சனிபகவான் படத்தை பூஜையறையில் வைத்து வழிபடலாமா?



தெளிவு பெறுஓம்

* ஸ்லோகங்களுக்கும், வேத மந்திரங்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?
- விஜய், ஈரோடு.

ஸ்லோகங்கள், இறைவனைக் குறித்த வழிபாட்டு துதிகள். இறைவனைப் போற்றி பாராட்டுகின்ற வகையில் இலக்கியவாதிகளால் இயற்றப்பட்டவை. மொழியறிவு பெற்றவர்கள் இலக்கியப் பிழை இன்றி இறைவனைப் பற்றி எழுதிய துதிகள் ஸ்லோகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம். தமிழ், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் என அவரவர் புலமை பெற்ற மொழியில் ஸ்லோகங்களை இயற்றி உள்ளனர். அவ்வளவு ஏன், ஆங்கில மொழியில் புலமை பெற்ற ஒருவர், இறைவனைப் போற்றி ஒரு துதியை எழுதினால் அதனையும் ஸ்லோகமாக ஏற்றுக் கொள்ள இயலும். ஆனால், வேதமந்திரங்கள், இறைவனைப் பற்றி மட்டும் சொல்வது அன்று. இந்த பிரபஞ்சத்தினுடைய ரகசியத்தினை உள்ளடக்கியது.

நாம் இன்று புதிதாகக் கண்டு வரும் அத்தனை அறிவியல் அற்புதங்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்திருப்பவை வேத மந்திரங்கள். நம் நாட்டில் வாழ்ந்த விஞ்ஞானிகளான மகரிஷிகள் தங்கள் தவ வலிமையால் ஆராய்ந்து அவற்றை தேவலிபியான சமஸ்கிருத மொழியில் தொகுத்துத் தந்திருப்பதே வேத மந்திரங்கள். இவ்வுலகம் மட்டுமின்றி ஈரேழு பதினான்கு லோகத்தினைப் பற்றிய குறிப்புகள் அனைத்தையும் உள்ளடக்கியதே வேத மந்திரங்கள். வேதம் முழுவதையும் கற்றறிந்தவர் இவ்வுலகில் எவரும் இல்லை. அண்டம் முதல் பிண்டம்வரை அத்தனை சூட்சுமங்களையும் தனக்குள் கொண்டிருப்பது வேதம். வேத மந்திரங்கள் என்பது அறிவியல் ரீதியான பொக்கிஷம் என்றால் அது மிகையில்லை.

* மரணயோகம், கரிநாள் ஆகிய நாட்களிலும் கல்யாணம் நடக்கிறதே, முகூர்த்த நாள் குறிக்கும்போது உண்டாகும் கவனக்குறைவு காரணமா?
- வெங்கட்ராமன், செகந்திராபாத்.

முகூர்த்த நாள் குறிக்கும் ஜோதிடர்கள் பெரும்பாலும் கவனக்குறைவாக இருக்கமாட்டார்கள். நீங்கள் குறிப்பிடும் மரணயோகம், கரிநாள் ஆகியவை தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் மட்டுமே கடைபிடிக்கக் கூடிய நாட்கள். இந்த இரண்டு மாநிலங்கள் தவிர, ஆந்திரப்பிரதேசம் உட்பட இந்தியாவின் பிற மாநிலங்களில் கரிநாள், மரணயோகம் ஆகியவை அவர்களுடைய பஞ்சாங்கத்திலேயே இருக்காது. அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் ஆகிய யோகங்கள் நட்சத்திரங்களையும், ஞாயிறு முதலான வாரநாட்களையும் ஒப்பிட்டு உருவாக்கப்பட்ட ஓர் அட்டவணை. இந்த யோகங்களுக்கு பழங்கால ஜோதிட நூல்களில் எந்தவிதமான பிரமாணமும் இல்லை.

அதேபோல கரிநாட்கள் என்பது சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கக் கூடிய நாட்கள். இந்த நாட்களும் நம் தமிழ்நாட்டு ஜோதிட அறிஞர்களால் சமீப காலத்தில் உருவாக்கப்பட்டதே அன்றி பழமையானது அல்ல. நீங்கள் குறிப்பிட்டிருக்கும் கரிநாட்கள் மற்றும் மரணயோக நாட்களில் முகூர்த்தம் வைக்கும் பழக்கம் நம் தமிழ்நாட்டில் இல்லை. ஆனால். நீங்கள் வசிக்கும் ஆந்திரப்பிரதேசத்தில் இந்த நாட்களைப் பற்றிய குறிப்பு இருக்காது.

