காமப் பேய்க்கு கந்தர்வனின் மரண அடி!மகாபாரதம் - 79

முகம் துடைத்து, மருந்து போட்டு, கை, கால் பிடித்துவிட்டு, மயிற்பீலியால் விசிறி ஆறுதலாகப் பேசி, பாடி ஒரு சிறுமியைப் போல மாலினி என்கிற திரௌபதியை தூங்க வைத்தார்கள். உடம்பு பதட்டத்தினால் களைப்படைந்திருந்த திரௌபதி அயர்ந்து தூங்கினாள். அங்கே சபை மேற்கொண்டு என்ன செய்வது என்றுத் தெரியாமல் துக்கித்து கலைந்தது. இது நல்லதற்கல்ல என்பதாய் அமைச்சர்கள் பேசிக்கொண்டு கலைந்தார்கள். தன்னால் கீசகனை அடக்க முடியவில்லை என்பது விராட மன்னனுக்கு அவமானமாக இருந்தது. அமைச்சர்கள் தன்னை ஏளனமாக பார்க்கிறார்கள் என்பதாய் தோன்றியது. கொஞ்சம் அதிகமாக அலட்டிக் கொண்டுவிட்டோமோ என்று கீசகன் நினைத்தான். நைச்சியமாக பேச வேண்டிய பெண்ணிடம், விராட மன்னன் முன்பு அலட்டலாக நடந்து கொண்டுவிட்டோமோ என்று நினைத்தான்.

ஆனாலும், மாலினியை நினைக்க அந்த உருவம் அவன் மனதை மயக்கியது. உடையின்றி சம்போகம் செய்கின்ற ஆத்திரம் அதிகமாகியது. அவன் மறுபடியும் எழுந்து சுதேஷனையின் அந்தப்புரத்திற்கு போனான். அவன் வருவதைப் பார்த்து அந்தப்புரத்தின் அறையிலிருந்து வேறு இடத்திற்கு மாலினியை அசையாது தூக்கிக் கொண்டுபோய் பணிமகளிர் மாற்றினார்கள். வந்தவன் மாலினியைத் தேடுவான் என்று பயந்தார்கள். தெரியாது என்று சொல்லவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்கள். ஆனால், வந்தவன் சுதேஷனையைத் தேடினான்‘‘என்ன பணிப்பெண் வைத்திருக்கிறாய்? ஏறிட்டுப் பார்த்தால் சரி என்று சொல்ல வேண்டியவள் இத்தனை விரட்டியும் மறுக்கிறாளே. எனக்கு எப்படியும் அவள் வேண்டும்.

என்னால் என் காம வேகத்தை தாங்க முடியவில்லை. உன் புருஷனுக்கு காவலாக இருந்து என்ன புண்ணியம். எனக்கு என்ன உதவி செய்திருக்கிறீர்கள். ஒரு பெண்ணை எனக்கு அனுப்ப முடியாதா. அதுவும் பணிப்பெண்ணைத்தானே கேட்கிறேன். உன் பெண்ணையா கேட்கிறேன்” என்றெல்லாம் கூவத் துவங்கினான். சுதேஷனை அவனை அதட்டி அடக்கினாள். ‘‘நீ வீட்டிற்குப் போ. நாளைக்கு ஏதாவது பண்டிகை, அல்லது பூஜை என்றுச் சொல்லி மதுவையும், மற்ற பட்சணங்களையும் தயார் செய். என் தம்பி வீட்டில் பூஜை. மது கொடுப்பான் போய் வாங்கி வா என்று பாத்திரம் கொடுத்து அனுப்புகிறேன். அப்பொழுது அவளை பயன்படுத்திக் கொள். மற்றபடிக்கு இந்த இடத்தில் வந்து ரகளை செய்யாதே” என்று கட்டளையிட்டாள்.

