இலையென்ன, பூவென்ன, மலரென்ன..?



திருமூலர் திருமந்திர ரகசியம்

நமக்கு ஏதேனும் நல்லது நடந்தால் ‘‘நாம கூட, ஏதோ நல்லது செஞ்சிருக்கோம் போல இருக்கு’’ என்போம். கஷ்டம் வந்து விட்டாலோ ‘‘எல்லாம். பண்ணின பாவம்!’’ எனப் புலம்புவோம். இந்தப் புண்ணிய, பாவங்களைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார்?

புண்ணிய பாவம் இரண்டுள பூமியில்
நண்ணும் பொழுது அறிவார் சில ஞானிகள்
எண்ணி இரண்டையும் வேர் அறுத்து அப்புறத்து
அண்ணல் இருப்பிடம் ஆய்ந்து கொள்வீரே

(திருமந்திரம் - 1647)
கருத்து: புண்ணியம், பாவம் என்று இரண்டு உள்ளன. புண்ணியத்தின் பயனாக நன்மையும், பாவத்தின் பலனாகத் தீமை, துயரம் ஆகியவையும் வந்து சேர்கின்றன. இதை அறிந்து தெளிந்து, தெளிவு பெற்றவர்கள் சிலரே. அவர்கள் ஞானிகள் எனப்படுவார்கள். புண்ணியம், பாவம் எனும் இவை இரண்டும், ஜீவன்களைப் பற்றிட வரும் பயன்களை நன்றாக உணர்ந்து, அவற்றின் ஆணி வேரையே அறுத்து, மனதைத் தீய வழிகளில் செல்லாதபடித் தடுக்கும் மன உறுதி பெற்றால், பரம்பொருள் இருக்குமிடம் அறியலாம். ஆராய்ந்து தெளிந்து கொள்ளுங்கள்!

புண்ணியம், பாவம் எனும் இரண்டைச் சொல்லி, அவற்றால் விளையும் விளைவுகளையும் சொல்கிறது இப்பாடல்! புண்ணியத்தால் நன்மையும், பாவத்தால் தீமையும் விளையும் என்னும்போது, பாவத்தை வெறுக்கலாம், விலக்கலாம். ஆனால், நன்மை தரும் புண்ணியத்தை ஏன் விலக்க வேண்டும் எனும் சந்தேகம் எழும். இதற்கு முன்னோர்கள் ஓர் அற்புதமான உதாரணம் சொல்வார்கள். இரண்டு பறவைகள். ஒன்று தங்கக் கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறது. மற்றொன்று தகரக் கூண்டில் அடைபட்டிருக்கிறது. இந்த இரண்டில் எது உயர்ந்தது என்றால், இரண்டுமே அல்ல!

தங்கக் கூண்டில் இருந்தால் என்ன, தகரக் கூண்டில் இருந்தால் என்ன, மொத்தத்தில் இரு பறவைகளுமே கூண்டில் தானே அடைப்பட்டிருக்கின்றன! சிறை சிறைதானே! அதுபோல, புண்ணியத்தால் நன்மை, பாவத்தால் தீமை என்று சொன்னாலும், புண்ணியத்தின் பலனாக நன்மைகளை அனுபவிக்கக்கூடிய பிறவியும், பாவத்தின் பலனாகத் தீமைகளை அனுபவிக்கக்கூடிய பிறவியும் வரும். எதுவாக இருந்தால் என்ன? பிறவி பிறவி தானே! கூண்டில் பறவை அடைபட்டிருப்பதைப் போல, உடல் கூட்டில் உயிர் (ஆன்மா) அடைபட்டிருக்கிறது. விடுதலை அடைய வேண்டுமானால், புண்ணியம், பாவம் எனும் எதனோடும், எவற்றோடும் தொடர்பு கொள்ளக்கூடாது எனத் திருக்குறள் விவரிக்கிறது:

மற்றும் தொடர்ப்பாடு
எவன் கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும்
மிகை

(திருக்குறள் - 345)
மீண்டும் பிறக்கக் கூடாது என்பதில் நாட்டம் உடையவர்களுக்கு, உடம்பும் கூடச் சுமையாகும். அப்படிப்பட்ட ஒருவன் மற்ற தொடர்புகளை வைத்திருப்பதால் பலன் என்ன? (உடம்பு காரணமாகவே ஆசை தோன்றுவதால், உடம்பும் மிகை என்றார்) இவ்வாறு சொன்ன திருவள்ளுவர், ‘இருள் சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு’  என்றும் கூறுகிறார்.