மேலும் ராகுகாலம், எமகண்டம் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். முகூர்த்தம் வைக்கின்ற லக்னத்தையும், குறிப்பாக ஸ்தான சுத்தத்தையும் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்வார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள விதியும் அதுவே. கால, தேச, வர்த்தமானத்தை அனுசரித்தே ஜோதிடம் பார்க்க வேண்டும் என்பது அடிப்படை விதி. அந்த விதியின் அடிப்படையில் நாம் வசிக்கின்ற பகுதியில் எந்த விதிமுறைகளைக் கடைபிடிக்கிறார்களோ, அதை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் குறிப்பிடுவது போல் கவனக்குறைவாக யாரும் முகூர்த்தம் குறித்துக் கொடுப்பதில்லை.

* சனி பகவானின் படத்தை பூஜை அறையில் வைத்து வழிபடலாமா? சிலர் கூடாது என்கிறார்களே?
- ரா.பாஸ்கரன், பெங்களூரு.

கூடாது என்பதைவிட அவசியமில்லை என்பதே நிஜம். சனி உட்பட நவகிரஹங்களை கடவுளாக வழிபடுவது என்பது பழங்காலத்தில் இல்லை. பழங்கால ஆலயங்களில்கூட சமீபத்தில்தான் நவகிரஹங்களை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். அதிகபட்சமாக இருநூறு ஆண்டுகளாகத்தான் நவகிரஹங்களுக்கான உருவ வழிபாடு என்பது ஆலயங்களில் நடந்து வருகிறது. இறைவன் இட்ட பணியைச் செய்யும் பணியாளர்களே நவகிரஹங்கள். நவகிரஹங்களால் உண்டாகும் சிரமத்தினைக் குறைக்க இறைவனிடம்தான் முறையிட வேண்டுமே தவிர கிரஹங்களிடம் அல்ல.

இருந்தாலும் பொதுமக்களின் நலன் கருதி ஆகம விதிகளுக்கு உட்பட்டு சிவாச்சாரியார்கள் நவகிரஹங்களை பிரதிஷ்டை செய்து அவர்களையும் வலம் வந்து வழிபடுவதில் தவறில்லை என்ற எண்ணத்தோடு அதற்கான விதிமுறைகளையும் வகுத்துத் தந்திருக்கிறார்கள். அதேநேரத்தில் நவகிரஹங்களால் கடுமையான தோஷம் உண்டாகும்போது அதற்குரிய சாந்தி பரிகாரங்களை ‘சாந்தி குஸூமாகரம், சாந்தி ரத்னாகரம்’ போன்ற நூல்களில் வேத மந்திரங்களின் துணைகொண்டு ஜபம், ஹோமம், அர்க்யம் என்ற விதிகளின்படி செய்துகொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

சனிபகவான், அசுப கிரஹங்களில் முதன்மையானவராகக் கருதப்படுவதால் அவருடைய உருவப்படத்தையோ அல்லது விக்கிரகத்தையோ வீட்டில் வைத்து வழிபடுவது அவசியமில்லாத ஒன்று. வேலியில் போன ஓணானைப் பிடித்து வேட்டியில் விட்டுக்கொண்ட கதை ஆகிவிடும். சனி மட்டுமல்ல, சுபகிரஹமாகிய குரு உட்பட நவகிரஹங்களுக்கு உரிய உருவ வழிபாட்டினை ஆலயத்தில் மட்டுமே வைத்துச் செய்வது நன்மை தரும். வீட்டில் வைத்து வழிபட நினைப்பவர்கள் ஹோமம் செய்தோ அல்லது தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீப ஜோதியில் கிரஹங்களை ஆவாஹணம் செய்தோ வழிபடலாம். மற்றபடி கிரஹங்களுக்கு உரிய உருவ வழிபாட்டினை வீட்டில் செய்வது தேவையற்ற ஒன்று.

* எண்ணூறு வருடங்களுக்கு முந்தைய சேக்கிழாரின் பெரியபுராணம் வாயிலாக நாயன்மார்களைப் பற்றி அறிந்து கொண்டுள்ளோம். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த சிவாலயங்களிலும் நாயன்மார்களின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இது எவ்வாறு சாத்தியம்?
- ராஜகோபாலன், இ-மெயில் மூலமாக.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான ஆலயத்தில், நாயன்மார்களின் சிலைகளை சமீப காலத்தில் பிரதிஷ்டை செய்திருக்கலாம் அல்லவா? 1400 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தரர் பெருமானால் எழுதப்பட்ட திருத்தொண்டர் திருத்தொகை, 1000 வருடங்களுக்கு முன்னால் நம்பியாண்டார் நம்பி அவர்களால் தொகுக்கப்பட்ட திருத்தொண்டர் திருவந்தாதி மற்றும் 800 ஆண்டுகளுக்கு முன்பு சேக்கிழார் அருளிய பெரிய புராணம் என்று விரிவாக ஆராய்ச்சி செய்து உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். பெரியபுராணம் நாயன்மார்களின் வரலாற்றினை மட்டும்தானே விரிவாக எடுத்துரைக்கிறது, அவ்வாறு இருக்க நாயன்மார்களின் திருஉருவங்களை எவ்வாறு செதுக்கியிருப்பார்கள் என்பதும் உங்களுடைய சந்தேகம்.

