மனக்குழப்பமெல்லாம் தீர்த்தருளும் மகாதேவன்!வடகண்டம்

காவிரியின் தென்கரைத் தேவாரத் தலங்களுள் ஒன்று வடகண்டம். திருஞான சம்பந்தரால் பாடப்பெற்றது. தொன்மைக் காலப் பெயர் - கரவீரம். இடைக்காலத்தில் கரையபுரம் என்றும் இவ்வூர் வழங்கப்பட்டு வந்ததாம். காவிரியின் கிளை நதியான வெட்டாற்றின் கரையில் கன கம்பீரமாக அமைந்துள்ள ஆலயம். ஜன சந்தடியற்ற சிற்றூர் என்பதால் கோயிலின் பூரண அமைதி மனதுக்கு சுகமளிக்கிறது. ஊர்தான் சிறிதே தவிர, கோயில் பிரமாண்டமானது. நெடிதுயர்ந்த மதில்கள் கொண்டது. தலத்திற்குக் கரவீரம் எனப் பெயர் வரக் காரணம் - அரளிப் பூ! இதற்கு சமஸ்கிருதத்தில் கரவீரம் என்று பெயர். அதுதான் இக்கோயிலின் தலவிருட்சம். அதைக் கொண்டு, ஊருக்கே பெயர் அமைந்து விட்டதுதான் ஆச்சரியம்! அரளியை அலரி என்றும் சொல்கிறார்கள்.

ராஜகோபுரத்தின் வாசலிலேயே திருக்குளம் அமைந்திருக்கும் அழகிய ஆலயங்களுள் இதுவும் ஒன்று. இதற்கு அனவரத தீர்த்தம் என்று பெயர். என்றுமே வற்றாதது என்று பொருள். இத்தலத்து ஈசனை, சம்பந்தர் பெருமான், ‘கண்ணீனான் உறையுங் கர வீரத்தை நண்ணு வார் வினை நாசமே!’ என்று பாடி போற்றுகின்றார்! இங்கே கோயில் கொண்டுள்ள ஈசன் கர வீரேஸ்வரரை நாடித் தொழுவோரின் பாபங்கள் எல்லாம் நாசமாகி, புத்தொளி மிக்க புது வாழ்வு சித்திக்கும் என்கிறார், சம்பந்தர். அரளிக் காடாக முன்னொரு காலத்தில் இவ்வூர் விளங்கிய போது, பிரம்மன் இவ்வனத்தில் ஈசனை முன்னிட்டு தவம் இருந்தார். பலனாக இறைவனின் திருக்காட்சி பெற்றார். அதனால் இக்கோயில் நாதருக்கு பிரம்மபுரீஸ்வரர் என்றும் பெயருண்டு.

தமிழில் இவரைக் கரவீர நாதர் என்று அழைத்து மகிழ்கின்றனர். கவுதம மகரிஷி இந்தக் கரவீரநாதரை நாள்தோறும் துதித்துக் கடும் தவம் இயற்றி, நிறைவாக இறைவன் திருவருள் கூடியதால், இங்கேயே வாழ்ந்து முக்தி பெற்றார். அப்போது அவரிடம் கவுதம ரிஷி ‘நான் இத்தலத்திலேயே என்றென்றும் தங்கி தினம்தோறும் தங்களைப் பூஜித்து வழிபடும் பாக்கியத்தை அருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். ஈசன் அவ்வாறே அருள, கவுதம ரிஷி இத்தலத்திலேயே ஜீவ சமாதி அடைந்தாராம். இன்றும் அவர் அன்றாடம் அரூபமாக வந்து இறைவனுக்கு வழிபாடு நடத்தி விட்டுச் செல்கிறார் என்கிறார்கள். உத்திர நட்சத்திரக்காரர்களுக்கு உரிய பரிகாரத் தலம் இது. குறிப்பாக அதர்வண வேதத்திற்குரிய தலம் என்கிறார்கள்.

ஆகாயத்திலிருந்து பிரம்மனால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம் இது என்பது ஐதீகம். தென்னாட்டில் உள்ள தேவாரத் தலங்களுள் இது 91வது தலம். இக்கோயிலின் பெரும் சிறப்பு, மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனி! இறைவனின் சந்நதியில் நாம் நின்று வணங்கும்போது அந்த பிரமாண்ட சிவலிங்க ரூபம், நம்மை பிரமிக்கச் செய்து, சற்று நேரம் உலக நினைவுகளில் இருந்து நம் உணர்வுகளை பிரித்து எடுத்துவிடுகிறது. வியப்பு, சிலிர்ப்பு என மனம் பலவித பக்தி உணர்வுகளில் நீந்துவதை உணர முடிகிறது. மனப் பிரச்னைகளை தீர்க்கும் திருச்சந்நிதானம் இது என்பர். கவலை, குழப்பம், சஞ்சலம், அச்சம், பகை உணர்வு, பழிவாங்க துடிக்கும் வேகம் என எல்லாவித மனப் பிரச்னைகளையும் போக்கி, நிர்மல நிலையை உண்டாக்கி உள்ளத்தையும், உடலையும் அமைதியாக்கிவிடும் சாந்நித்தியம் நிறைந்த திருச்சந்நிதானம் இது.

அம்பாள் இங்கே ஈசனுக்கு வலதுபக்கத்தில் எழுந்தருளி உள்ளதும் தனிச் சிறப்புதான். அம்பாளின் பெயர் பிரத்தியக்ஷ மின்னம்மை. திருநாவுக்கரசர் இக்கோயிலை வைப்புத்தலமாக வைத்துப் பாடியுள்ளார். அமாவாசை தோறும் இக்கோயிலில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் குழுமுகிறார்கள். அன்று கவுதம மகரிஷியோடு வேறு பல ரிஷிகளும் அமானுஷ்யமாக வந்திருந்து இத்தலத்து ஈசனை வழிபடுவதாக ஐதீகம். அன்று இக்கோயிலில் சிறப்பு அபிஷேகமும் விசேஷ ஆராதனையும் நடைபெறுகின்றன. இங்குள்ள தல விருக்ஷம் செவ்வரளிக்கு அபிஷேக நீர்வார்த்து வழிபடுவோருக்கு, அம்பாள் கருணையால் திருமணத் தடைகள் விலகி, விரைவில் திருமணம் நடந்தேறுகிறதாம்.

அம்பாளே இங்கு மணப்பெண் கோலத்தில்தான் காட்சி அருள்கிறாள். அம்பாள் திருமேனியும் மிகப்பெரியது, பிரமிப்பூட்டுவது. கோஷ்டத்தில் தக்ஷிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் அவரவருக்கு உரிய பகுதிகளில் கொலுவிருக்கிறார்கள். பிரமாண்டமான உட்பிராகாரம். அதில் விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், சனீஸ்வரன் ஆகியோர் தனித்தனி சந்நதி கொண்டிருக்கிறார்கள்.‘கங்கையான் திகழும் கரவீரத்து எம் சங்கரன் கழல் சாரவே’ என்று சம்பந்தரும், ‘எருக்கர வீரஞ் சேர் எழில் வேணி கொண்டு திருக்கர வீரஞ் சேர் சிறப்பே’ என வள்ளலாரும் (அருட்பாவில்) பாடிப்போற்றும் இத்தலத்து ஈசனை வணங்கி விட்டு வெளியே வரவே மனசில்லை என்பது அனுபவபூர்வமான உண்மை. மீண்டும் தரிசிக்க ஆவல் கொண்டு உள்ளே செல்வதைத் தவிர்க்க இயலவில்லைதான்.

ஈசனின் பிரமாண்ட திருவுருவே நம்மை அப்படி ஈர்த்து மயக்குகிறது போலும். கண்ணுதல் கடவுளான கரவீரநாதனை கண்ணுதல் பரவசம், பாக்கியம். ‘கந்தம் கமழும் கரவீரம்’ என திருநாவுக்கரசர் போற்றுவதற்கு ஏற்ப ஆலயத்தினுள் நுழைந்ததும் பக்தி மணம் நம்மை ஆட்கொள்கிறது. ஆலய வழிபாட்டை முடித்து வெளியே வரும்போது.மனம் காற்றில் மிதக்கும் பூஞ்சிறகு போல லேசாகிவிட்டதை உணர்கிறோம். அதுவரை மண்டிக்கிடந்த மனக்குழப்பமெல்லாம் விலகிவிட்டதே, அந்த அதிசயம் விளைவித்த அனுபவம்தான் இது. திருவாரூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் கும்பகோனம் செல்லும் சாலையில் வடகண்டம் உள்ளது. தரிச நேரம்: காலை 9 முதல் 12.30 மணி, மாலை 4 முதல் 8 மணிவரை.

- ஆர்.சி.சம்பத்