கும் நாம் அனுபவிக்கிறோம் என்பது உண்மை - குறைந்தபட்சம் இன்னாரது பேரன் என்று பெயர் விளங்கும்
வகையிலாவது!
 
ஒரு விதை விதையாகவே தன் கடமையை ஆற்றுகிறது. அது உடனே மரமாகி விடுவதில்லை. ஒரு தளிராகக்கூட வளர முடியாமல் அது பட்டுப்போனாலும் அதற்காக அது வருத்தப்படுவதில்லை. எந்த நிலையிலும் அது சலனப்படுவதில்லை. விதையா, செடியா, மரமா எதுவாக வளர்ந்தாலும், தன் பலனை, அனுபவிக்கும் மக்களுக்குத் தருவதாகிய தன் கடமையிலிருந்து அது வழுவுவதில்லை. ஞானியரும் அப்படித்தான். அவர்கள் தம் யக்ஞத்தை எந்த சலனத்துக்கும் ஆட்படாமல் செவ்வனே மேற்கொள்கிறார்கள். உயர் பதவி அடைகிறார்கள் - அவர்கள் எதிர்பார்க்காமலேயே!

ஏவம் பஹுவிதா யக்ஞா விததா ப்ரஹ்மணோ முகேகர்மஜான்வித்தி தான்ஸர்வானேவம் ஞாத்வா விமோக்ஷ்யஸே (4:32)

‘‘இப்படியாகப் பலவித யக்ஞங்கள், வேதத்தில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இந்த யக்ஞங்கள் எல்லாமே மனம் மற்றும் புலன்களின் இயக்கங்கள் வழியாகவே இயற்றப்படுகின்றன. இதை அர்ஜுனா, நீ உணர்ந்துகொள். இதை உணர்ந்துகொண்டு, நிஷ்காம கர்ம யோகத்தின் மூலம் நீ சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவாயாக.’’எந்த ஒரு செயலை நாம் மேற்கொண்டோமானாலும் அது அந்தந்த செயலுக்கேற்ற புலன் நுகர்ச்சியினைக் கொண்டதாகவே இருக்கிறது. அந்த நுகர்ச்சியில் நாம் ஆர்வம் காட்டும்போதும், அதிக அளவில் ஈடுபடும்போதும், செயலின் தன்மை மாறுகிறது, அதன் பின்விளைவுகள் அதற்கேற்ப அமைகின்றன.

புலன் நுகர்ச்சியுடன் செயலாற்றும்போது மிகவும் உவப்பாக இருக்கிறது, ஆனால் செயல் முடிந்தபின் அந்த உவப்பு, துக்கமாக மாறுகிறது. ஆனால் அந்த கர்மாக்களை, செயல்களை, யாகமாக மாற்றிக்கொண்டோமானால், பின்விளைவுகளின் தாக்கத்திலிருந்து நாம் தப்பிக்கலாம். இச்சைக்கு அடிமையாகும்போதுதான் கர்மாக்கள் பின்னமடைகின்றன. பாலைவனத்தில் சப்பாத்திக் கள்ளியைச் சுவைக்கும் ஒரு ஒட்டகம், சுவையில் மட்டுமே நாட்டம் கொள்வதால், கள்ளியுடன் இருக்கும் முட்களை அது பொருட்படுத்துவதில்லை. அதுமட்டுமல்லாமல், அந்த முட்களால் வாய் கிழிந்து அதிலிருந்து வடியும் ரத்தத்தையும் அது சுவைத்து மகிழ்கிறது. பிறகு ஒரு சமயம், அவ்வாறு கிழிந்த பகுதி வலிக்கும்போதும், அந்த வலிக்கான காரணம் அதற்குப் புரியாது.

ஆகவே அடுத்த பசிக்கு மீண்டும் சப்பாத்திக் கள்ளியையே நாடிச் செல்லும். மறுபடி கள்ளியோடு ரத்தத்தையும் சுவைக்கும், சிறிது நேரத்தில் ரணத்தால் வேதனையுறும்! இயல்பாக, பிறருக்கு வணக்கம் தெரிவிக்கும் மிகச் சிறிய கர்மாவையும் நம்மால் நிஷ்காமமாகச் செய்ய முடிவதில்லை. நாம் வணக்கம் தெரிவிக்கும் நபர் அந்த வணக்கத்துக்குத் தகுதியுடையவதானா என்று மனசுக்குள் மதிப்பீடு செய்கிறோம். நம்மைவிட வயது குறைந்தவராக அவர் இருப்பாரானால், அந்த ஈகோ வணக்கம் தெரிவிக்க விடாமல் தடுக்கும். அல்லது நம் தகுதியை மிகவும் உயர்ந்ததாக நாம் கற்பனை செய்துகொண்டிருப்போமானால், அந்த நபர் ஆடோமாடிக்காக நம்மைவிட தகுதி ‘இழந்து’விடுவார்.