வரலாற்றினைக் கொண்டு கற்பனையாக ஒரு உருவத்தை சிற்பக்கலை சாஸ்திரத்தின் அடிப்படையில் உருவாக்கியுள்ளார்கள். உதாரணத்திற்கு திருவள்ளுவர் இப்படித்தான் இருப்பார் என்பதற்கு ஆதாரம் ஏது? நம் தமிழறிஞர்களும், வரலாற்று ஆசிரியர்களும் இணைந்து திருவள்ளுவர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று கற்பனையில் உருவகப்படுத்தி வைத்துள்ளார்கள். அந்த உருவத்தினை உலகத்தார் அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதேபோல நாயன்மார்களின் வரலாற்றில் அவர்களின் குணாதிசயம், மற்றும் வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்துகொண்டு அதற்கு ஏற்றார்போல் உருவங்களை செதுக்கியுள்ளார்கள். அதேபோலத்தான் நவகிரஹங்களின் உருவங்களும். நவகிரஹங்கள் மட்டுமல்ல, விநாயகர், சுப்ரமணியர், அம்பாள் உட்பட அனைத்து தெய்வத் திருஉருவங்களும், அவரவருக்கு உரிய தத்துவங்களின் அடிப்படையில் செதுக்கப்பட்டவையே.

அனைத்து ஆலயங்களிலும் ஒரே மாதிரியாக இவர்களின் உருவங்கள் அமைந்திருப்பதற்கான காரணமும் அதுவே. சிற்பக்கலை சாஸ்திரத்தில் எந்தெந்த தத்துவத்திற்கு எவ்வாறு உருவ அமைப்பு இருக்க வேண்டும் என்பதை நிர்ணயித்து உள்ளார்கள். அதன் அடிப்படையிலேயே எல்லா ஆலயங்களிலும் ஒரே மாதிரியான நாயன்மார்களின் திருவுருவங்கள் காணப்படுகின்றன. நம் முன்னோர்களின் அனுபவ அறிவினை இது தெளிவாக உணர்த்துகிறது. நாயன்மார்கள் வழிபாட்டுக்கு உரியவர்கள் என்பதை சமயப் பெரியோர்கள் முடிவு செய்த பிறகே பழமையான ஆலயங்கள் உட்பட அனைத்து சிவாலயங்களிலும் அவர்களின் திருவுருவங்களை பிரதிஷ்டை செய்துள்ளார்கள் என்பதே வரலாற்று ரீதியான உண்மை.

* பூஜை அறையை மூடும்போது தீபங்களை அணைத்து விடுவது சரியா?
- டி.என்.ரங்கநாதன், திருச்சி.

சரியே. பூஜை அறையில் இறைவனை வழிபடும்போது விளக்கு ஏற்றி வழிபடுகிறோம். மூடிவிட்டு வெளியில் செல்லும்போதோ அல்லது உறங்கச் செல்லும்போதோ அதனை அணைத்துவிட்டுச் செல்வதில் தவறில்லை. எலி தொந்தரவினாலோ அல்லது காற்று வேகமாக அடிப்பதாலோ தீப ஜோதியில் உள்ள வெப்பமானது அருகில் உள்ள பொருட்களின் மீது பட்டு தீவிபத்து ஏதேனும் நிகழ்ந்துவிடுமோ என்று பயந்து பயந்து நிம்மதியின்றி தவிப்பதை விட அதனை அணைத்துவிட்டு பூஜை அறையை மூடுவது நல்லதே.

மறுபடியும் காலையில் எழுந்தவுடனோ அல்லது பூஜை அறையை மீண்டும் திறக்கும்போதோ விளக்கினை ஏற்றிக் கொள்ளலாம். இறைவழிபாடு என்பது முழு நம்பிக்கையுடனும், பக்தி சிரத்தையுடனும் அமைய வேண்டும். பூஜை அறையை மூடும்போது தீபங்களை அணைப்பதில் எவ்வித தவறும் இல்லை.