தன்னுடைய அந்தப்புரத்தில் அலறலும், அழுகையும் வரக்கூடாது என்பது மட்டுமல்லாமல் ஒருவேளை அவளுடைய புருஷர்கள், கந்தர்வர்கள் வந்தால் என்னையும் சேர்த்தல்லவா அறைவார்கள் என்று பயந்தாள். கந்தர்வர்களின் மனைவி மாலினி என்பதை நம்பினாள். அவன் ஒப்புக் கொண்டான். ‘‘நாளை மாலை அவளை என்னிடம் அனுப்பு. நல்ல மதுவகையை தயார் செய்து வைக்கிறேன்” என்று சொல்லி, விலகிப் போனான். நடுநிசியில் உறக்கம் கலைந்து திரௌபதி எழுந்திருந்தாள். பீமனை நோக்கிப் போனாள். சமையல் அறையில் பீமன் படுக்கையில் கால் நீட்டிப் படுத்திருந்தான். தொலைவிலிருந்து திரௌபதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.  எப்பேர்பட்ட உருவம்.

எவ்வளவு தைரியம். எத்தனை அருமையான மல்யுத்த வித்தை. கீசகன் ஒரு பிடிக்கு காண்பானா. இவன் இருக்க, நான் ஒருவனால் எட்டி உதைபட்டு வாயில் அடிபட்டேனே. இது என் தலையெழுத்தா, அல்லது இவனுக்குண்டான அகௌரவமா என்று வருந்தினாள். அகலமும், உயரமுமான தன் புருஷனையே திரௌபதி காதலுடன் நோக்கினாள். மெல்ல அருகே வந்தாள். அருகே உட்கார்ந்து கொண்டாள். பீமன் தூங்கத் துவங்கியிருந்தான். மெல்ல அவனைத் தழுவிக் கொண்டாள். கன்னத்தில் முத்தமிட்டாள். ‘‘என் புருஷனே எழுந்திரு,” என்று கொஞ்சினாள். உறக்கத்தை உதறிவிட்டு பீமன் எழுந்தான். அவளை கண்ணோடு கண் பார்த்தான். வாய் தடவினான். எந்த இடத்தில் உதடு காயப்பட்டு தொந்தரவாக இருந்ததோ, அந்த இடத்தை வருடிக் கொடுத்தான்.

துக்கம் தாங்காமல் மெல்ல இறுக்கி அணைத்துக் கொண்டான். நெற்றியிலும், கன்னங்களிலும் முத்தமிட்டான். முதுகு தடவினான். அவள் புருஷனின் அணைப்புத் தாங்காமல் விசும்பத் துவங்கினாள். பீமனுக்கும் கண்கள் கலங்கின. வேதனைப்பட்ட புருஷனும் மனைவியும் ஒருவரை ஒருவர் இறுகப் பற்றியிருந்தார்கள். ஏன் காலம் இப்படி சித்ரவதை செய்கிறது. அடித்து கொல்ல முடியாதபடி ஏன் தர்மம் கையைப் பூட்டியிருக்கிறது. இப்பொழுது வீறுகொண்டு எழுந்தால் மறுபடியும் பன்னிரண்டு வருடம் வனவாசம். பிறகு ஒரு வருடம் அஞ்ஞாத வாசம். பிறகு ராஜய்பரிபாலனம் இல்லாது போனாலும் போகும். இந்த நேரம் தான் யார் என்று காட்டக் கூடாது. அமைதியாகத்தான் இருக்கவேண்டும். நான் யார் தெரியுமா, இவள் யார் மனைவி தெரியுமா, யார் மீது கை வைத்தாய் தெரியுமா என்று சொல்லிச் சொல்லி அடிக்க முடியாது.

வேறு நேரமாக இருந்தால் சுவரோடு தேய்த்துச் சித்ரவதை செய்திருக்கலாம். இப்போது முடியாது, கூடாது. தருமர் கட்டை விரலால் அழுத்தி அமைதி என்று சொல்கிறார். இத்தனையும் நேரே பார்த்துக் கொண்டு எப்படித்தான் அந்த மனிதரால் அமைதியாக இருக்க முடியுமோ. அவருக்கு பத்தடி தொலைவில் தான் திரௌபதி படுத்துக் கிடந்தாள். அவள் முகத்தில்தான் அவன் புறங்காலால் அடித்தான். உலகத்தில் ஒரு புருஷனுக்கு இதைவிட கொடுமையான ஒருநேரம் இருக்க முடியுமோ. இருந்ததே, தருமர் அதை தாங்கினாரே. அவன் முகத்தை பொத்திக் கொண்டான். கண்களை துடைத்துக் கொண்டான். திரௌபதியை வாரி மடியில் போட்டுக் கொண்டு நெஞ்சோடு நெஞ்சாக சேர்த்து அவள் தலையை கோதி விட்டான். ‘‘என்ன தலையெழுத்து இது பீமா, நாம் ஏன் என்ன காரணத்தினால் இப்படி சித்ரவதைப் படுகிறோம்.

