ஆண்டாள்- இன்னொரு புனிதத் துளசி!குறளின் குரல் - 76:

குறளைப்போல் இன்னொரு நூலை உலகில் வேறு எந்த மொழியிலேனும் பார்க்க இயலுமா? அத்தகைய ஒரு நூல் வேறொரு மொழியில் இருப்பது அரிது, மிக அரிது. இத்தகைய அரிதான நூலாகிய திருக்குறளில் அரிது என்ற சொல் மொத்தம் பன்னிரண்டு இடங்களில் இடம்பெற்றுள்ளது! அரிது என்ற சொல் இடம்பெறும் குறள்கள் மிக அரிதான கருத்துகளைச் சொல்கின்றன.

' பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள்அற்றார்
அற்றார் மற் றாதல் அரிது.’ (குறள் எண் 248)

பொருளிழந்தவர்கள் மீண்டும் செல்வந்தர்களாக வாய்ப்புண்டு. ஆனால், அருட்செல்வத்தை இழந்தவர் மறுபடியும் மாமனிதராக மாறி மதிப்புடன் வாழ்தல் கடினம். பெங்களூருவில் ஒரு துறவி இருந்தார். இசையில் வல்லவர். அவரிடம் இசை கற்க வந்தாள் ஒரு பெண். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. துறவி யோசித்தார். இனி தனக்குத் துறவு நிலையில் இருந்தால் மக்களிடையே மதிப்பிராது என்பதை உணர்ந்தார். தாம் அவளைத் திருமணம் செய்துகொள்வதாகவும் சன்னியாச ஆசிரமத்தைத் துறப்பதாகவும் அறிவித்து இல்லற வாழ்வு நடத்துவதற்காக மடத்தை விட்டு வெளியேறினார். இது அண்மைக்கால வரலாறு. அந்த முன்னாள் துறவியைப் பாராட்டத்தான் வேண்டும். அருட்செல்வத்தை இழந்தபின் மீண்டும் பழைய மதிப்பிருக்காது என்று குறள் கூறும் கருத்தை உணர்ந்து செயல்பட்டார் அல்லவா?

'சிறைநலனும் சீரும்  இலர்எனினும் மாந்தர்
உறை நிலத்தோடு ஒட்டல் அரிது.’ (குறள் எண் 499)

பகைவரை அவர்கள் இருக்கும் இடம் அறிந்து தாக்க வேண்டும். பகைவர் வாழும் இடத்திற்குச் சென்று அவர்களைத் தாக்கி வெற்றிபெறுவது அரிது. ஆனால், இந்த அரிதான செயலைச் செய்தான் ராமபிரான். சீதையை இலங்கையில் சிறைவைத்தான் ராவணன். இலங்கை ராவணனின் நாடு. அதன் தட்பவெட்பம் முதல் பூகோளம் வரை அனைத்தையும் ராவணன் நன்கு அறிவான். ராமபிரானுக்கோ அது புத்தம் புதிய இடம். என்றாலும் எதிரி வாழும் இடத்திற்கே சென்று சிங்கத்தை அதன் குகையில் சந்தித்து ராமன் வெற்றி கண்டானே அதுதான் ராமபிரானின் வீரம். அதுமட்டுமல்ல, `இன்றுபோய்ப் போர்க்கு நாளை வா!’ என மன்னிப்பு மானியத்தையும் வாரி வழங்கியது ராமபிரானின் மாவீரம்!

'நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.’ (குறள் எண் 235)

துன்பங்களையெல்லாம் தாங்கிக் கொண்டு, ஏன் தங்கள் உயிரைப் பற்றிக் கூட அக்கறைப் படாமல் புகழை நிலைபெறச் செய்வது என்பது எல்லோர்க்கும் ஆகிற காரியமா? வித்தகர்களுக்கே அது இயலும். பெயக் கண்டும் நஞ்சுண்டமையும் அத்தகைய நயத்தக்க நாகரிகம் படைத்தவர்களை, 'புகழெனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர்’ எனச் சங்கப் பாடல் போற்றிப் புகழ்கிறது. 

'போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது!’(குறள் எண் 693)

மன்னரைச் சேர்ந்து ஒழுகல் என்ற அதிகாரத்தில் அமைந்துள்ள முக்கியமான குறள் இது. இன்றைய ஜனநாயக நாட்டில் மன்னர் என்பதற்கு பதிலாக ஆட்சியாளர் என நாம் வைத்துக் கொள்ளலாம். ஆட்சியாளர்களிடம் எப்படி இருக்க வேண்டும் என இந்தக் குறள் எடுத்துச் சொல்கிறது. தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால் பொறுக்க இயலாத குற்றம் எதுவும் நேராது மிகுந்த விழிப்போடு இருப்பது அவசியம். தவறு நேர்ந்து ஆட்சியாளருக்கு சந்தேகம் தோன்றிவிட்டால் அதிகாரியிடம் நன்மதிப்பை மீண்டும் பெறுவது என்பது எளிதல்ல.

இன்றும் ஒரு கட்சி வெற்றி பெற்று இன்னொரு கட்சி ஆட்சிக்கு வரும்போது முக்கியமான அதிகாரிகளையெல்லாம் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றி, தங்களுக்கு நம்பிக்கையான அதிகாரிகளைத் தங்கள் அருகில் வைத்துக் கொள்ளும் போக்கு நிலவுவதைப் பார்க்கிறோமே? வள்ளுவம் முழு உலகிற்குமான நூல் மட்டுமல்ல, முக்காலத்திற்குமான நூல் என்பதையல்லவா இந்தப் போக்கு உணர்த்துகிறது? கடவுள் வாழ்த்து என்ற முதல் அதிகாரத்தில் ஏழாம் குறளும் எட்டாம் குறளும் அரிது என்ற சொல்லோடு முடிகின்றன.

'தனக்குவமை இல்லாதான் தாள்சேரந்தாற் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.’ (குறள் எண் 7)

ஒப்புவமை அற்ற கடவுளின் திருவடி சேர்ந்தவர்களுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு உள்ளத்தில் தோன்றும் கவலையை மாற்றுவது அரிது என்கிறது திருக்குறள். உண்மைதானே? கடவுளைச் சரணடைந்தவன் கடவுள் இருக்கிறார், அவர் அருளால் வாழ்க்கை எதிர்காலத்திலேனும் நல்ல விதமாகவே அமையும் என நம்பிக்கையோடு வாழ்வான். எனவே தன் மனத்தின் கவலையைப் போக்கிக் கொள்வது அவனுக்கு எளிது.

'பொன்னை உயர்வைப் பொருளை விரும்பிடும் என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா, நின்னைச் சரணடைந்தேன்!’
- என மகாகவி பாரதி பாடுவது இந்தக் குறளின் விரிவாக்கம் தானே?

'அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தாற் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது!’ (குறள் எண் 8)

இறைவனின் பாதங்களைச் சரணடைந்தவர்க்கு அல்லாது மற்றவர்க்குப் பிறவிப் பெருங்கடலைக் கடப்பது அரிது என்கிறார் வள்ளுவர். 'சம்சார சாகரம்' என வாழ்வை சாகரமாய்க் கண்டு கடலுடன் ஒப்பிடுவதுண்டு. இந்தப் பிறவிக் கடலைக் கடக்க இறைவன் பாதங்களைச் சரணடைவதே ஒரே வழி  என ஆன்மிகச் சான்றோர்கள் பலரும் அருளியிருக்கிறார்கள். சரணாகதி தத்துவம் என்பதே இறைவன் பாதங்களில் சரணடைவதைக் குறிப்பதுதான். விபீஷணன் ராமபிரானின் பாதங்களில் அப்படிச் சரணடைந்தான்.

சீதை என்கிற ஜீவாத்மாவானவள் தலையணியான சூடாமணியை அடையாளப் பொருளாக ராமன் என்கிற பரமாத்மாவுக்கு ஏன் அனுப்பினாள்? தலையால் பரமாத்மாவை வணங்குகிறேன் என்பதை உணர்த்தத்தான். அதுசரி, அதற்கும் முன்னால் ராமன் என்கிற பரமாத்மா சீதை என்னும் ஜீவாத்மாவிற்கு விரலணியான கணையாழியை ஏன் அனுப்பினான்? தன்னைத் தலைவணங்கிச் சரணடைந்தால் தன் ஆசி ஜீவாத்மாவிற்கு எப்போதும் உண்டு என்று உணர்த்தத்தான்! இவ்விதமெல்லாம் ராமாயணத்தின் தத்துவக் கண்ணோட்டத்தைப் பலர் ஆராய்ந்திருக்கிறார்கள்.

'விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது.’ (குறள் எண் 16)

வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் மழைநீரானது மண்ணில் விழுந்தால் தான் ஓரறிவு உயிராகிய பசும்புல் கூடத் துளிர்க்கும். மழைத்துளி இல்லாதுபோனால் அந்தப் புல்லும் கூடத் துளிர்ப்பது அரிது என்கிறார் வள்ளுவர். 'மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்!’ என அதனால்தானே சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகளும் மழையை வானளாவப் போற்றுகிறார்!

'ஆழிமழைக் கண்ணா ஒன்றுநீ கைகரவேல்
ஆழியுட் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடை பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்’

என்றல்லவா மழையைப் பற்றிப் பாடுகிறது திருப்பாவை! அதைப் பாடிய ஆண்டாளே எந்தக் குறையும் சொல்ல இயலாத மாசற்ற ஒரு திருப் - பாவை அல்லவா? பூமாதேவியின் அம்சமாகி, சீதாப்பிராட்டி போல் மண்ணில் துளசிச் செடியின் அடியில் அவதரித்த குற்றமற்ற இன்னொரு புனிதத் துளசி அல்லவா அவள்? மிக உயர்ந்த பட்டர்பிரான் கோதையாய் வளர்ந்து மானிடக் காதலை மறுத்து இறைவனையே காதலித்து ஜீவாத்ம-பரமாத்ம ஐக்கிய தத்துவத்தை விளக்கும் வகையில் அரங்கனுடன் ஒன்றிய ஆண்டாளின் புனிதத் திருச்சரிதம் பயிலப் பயில மனத்தைத் தூய்மைப்
படுத்துவது.

'செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது!’ (குறள் எண் 101)

செய்ந்நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ளது இந்தக் குறள். ஒருவர் நம் துன்பத்தை உணர்ந்து தானாகவே முன்வந்து ஓர் உதவி செய்வார் என்றால் அவருக்கு இந்த நிலவுலகத்தையும் வானத்தையும் கைம்மாறாக வழங்கினாலும் அது ஈடுசெய்ய இயலாதது என்கிறது வள்ளுவம். பெண்ணுக்குத் திருமணம் நிச்சயமாகிவிட்டது. எதிர்பார்த்த இடத்தில் திருமணச் செலவுக்குப் பொருளுதவி கிட்டவில்லை. இதை அறிகிறார் நண்பர் ஒருவர். திருமணம் தடைபடாமல் இருக்க அந்த நேரத்தில் தாமே முன்வந்து பொருளுதவி செய்கிறார். அவரது உதவியால் எத்தனை எத்தனை நன்மைகள்! அந்த உதவி கிட்டாமல் போயிருந்தால் திருமணம் நின்றிருக்கும். ஒரு பெண்ணின் வாழ்வு தடைப்பட்டிருக்கும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஏன் நின்றது என்றறியாமல் அவளைத் திருமணம் செய்துகொள்ள பின்னர் யாரும் வராமல் போகும் சூழ்நிலையும் உருவாகலாம். மண்டபச் செலவு உள்ளிட்ட முன்கூட்டிய பல செலவுகள் சிரமப்பட்டு நடந்திருக்கும். அவை அனைத்தும் வீணாகியிருக்கும். பெண்ணைப் பெற்றவர்கள் நிச்சயித்த நாளில் மணம் நிகழாத துயரத்தால் தற்கொலைக்குத் தூண்டப்படலாம். இப்படி எத்தனையோ விபரீதங்களைத் திடீரெனக் கிடைத்த பொருளுதவி தடுத்துவிட்டதே? வள்ளுவர் சொல்வது சரிதானே? இத்தகைய அரிய உதவிக்கு வையகத்தைக் கொடுத்தாலும் வானகத்தைக் கொடுத்தாலும் ஈடாகாதுதான் அல்லவா?

'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’ (குறள் எண் 377)

ஊழ் என்னும் அதிகாரத்தில் வரும் குறள் இது. வாழ்வியல் நெறிப்படி யோக்கியமான வாழ்க்கையை வாழாது போனால், கோடிக்கணக்கில் பணம் சேர்த்தாலும் அவற்றின் பயனைத் துய்ப்பது அரிது என்கிறார் வள்ளுவர். பணம் சேர்ப்பதிலேயே வாழ்நாள் முழுவதையும் வீணாக்கி எதையும் நுகராமல் அழிந்துபோகும் மானிடர்கள் கட்டாயம் இந்தக் குறள் சொல்லும் கருத்தைக் கவனத்தில் கொள்ளவேண்டும். இளமையில் பணம் சேர்ப்பது முக்கியம் தான். ஆனால் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுப் பணம் சேர்ப்பதால் பயனேதும் இல்லை. வாழ்விற்குப் பொருள் தேவைதான், ஆனால். வாழ்வதிலும் பொருள் வேண்டாமா என்ற வாக்கியம் சிந்தனைக்குரியது.

'நுணங்கிய கேள்வியர் அல்லால் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.’(குறள் எண் 419)

கேள்வி என்ற அதிகாரத்தில் கேள்வி அறிவு இல்லாதவர் பணிவுடைய சொற்களைப் பேசுபவராக இருத்தல் அரிது என்கிறார் வள்ளுவர். கற்றலில் கேட்டலே நன்று. கேட்கும்போது சொல்பவரையும் நாம் எடுத்துக்காட்டாகக் கொள்கிறோம். நமக்கு குருநிலையில் இருப்பவரே பணிவுடன் இருக்கிறார் என்பதை அறிந்து அவரினும் குறைந்த அறிவுடைய நாம் கட்டாயம் பணிவுடன் இருக்க வேண்டும் எனத் தெளிவுபெறுவோம். நாம் எத்தனை அறிவுடையவராய் இருந்தாலும் நம்மினும் அறிவுடையோர் இருக்கக் கூடும் என்ற உண்மையைக் கேள்வி அறிவே நம்மிடம் ஏற்படுத்தும்.

'சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது!’ (குறள் எண் 647)

சொல்வன்மை என்னும் அதிகாரத்தில் சொல்லில் வல்ல அறிஞர்களை வெல்வது அரிது எனத் தெரிவிக்கிறார் வள்ளுவர். இன்றைய தேர்தல்களில் கூட சொல்வன்மையோடு பிரசாரம் செய்யும் கட்சியினர் வெற்றி பெறுவதையும் நல்ல பிரசாரகர்கள் இல்லாத கட்சியினர் தோல்வியடைவதையும் பார்க்கிறோம் அல்லவா! உண்மையில் சோர்வில்லாதவனாகவும் அச்சமற்றவனாகவும் இருப்பதோடு சொல்வதை புரியும்படியாக சக்தியோடு சொல்லக் கூடியவனாகவும் இருப்பவனை இந்த உலகில் யாராலும் வெல்ல இயலாது என்பது வள்ளுவர் தரும் சிந்தனை. ராமாயணத்தில் யாராலும் வெல்ல முடியாத மாவீரனாகத் திகழும் அனுமன் சொல்லாற்றல் நிறைந்தவனாகவும் இருந்தான் என்பதை அந்த இதிகாசம் சொல்கிறது. அதனால் தானே அனுமனின் பேச்சை முதன்முதலில் கேட்ட ராமபிரான் இலக்குவனிடம் 'யார்கொலாம் இச் சொல்லின் செல்வன்!’ என வினவுகிறான்!

'உறைவிடத்து ஊரஞ்சா வன்கண் தொலைவிடத்து
தொல்படைக்கு அல்லால் அரிது’ (குறள் எண் 762)

இந்தக் குறள் இடம்பெறும் அதிகாரம் படைமாட்சி என்பது. நெடுங்காலமாக போர்த்தொழிலில் ஈடுபட்டிருக்கும் படையினரே யாரையும் வெல்லக் கூடிய ஆற்றல் மிக்கவராய்த் திகழ்வர் என்கிறது இந்தக் குறள்.

'அறிவில்லார் தாம்தம்மை பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது’ (குறள் எண் 843)

புல்லறிவாண்மை என்ற அதிகாரத்தில் இடம்பெறும் இந்தக் குறள் பகைவர்களாலும் செய்ய இயலாத துன்பத்தை அறிவில்லாதவர்கள் தங்களுக்குத் தாங்களே செய்து கொள்ளும் ஆற்றலுடையவர்கள் என்று சொல்கிறது! வள்ளுவரின் அபாரமான நகைச்சுவை உணர்ச்சிக்கு இந்தக் குறள் ஓர் எடுத்துக்காட்டு. அரிதினும் அரிதான ஒரு நூல் நமது திருக்குறள். அதைத் தமிழர்கள் மட்டுமல்ல, எல்லா மொழியினரும் அவரவர் மொழியில் மொழிபெயர்த்துப் பயிலவேண்டாமா? பயின்று வள்ளுவம் சொல்லும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டாமா? உலகில் சாந்தியும் சமாதானமும் நிலவ அதுதானே ஒரே வழி?

(குறள் உரைக்கும்)

- திருப்பூர் கிருஷ்ணன்