மகேசனைப் பாடி மகத்துவம் பெறுவோம்!மன இருள் அகற்றும் ஞானஒளி - 36

‘‘பொலிக பொலிக பொலிக போற்று வல்லுயர்ச் சாபம்
 நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றும் இல்லை
கலியும் கெடும் கண்டுகொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்
   மலியப் புகுந்து இசைபாடி ஆடி உழிதரக் கண்டோம்’’

-ஆழ்வார்களின் தலைமகனாக விளங்கும் நம்மாழ்வாரின் அற்புதமான திருவாய்மொழிப் பாசுரம் இது. கலிகாலம் - எதெல்லாம் நடக்கக்கூடாதோ அதுவெல்லாம் நடக்கும். தர்மத்தின் பேச்சு செயலிழந்துபோகும். பொது ஒழுக்கமும் சுயமான சிந்தனைகளும் மறக்கடிக்கப்படும்.  அதர்மம் அதீதமாக செயல்படும். மறைந்த காவியக் கவிஞர் வாலி பாணியில் சொல்ல வேண்டுமென்றால் - ‘தர்மம் தவிடு திங்கும்; அதர்மம் அரிசி சாப்பிடும்!’ சரி இதெற்கெல்லாம் என்ன தீர்வு? தீர்வு இல்லாமலா இருக்கும்? நம்மாழ்வாரின் இந்தப் பாசுரம், மா மருந்தாக இருக்கிறது! பாசுரத்தின் விளக்கத்தில் மருந்தின் குணம் காண்போம்:

‘நீடூழி வாழ்க! நீடூழி வாழ்க! அனைத்து உயிர்களுக்குமான தொல்லை அகன்று போய்விட்டது. நம்முடைய கர்ம வினையால் துன்பம் தரும் தீவினைகளும் நரக வாசமும் யாருக்கும் இனி கிடையாது! கலியுகத்தில் வருவதாகச் சொல்லப்படும் துன்பங்கள் அகன்றுவிடும் என்பதை கண்டுகொள்ளுங்கள். கடல் வண்ணனான கண்ண பெருமானின் அடியார்கள் ஏராளமாக எங்கும் பரவி அவனுடைய புகழைப் பாடி, ஆடி, வருவதைப் பார்க்கும்போது அது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பேரானந்தமாக இருக்கும். கண்ணபெருமானுக்கு முன்பாக கலிபுருஷன் என்ன செய்வான்? கலி, களி தின்னத்தான் போக வேண்டும்.

எதிர்மறைச் சிந்தனைகளைக்கூட நேர்மறைச் சிந்தனைகளாய் மாற்றிப் பார்த்து இந்த மண்ணும் மனிதர்களும் நிம்மதியாக, சந்தோஷமாக வாழ வேண்டும்.’ஆழ்வாரின் இந்த எண்ணப்பெருக்கை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. நெஞ்சுக்கு நெருக்கமாக ஆழ்வார் வந்து போகிறார்.கண்ணனின் மனதை தொட்டவர்க்கு கலிபுருஷன் தண்டனை கிடையாது; கண்ணனின் கருணைப் பார்வையாய் பெற்றவருக்கு இனி எந்தவொரு கவலையும் கிடையாது; கண்ணனின் திருவடிகளை வணங்குபவருக்கு இந்த மாய உலகத்தின் கஷ்ட நஷ்டங்கள் உண்டாகாது.

கண்ணனின் திரு உருவை நினைப்போருக்கு, கண்ணனின் நாமம் நாளும் நவில்வோருக்கு, கண்ணனை அண்டி சரணடைந்தோர்க்கு, கண்ணனே தானே வந்து  துணை நிற்பான். அந்த மாயக்கண்ணனின் கருணையைப் பெற முயலுவோம் என்று மிகவும் திடமாக ஆணித்தரமாக சொல்கிறார் நம்மாழ்வார். அவரே திருவாய் மொழியில் இன்னொரு பாசுரத்தில் கண்ணனின் பெருமையை ஊரறிய, உலகறியச் சொல்கிறார். மிகவும் ரத்தினச் சுருக்கமான பாசுரம் இது:

கண்ணன் கழுல் இணை
நண்ணும் மனம் உடையீர்!
எண்ணும் திருநாமம்
திண்ணம் நாரணமே.

