இறையருளை ஈட்டித்தரும் குருவருள்!மன இருள் அகற்றும் ஞான ஒளி - 30

மாதா, பிதா, குரு, தெய்வம் - இவர்களின் கருணை கடாட்சத்தால்தான் ஒருவன் வாழ்க்கையின் எந்த உயரத்தையும் எட்ட முடியும்! தாய் காட்டித் தகப்பன் தகப்பன் காட்டி குரு உபதேசிக்க தெய்வம் - இதுதான் வரிசை. நம் இந்திய நாட்டுக் கலாச்சாரம் மேற்கத்திய கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. மேற்கத்திய நாடுகள் போக பூமி என்றால் நம்நாடு யோக பூமி. இங்கே நம்மிடம் ஆயிரம் குற்றம் குறை இருந்தாலும் அதையெல்லாம் நீக்கிவிட்டுப் பார்த்தால் வாழ்வின் அர்த்தங்கள் புரிய வரும். விஞ்ஞான வளர்ச்சியில் உலகம் விரிவடைந்து வருகிறது. ஆனால், மனித மனம் சுருங்கிக்கொண்டே வருகிறது.

இங்கே தனிமனித விருப்பு-வெறுப்பு தலை தூக்கியிருப்பதனால் தேவையில்லாத கசப்புணர்வு தோன்றுகிறது. சக்கையை நீக்கியபின் இனிக்கும் பலாப்பழம்போல் கசப்பையும், காழ்ப்பையும் நீக்கி, மேம்பட்ட வாழ்வு அமைய நாம் பாடுபட வேண்டும்!  வடலூர் வள்ளல் பெருமான் ராமலிங்க அடிகளார் சாம வேதத்தில் அசாத்தியமான புலமை பெற்றிருந்தார். ஆனால், வேத பண்டிதர் சிலருக்கு வள்ளலாரின் சாம வேத ஆற்றலின் மீது நெடுநாட்களாகவே சந்தேகம். ஒருநாள் அவர்கள் வடலூருக்குச் சென்றனர். அப்போது வள்ளலார் மாலைச் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். தன் உரையில் பண்டிதர்களின் மனதில் உள்ள ஐயங்கள் எல்லாவற்றிற்கும் பதில் இருந்தது!

பண்டிதர்களுக்கோ தம் மனதில் உள்ளதை எப்படி இவர் துல்லியமாக குறிப்பறிந்து சொன்னார் என்று ஒரே ஆச்சரியம்! உடனே சபை நடுவே நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வள்ளலாரை வணங்கி எழுந்தார்கள். ஆனால், வள்ளலாரோ சிறிதும் பெருமிதம் கொள்ளாமல், பண்டிதர்களுக்கு தக்க மரியாதை செய்து, மிகவும் கனிவாகப் பேசி அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்தார். குருவிடம் சந்தேகம் கேட்கலாம், ஐயம் களையலாம். ஆனால், ஆத்மார்த்தமான குருவை உலகம் போற்றும் உத்தம குருவை சந்தேகப்படக்கூடாது.

காஞ்சி மகா பெரியவர், தூய மகான். அரிசிப் பொரியைத் தின்று ஐம்பொறிகளை அடக்கிய துறவி. எளிமையான தவவாழ்வு வாழ்ந்தவர். அவரிடம் ஒருவர் விவரமாகப் பேசுகிறோம் என்று நினைத்துக்கொண்டு ‘உங்களை எல்லோரும் ஜகத்குரு என்று கூப்பிடுகிறார்களே, நீங்கள் எப்படி ஜகத்குரு?’ என்று கேட்க, மகாசுவாமிகள் தனக்கே உரித்தான இனிய புன்னகையுடன் ‘அப்பா, ஜகத்குரு என்கிற வார்த்தையை உனக்கு தேவைப்படுகிற விதத்தில் அர்த்தம் கற்பித்துக்கொண்டிருக்கிறாய். ஜகம் என்றால் இந்த உலகம். இந்த உலகம்தான் நம் எல்லோருக்கும் குரு. உலகத்திடமிருந்துதான் நமக்குத் தேவையான எல்லாவற்றையும் கற்று வருகிறோம். உண்மையான ஜகத்குரு உலகம்தான்,’ என்றாராம்.

அவரிடம் கேள்வி கேட்ட அந்த ஆசாமி அப்படியே மௌனமாகி பின்னர் மகா சுவாமிகளிடம் தன்னுடைய அறியாமைக்கு வருத்தம் தெரிவித்து, பணிவுடன் வணங்கிவிட்டு ஊர் திரும்பினாராம். காஞ்சி மகா பெரியவர் ஒருமுறை தனக்குப் பணிவிடை செய்யும் மடத்துச் சிப்பந்தியிடம் பேசிக்கொண்டிருந்தபோது ‘காஞ்சிபுரத்தில் இல்லாத பெருமாள் கோயிலா, சிவன் கோயிலா? அங்கே போகிறவர்கள் எல்லோரும் இங்கே நம் மடத்திற்கு வந்து என்னை தரிசித்துவிட்டு ஆளாளுக்கு அவர்களுக்கு வேண்டிய கோரிக்கைகளை என்முன் வைத்துவிட்டுப் போகின்றனர். நாங்கள் பெரியவாளைத்தான் நம்பியிருக்கோம் என்று சொல்கிறார்கள். நான் என்ன பெருமாளைவிட, சிவனைவிட, எல்லாக் கடவுளையும்விட மிகவும் சக்தி படைத்தவனா என்ற கேள்வி சிலர் மனதில் வரக்கூடும்.