அல்லது அவர் நம்மைவிட பலசாலியாக இருப்பாரேயானால் பயத்தின் காரணமாக நம் கரங்கள் தாமாக அவர்முன் கூம்பும். நமக்கு முதலாளியாக, நம் ஜீவாதாரத்துக்கு வழிசெய்பவராக இருந்தாரானால், ஏதோ காரணத்துக்காக விருப்பம் இல்லாவிட்டாலும் ‘கடனே’ என்று கரங்கள் குவியும். அல்லது முதலில் அவர் வணக்கம் தெரிவித்துவிட்டால், அதற்கு பதிலாக வணக்கம் சொல்லவேண்டிய கட்டாயத்துக்கு நாம் உட்படுகிறோம். வெறும் வணக்கம் தெரிவிப்பதிலேயே இத்தனை இடையூறு இருக்குமானால், நாம் மேற்கொள்ளும் பிற எந்த செயல்களையும்
எந்தப் பற்றில்லாமலும் நம்மால் ஈடேற்ற முடியுமா?

வணக்கம் தெரிவிப்பது என்பது அன்பைக் காட்டும் ஓர் அறிகுறி. எதிர்ப்பட்டுவிடுவதால் நிகழும் அனிச்சை செயலாக அதை நாம் கருதினோமானால், அது எல்லாவகையிலும் அனிச்சையாகவே போய்விடும், அதாவது செயற்கைத் தன்மை வந்துவிடும். எந்த எதிர்பார்ப்பும், எந்த வேறுபாடும், எந்த ஈகோவும் இல்லாமல் வணக்கம் தெரிவித்தோமானால், கைகள் குவியும் அதே நேரம் நம் முகம் மலரும். அந்த மலர்ச்சியின் நட்பில் எதிர் நபர் மகிழ்வார். பதிலுக்கு அவர் தெரிவிக்கும் வணக்கத்தில் புதுப்பொலிவை நம்மால் உணர முடியும். இப்படி பாரபட்சமற்ற வகையில் வணக்கம் தெரிவிக்க நாம் செய்யவேண்டியது என்ன? எல்லாம் பகவானுக்கே என்ற அர்ப்பண உணர்வை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

வணக்கம் செலுத்துபவர், பெறுபவர், மொத்தத்தில் வணக்கம் செலுத்தும் செயல் எல்லாமே பரந்தாமனுக்கே அர்ப்பணம் என்ற மனோபாவம் வளரவேண்டும். இப்போது நமக்குள்ளே ஒரு தெய்வீக சாந்த அலை பரவும். அது நம் தேகத்துக்கே ஒரு தேஜஸைக் கொடுக்கும். இந்த தேஜஸ் பலரையும் நம்மிடம் ஈர்க்கும் என்பதைவிட, அவர்களும் இதே சாந்த நிலையை அடைய விரும்பும் நிலைமை உண்டாகும். இப்படி ஓர் அனுபவம் கிட்டவேண்டுமானால் மேற்கொள்ளும் கர்மாவில், அந்தக் கர்மாவை நிறைவேற்றவேண்டிய குறிக்கோளை மட்டுமே நாம் கொள்ளவேண்டும்.
இதனை சிறு செயலிலிருந்தே ஆரம்பிக்கலாம். ஒவ்வொரு நாளின் சிறிய கடமைகளில் இந்த உணர்வை நாம் மேற்கொண்டோமானால், அது எல்லா பெரிய கடமைகளுக்கும் பரவி அவை அனைத்துமே முழுமையாக நிறைவேறும். அவ்வாறு நிறைவேறும்வரை எந்தவகை உணர்ச்சி வசப்படுதலுக்கும் நாம் ஆட்படமாட்டோம்.

ச்ரேயான்த்ரவ்யமயாத்யக்ஞாஜ்ஞானயக்ஞ பரந்தபஸர்வம் கர்மாகிலம் பார்த்த ஞானே பரிஸமாப்யதே (4:33)

‘‘அர்ஜுனா, உலகியல் பொருட்களால் யக்ஞம் இயற்றி பலன்களைப் பெறுவதைவிட, முற்றிலும் ஞானரூபமான யக்ஞம் மிகவும் மேலானது. ஏனென்றால் எல்லா கர்மங்களுமே ஞானத்தில் முற்றுப்பெறுபவைதான்.’’இந்திரியங்கள் தம் தேவைகள் பூர்த்தியாகாதா என்று ஏங்குகின்றன. ஆனால், அந்தத் தேவைகள் என்றுமே, எந்த அளவினதானாலும் பூர்த்தியாவதில்லை என்பதுதான் உண்மை, அதுவே ஒவ்வொருவரின் அனுபவம். இதில் சோகம் என்னவென்றால் தேவைகள் பூர்த்தியாகவே முடியாதனவாக இருப்பதால், எப்போதுமே ஒரு விரக்தி, ஏக்கம், குழப்பம், சோர்வு என்று எதிர்மறை உணர்வுகள் நமக்குள் வியாபிக்க ஆரம்பிக்கின்றன.

