இதயத்தில் இடம் பெற்றுவிட்டீர்கள்!



‘நன்றி சொல்லி நல்வாழ்வு பெறுவோம்’ தலையங்கத்தில் நன்றிக்கான மகத்துவத்தைப் பொறுப்பாசிரியர் விளக்கியிருந்த விதம் நயமிக்கது. ‘‘நாம் மறந்துபோனாலும் இனியாகிலும் சொல்லியாக வேண்டும்’’ என்பதை ஆழமாக பதிய வைத்துவிட்டார். பணிகளின் பலன்களை அவனருளாலே அனுபவிப்பதால், நன்றியை ஆண்டவனுக்கும் சொல்லத்தான் வேண்டும் என்ற கருத்து நியாயமானது.
- எஸ்.எஸ்.வாசன், தென் எலப்பாக்கம்.

‘ஆயிரம் நாமங்களால் அனந்தனை பணிவோம்’ தொடர் மிகவும் அற்புதம். ஒவ்வொரு நாமத்திற்கும் ஒரு கதையைச் சொல்லி விவரிப்பது இறைவன் மீது கூடுதல் பக்தி செய்யத் தூண்டுவதாக உள்ளது.
- ப.த.தங்கவேலு, பண்ருட்டி.

கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள் தொடர் மூலம் மிகுந்த சிரத்தையுடன் புராண, வரலாற்றுச் செய்திகளை விளக்கி வரும் முதுமுனைவர் குடவாயிலார் அவர்களுக்கு நன்றி.
- வேலு, விழுப்புரம்.

முகப்பு அட்டையில் வண்ணமுடன் நெஞ்சை அள்ளும் முருகன், உள்ளே தைப்பூச உன்னதங்கள், கீர்த்தி வாய்ந்த ஆலயங்கள் என வெளியிட்டு, வாசகர்கள் இதயத்தில் நீங்காத இடத்தைப் பெற்று விட்டீர்கள்!
- ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

சேங்கனூர் சோமநாத சுவாமி - சிவகாமசுந்தரி ஆலயத்தின் அருமை பெருமைகளை ‘முருகனின் நேர்பார்வையில் சனி பகவான்’ என்ற கட்டுரையில் படித்து மகிழ்ந்தேன்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

ஆந்திர மாநிலத்தில் வித்தியாசமான கனுப் பொங்கல் திருவிழா தகவல்கள் படித்து வியந்தேன். சூரியனுக்கு உகந்த தானியம் கோதுமை என்ற செய்தி நல்ல தகவலாகவும், பயனுடையதாகவும் இருந்தது.
- இல.வள்ளிமயில், திருநகர்.

தைப்பூசம் அன்று சந்திர கிரகணம் என்பதால் அன்று காலையிலேயே பழநியில் தைப்பூச தேரோட்டம் நடைபெறும் என்றும், 60 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்வு நடைபெறுகிறது என்றும் தகவலை முன்கூட்டியே வெளியிட்ட ஆன்மிகம் இதழ் வாசகர்கள் நலன் நாடும் இதழ் என்பதை விளக்குவதாக உள்ளது.
- K. சிவக்குமார், சீர்காழி.

பல்வேறு பிறவி எடுத்து, அந்தப் புண்ய பலனாக மானிடப்பிறவி எடுத்த நாம், நம் மனத்தினை நாம் வசப்படுத்தி, இந்திரனைப்போல எவருக்கும் இடையூறு செய்யாமல், நம் கடமையை செவ்வனே செய்ய உரைக்கும் திருமூலர் திருமந்திரத்தின் ஒலி, வாசகர்களிடம் நிச்சயமாக அதிர்வலையை ஏற்படுத்தவே செய்யும்.
- கே.ஆர்.எஸ்.சம்பத், புத்தூர்.

சேவற் கொடியோன் என்றும், மயில் வாகனன் என்றும், பக்தியுடன் வர்ணிக்கப்படுகின்ற தைப்பூச நாயகன் தென்பழனி முருகனின் தெய்வீக அட்டைப்படம் பரவசப்படுத்தியது. ‘ரதசப்தமி’யின் விளக்கம் சூரியனின் ஒளிக்கதிர்போல் பிரகாசித்தது. கனுப்பொங்கல் திருவிழாப் பற்றிய பல அரிய நல்ல செய்திகளை அறிந்துகொண்டோம்.
- சிம்ம வாஹினி, வியாசர் நகர்.

மகாபாரத கதை ஏற்கெனவே தெரிந்த கதைதான் என்றாலும் பாலகுமாரனின் எழுத்தில் படிக்கும்போது அது தனி பக்தி-இலக்கிய சுவை பெற்றுவிடுகிறது என்பது உண்மை.
- வீர. கோவிந்தசாமி, குடியாத்தம்.