ஆனால், உண்மை என்ன தெரியுமா? நானோ பற்று அற்ற துறவி. எனக்கு என்று எந்த தனிப்பட்ட ஆசாபாசங்களும் கிடையாது. எதன்மீதும் தணியாத விருப்பு, வெறுப்பு இல்லை. எனக்கு ஒரே எண்ணம்தான் உண்டு. சதா சர்வ காலம் ஈஸ்வர பக்திதான். எம்பெருமானுடைய தனிப்பெருங்கருணையை வேண்டி  ஜபதபத்தில் ஆழ்ந்திருக்கிறேன். தவிர இன்னொரு எண்ணமும் ஒன்று உண்டு. என்னிடம் வருகிற அடியார்களின் அதாவது, பக்தர்களின் கோரிக்கையை பெருமானே நீ சீக்கிரம் நிறைவேற்ற வேண்டும் என்ற பிரார்த்தனைதான். எனக்கு என்று எந்த தனி (Agenda) செயல் திட்டமும் கிடையாது. சாதாரண பக்தன் ஆயிரம் கோரிக்கையோடு பகவானிடம் மண்டியிடுகிறான்.

ஆனால், எனக்கோ பக்தனின் விருப்பத்தை ஈடுசெய்வதற்காக பகவானிடம் பிரார்த்திப்பது தவிர வேறு சிந்தனை கிடையாது. எனவே பகவான் சாதாரண ஜனங்களின் கோரிக்கையைவிட துறவிகளின் கோரிக்கையை எளிதில் செவி மடுக்கிறான்,’ என்கிற அற்புத விளக்கத்தை பாமரரும் அறியும்படி அளித்தாராம் மகா பெரியவர். அதனால்தானே, ‘காஞ்சி பெரியவரை தரிசியுங்கள். அவர் கண்களிலே காமாட்சி தரிசனம் தருவாள். அவருடைய மௌனம் பல விளக்கங்களையும், தீர்வுகளையும் தரும்,’ என்றெல்லாம் மனம் சந்தோஷப்பட்டு, பெருமையாகப் பலரும் பேசுகிறார்கள்! பாரதபூமி, குறிப்பாக தமிழகம் இப்படிப்பட்ட தவசீலர்களை தன்னகத்தே கொண்டிருந்தது.

இப்படிப்பட்ட மேன்மக்கள் தோன்றியிருக்காவிட்டால் நாம் கரைசேர முடியுமா என்ன? குரு மகிமையை நாம் சாதாரணமாக எடை போட முடியாது. திருவண்ணாமலையில் மகான் சேஷாத்திரி சுவாமிகள் இருந்தார். சேஷாத்திரி சுவாமிகள் பித்தர்போல் காட்சி தருவார். சுந்தரமூர்த்தி சுவாமிகளின், ‘‘பித்தா பிறைசூடி பெருமானே, அருளாளா’ என்பதைப்போல எப்போதும் ஞான நிலையும் குழந்தையின் செயல்பாடும் அமையப் பெற்றவர் திடீரென்று கடைக்குப் போவார். பொருட்களை விசிறியடிப்பார். தன்னைத் தேடி நோயாளி யாரேனும் வந்தால் அவர்கள் மீது ஒருபிடி மண்ணைத் தூக்கிப் போடுவார். இவரைத்தேடி வருகிறவர்கள் இவர் நம்மை ஏறெடுத்துப் பார்க்க மாட்டாரா என்று ஏங்கித் தவம் கிடப்பார்கள். இவ்வளவு ஏன், காஞ்சி மகா பெரியவரே சேஷாத்திரி சுவாமிகளைப் பற்றி மிகவும் சிலாகித்து பேசியுள்ளார்.

‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்’ என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் நம்முடைய அறிவின் துணைகொண்டு ஆராய்ந்துவிட முடியாது. நம்மால் கணிக்க முடியாத பல விஷயங்கள் நம்மைச்சுற்றி நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆழ்வார் பாசுரம் ஒன்றில், ‘அறிவது அறியான் என்னை ஆள் உடையான்’ என்கிறார். சித்த புருஷர்களின் செயல்பாடுகள் எல்லாம் சாட்சாத் பகவானுக்குத்தான் தெரியும். எனவே மகான்களிடம் தூய பக்தியோடு சஞ்சலமற்ற மனத்தோடு பிரார்த்தித்தால் நம் கோரிக்கையை செவிமடுத்து நல்ல பலன்களை நமக்கு வழங்குவார்கள். ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று சும்மாவா சொன்னார்கள்!

- ஆழ்வார்க்கடியான் மை.பா.நாராயணன்