கடமையாற்றுவது எதற்காக அல்லது யாருக்காக என்ற பயன்படுபொருளைக் கருதாமல் இயல்பாகப் பணியாற்றுவதாக இருத்தல் வேண்டும். பணம் சேர்க்கிறோம், பொருள் சேர்க்கிறோம். ஒரு கட்டத்தில் நம் தேவைக்கும் அதிகமாக சேர்க்கிறோம். அதற்குப் பிறகு துக்கப்படுகிறோம். எதற்கு? இன்னும் சேர்க்கவேண்டுமே என்ற வேட்கையாலும், அபிரிமிதமாக உள்ளவற்றைப் பாதுகாக்கவேண்டுமே என்ற பரிதவிப்பாலும் துக்கப்படுகிறோம். ஏன்? எதிர்கால பயம் காரணமாகத்தான். இப்போதைய வசதிகளும், சுகங்களும் நீடித்திருக்கவேண்டும் என்பதோடு, அதிகரிக்கவும் வேண்டும் என்ற பேராசைதான். அவற்றை அனுபவிக்க மனம் இருக்கும், உடல்நலம் இருக்குமா, ஏன் ஆயுசே இருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கும்போது இந்த வேட்கைக்கு அர்த்தம்தான் என்ன? பணத்தையும், பொருளையும் அடிமையாக்குவது என்பதைப் பலரும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்.

அதாவது, அவற்றை மிக அதிக அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு அடிமைப்படுத்திவிட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். அதனால்தான் அடுத்தவரிடம் இருக்கும் பணமும், பொருளும் நம் கண்களை உறுத்துகின்றன. அவற்றையும் அடைந்து அவற்றையும் நம் அடிமைகளாக்கிக்கொள்ள வேண்டும் என்ற பொறாமைக்கு ஆட்படுகிறோம். ஆனால், இப்படி எத்தனை பேரிடமிருந்துதான் நம்மால் அவற்றைப் பறித்துக்கொள்ள முடியும்? இந்த அபகரிப்புக்கு முடிவுதான் ஏது? இந்த அஞ்ஞானத்தின் தகிப்பை நம்மால் தொடர்ந்து தாங்கிக்கொள்ள முடியுமா? இதைவிட, எந்த அளவுக்கு அவற்றிடமிருந்து நாம் விலகி இருக்கிறோமோ, எந்த அளவுக்கு அவைமேல் ஆர்வம் காட்டாமல் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு அவை நமக்கு அடிமை என்பதுதானே உண்மை?

நாம் விலகிப்போனால் அவை நம்மிடம் விரும்பி வரும். அவ்வாறு வருபவனவற்றையும் நாம் நம் தேவைக்கு மட்டுமே ஏற்றுக்கொண்டோமானால் அவை நமக்கு அடிமை. அதைவிட அவற்றிடமிருந்து நாம் விடுதலை பெறுகிறோம் என்ற நிம்மதிதான் உண்மை. கரங்கள் கூப்பி இறைவனை வேண்டும்போதும் அது ஒரு யாசிப்பாக இருந்துவிடாமல் இறைவனை நேசிப்பதாக இருக்குமானால், அந்த நிம்மதி எளிதாகக் கைகூடும். நிம்மதியின் விளக்கம் என்ன? ‘இன்னும் கொஞ்சம் சாப்பிடலாமே’ என்று தோன்றும்போதே சாப்பிடுவதை நிறுத்த முடிகிறதா, அங்கே நிம்மதி பிறக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் எத்தனை கார் வேண்டுமானலும் வைத்திருக்கட்டும், நம்மால் நடந்துபோக ஆரோக்கியமான, வலுவான இரண்டு கால்கள் இருக்கின்றன என்ற எண்ணம் தோன்றுகிறதா, அங்கே நிம்மதி உருவாகிறது. இது மனம் சார்ந்ததுதான் என்றாலும், அத்தகைய எண்ணம் தோன்றக்கூடுமானால், ஏக்கத்தை விளைவிக்கக்கூடிய மனம் காணாமல் போய்விடுகிறது, நிம்மதி மட்டுமே நிலைக்கிறது.

(தொடரும்)

- பிரபுசங்கர்