வள்ளியுடன் பல லீலைகள் செய்தவனே, வேலவா!அருணகிரி உலா - 47

ஆரூர்க் கோயிலில் அடுத்ததாக அசலேஸ்வரர் சந்நதியைத் தரிசிக்க வருகிறோம். இரண்டாம் பிராகாரத்து தென்கிழக்கு மூலையில் அமைந்திருக்கும் திருக்கோயில், ‘அரநெறி’ என்றும் ‘அசலேசம்’ என்றும் அழைக்கப்படுகிறது. ‘அசலம்’ என்றால் ‘நிலைபேறுடையது’ என்று பொருள். ‘அசலேஸ்வரர் புத்திரனே’ என்று அருணகிரியார் கருவூரில் பாடியுள்ளார். இக்கோயில் பற்றிய குறிப்பு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பாடலில் உள்ளது என்றால் கோயில் எவ்வளவு தொன்மையானது என்பது புலனாகும். சமற்காரன் என்னும் அரசன், கன்றுக்குப் பாலூட்டிக்கொண்டிருந்த ஒரு மானின் மீது கணை தொடுத்த பாவத்தால், குஷ்ட நோயால் பீடிக்கப்பட்டு, ஆரூரிலுள்ள சங்க தீர்த்தத்தில் நீராடி, நோய் முற்றிலுமாக நீங்கப் பெற்றான். இறைவனை வணங்கி நீண்டகாலம் தவம் செய்தான்.

தன் விருப்பப்படி அரசன் ஸ்தாபித்த சிவலிங்கத்தினின்றும் தான் நீங்க மாட்டேன் என்று கூறி ‘அசலேசன் என்ற நாமத்துடன் அது விளங்கட்டும்’ என்று அருள்பாலித்தார் சிவபெருமான். லிங்கத்தின் நிழல் ஒரு பக்கமாய் அன்றி மற்றொரு திசையில் இயங்காது என்றும் அசரீரி வாக்கு கூறியது. இந்த அசலேசுரம் கோயில்தான் தேவாரப்பாக்களில் ‘அரநெறி’ என்று குறிப்பிடப்படுகிறது. ‘அரன் நெறி’ என்றால் ‘சிவநெறி’ என்றும், ‘அரநெறி’ என்றால் பாவத்தைப் போக்கும் (ஹர) நெறி என்றும் பொருள் கொள்ளலாம். இறைவன்: அசலேச்வரர்; இறைவி: வண்டார்குழலி. அசலேச்வரர் இங்கு பல லீலைகளை நிகழ்த்தியுள்ளார். இக்கோயிலில் விளக்கேற்ற எண்ணெய் இல்லாது நமிநந்தி அடிகள் வருந்தியபோது, சமணர்கள் ‘புனலைத் தலையில் வைத்திருக்கும் உங்கள் இறைவனுக்கு நீரால் விளக்கு ஏற்றுங்களேன்’ என்று குதர்க்கமாகக் கூறினர்.

மனம் நொந்த அடிகளார் தேவாச்ரய மண்டபத்திற்கு மேற்கே உள்ள சங்க தீர்த்தத்திலிருந்து எடுத்து வந்த நீரை அகலில் ஊற்றி விளக்குகளை எரிய விட்டதும் விளக்குகளனைத்தும் சுடர்விட்டெரிந்தன. முத்துஸ்வாமி தீக்ஷிதர் ‘‘ஸதாசலேச்வரம் பாவயே அஹம் சமத்காரபுர கேஹம் கிரிஜா மோஹம்’’ எனும் பாடலில் ‘சமத்காரபுரம்’ என்றே திருவாரூரைக் குறிப்பிட்டுள்ளார். இப்பாடலில் வரும் ‘உதாஜ்ய’ எனும் சொல் நமிநந்தி அடிகள் நீரால் விளக்கேற்றியதைக் குறிக்கும் என்பர். ‘‘சாயாரஹித தீப ப்ரகாச கர்பக்ருஹமத்யரங்கம்’’ என்று நிழல் விழாத லிங்கம் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். கழற்சிங்கன் எனும் பல்லவ மன்னன் தன் தேவி சங்கவையுடன் அரநெறிக் கோயிலிலுள்ள முன்மண்டபத்திற்கு வந்தான்.

அங்கு செருத்துணை நாயனார் இறைவனுக்குப் பூமாலை கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். அரசி, கீழே கிடந்த ஒரு மலரை எடுத்து முகந்து பார்த்தது கண்டு சினம் கொண்ட நாயனார், இறைவனுக்கென வைத்திருந்த பூவை முகந்து பார்த்த அவளது மூக்கை அரிந்துவிட்டார். நடந்ததை  அறிந்த அரசனோ ‘‘பூவை எடுத்த கையை அல்லவோ முதலில் வெட்டியிருக்க வேண்டும்’’ என்று கூறி அரசியின் கையை வெட்டினான். இவர்களது ஆழ்ந்த சிவபக்தியை மெச்சிய இறைவன் அனைவரையும் ஆட்கொண்டார் என்று சேக்கிழார் கூறுகிறார். செங்கற்கோயிலாக இருந்த இத்திருக்கோயிலை முழுமையான கற்றளியாக மாற்றிய பெருமை சோழப் பேரரசி செம்பியன் மாதேவியைச் சாரும்.

அசலேச்வரர் கோயிலுள்ளே செருத்துணை நாயனார், கழற்சிங்க நாயனார், கங்காதேவி, நமிநந்தி அடிகள், நடராஜர், இறைவி வண்டார் குழலி ஆகியோரது திருவுருவங்களும், ஐந்து தனி லிங்கங்களும் உள்ளன. ஆரூர்க் கோயிலில் நாம் கட்டாயம் தரிசிக்க வேண்டியது, வரலாற்றுச் சிறப்பு மிக்க தேவாசிரியன் மண்டபமாகும். கிழக்குக் கோபுரத்தைக் கடந்து திருக்கோயிலின் மூன்றாம் பிராகாரத்தில் நுழைந்தால் வடதிசையில் இது நம்முன் காட்சி அளிக்கிறது. பரந்து விரிந்த இம்மண்டபத்தை அமரர் உ.வே.சா. அவர்கள் ‘தேவாச்ரய மண்டபம்’ என்று குறிப்பிடுவதே சரி என்பார். ஆச்ரயம்=விரும்பித் தஞ்சமடையும் தலம் என்பது பொருள்.

சித்தத்தைச் சிவன்பால் மட்டுமே வைத்து விளங்கிய தேவர்கள் விருப்புடன் வந்து தங்குமிடம் ‘தேவாச்ரய மண்டபம்.’ ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவின்போது தியாகேசர் இம்மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். இக்கோயிலைப் பொருத்தமட்டில் நடராஜர் சபாபதி அல்லர்; இளங்குமரனுடனும், உமையுடனும் உறையும் தியாகேசரே இங்கு அஜபா நடனம் புரியும் தேவர். இம்மண்டபத்தில்தான் தியாகேசர் அமர்ந்து ஆடல் அரசியரின் நடனம் கண்டு மகிழ்ந்தாராம். தேவாச்ரய மண்டபத்தில் விநாயகப் பெருமான், குடமுழவம் இசைக்கும் திருமால், நான்முகன், காளி மற்றும் நின்ற கோலத்தில் முருகப்பெருமானும் காட்சி அளிக்கின்றனர். இங்கு ஏழாவது திருப்புகழைச் சமர்ப்பிக்கிறோம்:

‘‘பாலோ, தேனோ, பாகோ, வானோர்
பாராவாரத்து அமுதேயோ,
பாரோர் சீரோ, வேளேர் வாழ்வோ,
பானோ வான் முத்தென நீளத்
தாலோ தாலேலோ பாடாதே,
தாய்மாரி நேசத்து உனு சாரம்
தாராதே, பேர் ஈயாதே,
பேசாதே, ஏசத் தகுமோதான்.

பொருள்: ‘‘நீ பால்தானோ,  அல்லது தேனேதானோ, வெல்லப்பாகோ, தேவர்கள் கடைந்தெடுத்த அமுதமோ, உலகோரின் அருமைப் பொருளோ, மன்மதன் போன்ற அழகனோ, சூரியனோ, சிறந்த முத்தோ நீ!’’ என்று தாய்மார்கள் எனக்குத் தாலாட்டுப் பாடாமலும், அன்புடன் முலைப்பால் தராமலும், புகழ்ச்சிக்குரிய அரிய பெயர் ஒன்றும் கொடாமலும், என்னுடன் ஆசையாகக் கொஞ்சாமலும், இகழ்ச்சிக்கிடமாய் இப்படி நான் வளர்வது நீதியோ?’’

‘‘ஆலோல் கேளா, மேலோர் நாள், மால்
ஆனாது ஏனற் புனமே போய்
ஆயாள் தாள் மேல் வீழா வாழா
ஆளா வேளைப் புகுவோனே
சேலோடே சேர் ஆரால் சாலார்
சீர் ஆரூரில் பெருவாழ்வே
சேயே, வேளே, பூவே, கோவே,
தேவே, தேவப் பெருமாளே.’’

‘‘வள்ளிநாயகியின் ஆலோலம் கேட்டு முன்னொரு நாள் ஆசை குறையாமல் அவளிருந்த தினைப்புனத்திற்குச் சென்று, அவள் காலில் வீழ்ந்தும், (பணி யா? என வள்ளி பதம் பணியும் தணியா அதி மோக தயாபரனே - கந்தர் அநுபூதி) தகுந்த சமயத்தில் அவளுடன் பல லீலைகள் செய்தவனே! (திருவேளைக்காரன்) வயல்களில் சேல் மீன்களும் ஆரல் மீன்களும் ஒன்றாய் விளங்கும் சீர் பெற்ற ஆரூரில் பெருஞ்செல்வமே! பெருமாளே!’’சுந்தரமூர்த்தி நாயனாருடைய பெருமையை கூறாது ஆரூர்த்தலத்தின் பெருமையைக் கூறுவது முழுமையாகாது. சுந்தரரை ஆட்கொண்ட இறைவன் பரவையுடன் அவருக்குத் திருமணம் நடத்தி வைத்தார்.

பெறுதற்கரிய தனது தோழமையை அவருக்கு அளித்தார். (ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதமாய் எனக்கு நல்ல தோழனுமாய்... - சுந்தரர்) ஆரூரனைத் தரிசிக்கக் கோயிலுக்கு வந்த சுந்தரர், தேவாச்ரயத் திருச்சபையைக் கண்டு, அடியார்களை மனமாற அகவழிபாடு செய்து ஆலயத்திற்குள் சென்றார். ஆனால், புறத்தே அடியார்களை வணங்காது இறைவனை வழிபடச் சென்றதைக் கண்ட விறன்மிண்ட நாயனார் அவர் மீது சினமுற்றார்.

‘‘சேணார் மேருச்சிலை வளைத்த சிவனடியார்
                  திருக்கூட்டம்
பேணாதேகும் ஊரனுக்கும் பிராணாந்தன்மை
                      பிறைசூடிப்
பூணாரரவம் புனைந்தார்க்கும் புறகு’’

- என்று கோபமாகப் பாடினார். சுந்தரருக்கு நாயனாரின் கோபத்திற்கான காரணம் தெரியாது. அடியார்களிடையே ஏற்பட்ட பூசலைத் தீர்க்க இறைவன்,

‘‘நீதியால் அவர்கள் தம்மைப் பணிந்து நீ நிறைசொல் மாலை
கோதிலா வாய்மையாலே பாடென’’க் கட்டளையிட்டார்.

அத்துடன், ‘தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்’ என்று அடி எடுத்தும் கொடுத்தார். விறன் மிண்டரின் கோபம் தணிந்தது. (கிழக்குக் கோபுர வாயிலின் இடப்பக்கம் உள்ள விறன் மிண்டரின் திருவுருவத்தை வணங்கிய பின்னரே கோயிலுள் செல்ல வேண்டும் என்பது மரபாக உள்ளது) சுந்தரர் அறுபத்து மூன்று தனி அடியார்களையும் ஒன்பது தொகை அடியார்களையும் உள்ளடக்கிப் பாடிய ‘திருத்தொண்டத்தொகை’ எனும் அரிய நூலும் நமக்குக் கிடைத்தது. பின்னாள், ‘பெரிய புராணம்’ எனும் தலைசிறந்த நூலைச் சேக்கிழார் பாடவும் இதுவே காரணமாயிற்று. இப்பெருமையும் தேவாச்ரய மண்டபத்திற்கு உரித்தாயிற்று. சுந்தரரது மேன்மையை முத்துஸ்வாமி தீக்ஷிதர், ‘ஸுந்தர மூர்திம் ஆச்ரயாமி சிவ பூஸுர குலாப்தி’ எனும் கீர்த்தனையில் பாடியுள்ளார்.

‘‘பரமாச்சாரியனான குருகுஹ சுவாமியே சந்தோஷப்படும்படி தேவாரம் பாடியவர். இப்படிப்பட்ட சுந்தரமூர்த்தி நாயனாருக்கு வணக்கம்’’ என்கிறார். சுந்தரரது தாயான இசை ஞானியார், கௌதம கோத்திரத்தைச் சேர்ந்த ஞான சிவாச்சாரியாருக்கு மகளாகக் கமலாபுரி எனும் ஆரூரில் பிறந்தவர் என்பதைக் கோயில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. தெற்குக் கோபுர வாயிலில் சுந்தரர் மனைவி, பரவை நாச்சியாருக்கெனத் தனிக்கோயில் உள்ளது. திருவிழாக் காண வரும் அடியார்களுக்குப் பொன், மணி, துணி, அமுது முதலியன கொடுத்துபசரிப்பது பரவையின் வழக்கம். அவரது அந்தப்பணி நிறைவேறும்பொருட்ேட சுந்தரர் அவ்வப்போது இறைவனிடம் பொன்னும் பொருளும் வேண்டி வந்தார்.

‘நீள நினைந்தடியேன்’ எனத் துவங்கும் பதிகத்தைச் சுந்தரர் பாடியபோது குண்டையூர் கிழார் அளித்த பெரும் நெற்குவியல்களை இறைவனால் ஏவப்பட்ட பூதகணங்கள் மாசித் திங்கள் உத்தர நட்சத்திரத்தில் தெற்குக் கோபுர வாயிலில்தான் கொண்டு சேர்த்தன. இந்த நிகழ்வு இன்றும் உற்சவ காலங்களில் ஆலய மரபாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது. திருவொற்றியூரில் சங்கிலியாரைச் சுந்தரர் மணந்த செய்தி கேள்விப்பட்ட பரவை, அவரைக் காண மறுத்தார். இறைவன், சுந்தரருக்காக ஆரூர் வீதிகளில் நடந்து பரவையிடம் பலமுறை தூது சென்றார். (இறுதியில் இருவரையும் சேர்த்து வைத்தார்) இறைவன் சுந்தரருக்காகத் தூது சென்றதை அருணகிரியார் பின்வருமாறு பாடுகிறார்:

‘‘அச்சோ என அவச உவகையில்
 உட்சோர்தலுடைய பரவையொடு
அக்காகி விரக பரிபவம் அறவே பார்
பத்தூரர் பரவ, விரைவு செல் மெய்த்தூதர்
விரவ, அருள்தரு பற்றாய பரமர்.’’

பொருள்: சுந்தரருக்குத் தூதாக இறைவன்தான் அர்ச்சகராக வந்து போனாரோ, இது என்ன அதிசயம் என்று பரவச மகிழ்ச்சியுடன் உள்ளம் சோர்வு அடைந்திருந்தாள், பரவை. அவள் மீது கண்ணும் கருத்துமாய் இருந்த சுந்தரருடைய விரகதாபம் அறவே நீங்குதற்கு இந்தத் திருவாரூர்ப் பிரதேசத்தில் அடியார்களுக்கான பத்து லட்சணங்களும் பொருந்திய சுந்தரர் தம்மைப் பரவிப் போற்ற, வேகமாக தூது சென்ற உண்மைத் தூதரும், தம்முடன் உள்ளம் கலக்கத் திருவருள் பாலிப்பவரும், உற்ற துணையாக இருப்பவருமான சிவபெருமான்.’’

‘‘பரவைமனை மீதில் அன்று ஒரு பொழுது
               தூது சென்ற பரமர்’‘
‘‘பரவைக்கெத்தனை விசை தூது பகரற்கு உற்றவர்’’
‘‘சுந்தரர் பாடல் உகந்து இரு தாளைக் கொண்டு
   நல்தூது நடந்தவர்’’

- என்பன போன்ற குறிப்புகளை திருப்புகழில் காணலாம். பரவையின் புலம்பலைச் சேக்கிழார் பாடுகிறார்:

‘‘அளிவரும் அன்பர்க்காக அங்கொரு இங்கு உழல்வீராகில்,
எளிவருவீரும் ஆனால் என் செய்கேன் இசையாது என்றாள்’’

காளமேகப் புலவர் நகைச்சுவையுடன் கூறுகிறார். ‘‘நான்முகனே! திருமாலே! திருமுடியை அன்னப்பறவையாகவும், திருவடியைப் பன்றி உருவத்திலும் சென்று காண முடிந்ததா? திருவாரூர்ப் பரவை வீட்டு வாசற்படியில் கல்லாய்க் கிடந்திருப்பீர்களேயாயின் தோழன் சுந்தரனுக்காக தூது சொல்ல வந்த சுந்தரனாம் பெருமானின் அடிமுடியைப் பார்த்திருக்கலாமே!’’ என்று பாடியுள்ளார்.

‘‘ஆனார் இலையே அயனும் திருமாலும்,
காணார் அடிமுன் காண்பதற்கு, மேனாள்
இரவு திருவாரூரின் எந்தை பிரான் சென்ற
பரவை திருவாயிற்படி.’’

தெற்குக் கோபுரத்தின் தென்முகமாய் அமைந்திருக்கும் திருமஞ்சன வீதியே பெருமான் பரவையிடம் தூது சொல்ல நடந்த வீதியாகும். இங்கு பரவையாருடன் சுந்தரர் ேசர்ந்து வாழ்ந்த இல்லம் ‘பரவையார் திருமாளிகை’ என்று இன்றளவும் அழைக்கப்படுகிறது.

(உலா தொடரும்)

- சித்ரா மூர்த்தி