* எனக்கு ஜாதகம் இல்லை. நான் ராசிபலன், சனிபெயர்ச்சி, தின பலன்கள் ஆகியவற்றை எப்படி அறிவது?
- மு.வேம்புநாதன், பட்டாபிராம்.

ஜாதகம் இல்லாதவர்கள் அறிந்துகொள்வதற்கு வசதியாகத்தான் நாம நட்சத்திரங்கள் வகுக்கப்பட்டுள்ளன. அதாவது பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு தன்னுடைய நட்சத்திரம் மற்றும் ராசியினைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டதே நாம நட்சத்திரங்கள். உதாரணத்திற்கு உங்களுடைய பெயரான வேம்புநாதன் என்பதன் முதல் எழுத்து ‘வே’. இந்த எழுத்திற்கு உரிய நட்சத்திரம் மிருகசீரிஷம் முதல் பாதம். இது ரிஷப ராசிக்குள் அடங்கும். ஜாதகம் எழுதி வைக்காத பட்சத்தில் நீங்கள் மிருகசீரிஷ நட்சத்திரத்தை ஜென்ம நட்சத்திரமாகவும், ரிஷப ராசியை உங்கள் ஜென்ம ராசியாகவும் கணக்கில் கொண்டு அவற்றிற்குச் சொல்லப்படுகின்ற ராசிபலன்களை அறிந்துகொள்ள வேண்டும். இவ்வாறு ஜாதகம் இல்லாதவர்கள் தங்களுடைய பெயரின் முதல் எழுத்தைக் கொண்டு தங்கள் ஜென்ம ராசி எது என்பதை ஜோதிடரை அணுகித் தெரிந்து கொள்ளலாம்.

* குலதெய்வத்தின் பெயரை குழந்தைக்கு சூட்டலாமா?
- எஸ்.எஸ்.வாசன், தென்எலப்பாக்கம்.

சூட்ட வேண்டும். நாமகரணம் என்ற பெயர் சூட்டு விழாவினை குடும்ப புரோஹிதர் நடத்தி வைக்கும்போது, முதலில் குலதெய்வத்தின் பெயரையே குழந்தைக்குச் சூட்டுவார். குழந்தையின் பெயரை தகப்பனார் நெல்லில் எழுதும்போது, முதலில் குலதெய்வத்தின் பெயரையே அந்தக் குழந்தைக்கு வைத்து அதனையே நெல்லில் எழுதி, குழந்தையின் வலது காதில் மூன்று முறை சொல்வார். உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் முனீஸ்வரன் குலதெய்வம் என்று வைத்துக் கொண்டால், ஆண்குழந்தையாக இருக்கும் பட்சத்தில் முனுசாமி அல்லது முனியாண்டி என்றும், பெண் குழந்தையாக இருந்தால் முனியம்மா என்றும் பெயர் சூட்டி, அதனை நெல்லில் எழுதி குழந்தையின் வலது காதில் பிள்ளையைப் பெற்ற தகப்பன் மூன்றுமுறை சொல்வார்.

அதன்பின்பு ஜாதக ரீதியாக அதாவது நட்சத்திரத்திற்கு உரிய முதல் எழுத்தின்படி தேர்வு செய்துள்ள பெயரை நெல்லில் எழுதுவார்கள். அதன் பின்பு சான்றிதழில் அளிக்க உள்ள பெயரையும் நெல்லில் எழுதி அந்தப் பெயரைக் கொண்டு குழந்தையை அழைப்பார்கள். இவ்வாறு ‘குலதேவதா நாம்னா’, ‘மாஸ நாம்னா’, ‘நட்சத்திர நாம்னா’, ‘வ்யவஹாரிக நாம்னா’ என்று பல பெயர்களை ஒரே குழந்தைக்குச் சூட்டுவார்கள். சான்றிதழில் அளிக்க உள்ள பெயரே அந்தக் குழந்தையின் நிரந்தரப் பெயராக அமைந்தாலும், முதன்முதலில் சூட்டும் பெயர் குலதெய்வத்தின் பெயராகத்தான் இருக்க வேண்டும் என்பதை பெரியவர்கள் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறார்கள்.

* ராகு-கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி ஆகியவற்றிற்காக கோயிலில் பரிகாரம் செய்யும்போது பாதிக்கப்பட்டவருக்கு மட்டும் பெயர், நக்ஷத்ரம் கூறி பரிகாரம் செய்தால் போதுமா?அல்லது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் செய்ய வேண்டுமா?
- ஆர்.கே.மூர்த்தி, சிட்லபாக்கம்.