எனக்காக நீ தவிக்கிறாய் என்பதை நான் ஒரு பார்வையில் கண்டுகொண்டேன். அத்தனையும் மீறி அவர் அடக்கமாக இருக்கிறார் என்பதை அவர் பார்வையில் கண்டுகொண்டேன். ஆனால் ,பீமா இப்படித்தான் நாம் காலாகாலம் இருக்க வேண்டுமா. நாம் யார் என்று காட்டவே கூடாதா. மறுபடியும் பன்னிரண்டு வருடம் வனவாசம் வந்து விடுமோ என்ற பயத்தால்தான் என்னை புறக்கணித்தீர்களா.ஒருவேளை அதே இடத்தில் கீசகன் என்மீது பாய்ந்து என்னை இம்சிக்கத் தொடங்கியிருந்தாலும் நீங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பீர்களா, விசிறச் சொன்னாலும் விசிறுவீர்களா. அடுத்த பன்னிரண்டு வருடம் வனவாசம் வேண்டாம் என்பதால் நான் செத்துத் தொலைய வேண்டுமா.

என்ன பீமா, என்ன நடக்கிறது நம்மைச் சுற்றி. நாம் ஏன் இப்படி இருக்கிறோம். நம் வடிவுகள் எங்கே. நம் யுத்த மூர்க்கம் எங்கே. உன்னுடைய ஒரு அடிக்கு தாங்குவானா கீசகன். உயிருக்கு உயிராய் என்னை நேசித்த ஐந்து புருஷர்கள் இருக்கும்போது  இன்னொருவன் தலைமுடியைப் பற்றி இழுக்கும்படியாக நான் இருக்கிறேன். ஒரு அரசவையில் அவஸ்தைப்பட்டது போதாதா. ஜெயத்ரதனின் நண்பர்களால் சுற்றி வளைத்து இழுத்து வந்தது போதாதா. ஒருவன் தேரில் ஏறிக்கொண்டு அவனுடைய காம வார்த்தைகளை கேட்டுக் கொண்டு வந்த கேவலம் போதாதா. அந்த ஜெயப்ரதனை அடித்தீர்கள். அவமானப்படுத்தினீர்கள். ஆனால், கீசகனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

‘‘இது மட்டுமல்ல பீமா. எனக்கு என்ன கொடுமைகளெல்லாம் நேருகிறது என்பது உனக்குத் தெரியாது. மல்யுத்த போட்டிற்கு அனுப்புகிறான். வெளிதேசத்து மல்யுத்த வீரர்களுடன் நீ சண்டையிடலாம், ஆனால், நான் பார்க்கக்கூடாது. தலைகுனிந்து உட்கார்ந்திருந்தேன். அடுத்ததாக விலங்குகளை ஏவுகிறார்கள். ஒரு சிங்கம் உன்மீது பாய்ந்தது. நான் ஐயோ என்று எழுந்திருந்தேன். அருகிலுள்ள சுதேஷனை கேலி செய்கிறாள். சிங்கம் செத்துவிட்டது. இனி யானை வரப்போகிறது. பீமன் என்ன செய்யப் போகிறான் யானையால் சாகப் போகிறான். அல்லது முடமாகப் போகிறான் என்று சுதேஷனை வாய்விட்டுச் சொல்ல, இல்லை அவரால் யானையை கொல்ல முடியும் என்று நான் சொல்ல, எல்லோரும் என்னை வியப்போடு பார்க்கிறார்கள்.

