உள்ளம் உருகுதையா, திருவாசகம் படிக்கையிலே..!



திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது மகாவாக்கியம்.  கல் நெஞ்சம் கொண்டாரையும் உருகச் செய்யும், நெகிழ்ந்து கரைய வைக்கும் பாக்கள் அவை. இதற்குமேல் வேறொரு வாசகம் உண்டோ எனும் நிலையில் இறையனுபூதியை, ஞானத்தை, பரிதவிக்கும் பக்தியை பிசைந்து பிரம்மானுபவம் சொட்டச் சொட்ட ஊறும் தேன் பலா பதிகங்கள் அவை. திருவாசகத்தை உணர வேண்டுமெனில் அது கூறும் அனுபூதியில் நிலைபெற வேண்டும்.

இதைத்தான் வடலூர் வள்ளல்பெருமான், ‘பாடுகின்ற நாம், பாடப்படுகின்ற திருவாசகம், பாடுவதாகிய செயல் ஆகிய மூன்றும் எப்போது ஒன்றாகிறதோ அப்போதுதான் அனுபவத்தைப் பெறமுடியும்’ (‘வான் கலந்த மாணிக்கவாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்’) என்று திருஅருட்பாவில் குறிப்பிடுகின்றார். நான் என்பது திருவாசகத்தில் கரைந்துவிட்டால் திருவாசகம் பதிகமாக இராது. அனுபூதியில் திளைத்து நிற்கும் ஞானியின் அனுபவப் பிழிவாகவே இருக்கும். திருவாசகத்தின் பொருளென்ன என்று மாணிக்கவாசகரைக் கேட்டபோது ‘‘பொருள் இவன்தான்’’ என தில்லைக் கூத்தனைக் காண்பித்து அவனோடு ஜோதியில் கலந்து மறைந்தார். 

‘நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க’
 
- என்று ஐந்தெழுத்து மந்திரமான நமசிவாயத்தை முதலில் கூறிவிட்டு, பிறகு வாழ்க என்று கூறுகின்றார். இதன் மூலம் மந்திரத்தை கூறவில்லை, இறைவனையே குறிப்பிடுகின்றார். மந்திரமாக இதைத் திரும்பத் திரும்ப சொல்லும்போது அது ஒலியாகவே இருக்கும். ஆனால், மெல்ல மந்திரத்தினூடாக தியானமாக ஆழ்ந்து செல்லும்போது மந்திரம் மறைந்து போகிறது. மந்திரமாக இருந்த சொல் காணாது போகின்றது. ஒலி வடிவான, அதற்கும் பொருளான சொரூபம் அங்கு நெஞ்சில் ஒளிர்கின்றது. சொல்லும், பொருளும் வேறல்லாது ஒன்றாக இலகும் பெருநிலையாகவும் மாறுகிறது.

இப்படியாக ஆதிநாத சப்த சொரூபமாக, நமசிவாய எனும் நாமம் கொண்ட இறைவனை தமக்குள் கண்டு கொண்டதன் வெளிப்பாடே இந்த முதல் வரியாகும். இந்த நிலை, இமைப்பொழுதும் நீங்காதிருக்க வேண்டுமென வேண்டுகின்றார் மாணிக்கவாசகர். இறைவனை நோக்கி வாழ்க என்று சொல்வது உயிர்கள் தாம் வாழ வழிசெய்து கொள்கின்ற ஒருவழியே ஆகும். இவ்வாறு திருவாசகத்தையே தமது மூச்சாக, உயிராக, வாழ்வியல் குறிக்கோளாக வாழ்வது என்பது பெரும்பேறாகும். தான் பெற்ற இன்பத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிப்பதென்பது பிறவியெடுத்ததன் பயனாகும்.

அப்படிப்பட்ட அடியார் ஒருவரைத்தான் நாம் இப்போது சந்திக்கவிருக்கிறோம் - தமிழகத்தின் தலைநகராம் சென்னை மாநகரில், ஆன்மிகத் தொண்டாற்றி, மக்களை நல்வழிப்படுத்தி, அவர்களின் மனநிம்மதிக்கு வழிவகுக்கும் கோயில்களும், இயக்கங்களும், அமைப்புகளும் பல உண்டு. அவற்றில் ‘தருமமிகு சென்னை சிவலோகத்திருமடம்’ எனும் பெயரில் தமிழ் வேதமாகிய திருவாசகத்தை எளிய முறையில், பஜனைப் பாடல்கள் முதல் டிப்ளமோ அரசுச்சான்றிதழ் கல்வி வரை அனைத்து வகையிலும் மக்களிடையே கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியில் தம்மை முழுதாய் அர்ப்பணித்து தொண்டாற்றி வருகிறார் தவத்திரு. வாதவூரடிகள்.

