பலமும், வளமும் தரும் பாரிஜாத மலர்!கூவத்தூர்

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டத்தில் அமைந்த கூவத்தூரில் சிவபெருமான் ஸ்ரீதிருவாலீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். ராமாயண காலத்தில் கிஷ்கிந்தாவில் மாயாவி என்ற அசுரன் தோன்றி அங்கு வசித்து வந்தவர்களைத் துன்புறுத்தி வந்தான். அவனை வாலி போரிட்டு அழித்தார். இதனால் வாலிக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. இந்த தோஷத்தைப் போக்க வாலி வசிஷ்ட முனிவரிடம் ஆலோசனை கேட்டார். வசிஷ்டர் வாலியிடம் பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கவும் போரின்போது எதிரியின் பலத்தில் பாதி அவருக்குக் கிடைக்கவும் கூவகம் என்ற பகுதிக்குச் சென்று அங்கு கோயில்கொண்டிருக்கும் சிவபெருமானை பாரிஜாத மலர்களால் பூஜித்து வழிபடும்படி ஆலோசனை கூறினார்.

இதன்படி வாலி, கூவகம் சென்று பாரிஜாத மலர்களால் சிவபெருமானை வழிபட பிரம்மஹத்தி தோஷம் விலகிற்று. மேலும் போரிடும்போது எதிரியின் பாதிபலம் தமக்குக் கிடைக்கும்படியான சிறப்பு வரத்தையும் பெற்றார். கூவகம் என்ற பகுதியே தற்போது கூவத்தூர் என்று அழைக்கப்படுகிறது. வாலி வழிபட்ட காரத்தினால் இத்தலத்து ஈஸ்வரர் வாலீஸ்வரர் என்று போற்றப்படுகிறார். இத்திருக்கோயிலின் ஐந்து நிலை ராஜகோபுரம் பஞ்சவர்ணத்தில் மிக அழகாக காட்சி தருகிறது. ராஜகோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் இடதுபுறத்தில் கோயில்மணி வித்தியாசமாக மிக அழகாக அமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

அருகில் கோயிலின் தலவிருட்சமான பவழமல்லி (பாரிஜாதம்) மரம் காணப்படுகிறது. கொடிமரம் மிக அழகாக காட்சி தருகிறது. அடுத்ததாக பலிபீடமும் தொடர்ந்து நந்திதேவரும். மூலவர் ஸ்ரீதிருவாலீஸ்வரர் கிழக்கு திசை நோக்கி பதினாறு முகங்களோடு அருள்பாலிக்கிறார். அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரி என்ற திருநாமத்தோடு பக்தர்களுக்கு காட்சி அருள்கிறாள். இக்கோயிலின் கோஷ்டச் சிற்பங்களாக நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஸ்ரீதுர்க்கை ஆகியோர் அமைந்துள்ளார்கள். துர்க்கைக்கு எதிரே சண்டிகேஸ்வரர் தனி சந்நதியில் காட்சி தருகிறார். இத்திருக்கோயிலில் விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத முருகப்பெருமான், பைரவர், சனீஸ்வரர் சந்நதிகள் அருள் கூட்டுகின்றன. கோயிலுக்குள் ராஜகோபுரத்தின் இருபக்கங்களிலும் சூரியனும், சந்திரனும் தனித்தனி சந்நதிகள் கொண்டுள்ளனர்.

கோயிலுக்கு அருகிலேயே இத்தலத்தின் புஷ்கரணி, பரந்து விரிந்து காணப்படுகிறது. பதினாறு முகங்களோடு காட்சி தரும் திருவாலீஸ்வரரை வணங்கினால் பலமும், செல்வமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.  இத்திருக்கோயிலின் மகாகும்பாபிஷேக விழா, சமீபத்தில், 10-09-2017 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இத்திருக்கோயில் காலை ஏழு முதல் பதினோரு மணி வரையிலும் மாலை ஐந்து முதல் எட்டு மணி வரையிலும் திறந்திருக்கும். கூவத்தூர், கிழக்குக் கடற்கரைச் சாலையில் மாமல்லபுரத்தை அடுத்து பாண்டிச்சேரி நோக்கிச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து கிழக்குக் கடற்கரைச் சாலையில் பாண்டிச்சேரி செல்லும் அனைத்துப் பேருந்துகளும் கூவத்தூரில் நிற்கும். கல்பாக்கத்திலிருந்து ஷேர் ஆட்டோக்கள் கூவத்துருக்குச் செல்கின்றன.

- ஆர்.வி.பதி