சுதேஷனை இவள் ஏதோ ஒரு தவறான பெண்மணி என்று என்னைச் சொல்கிறாள். மற்றவர்கள் அப்படியா, என்பதாகப் பார்க்கிறார்கள். இதைவிட அவமானம் ஒரு பெண்ணுக்கு உண்டா. நான் யார் என்று என்னை வெளிப்படுத்த முடியாத ஒரு சூழ்நிலையில் இருபத்திநாலு மணிநேரமும் கழிக்கிறேன். ஒரு அவஸ்தையில் இருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் உங்கள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது சுதேஷனை என்ற இரண்டுங்கெட்டான் பெண்மணியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவள் ஏவலுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன். அவள் அடுத்தது என்ன சொல்வாளோ என்று பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ‘‘இன்று மாலை கீசகன் மறுபடியும் அரண்மனைக்கு வந்திருந்தான். இவள் அவனிடம் அனுப்புவாளோ என்று பயந்திருந்தேன். நல்லவேளை பணிமகளிர்கள் என்னை வேறு இடத்திற்கு கொண்டு போய் விட்டார்கள்.

அவள் வேறு ஏதோ சமாதானம் சொல்லி அவனை அனுப்பி விட்டாள். எனக்கு செத்துப் போகலாம் போல் இருக்கிறது. ஆனால், அதுவும் தவறு. ஏதேனும் ஒரு காலகட்டத்தில் நமக்கு விடிவு வராதா பீமா. இல்லை இனி இப்படித்தான் இருப்போமா” என்று சொல்ல, பீமன் அவளை இழுத்து எதிரே உட்கார வைத்தான். ‘‘பிரியமானவளே, நான் சொல்வதைக் கேள். பெரியவரும், மிகுந்த அறிவாளியும், நமக்கு நன்மை செய்யக் கூடியவருமான தருமர் என்னை அடக்கி வைத்திருக்கிறார். அந்தநேரத்தில் அவர் மீது கோபம் வந்தாலும் இங்குவந்து உட்கார்ந்த பிறகு அவர் செய்தது எவ்வளவு சரி என்று புரிகிறது. அத்தனை பெரிய வேதனையை அவர் கண்முன்னே பார்த்துக் கொண்டு அமைதியாக இருப்பது அவருடைய திட சித்தத்தை, விரத மேன்மையை காண்பிக்கிறது.

பொறுமை என்பது மிகக் கடுமையான விரதம். அந்த விரதத்தை தருமர் மிக அற்புதமாக கையாண்டிருக்கிறார். நம்மையும் இருக்கச் செய்திருக்கிறார். பொறுமையாக இரு. நிச்சயம் விடிவு கிடைக்கும்.‘‘அவனை நாளை நடனச் சாலைக்கு வரச் சொல். சுதேஷனையின் இடத்திற்கும் வேண்டாம். கீசகனுடைய அரண்மனைக்கும் வேண்டாம். வேறு எவரும் பார்க்காத நடனச் சாலைக்கு வரச் சொல். அது நல்லது என்று சொல். மற்றவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன். அங்கு உனக்காக போய் நான் உட்கார்ந்து இருக்கிறேன். அவனை துவம்சம் செய்துவிட்டு வருகிறேன்” என்று பல்கடித்துக் கொண்டு கூறினான். கணவனின் கண்களில் தோன்றிய ரௌத்ரத்தையும், உடம்பு முறுக்கையும், பல் கடிப்பையும், ஆக்ரோஷத்தையும் பார்த்து அவள் அவன் கன்னங்களில் முத்தமிட்டாள்.

விழுந்து வணங்கினாள். ‘‘என் தெய்வமே, நீ இருக்கும் போது எனக்கென்ன பயம்” என்று சொல்லி அவனை வலம் வந்து வெளியேறினாள். உடம்பெல்லாம் கழுவி விட்டது, மனம் சுத்தமாயிற்று. விடியும் வேளையை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தாள். பழிக்கு பழி, அடிக்கு அடி, உதைக்கு உதை, ரத்தத்திற்கு ரத்தம் என்ற சினம், சுருண்ட பாம்பாய் உள்ளே இருந்தது. பாம்பு சினத்தினுடைய குறியீடு. அந்த சினம் உள்ளுக்குள் சுருண்டு இருப்பது என்பது மனிதனின் முயற்சி. அவனின் வெற்றி. மனைவி சமாதானமானாள் என்பதை உணர்ந்த பீமன் சந்தோஷமானான். சொல்லுக்கே அமைதியாகி நம்பிக்கையுடன் மனைவி திரும்பி விட்டாள். கீசகனை வதைக்கின்ற விதத்தில் வதைத்தால் இன்னும் மகிழ்ச்சியாவாள்.

அவள் முதுகு தடவியதும், அணைத்துக் கொண்டதும், கன்னத்தோடு கன்னம் வைத்ததும், முத்தமிட்டதும் எத்தனை அழகு. எவ்வளவு அற்புதம். அவள் உதடு காயம் நினைக்கும் போது கோபம் பொங்கியது. ஊரான் மனைவியை உல்லாசத்திற்கு அழைப்பது உனக்கு பொழுதுபோக்கா, விருப்பமான ஒன்றா. வாழ்ந்தால்தானே இந்த விருப்பம். இருந்தால்தானே இந்த செய்கை. உன்னை இல்லாது செய்கிறேன் என்று உள்ளுக்குள் கருவிக் கொண்டான். உடனே கோபப்படாது அமைதியாய், இன்றல்ல நாளை இரவு நடுநிசியில் என்று அந்த விஷயத்தை ஒத்திப் போட்டது அவன் கோபத்தை ஒரு அழகான வடிவமாக்கியது. எப்படி வதைக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளுக்குள் வந்தது.

கீசகன் பலசாலியாம். மல்யுத்த வீரனாம். வேலை தெரிந்தவனாம். என் ஒரு அடிக்கு காணுவானா. பீமன் கீசகனை மனதால் பலமுறை தாக்கினான். கீசகன் நிலைகுலைந்து விழுந்தது அவன் மனதில் தோன்றியது. தேவையற்று சிரித்தான். கண் சிமிட்டினான். ஓங்கி சுவரில் குத்தினான். உடம்பு பலத்தைவிட மனதின் ஆவேசம்தான் எதிரியை வீழ்த்த வல்லது என்பது உலகத்தார் அறிந்த பாடம். ‘‘அடியே, மாலினி நீ இங்கிருந்து கிளம்பி கீசகனுடைய அரண்மனைக்குப் போய் இன்றைய பூஜையில் நிவேதனம் செய்யப்பட்ட மதுவை வாங்கி வா,” துர்புத்தி கொண்ட சுதேஷனை மாலினி யார் என்று தெரியாமல் கட்டளையிட்டாள். தம்பியினுடைய ஆவேசம்தான் அவள் மனதில் இருந்தது. அவனுக்கு பயந்தாள். இவள் பணிப் பெண்தானே என்ற அலட்சியமும் இருந்தது.

அவள் வேறு யாரோ என்ற நினைப்பு இருந்தாலும் தம்பி விரும்பிய பிறகு யாராக இருந்தாலும் அவனுக்கு அவளை அனுப்ப வேண்டும் என்ற அசட்டுத்தனம் இருந்தது. தெளிவாக முழுமையாக சிந்திப்பது என்பது எல்லோராலும் இயலாது. தெளிவு வரும்போதே குழப்பமும் வந்துவிடும். பாதி பாதியாக தெளிவு வருவது எந்த செயலுக்கும் பயன்படாது. ஒரு அறைகுறை தெளிவோடு, இவள் பெரிய இடத்து பெண் என்ற புரிதலோடு சுதேஷனை இருந்தாலும் என்ன செய்கிறோம் என்ற தெளிவில்லாது அவள் மாலினியை கீசகனிடம் அனுப்பினாள்.‘அம்மா, உங்களுக்கு அவர் யார் என்று தெரியும். அவர் என்ன விரும்புகிறார் என்று தெரியும். என்னைப் பற்றியும் நீங்கள் உயர்வாகத்தான் பேசியிருக்கிறீர்கள். நான் பேசியதை நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். எனக்கு ஐந்து கணவர்கள் உண்டு. அவர்கள் கந்தர்வர்கள். கோபம் மிக்கவர்கள்.

 அவர்கள் பாதுகாப்பில் நான் இருக்கிறேன். என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என்று சொன்னதை நீங்கள் நம்பினீர்கள். அவ்விதமே என்னை நடத்தினீர்கள். நான் கேட்ட இரண்டு கட்டளைகளையும் செவ்வனே நிறைவேற்றினீர்கள். பிறர் உண்ட உணவை என்னை உண்ணச் சொன்னதில்லை. எவர் காலையும் கழுவச் சொன்னதில்லை. என்னை கம்பீரமான ஒரு பணிப் பெண்ணாகத்தான் நீங்கள் நடத்தினீர்கள். ஆனால், இன்றைக்கு மோகமுற்றி தவிக்கின்ற உங்கள் தம்பியிடம் என்னை அனுப்புகிறீர்களே, அது நல்லதா. அது எனக்கு கெடுதல் தராதா. எனக்கு கெடுதல் ஏற்படுவது உங்களுக்கு கெடுதல் ஏற்படுவது போல என்பது உங்களுக்குத் தெரியாதா?” மாலினி பவ்யமாகவே கேட்டாள்.

‘‘இதென்ன அதிகப்பிரசங்கித்னமான பேச்சு. நீ பணிப்பெண்தானே. போய் வாங்கி வா என்றால் வாங்கி வரவேண்டும். அவ்வளவுதானே. இதற்கு மேல் என்ன உன்னைப் பற்றி அவ்வளவு உயர்வாகச் சொல்கிறாய். அப்பொழுது இங்கென்ன வேலை. நீ போகலாமே. உன்னை அரசி, மிகப் பெரிய பட்டமகிஷி என்று நினைத்தால் அந்த மாதிரி இடத்திற்குப் போ. இந்த இடத்தை விட்டு கீழே இறங்கி வெளியே போனால் உனக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. கீசகன் உன்னை வாரிக் கொண்டு போவான். தடுப்பாரில்லை. கேட்பாரில்லை. நான் ஒருத்திதான் உனக்கு பாதுகாப்பு. எனவே, என் சொல்படி கேள். போய் மதுவை வாங்கி வா. அது போதும்.”‘‘அங்கு போக நான் பிரியப்படவில்லை.”‘‘உன் பிரியம் பற்றி எனக்கு எந்த அக்கறையும் இல்லை.”
‘‘அவர் என்னைத் தொந்தரவு செய்வார். அது உங்களுக்கு கெடுதலாக முடியும்.”

‘‘இந்தக் கதையெல்லாம் வேறு எங்காவது போய் சொல். கீசகனைப் போய் கொண்டாடு என்றா சொன்னேன்? மது வாங்கி வா என்றுதான் சொன்னேன். மற்றபடி உன் தலையெழுத்துப்படி நடக்கட்டும். போ உடனே” என்று அதட்டினாள். உள்ளிருந்து கோபம் பொங்கியது. தன் பணிப்பெண்ணான சாதாரண முகத்திலிருந்து மாறுபட்டு கால் உதைத்து இடுப்பில் கை வைத்து விரல் நீட்டி ஜாக்கிரதை என்று சொல்ல, அவள் வேகமானாள். தருமரை நினைத்துக் கொண்டாள். மிகுந்த பலசாலியான பீமன் அமைதியாக இரு, பொறுமையாக இரு. தருமர் எனக்குச் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன் என்றது ஞாபகம் வந்தது. அமைதியானாள்.‘‘சரி அம்மா. இனி நடக்கப் போகும் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

நீங்களே பொறுப்பு. நீங்களே உங்கள் இனத்திற்கு அவமானத்தையும், அசிங்கத்தையும் தேடிக் கொள்கிறீர்கள். பாத்திரத்தை எடுத்துக் கொண்டு போகிறேன்” என்று சொல்லிவிட்டு, சுதேஷனைக்கு அருகில் இருந்த, திருகு மூடியோடு கூடிய தங்கப் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு தெருவில் இறங்கினாள். மெல்ல கீசகனுடைய இடம் நோக்கி நடந்தாள். அரண்மனை வாசலில் வந்து நின்றாள். அவள் வந்திருக்கிறாள் என்று தெரிந்ததும் கீசகன் பரபரப்படைந்தான். மற்றவர்களை விலக்கினான். உள்ளே வரச் சொன்னான். நடுக்கூடத்தில் நின்றாள்.‘உங்கள் தமக்கையார் மது வாங்கி வரச் சொன்னார்.”‘‘அதற்கென்ன தருகிறேன். நான் உன்னை கேட்டது...”‘‘ஞாபகம் இருக்கிறது.