இதைவிட மிக எளிய முறையில் இனிமையாக யாரால் எடுத்துச் சொல்ல இயலும்? இதனால்தான் திவ்ய பிரபந்தத்தை திராவிட வேதம் என்றும் ஈரத்தமிழ் என்றும் ஆழ்வார்களின் அருளிச் செயல்கள் என்றும் பெரு மகிழ்வோடு கொண்டாடுகிறது பக்தி உலகம்!‘அடியவர்களுக்கு எளியவனான கண்ணபிரானுடைய திருவடிகளை அடையவேண்டும் என்ற மனத்தினை உடையவர்களே! நீங்கள் எண்ணத்தக்க திருப்பெயர் நாரணன் என்பதேயாம். வேறு உபாயம் இல்லை. இதனை மிக உறுதியாக நம்புங்கள்.’இறைவனுடைய திருமுடியை விட திருவடி சம்பந்தம் மிகவும் உயர்வானது. சாதாரணமாக ஒரு வேலை நடக்க வேண்டும் என்றால் ‘அவர் காலை கெட்டியாகப் பிடிச்சுக்கோ.

அவன் காலில் போய் விழு!’ என்றெல்லாம் பலரும் பேசுவதை கேட்டிருக்கிறோம். இகபர வாழ்க்கையில் சிற்றின்பத்திற்காக நிலையில்லாத இந்த மானுட வாழ்க்கையில் கண்டவர்கள் காலில் விழுவதைவிட, கண்ண பரமாத்மாவின் காலில் விழுந்தால் இம்மைக்கும் மறுமைக்கும் அதைவிட பெரிய நிம்மதி, மனத்திருப்தி வேறு என்ன இருக்க முடியும்? கல்லணைக்குப் பக்கத்தில் இருக்கிற திருப்பேர் நகர் - கோயிலடி என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும் - நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் முதன்மையானது, அதிமுக்கியமானது. பெருமாளுக்கு தளிகைப் பிரசாதம், அப்பம்தான். பெருமாளுக்கு அப்பக்குடத்தான் என்றே பெயர்!

‘‘உற்றேன் உகந்து பணிசெய்து உன்பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்’’

- என்று அந்தப் பெருமாளைப் பார்த்து நெஞ்சார உருகுகிறார் ஆழ்வார். மனிதனைப் பாடி பரவசப்படுத்துவது வீண்வேலை என்கிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். சிவபெருமானுக்கு நண்பர் அவர். ‘பொய்மையாளரைப் பாடாதே எந்தை புகலூர் பாடுமின் புலவீர்காள்,’ என்கிறார். ‘அஞ்சுக்கும் பத்திற்கும் கூலிக்கு மாரடிப்பதை விட்டுவிட்டு பரம்பொருளான மகேசனை பாடி பரவசம் அடையுங்கள்’ என்பது பொருள். மேலும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்ன சொல்ல வருகிறார் தெரியுமா?

‘‘இம்மையே தரும் சோறுங்கூரையும்
   ஏத்தலாம் இடர்கெடலுமாம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு
   யாதும் ஐயுறவில்லையே.’’

‘இந்த வாழ்க்கைக்கு வேண்டிய நல்ல உணவு, சிறந்த உடையை அவன் கண்டிப்பாகத் தருவான்! நம் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகிப் போகும். வாழ்வு முடிந்தபின் சிவலோகத்தை ஆளலாம். இதில் எந்த ஐயமுமில்லை,’ என்கிறார், மிகவும் நம்பிக்கையான குரலில்! நம்மாழ்வார், சுந்தரமூர்த்தி சுவாமிகள் வழி நின்று வாழ முற்பட்டால் அங்கே நிம்மதியும், இன்பமும், பரிபூரண அமைதியும், தானே
குடிகொள்ளும்.

- ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்