அறிவு மயக்கத்தால் செய்யப்படும் நல்வினை, தீவினை எனும் இருவகை வினைகளும், இறைவனது மெய்யான புகழை விரும்பிச் செயல்படும் அன்பர்களைத் தாக்காது என்பதே அக்குறளின் கருத்து.‘‘புண்ணியங்களால் விளையக்கூடிய நன்மைகளின் பலன்களில் மனம் ஆழ்ந்து போகாமலும், பாவத்தால் விளையும் துயரங்களில் மனம் துவண்டு விடாமலும் மன உறுதியுடன் இருங்கள். புண்ணிய பாவங்களின் அடிப்படையை உணர்ந்து கொள்ளுங்கள். தெய்வ அருளை அனுபவிக்கலாம்’’ என்கிறார் திருமூலர். கூடவே தன் அனுபவத்தைச் சொல்லி வழிகாட்டுகிறார்:

இலை தொட்டுப் பூப்பறித்து எந்தைக்கு என்றெண்ணி
மலர் தொட்டுக் கொண்டேன் வரும் புனல் காணேன்
தலை தொட்ட நூல் கண்டு தாழ்ந்ததென் உள்ளம்
தலை தொட்டுக் கண்டேன் தவம் கண்டவாறே

(திருமந்திரம் - 1640)
கருத்து: வழிபாட்டிற்காக, இலைகளையும் மலர்களையும் தொட்டுப் பறித்துக் கொண்டேன். ஆனால், ஆனந்தப் பரவசம் அடையக் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வரவில்லை. அதேசமயம் தலை சிறந்த அறிவு நூல்களைக் கண்டு அவை சொல்லும் உண்மைப் பொருளை உணர்ந்தேன். என் உள்ளம் தானே பணிந்து தாழ்ந்தது. பணிந்த உள்ளம் பரமன் திருவடிகளைத் தொட்டுத் தலை தாழ்த்தக் கண்டேன். இதுதான் உண்மைத் தவம் என்பதை அப்போதே உணர்ந்தேன். அபூர்வமான பாடல் இது. இலையைப் பூவென்று சொல்லி, மலர் என்றும் அடுத்துச் சொல்கிறார் திருமூலர். பூவென்றும் மலரென்றும் பிரித்துச் சொன்னவர், அடுத்து ‘தலை’ என்ற சொல்லை மிகவும் அற்புதமாகக் கவியாகச் செய்திருக்கிறார்.

அருந்தமிழின் ஆழத்தையும் அகலத்தையும் பாடலில் காணலாம். இலையைப் பூவாகச் சொல்லியிருப்பது அழகு! கீதையில் கண்ணன் சொல்லும்போது, ‘பத்ரம் புஷ்பம்...’ என்று தானே சொல்கிறார்! ‘பத்ரம்’ என்பது இலையையும், புஷ்பம் என்பது மலரையும் குறிக்கும். ஓர் இலையை எடுத்து, சுவாமிக்கு அர்ச்சித்தால் போதும். கடம்ப இலை, அறுகம்புல், வில்வம், துளசி எனப் பலவற்றையும் தெய்வத்திற்கு அர்ச்சிக்கிறோமே! அடுத்து, மலர்களையும் அர்ச்சிக்கிறோம். இதன் காரணமாகவே, இலை, பூ என்றும் அரும்புகளாக இருந்து மலர்வன, ‘மலர்’ என்றும் குறிப்பிடப்படுகின்றன.

இவ்வாறு பலவற்றையும் பறித்துச் சாற்றி வழிபாடு செய்தும், கண்களில் ஆனந்தக்கண்ணீர் வரவில்லை என்கிறார் திருமூலர். காரணம்? மலர்களோடு சேர்த்து, மனதையும் சாற்றவில்லை. மனம் சேராத வழிபாடு, மணம் இல்லாத மலர் போன்றது. இப்படிப்பட்ட நிலையில் இருந்து, தெய்வத் திருவடிகளை அடைந்தது எப்படி எனப் பாடலின் மேற்பகுதியில் தொடர்கிறார். தலை சிறந்த அறிவு நூல்களை, ஞான நூல்களைக் கற்க வேண்டும். கற்கக் கற்க மனதில் உள்ள அறியாமை எனும் இருள் தானே விலகும். தூய்மையான அறிவு, தெளிவை வழங்கும். ஞான நூல்களைப் படிக்கப் படிக்க உள்ளம் தெளிவு பெற வேண்டுமே தவிர ‘‘இந்த நூல்களை எல்லாம் படித்திருக்கிறேனாக்கும் நான்’’ என்று தலையை நிமிர்த்திக் கொள்ளக்கூடாது. ஞான நூல்களைப் படிக்கப் படிக்க மனத்தில் தானே பணிவு, அடக்கம் வரவேண்டும். கற்றதன் பலன் கடவுளின் திருவடிகளை வணங்குவதே எனத் திருவள்ளுவரும் வழிகாட்டுகிறார்:

கற்றதனால் ஆய பயன் என் கொல் வால
றிவன் நற்றாள் தொழார் எனின்

நல்லவற்றைப் படித்து அறிந்த நல்லவற்றை அனுபவத்தில் கொண்டு வராதவரை, தெய்வ அருளும் அனுபவப்படாது. புண்ணியம் - பாவம்; பூ - மலர் என இரண்டிரண்டாகச் சொன்ன திருமூலர், அடுத்து இன்பம் - துன்பம்; நன்செயல் - புன்செயல் எனச் சொல்கிறார். கூடவே எந்த நாடாக இருந்தாலும் அது நல்வாழ்வு பெற என்ன வழி என்றும் கூறுகிறார்:

இன்பமும் துன்பமும் நாட்டார் இடத்துள்ள
நன் செயல் புன் செயலால் அந்த நாட்டிற்காம்
என்ப இறை நாடி நாள் தோறும் நாட்டினில்
மன்பதை செப்பம் செயின் வையம் வாழுமே
(திருமந்திரம் - 1657)

கருத்து: நாட்டில் உள்ள மக்களின் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம், அவர்கள் செய்யும் நல்லதும் கெட்டதுமான செயல்களே. அச்செயல்கள் நாட்டையே வளர்ச்சிப் பாதைக்கும் கொண்டு செல்லும்; அழிவுப் பாதைக்கும் கொண்டு செல்லும். ஆகையால் மக்கள் தீய வழியில் செல்லாமல், நல்வழியில் செயல்படுமாறு, அவர்களை அரசினர் ஆராய்ந்து நல்வழிப்படுத்த வேண்டும். உலகம் வாழ இதுவே வழி. இப்பாடலின் கருத்தை ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், ‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பதே.

ஒரு நாட்டின் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் காரணம், அந்நாட்டில் வாழும் மக்களின் நற்செயல்களும் தீச்செயல்களுமே. நாட்டை ஆளக்கூடியவர், அதாவது மன்னர் தன் பதவியைக் காப்பாற்றிக் கொள்ளவும், பதவி சுகங்களை அனுபவிக்கவும் தான் என்று எண்ணிச் செயல்பட்டால், மக்கள் மட்டுமல்ல; நாடே கெட்டுக் குட்டிச் சுவராகி விடும். ஆகவே மன்னர் தான் நல்வழியில் செயல்படுவதோடு, தன் மக்களையும் நல்வழிப்படுத்த வேண்டும். குடிமக்களைத் தீய செயல்களில் ஈடுபடாதவாறு தடுக்க வேண்டும்.

இதற்கு முன்னோர்கள் ஓர் அற்புதமான கதையை உதாரணமாகச் சொல்வார்கள். அரசர் ஒருவர் மிகவும் நல்லவர், குடிமக்களைத் தன் குழந்தைகள் போல் பாதுகாத்தார். நல்வழியில் நடந்த மன்னராலும் மக்களாலும் நாடு, வளமிகுந்த நாடாக இருந்தது. ஒரு நாள், மன்னர் வேட்டைக்குப் புறப்பட்டார். சிறிய அளவிலான படையும் கூடப்போனது. வேட்டை முடியச் சில நாட்களாகும் என்பதால் உணவுப் பொருட்களுடன் சமையற்காரர்கள் சிலரும் பின் தொடர்ந்தார்கள். வேட்டை மும்முரமாக நடந்தது. சமையற்காரர்கள் உணவுத் தயாரிப்பில் இறங்கினார்கள்.

அப்போது சமையற்காரர்களுக்குத் தாங்கள் செய்த தவறு தெரிய வந்தது. சமையலுக்கான பொருட்கள் அனைத்தையும் கொண்டு வந்திருந்த அவர்கள், உப்பை மறந்து விட்டார்கள். காட்டில் என்ன செய்ய முடியும்? தகவலை உடனே, மந்திரியின் காதுகளில் ஓதினார்கள். மந்திரி கைகளைப் பிசைந்தார். ‘‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே என்பார்கள். உப்பில்லாமல் மன்னருக்கு எப்படி உணவிடுவது?’’ என்று வாய் விட்டுப் புலம்பிய மந்திரி, சேவகர் ஒருவரை அழைத்து, ‘‘பக்கத்துக் கிராமத்தில் இருக்கும் மக்களிடம் போய்க் கொஞ்சம் உப்பு வாங்கி வா!’’என அனுப்பினார்.

போன சேவகர் சற்று நேரத்தில் உப்புடன் திரும்பி வந்தார். சேவகர் உப்புடன் திரும்பிய வேளையில், மந்திரியுடன் மன்னரும் இருந்தார். விவரம் அறிந்த மன்னர் சேவகரை அழைத்து ‘‘நீ வாங்கி வந்த இந்த உப்புக்காக, அந்த மக்களிடம் காசு தந்தாயா? அல்லது...’’ எனக் கேட்டு நிறுத்தினார். சேவகர் ஒருவாறு பூசி மெழுகிப் பதில் சொன்னார். ‘‘இல்லை மன்னா! காசு கொடுக்கவில்லை, சும்மாத்தான் வாங்கி வந்தேன் இந்த உப்பை. அரசருக்கு என்றவுடன் அந்த மக்கள் ஒன்றுமே சொல்லவில்லை. எடுத்துப் போங்கள் என்று சொல்லி விட்டார்கள். காசு கொடுக்காமல் தான், இந்த உப்பை வாங்கி வந்தேன்’’ என்றார்.

மன்னர் முகம் மாறியது ‘‘அமைச்சரே! இந்த உப்புக்கான காசை அந்த மக்களிடம் உடனடியாகச் சேர்ப்பியுங்கள்! உப்பு வாங்கி வந்த இந்தச் சேவகனையே அனுப்புங்கள்! இல்லாவிட்டால், இன்று உப்பை இலவசமாகப் பெற்று வந்த இச்சேவகர், நாளை பலவற்றையும் மக்களிடமிருந்து இலவசமாகப் பெறுவார். அவர்கள் தர மறுத்தால், இவர் பலாத்காரமாகவும் செயல்படலாம். தவறுகள் வளர, நாமே வழிகாட்டியாக இருக்கக் கூடாது’’ என்றார். அமைச்சரும் அவ்வாறே செய்தார். உப்புக்கான காசு உடனே அளிக்கப்பட்டது. திருமூலர் சொற்படி, ஒரு நாட்டின் வாழ்வு-தாழ்விற்கு அந்நாட்டு மக்களின் நற்செயல்களும் தீச்செயல்களுமே காரணமாகும். மக்களை நல்வழிப்படுத்த வேண்டியது அரசரின் பொறுப்பு. அரசர் பொறுப்பாகச் செயல்பட்டால்தான் நாடும் வாழும்; நாட்டு மக்களும் வாழ்வர்!

(மந்திரம் ஒலிக்கும்)

- பி.என்.பரசுராமன்