அகத்தின் நிறையும் அன்பே சிவம்



நீரின்றி உலகேது இறைவா-உன்
துணையின்றி நானேது தலைவா!
உலகத்தில் புகழோடு நான் வாழும் போதும்
உன் புகழ் பாடும் வாழ்க்கை
அது ஒன்றே போதும்!                      (நீரின்றி)
மலர்தூவி பாதத்தில் பூஜைகள் செய்தேன்
மகாதேவா! அருள்பார்வை ஒன்றே வேண்டும்!
உயிருக்குள் உயிராக நீ வாழ்கிறாய்!

உலகத்தில் எல்லாம் உன் படைப்பாகுமே!
மலர்களில் மணமாய் கலந்தவன் நீயே!
மனதுக்குள் நினைவாய் வாழ்பவன் நீயே!
உன் இசைவின்றி அகிலம் அசையாதய்யா!
உன் அருளின்றி பூக்கள் மலராதய்யா!         (நீரின்றி)
எத்தனை துன்பத்தில் உதவி செய்தாய்-அதில்
எதற்கென்று நன்றி கடன் செய்வேனப்பா!
நன்றிக்கடன் நான் செய்ய வேண்டுமென்றால்
ஏழு பிறவியும் போதாதப்பா!              
சிவனை சிந்திக்க புது சக்தி பிறக்கும்
வந்தனை செய்திட வளங்கள் பெருகும்!
அன்புக்கு மறுபெயர் சிவம்தானப்பா!
அகத்தில் நிறைந்தால் அகிலம் சிறக்குமப்பா! (நீரின்றி)
உன் கோவிலை தேடி ஓடி வந்தேன்
உன்புகழ் பாடி தொண்டு செய்து வந்தேன்!
உள்ளத்தில் ஞானஒளி ஏற்றினாய்!
இல்லத்தில் வறுமை இருள் போக்கினாய்!
உண்மை விளக்கிட குருவாய் வருவாய்
உயிரை திரியாக்கி தீபங்கள் தருவாய்!
வேறொரு ஆசை எனக்கேதப்பா!
மாதொருபாகனை சரணடைந்த பின்!        (நீரின்றி)
எத்தனை வடிவில் மொழிகள் படைத்தாய்
தமிழுக்கு நீதான் முதலிடம் கொடுத்தாய்!
தெய்வ தமிழ் கற்றது என் பாக்கியம்
உனைப் பாடி பணிவது திருமந்திரம்!
ஆசை காற்றினில் தூசாய் பறந்து
அலையும் மனதை மீட்பாய் சிவனே!
நீ தந்த உறவை நான் மதிக்கிறேன்
நான் தேடும் உறவே.. எனை சேர வா!
ஐந்தெழுத்து மந்திரத்தில் வசப்படும் பொருளே
அறத்தால் தவம் செய்பவருக்கு கருணை கடலே!
உடலெனும் சிலை வடித்த கலைஞன் நீ -அதற்கு
உயிர் தந்து விளையாடும் ஆத்மாவும் நீ!        (நீரின்றி)

- விஷ்ணுதாசன்