இந்த அரண்மனையில் படி ஏறி மது வாங்கத்தான் வந்திருக்கிறேன். மற்றபடி இங்கு தாமதம் செய்தால் என் பெயர் கெட்டுப் போய்விடும். பணிமகளிருக்கு நடுவே நான் கேவலமாக பேசப்படுவேன். எனவே, இப்படி பட்டப்பகலில் என்னை அழைத்து சந்தோஷிப்பதை விட ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு நீங்கள் வந்தால் அங்கு சந்தோஷமாக இருக்கலாம்.”‘‘ஆமாம், அது நன்றாகத்தான் இருக்கிறது. இப்படி வருவது உனக்கு இடைஞ்சல் என்றால் நான் அதற்கு வற்புறுத்தவே மாட்டேன். எங்கு வரலாம் என்கிறாய்?”‘நடனச் சாலைக்கு வந்து விடுங்கள். அங்கு மாலை நேரம் பெண்கள் நடனமாடிக் கொண்டிருப்பார்கள். இரவு வர விலகிவிடுவார்கள். அந்த இடம் ஆள் அரவமற்று இருக்கும்.”

‘‘நல்லது. அங்கு மிகப்பெரிய கட்டில் ஒன்று உண்டு. அது நமக்கு சௌகரியமாக இருக்கும். நீ நடனசாலைக்கு வந்துவிடு. நானும் வந்து விடுகிறேன்.” என்று சொல்லி, அவளை மதுவோடு அனுப்பி வைத்தான். மதுவை கொண்டு வந்து சுதேஷனையிடம் கொடுத்து விட்டு, சுதேஷனையை ஏறிட்டும் பார்க்காமல் நடந்து போனாள். என்ன நடந்தது என்று கேட்க சுதேஷனைக்கு தைரியம் இல்லை. திரௌபதியும் எதுவும் சொல்லவில்லை. அன்று மாலை நடனச் சாலையில் பெண்கள் ஆனந்தமாக நடனமாடிக் கொண்டிருந்தார்கள். அர்ஜுனன் அவர்களுக்கு நாட்டியத்தில் முக்கியமானப் பகுதியை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஒட்டுமொத்தமாய் ஐம்பது பேரும் மிகச் சரியாக அசைந்து ஆடி அற்புதம் காட்டினார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கைதட்டி ரசித்தார்கள்.

‘ஆஹா ஆஹா’ என்று குரல் எழுப்பினார்கள். அர்ஜுனனைப் பார்த்து அற்புதம் என்று சொன்னார்கள். பிருங்கன்னளை என்ற பெயரில் உள்ளன்ன அர்ஜுனன் அவர்கள் வார்த்தையை ஏற்றான். பெண்களை தலைதடவி முத்தமிட்டு அனுப்பி வைத்தான். அந்த நடனப் பெண்மணிகள் அர்ஜுனன் காலைத் தொட்டு வணங்கி, இப்படி ஒரு நடனம் நாங்கள் ஆடியதேயில்லை என்று முழு பூரிப்போடு விலகினார்கள். கடைசியாக பிருங்கன்னளை என்ற அர்ஜுனனும் வெளியேறினான். இரவு வந்தது. நடனசாலை இருட்டாயிற்று. மாலையிலிருந்தே குளித்து விதம் விதமான தைலங்களுடன் தன்னை அலங்கரித்துக் கொண்டு உடம்பு முழுவதும் வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு நன்கு உடுத்திக் கொண்டு , முத்துமாலைகளை போட்டுக் கொண்டு அவளுக்கு கொடுப்பதற்கு சிறிய தங்க மூட்டையை எடுத்துக் கொண்டு தலைவாரிக் கொண்டு நெற்றியில் திலகமிட்டு பூக்கூடையை கொண்டு வரச் சொல்லி,