உடல்நிலை சரியில்லை என்றால் பாதிக்கப்பட்டவர் மட்டும் மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவாரா அல்லது குடும்பத்தில் உள்ள அனைவருமே மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டுமா? பரிகாரம் என்று வரும்போது யாருக்கு பாதிப்பு இருக்கிறதோ அவருடைய பெயர், நட்சத்திரம் மட்டும் சொல்லிச் செய்வதே நல்லது. அதேநேரத்தில் பொதுவாக வழிபாடு செய்யும்போது குடும்பத்தினர் அனைவரின் பெயர் மற்றும் நட்சத்திரங்களைச் சொல்லி சங்கல்பம் செய்து வழிபடலாம். அதில் தவறில்லை. சிறப்புப் பரிகாரம் என்பது வேறு, பொதுவான வழிபாடு என்பது வேறு. இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.

* சாளகிராமம் என்கிற தெய்வீகக் கல் ஒன்றினை வெளிநாட்டில் இருந்து வாங்கி வந்துள்ளோம். அதை எப்படி பூஜையில் பயன்படுத்துவது எனக் கூறுங்கள்.
- இரா.வைரமுத்து, இராயபுரம்.

சாளகிராமம் என்பது நமது பாரதவர்ஷத்தில் ,மட்டுமே கிடைக்கக் கூடிய இறை சாந்நித்தியம் நிறைந்த அற்புதமான கல். இது நம் நாட்டின் அங்கமாக இருந்த நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் அதிகமாகக் கிடைக்கும். இந்தக் கற்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்தின் அம்சத்தினைக் கொண்டது. அந்தக் கற்களின் வகையினை அறிந்த ஆன்மிகப் பெரியவர்களை அணுகி அதன் அம்சம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அதற்குரிய மந்திரங்களைச் சொல்லி தினந்தோறும் அதற்கு அபிஷேக,

ஆராதனை மற்றும் நைவேத்யம் செய்து வணங்கி வந்தால் குடும்பம் வளர்ச்சி பெறும். வீட்டில் சாளக்ராமத்தினை வைத்துப் பூஜை செய்யத் துவங்கிவிட்டால் அதற்குரிய ஆசார, அனுஷ்டானங்களைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு ஆசார, அனுஷ்டானங்களை சரிவர கடைபிடிக்க இயலாதவர்கள் அதனை வீட்டில் வைத்துக் கொள்வது நல்லதல்ல. முறையாக பூஜை செய்பவர்களிடம் அவற்றைக் கொடுத்துவிடுவது நல்லது.

* சந்திரனுக்கு பௌர்ணமி நாள் இருப்பது போல் சூரியக் கடவுளுக்கும் விசேஷ நாள் உள்ளதா?
- அயன்புரம் த.சத்தியநாராயணன்.

சூரியனுக்கு எல்லா நாட்களுமே விசேஷமான நாட்கள்தான். சந்திரன் முழுமையாக ஒளிவீசுவது மாதத்தில் ஒருநாள் மட்டுமே. அதனால் பௌர்ணமியை விசேஷ நாளாகக் கருதுகிறோம். ஆனால், சூரியனுக்கு வளர்பிறை, தேய்பிறை என்பதெல்லாம் கிடையாது என்பதால் எல்லா நாட்களும் விசேஷமான நாட்கள்தான். கிரஹண காலங்களில் மட்டும் சூரிய கிரணங்கள் மறைக்கப்படுவதால் அதற்குரிய சாந்தி பரிகாரங்களைச் செய்கிறோம். எல்லா நாட்களிலும் சூரியனை வழிபட இயலாதவர்கள் குறைந்த பட்சம் தமிழ் மாதப் பிறப்பு நாட்களிலாவது வழிபட வேண்டும். ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பு நாளன்றும் ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் நுழைவார்.

அதிலும் வழிபட இயலாதவர்கள் உத்தராயண, தக்ஷிணாயண புண்ய காலங்களில் அதாவது தை மாதப் பிறப்பு, ஆடி மாதப் பிறப்பு நாட்களிலாவது வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் செய்ய இயலாதவர்கள் பொங்கல் பண்டிகை அன்று சூரிய பூஜை செய்து வழிபடலாம். விசேஷமாக வழிபட இயலாவிட்டாலும், தினந்தோறும் காலையில் எழுந்தவுடன் உதய காலத்தில் சூரிய பகவானை தரிசித்து மனதாற வழிபட்டு வந்தாலே போதும். சூரிய வழிபாடு சுறுசுறுப்பைக் கூட்டுவதோடு மனதையும், உடலையும் உற்சாகத்துடன் செயல்பட வைக்கும் என்பதே அனுபவபூர்வமான உண்மை.

- திருக்ககோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா