நல்லன எல்லாம் அருளும் நட்டாற்றீஸ்வரர்!அரங்கம் என்றால் ஆற்றிடைக்குறை எனப்படும். ஆற்றின் இடையில் உள்ள குறைந்த அளவு இடமே அரங்கமாகும். அவ்வகையில் ஈரோடு மாவட்டத்தில், காங்கேயன்பாளையத்தில் அமைந்துள்ள 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான நல்லநாயகி உடனருள் நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் சிவனின் அரங்கமாகவே திகழ்கிறது. மூர்த்தி மற்றும் காவிரி தீர்த்தத்தால் சிறப்புப் பெற்றுள்ள இத்தலம் காங்கேயன்பாளையம் என முருகனின் பெயரால் அமைந்துள்ளது. இத்தலத்தில் காவிரி ஆறு இரு புறமும் சுழித்துக் கொண்டு ஓட, நடுவில் உயர்ந்து, அகத்தியர் வியாக்ரபாதர், பதஞ்சலி முதலிய முனிவர்கள் திருவடி பதிந்த பாறைமீது அமைந்துள்ள திருக்கோயிலாகும்.

காவிரியின் நடுவிலுள்ள குன்றின் மீது, ஓம்கார வடிவில் விளங்கும் கோயில் இது. கொங்கு நாட்டு பஞ்சபூதத் தலங்களில் அகத்தியரால் மணலில் வடிக்கப்பட்ட லிங்கமாக இத்தல இறைவன் இருப்பதால், இத்தலம் கொங்குநாட்டு பிருத்வி (மண்) தலமாகக் கருதி வழிபடப்படுகிறது. இதுவரை இத்திருக்கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் காவிரி ஆற்றில் பரிசலில் பயணித்துச் சென்றுதான் தரிசனம் செய்து வரவேண்டும். இதற்காக நியாயமான கட்டணத்தில் சென்றுவர பரிசல் வசதிகள் இருக்கின்றன. தற்போது மக்கள் நலன் கருதி பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காவிரி ஆறு, குடகில் தோன்றி, ஓடி தமிழகத்துக்கு வளம் தந்து இறுதியில் தமிழகத்தில் கடலில் கலக்கிறது. குடகிலிருந்து கடலின் முகத்துவாரம் வரையில் உள்ள நீளத்தின் மையப்புள்ளி அமைந்துள்ள இடமே தற்போது நட்டாற்றீஸ்வரர் கோயில்கொண்டிருக்கும் பகுதியாகும். மேலும் இரு கரைகளுக்கு இடையிலும் நடு ஆற்றில் அமைந்துள்ள பகுதியாக இருப்பதால் நடு ஆற்று ஈஸ்வரர் என்ற காரணப் பெயர் ஏற்பட்டு, தற்போது நட்டாற்று ஈஸ்வரர் என வழங்கி வருகிறது. இந்த நட்டாற்றீஸ்வரர், அகத்தியரால் அவர்தம் பூஜைக்கென உருவாக்கப்பட்டு வணங்கப்பட்ட லிங்கமாகும்.

வாதாபி, வில்வலன் இருவரும் அசுர சகோதரர்கள். தாம் வசிக்கும் பகுதிக்கு வரும் மஹான்கள், மகரிஷிகளின் வயிற்றுக்குள் ஏதோ ஒரு  வடிவில் சென்று, பின்பு வயிறைக் கிழித்து வெளியேறி, இருவரும் அவர்களை உணவாக உண்ணும் வழக்கமுடையவர்கள். சிவனுக்கு இமயத்தில்
திருமணம். உலகமே வடக்கில்  சங்கமித்ததால் பாரத தேசம் சமநிலை இழந்தது. சிவனார் அகத்திய முனிவரை அழைத்தார். குடைசாயும் உலகை பொதிகைமலை சென்று சமநிலைப்படுத்தி சரிசெய்ய உத்தரவிட்டார். அக்கட்டளையை சிரமேற்கொண்டு காவிரிக்கரை ஓரமாகவே நடந்தார் குள்ளமுனி. வாதாபி, வில்வலன் சகோதரர்கள் பொதிகை நோக்கிச்சென்ற அகத்தியரைக் கண்டனர்.

அவரையும் உண்டு செரிக்க வாதாபி மாங்கனி வடிவெடுத்தான். அதை ஒரு தட்டில் ஏந்திக்கொண்டு சிவனடியாராக வில்வலன் அகத்தியர் முன் சென்றான். அவரிடம், ‘சிவனின் கட்டளையை சிரமேற்கொண்டு தென்திசை செல்லும் தாங்கள், என் உபசரிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும்,’ எனவேண்டி மாங்கனியைக் கொடுத்தான். அவரும் உண்டார். வாதாபி அகத்தியரின் வயிற்றுக்குள் இருக்க அவனை, ‘வாதாபி  வா’ என அழைத்தான் வில்வலன். ஞானத்தால் இதையுணர்ந்த அகத்தியர், ‘வாதாபி ஜீரணோத்பவ!’ எனச்சொல்லி தம் வயிற்றைத் தடவினார். மாங்கனி வடிவில் உள்ளே சென்ற  வாதாபி ஜீரணமாகி அழிந்து போனான். கோபம்கொண்ட வில்வலன், சுயவடிவோடு அகத்தியரைத் தாக்க முற்பட, அகத்தியர் கமண்டலநீர் தெளித்து அவனையும் சம்ஹாரம் செய்தார்.

அசுரனேயானாலும் இருவரைக் கொன்றதால் அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் (கொலை பாவம்) பிடித்தது.  தோஷம்நீங்க, காவிரி நடுவில் உள்ள இடத்தில் மணல் லிங்கம் செய்து சிவபூஜை செய்ய, பாவம் தீரும் என உணர்ந்தார் , காவிரி ஆற்றின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்து எடுக்க காவிரி ஓரம் அகத்தியர் சென்ற போது முருகன் முன்வந்து அகத்தியரை அழைத்து வந்து நடு இடத்தைத் தேர்ந்தெடுத்தார். காவிரியாற்றின் நடுவில் இருந்த அந்தக் குன்றில் மணல் லிங்கம் ஒன்றை அமைத்து பூஜை செய்தார். இறைவனுக்கு காட்டில் விளைந்து இருந்த கம்பை எடுத்து கையால் திரித்து மாவாக்கி, நீர்விட்டு, காய்ச்சிப் படைத்தார்.

அகத்தியரின் அன்பில் கட்டுண்டு அம்பலத்தில் ஆடும் அண்ணல் அவர் முன்தோன்றி ‘உம்மால் உருவான இத்தலத்தில் இனி நாம் சிவ குடும்பமாக கொலுவிருக்கப் போகிறோம், அல்லல்பட்டு ஆற்றாது நிர்க்கதியாய் நட்டாற்றில்  நிற்பவற்கு அருளும் வகையில் இங்கிருந்து அருளுவதோடு அரும் துணையாகவும் இருக்கப்போகிறோம், நீர்  பயணத்தைத் தொடர்க!’  என அருளினார். பின்னர் அங்கிருந்து அகன்று தென்னாடு சென்று இறைவன் கட்டளைப்படி பூமியை சமப்படுத்தினார். சிவபெருமானின் திருமணம் நடந்தது. அத்திருமணம் காண இயலாத அகத்தியருக்கு அவர் வேண்டிய தலங்கள் தோறும் திருமணக் காட்சி தந்து அருளினார் சிவனார்.

தோஷம் நீங்கிய அகத்தியர், தென்பொதிகை சென்று தமிழ் வளர்க்க பயணம் செய்தார். கம்பங் கூழ் படைக்கப்பட்ட அந்த மணல் லிங்கமும் அப்படியே இறுகிப்போனது. ஆற்றின் நடுவில் அகத்தியரால் வணங்கப்பட்ட அந்த சிவலிங்கம் நடு ஆற்றில் குடி கொண்டதால், ‘நட்டாற்றீஸ்வரர்’ எனவும், அகத்தியரால் மணலால் பிடித்து வைத்து வணங்கப்பட்டதால் அகத்தீஸ்வரர் எனவும் வழங்கப்பட்டார். பின்னர் சிவலிங்கத்திற்கு மேல் விமானம் கட்டப்பட்டது சிவகுடும்பத்தின் அங்கமாக அருகில் உமையம்மை, ‘நல்லநாயகி’ என்ற பெயரோடு, சிவன் சந்நதிக்கு வலப்புறம் தனி சந்நதியில் எழுந்தருளினாள். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு நற்பலன்களைத் தருபவள் என்பதால் இவளுக்கு இப்பெயர் வழங்குகிறது. அன்னபூரணி என்றும் பெயருண்டு.

சின்னமைந்தன்  முருகன், வலது காலை முன்வைத்தும், இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் காட்சி தருகிறார். அகத்தியர் இங்கு சிவனைத் தரிசிக்க வந்தபோது, முருகன் அவரை முன்னின்று வரவேற்று அழைத்து வந்து ஆற்றின் நடுவில் அமைந்திருந்த குன்றைக் காட்டியதால் இக்கோலத்தில், அதாவது நடக்கும் பாவனையில், காட்சி தருகின்றார். இவர் இடது கையில் கிளி ஒன்றை வைத்திருப்பது வித்தியாசமான தரிசனம். இது ‘தகப்பன் சாமி’ எனப் பெயர்பெற்ற ஞானஸ்கந்தன் என்னும் முருகப் பெருமானின் ஞானக்கோலம் ஆகும். கோயில் வளாகத்திலுள்ள பாறை மீது தலவிருட்சமான ஆத்திமரத்தைக் காணலாம். மிகவும் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது அதிசயம்.

இம்மரத்தின் கீழ் தல விநாயகராக காவிரி கண்ட விநாயகர் எழுந்தருளியுள்ளார். இத்தலத்தின் பிராகாரத்தில் காவிரி கண்ட விநாயகரோடு, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர், நால்வர், பைரவர். ஆகியோர் எழுந்தருளி அருளுகின்றார்கள். ஸ்ரீதேவி-பூதேவியுடனான ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் தனி சந்நதியில் சேவை சாதிக்கிறார்.தினமும் காலை 6.30 முதல் இரவு 7.00 மணிவரை திருக்கோயில் தரிசனத்திற்காக திறந்திருக்கும் அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம், தேய்பிறை அஷ்டமி நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அகத்தியர் பிருத்வி லிங்கம் செய்து சிவபூஜை செய்தபோது, சுவாமிக்கு கம்பு தானியத்தை படைத்து வழிபட்டார்.

இதன் அடிப்படையில் அச்சம்பவம் நிகழ்ந்த சித்திரை முதல்நாள் மட்டும் சிவனுக்கு தயிர் கலந்த கம்பங்கூழ் நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. அன்று பக்தர்களுக்கு இதுவே பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது. சித்திரை முதல்நாள், ஆடிப்பெருக்கு மற்றும் கார்த்திகை கடைசி திங்களன்று சுவாமிக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். ஆடிப்பூரத்தன்று மதியவேளை பூஜையில் நல்லநாயகி அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் நடக்கும். காவிரியாற்றின் நடுவில் அமைந்த தலம் என்பதால், ஆடிப்பெருக்கன்று சிவனுக்கு காவிரி நீர் அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். அன்று கமண்டலத்தின் மூலம் காவிரி நதியைக் கொண்டு வந்த அகத்தியருக்கு தலைப்பாகை மற்றும் வஸ்திரம் அணிவித்து மரியாதை செய்யப்படுகிறது.

ஊருக்குள் அமைந்துள்ள கோயில்களில் உற்சவம் என்னும்போது விதவிதமான வாகனங்களில் சுவாமிகள் அலங்காரம் செய்யப்பெற்று உலா வருவதுண்டு. காவிரியாற்றின் நடுவில் பாறை மீது அமைந்துள்ள இத்திருக்கோயிலில் பரிசலில் சுவாமி உலாவர, அதற்குமுன் மற்றொரு பரிசலில் கலைஞர்கள் மேளம், நாதஸ்வரம் என மங்கள இசை ஒலித்துக் கொண்டு செல்லும் அற்புதக் காட்சியை இங்கு மட்டுமே காணமுடியும். நவராத்திரி நிறைவுநாளான விஜயதசமியன்று, ஒன்பது நாட்கள் கொலுவில் இருந்த அம்பாள் பரிசலில் எழுந்தருள்வார். ஒரு ஆருத்ரா தினத்தன்று பதஞ்சலியும், வியாக்ரபாதரும் வந்து தரிசனம் செய்ததால், அதைக் குறிக்க அந்தத் திருநாளான மார்கழி திருவாதிரையன்று நடராஜருக்கு ஆருத்ரா விசேஷ பூஜை நடைபெறுகிறது.

அன்று ஒரு பரிசலில் நடராஜர் எழுந்தருள, காவிரி நதியிலேயே புறப்பாடு நடைபெறும். மற்றொரு பரிசலில் மேள வாத்தியங்கள் செல்லும். மாலையில் திருக்கல்யாண வைபவம் நடக்கும். இந்த வைபவம் இங்கு மிக சிறப்பானது. இத்திருக்கோயில் சிறிய பாறைமீது அமைந்திருந்தாலும், அந்தப் பாறையிலேயே ஆத்திமரம் தலவிருட்சமாகத் துலங்குகிறது. அனைத்து நட்சத்திரங்களும், ராசிகளும் இறைவனின் இயக்கத்துக்குக் கட்டுப்பட்டவை என்பதால் அந்தந்த நட்சத்திரத்துக்கும் ராசிக்கும் உரிய தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அவரவர் தமக்குரிய விருட்சத்தை வணங்கி பின்னர் வந்து இறைவனை வணங்கிச் செல்லும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது.

செவ்வாய், வெள்ளி ஞாயிற்றுக்கிழமைகளில் நல்லம்மை, துர்க்கை வழிபாடும், சோமவாரத்தில் சிவனுக்கு அபிஷேகமும், சனிக்கிழமைகளில் பெருமாள் வழிபாடும், சஷ்டி, கிருத்திகை, செவ்வாய் நாட்களில் ஞானவடிவாக உள்ள சுப்ரமணியருக்கு கல்வியில் தேர்ச்சிபெற மாணவர்கள் வந்து வணங்கிவிட்டுச் செல்கிறார்கள். தீயதை அழித்து நல்லது நடைபெற அகத்தியர் மூலமாக எழுந்தருளி அருள்பாலித்துவரும் அகத்தீஸ்வரர் என்னும் நல்லம்மை உடனாய நட்டாற்றீஸ்வரரைத் தொழ நம்மைச் சுற்றி இருக்கும் தீமைகள் அழிந்து, நமக்கு நன்மையே விளையும்.

- இரா.இரகுநாதன்