அதை தோளில் மாட்டிக்கொண்டு தேர் ஏறி நடனச் சாலையில் இறங்கினான். இருட்டு வேளையில் உள்ளே புகுந்தான். தேரை அனுப்பி விட்டான். உள்ளே புகுந்து கதவு திறந்து சிறிய பந்தத்தை ஏற்றி மெல்ல கட்டிலுக்கு அருகே வந்தான். பூக்களை கட்டிலில் இறைத்தான். வாசனை திரவியங்களை தெளித்தான். நறுமணம் கமழும் தூபப் புகையை ஏற்றி வைத்தான்.இரண்டு மூன்று பக்கங்களில் அகல் விளக்குகளையும், அங்கு அழகிய கண்ணாடிகளையும் நிற்க வைத்தான். ஒரு மயக்கமான சூழலை அந்த கட்டில் கொடுத்தது. ஒரு பெண்மணி ஆடை இன்றி அமர்ந்தால் நன்கு தெரிய வேண்டும் என்ற நினைப்போடு இன்னும் இரண்டு தீபங்களை ஏற்றினான். அந்த மாலினி வெட்கப்பட்டால்...? அந்த வெட்கமும் தெரிய வேண்டுமே என்று இன்னொரு தீபமும் ஏற்றினான். ஆறேழு தீபங்களுக்கு நடுவே அந்தக் கட்டில் ஜொலித்தது.

உள்ளும் புறமும் தவித்தான். இன்னும் யாரும் வரக்காணோமே என்றான். மெல்ல கதவு திறக்கும் சத்தம் கேட்டது. தூரத்தே கட்டிலில்  வெளிச்சம் பரவி இருப்பது தெரிந்தது. புடவை அணிந்த ஒரு உருவம் தெரிந்தது. என்ன இத்தனை விளக்குகள். அணைத்து விடுங்கள், அணைத்து விடுங்கள் என்று கீச்சுக் குரல் கேட்டது. மாலினியின் உத்தரவு இது என்று புரிந்து கொண்டு கண்மூடித்தனமாக அவன் கட்டிலை நோக்கி ஓடினான். எல்லா விளக்குகளையும் அணைத்தான். அந்த தீப்பந்தத்தையும் அணையுங்கள். யாரேனும் பார்த்தால் என்ன ஆகும் என்று கடிந்து கொள்ள, அவன் தீப்பந்தத்தையும் அணைத்தான்.

கடும் இருட்டு சூழந்தது. யார் எங்கே நிற்கிறார்கள் என்றுகூடத் தெரியவில்லை. முன் நெற்றியை பிடித்தால்கூட அந்த மயிர் கற்றை அந்த இருட்டில் தெரியாது. அவ்வளவு கடுமையான இருட்டு. அவன் யார் வரப் போகிறார்கள் என்றுப் பார்க்க, யாரோ பூனை போல் நகர்வது தெரிந்தது. கட்டில் அசைந்தது. யாரோ கட்டிலில் உட்கார்ந்தது தெரிந்தது. ஒரு உருவம் நாணி தலைகுனிந்து இருப்பது அந்த இருட்டில் வெறும் கோடாகத் தெரிந்தது. கீசகன் அருகே வந்தான். தோளில் கை வைத்தான். உடம்பு சில்லென்று இருந்தது.‘‘வந்து விட்டாயா சைந்தரி. மிக்க சந்தோஷம்.

என்னுடைய விருப்பத்திற்கு நீ ஈடு கொடுக்கப் போகிறாய் என்பதை நினைக்க எனக்கு உடம்பு ஆவேசமடைகிறது. உனக்கு என்ன வேண்டும் சொல். நான் ஒரு தங்க மூட்டை கொண்டு வந்திருக்கிறேன் அது போதுமா அல்லது உன்னுடைய விருப்பம் என்ன, எது சொன்னாலும் நிறைவேற்றுவேன். என்னுடைய விருப்பத்தை ஏற்று இங்கு வந்தது சந்தோஷம். உன்னை அடித்தது தவறு. நீ வேண்டுமென்ற ஆவேசத்தில் அடித்து விட்டேன். தயவுசெய்து மன்னித்து விடு. என்னைத் தழுவிக் கொள். தயவுசெய்து என்னைத் தழுவிக் கொள். உன்னுடைய தழுவலால் என் வேகத்தை மட்டுப்படுத்து. நான் பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன்,’’ என்று உளறத் துவங்கினான்.

(தொடரும்)

- பாலகுமாரன்