‘சிவலோகம் ஐயா’ என சிவனடியார்களால் அன்போடு அழைக்கப்படும் இவருடைய இயற்பெயர், திவாகர் மகராஜ். 1978ம் ஆண்டு, திருவண்ணாமலையை பூர்வீகமாகக்கொண்ட அருண்குமார்-கல்யாணி தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தவர், உரிய பருவத்தில் உபநயனம் ஏற்று ஸ்ரீவித்யா உபாசகியான தன் பாட்டியார் சகுந்தலாம்மாளிடம் அருளாசி கிடைக்கப்பெற்றவர். அதனாலேயே சிறுவயது முதலே பக்திப் பாடல்கள் இயற்றும் திறனும் பெற்றிருந்தார். பத்தாம் வகுப்பிற்குப் பிறகு கல்வியைத் தொடர முடியாத சூழ்நிலையில், அதற்கு அற்புத மாற்றாக சைவசமயம் சார்ந்த பெரியோர்களின் தொடர்பு ஏற்பட்டது ஈசனின் திருவருளே.

இதனால் திருமுறைப்பற்றும், தமிழ்ப்பற்றும் அவருக்குள் பெருகியது. பதினைந்து ஆண்டுகளில் திருமணம் முதலான நிகழ்வுகளை தமிழ் வேதமாகிய திருமுறைகளை ஓதி நடத்தி வைக்கும் இறையருள் பெற்றார். திருவாசக முற்றோதல்கள் முதலான சைவத் திருப்பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார். இவரது திருமணமும் தமிழ் முறைப்படியே நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 2010ம் ஆண்டு திருவண்ணாமலையில் மகாதீபத்தைக் கண்ணாறக் காணும் வாய்ப்பு கிட்டியது. அடுத்து, அடி அண்ணாமலையில், மாணிக்கவாசகர் திருவெம்பாவை அருளிய தலத்தில் அமர்ந்து தனிமையில் வழிபட்டபோது மனதிற்குள் திருவாசகப் பாடல் தோன்றியது.

அதன் சுவையில் அவர் கலக்க முற்பட்டபோது, ஒரு சிறுவன் அவரருகே வந்து, அவர் மனதால் நினைத்த அதே பதிகத்தைப் பாடினானாம். சிலிர்த்தபடி அவர் கண் திறந்து, ‘‘யாரப்பாநீ? நான் மனதில் பாடிய பாடலை நீ பாடுகிறாயே?’’ என அந்தச் சிறுவனிடம் கேட்டார். அவர் ஆனந்த அதிர்ச்சியடையும்வகையில் பதில் வந்தது: ‘‘அந்த பாடலை இயற்றியவனே நான்தான்!’’ இவ்வாறு கூறியது மட்டுமல்லாமல், அவர் வாயில் இனிப்பு அப்பத்தை ஊட்டினானாம் சிறுவன்! ஒரு சிறுவனின் வடிவில் மணிவாசகரே குருவாக வந்து தன்னை ஆட்கொண்ட அந்த அற்புத அனுபவத்தின் விளைவாக திருவாசகத்தின் மகிமையையும் மணிவாசகரின் பெருமையையும் இவ்வுலகிற்கு இயன்றவரை எடுத்துரைப்பது என்று லட்சியம் மேற்கொண்டார்.

‘வாதவூரர் வழி, திருவாசக நெறி’ எனும் புதிய பரிமாணத்தில் தன் வாழ்க்கைப் பாதையை அமைத்துக்கொண்டார். முதன் முதலாக 2011ல் சென்னை பாடி திருவலிதாயத்தில் மாணிக்கவாசகரின் ஆனி மகம் குருபூசையன்று ‘திருவாசகமும் மணிவாசகரும்’ எனும் தலைப்பில் இவர் இயற்றி, ஆற்றிய இசைச்சொற்பொழிவு, நிகழ்ச்சி கூடியிருந்த அனைவரின் மனதையும் உருக்கிற்று; கண்ணீர் பெருக்கிற்று. அதன் தொடர்ச்சியாக, அடியார்களின் வேண்டுகோளின்படி ஓர் அமைப்பை துவங்க முற்பட்டார். திருவாசகத்திலிருந்தே ‘சிவலோகம்’ எனும் பெயரைத் தேர்வு செய்தார். அது, பதிவு செய்யப்பட்ட அறக்கட்டளை அமைப்பாக பல நற்பணிகளை  விரைந்து மேற்கொண்டது.

இயல், இசை, நாட்டியம், நாடகம் என பல கோணங்களில் மாணிக்கவாசகரின் வரலாறும், திருவாசகச் சிறப்பும் பக்திப் பாடல்களாக திவாகர் ஐயாவால் இயற்றப்பட்டு பக்தி நிகழ்ச்சிகளாக தமிழகம் எங்கும் சிவலோகம் அமைப்புத்  தொடர்ந்து நடத்தியது. 60 கலைஞர்களைக் கொண்டு, ‘வான் கலந்த மாணிக்கவாசகர்’ எனும் நெஞ்சை நெகிழ்விக்கும் நாட்டிய நாடகம், ஆயிரக்கணக்கான சிவனடியார்களின் முன்னிலையில் பல முக்கிய அரங்கங்களில் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டது. அடுத்தடுத்து ‘திருநாவுக்கரசர்’, ‘நால்வர் அறிமுகம்’, ‘சுந்தரர் சொற்றமிழ்’ போன்ற நாட்டிய நாடகங்களையும் இயற்றி மேடைகளை அலங்கரித்தார். சைவ நிகழ்ச்சிகளில் இவர் இயற்றிப் பாடிய ‘சிவலோகப் பாமாலை’ பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்று பின்னர் இசைத்தட்டுகளாகவும் வெளியிடப்பட்டன.

‘இல்லம் தோறும் திருவாசகம்’, ’மாணவர் மனதில் மாணிக்கவாசகர்’, ‘திருவாசகத் திருவிழா’ என மாபெரும் விழாக்களைத் தொடர்ந்து நடத்தித் திருவாசகத்துக்குத் தன் பங்களிப்பை நல்கியிருக்கிறார். அதோடு, தொலைக்காட்சி, முகநூல் மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக அருளுரைகளை தொடர்ந்து வழங்கி, சைவ சேவை ஆற்றிவருகிறார். தமிழகமெங்கும் உள்ள பல சிவனடியார்களோடும் ஆன்மிக அமைப்புகளோடும் அன்பும் நட்புறவும் சிறந்து விளங்க, 2014ம் ஆண்டு திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சந்நிதானம் 'ல' அம்பலவாண தேசிக பரமாச்சாரியாரின் திருக்கரங்களால் ‘திருவாசகப் பித்தர்’ எனும் விருதைப் பெற்றார்.

‘திருவாசக நாடக வேந்தர்’, ‘திருவாசகத் தென்றல்’, ‘சொல்லின் செல்வர்’ என பல விருதுகள் பெற்றபோதும் ‘அன்பே சிவம் - அன்புமயம் சிவலோகம்’ எனும் தாரக மந்திரமே தன் வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார் இவர். 2015 ஆண்டு ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் ஷண்முகக் கவசத்தினை அயல் நாட்டவருக்கு அறிமுகம் செய்ய ‘Mantra meets classic’ எனும் இசைக்குழுவோடு ஜெர்மன் நாட்டுக்குச் சென்றார். அங்கே மொழியியல் பயிற்சியாளராக பொறுப்பு மேற்கொண்ட இவரை பெரிதும் சிறப்பித்து கௌரவித்தது அந்நாடு. ஐரோப்பிய ஜெர்மனி முதல் சென்னை ஜாபர்கான்பேட்டை வரை செல்லுமிடமெல்லாம் திருவாசகத்தின் சிறப்பை பறை சாற்றும் இவரது சீரிய முயற்சியின் ஒரு விளைவாக ‘திருவாசக ஞானக்கலைமணி பட்டய வகுப்பு’ ஒன்றினைத் தொடங்கினார்.

இவருடைய சிவலோகம் அறக்கட்டளையும், சென்னை தரமணி உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து அந்த பட்டயக் கல்வியை 2017 மஹா சிவராத்திரியன்று துவக்கியது. அங்கு திருவாசகம் பொறுப்பாசிரியர் பதவியை மேற்கொண்டு திருவாசகத்துக்கு அருந்தொண்டாற்றி வருகிறார். தமிழர்கள் வாழும் தீவுப்பகுதியான அந்தமானிலும் இப்பட்டயக்கல்வி விரைவில் துவங்கப்படவுள்ளது. சென்னை திருநின்றவூரில் ‘ஜெயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி’யில் ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் மூன்றாம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணியிலிருந்து பகல் 3.30 வரை திருவாசக வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒரு வருட படிப்பாக, மிகக் குறைந்த கட்டணத்தில் திருவாசகம் கற்பிக்கப்படுகிறது.

திருவாசக புத்தகம், குறிப்புகள் எடுக்க புத்தகம், பேனா போன்றவை கட்டணமின்றி வழங்கப்படுகின்றன. பயிற்சி காலத்தில், ஒருமுறை இங்கு பயில்பவர்களை திருவண்ணாமலை ஆலய வளாகத்திற்கு அழைத்துச் சென்று, ஒரு பதிகம் கற்பிக்கப்படுகிறது. ஞாயிறுதோறும் சிவலோகத்தின் ‘திருவாசகத் தொடர் முற்றோதல்’ மற்றும் ‘திருவடி வழிபாடு’ நடைபெறுகின்றன. மாதந்தோறும் மகம் குருபூசை, அறுபத்துமூவர் குருபூசை, ஞானசபைத் திருக்கூட்டங்கள், திருமுறை விண்ணப்பங்கள், கும்பாபிஷேகங்கள், பாமாலைத் திருக்கல்யாணங்கள் ஆகியன நடைபெறுகின்றன.

ஆண்டுதோறும் நவநடராஜர் சந்திப்பு, திருவண்ணாமலைக்கு திருவடி யாத்திரை என பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அருளாசி வழங்கி வருகிறார் திவாகர் ஐயா. தற்போது 76 மாணவர்கள் இங்கு திருவாசகம் பயில்கின்றனர். இதற்கான கல்வித்தகுதி 8ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். வயதுவரம்பு இல்லை. (தொடர்பிற்கு திரு.கமலக்கண்ணன் 9283604647, திரு.ப்ரவீஷ்.9840730825) இந்த வருட திருவாசக படிப்பிற்கு பிப்ரவரி 28ம் நாள் வரை விண்ணப்பிக்கலாம். மஹா சிவராத்திரி மற்றும் திருவாசகத் திருவிழாவினை ஆண்டுதோறும் இருபெரும் விழாக்களாக ‘சிவலோகம்’ கொண்டாடி வருகிறது.

சமீபத்தில் புனிதத் தலமாம் காசிநகரில் கங்கை நதிக்கரையில் அடியார்களோடு திருவாசகம் பாடியது வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக அமைந்தது.திருவாசகத்தினை பாடுதல், ஆடுதல் மட்டுமன்றி பொருளுணர்ந்து உள்ளம் கரைதலுமான ஆனந்த அனுபவத்துக்கு அனைவரும், ஆட்படவேண்டும் எனும் நோக்கில் திவாகர் ஐயாவின் பிறந்தநாள் விழாவானது ஆன்ம விழிப்புணர்வு நாளாக அறிவிக்கப்பட்டு ‘தன்னிலை உணர்த்தும் திருவாசகம்’ SRT (Self realisaion through thiruvassagam) எனும் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர் மேல் இவர் கொண்ட குருபக்தியையும், திருவாசகப் பற்றையும் போற்றும் வகையில் கடந்த ஆண்டு சிதம்பரம் மௌனத்திருமடம் 8வது குருமகா சந்நிதானம் 'ல' சுந்தரமூர்த்தி சுவாமிகளால் ஆச்சார்ய அபிஷேகம் செய்விக்கப்பட்டு தவத்திரு வாதவூரடிகள் எனும் தீட்சா நாமமும் வழங்கப்பட்டது.

இனி, ‘தருமமிகு சென்னை சிவலோகத் திருமடம்’ எனும் திருப்பெயரிலேயே சைவ சமய வளர்ச்சிப்பணிகளை மேலும் சிறப்புடன் முன்னெடுத்து நடத்த ஆசியும் வழங்கப்பட்டது. 63 அறங்காவலர் குடும்பங்களைக்கொண்டு திருமடத்தின் புதிய செயல் திட்டங்கள் துவங்கப்பட்டு திருமடத்தின் கிளை மையம் சென்னை ஆவடி பகுதியில் நிறுவப்படவுள்ளது. அருட்பிரகாச வள்ளலாரின் வாக்கில் உதித்த வான்கலந்த மாணிக்கவாசகர் எனும் மந்திரத்தை நாட்டிய நாடகமாக அரங்கேற்றியதன் பலனாக அன்னாரின் வாக்கிலேயே திருமடம் அமைந்திருப்பது சிறப்புக்குரியது. இன்று கருமமிகு சென்னையாக இருக்கும் தலைநகரம் இனி ஆன்மிகத்தில் சிறந்து மீண்டும் தருமமிகு சென்னையாக மலர எல்லாம் வல்ல ஈசனருள் துணையிருக்கட்டும்.

நேர்காணல்: ந.பரணிகுமார்