மறைத்துச் சொல்லப்படுவதே மறை!சக்தி தத்துவம் - அபிராமி அந்தாதி - 7

அபிராமி பட்டர் தனது பாடல்களில் பரவலாக மூன்று கருத்துகளை வலியுறுத்துகிறார்.
1. அபிராமியின் குணங்கள் (இறைத்தன்மை)
2. அபிராமியிடம் அன்பு செலுத்துவதனால் ஏற்படும் விளைவு.
3. அன்பு செய்வதற்கான வழிமுறை.

அபிராமியின் குணங்களை அறிந்து அவளிடம் அன்பு செய்வதனால், நமக்கு ஏற்படும் பயனை தெளிந்து முறைப்படி அன்பு செலுத்தும் முறையைப் பின்பற்றி (இறையருள்வழி) செய்கிறபோது ஏற்படும் உள்ளுணர்வானது இரண்டு வகையில் தோன்றும். 1. பொய்யுணர்வு 2. மெய்யுணர்வு. அதில் பொய்யுணர்வு நீங்கி மெய்யுணர்வு பெறுவதுபற்றி இப்பாடலில் வலியுறுத்தியுள்ளார். அபிராமி பட்டரின் கருத்துப்படி மனிதன் இயல்பாய், எளிதாய் இறைவனிடத்தில் அன்பு செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அவள் அருளில்லாத அன்பு (தன் முயற்சியினால் செய்கிற அன்பின்) தோன்றினாலும் அது நல்லவற்றை நான் மிகுதியாகச் செய்கிறேன் என்ற சாத்வீகமான அகங்காரமேயாகும். இதையே பொய்யுணர்வு என்கிறார். அவள் அருளின் வழித் தோன்றுவதே மெய்யுணர்வாகும். அதை தன் அனுபவத்தின் வழி சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் அதையே இப்பாடல் உணர்த்துகிறது. எவரும் அறியா மறையை அறிந்து கொண்டு செறிந்தேன். உனது திருவடிக்கே திருவே வெருவிப் பிறிந்தேன். நின் அன்பர் பெருமை எண்ணாத கரும ெநஞ்சால்மறிந்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே! (3)
‘மறை’ என்ற சொல்லானது அந்தாதியை பொருத்தவரை உமையம்மையின் ஸ்ரீவித்யா உபாசனத்திற்குரிய மந்திரமே ஆகும்.

‘கற்பது உன் நாமம்’ (12)
‘மன்னியது உன் திருமந்திரம்’ (6)
‘பயிரவி பஞ்சமி பாசாங் குசைபஞ்ச பாணி வஞ்சர்உயிர் அவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும்கலாவயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே’ (77)

இந்தப் பாடல் வரிகளைக் கொண்டு பயிரவி, பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி, வஞ்சர் உயிர் அவி உண்ணும் உயர்சண்டி, காளி, ஒளிரும் கலாவயிரவி, மண்டலி, மாலினி, சூலி, வராகி என்று தச மகாவித்யா என்று வடமொழியில் ஸ்ரீவித்யா உபாசகர்கள் அறிய வேண்டிய வரிசை முறையிலான தேவதைகளுக்கு உரிய மந்திரத்தையே, தான் கற்றேன் என்பதை ‘நான்மறைசேர் திருநாமங்கள்’ (77) வேத வழியிலான (வைதீகமான) வழிபாட்டு முறைக்கு உரியதை தான் கற்றேன் என்று கூறுகின்றார். ஒரு மந்திரத்தை கற்பதற்கு கற்க வேண்டிய பிற மந்திரங்களையும் (முக்கிய மந்திரத்தைத் தவிர) கற்க வேண்டிய லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி ேபான்றவற்றைக் ‘கற்பது உன் நாமம்’ என்றும், தேவிமாஹாத்மியம் போன்ற பாராயண நூல்களை ‘கண்ணியது உன் புகழ்’ (12) என்பதனாலும் அறியலாம்.
 
‘எவரும் அறியா’ என்ற வார்த்தை, மந்திரத்தின் இரண்டு வகையில் ஒன்றான வேதமந்திரம் தவிர ஆகம மந்திரத்தை குறித்தது. ஏனெனில் பிறர் செவிக்குப் புலப்படும்படியாகக் கூறுவது வேத மந்திரம். அதனால்தான் வேதத்திற்கு ‘ஸ்ருதி’ கேட்கப்பட்டது என்பது பொருள். அபிராமி பட்டர் ‘எவரும் அறியாத’ என்ற சொற்களால் ஆகம மந்திரத்தை குறித்தார். ஆகம மந்திரங்கள் எவரும் அறியா வகையில்தான் ரகசியமாக சொல்ல வேண்டியதும், ஆச்சாரியனால் ரகசியமாக சொல்லப்படுவதும் ஆகும்.

‘குஹ்யாதி குஹ்யம்’ - ரகசியத்திலும் ரகசியமானது என்ற இவ்வாகம வாக்கியத்தின் வழியே அறியலாம். இத்தகைய மூல மந்திரத்தையே தான் அறிந்தேன் என்பதாக குறிப்பிடுகிறார் அபிராமி பட்டர். அதை வலியுறுத்தவே ‘எவரும் அறியா மறை’ என்று குறிப்பிடுகிறார். ஸ்ரீவித்யா வழிபாட்டில் ஆகம மந்திரம், வேத மந்திரம், பிறவகை மந்திரங்களும் உள்ளன. இவை அனைத்தும் சேர்ந்தே ஒரு வழிபாடு அமையும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடலை பொறுத்தவரை பாடல் 3ல் ஆகம மந்திரத்தையே குறிப்பிடுகின்றார். தொல்காப்பியரும் மந்திரத்தைப் பற்றி, மறைத்து சொல்லப்படுவது என்ற பொருளிலேயே குறிப்பிடுகின்றார்.

‘‘நிறைமொழிமாந்தர் ஆனையிற்கிளைந்த மறைெமாழிதானே மந்திரம் (பொருளதிகாரம் தொல்காப்பியம்). இது மேலும் இக்கருத்திற்கு வலுவூட்டுகின்றது. ‘அறிந்துகொண்டு’ - இதில் அறிவது வேறு, கொள்வது வேறு. அறிந்து கொள்வது என்பது பயிற்சி முறையில் கேட்டு, சிந்தித்து நினைத்து செயல்பட்டு அனுபவிப்பது. அதாவது ஸ்ரவண, மனன, நிதித்யாசன, அனுசந்தான வகைகளால். அதாவது, முதலில் ஆச்சாரியன் சொன்னவை காதுகளால் கேட்கப்பட்டதும், அந்த உபதேசம் நன்கு நினைக்கப்பட்டதும், அதன்வழி பின் நடத்தப்பட்டதும், நடப்பதனால் வரும் அனுபவத்தால் பெறப்படுவதுமாகிற வித்தை.

உதாரணமாக தேன் என்ற சொல், காதுகளால் கேட்கப்பட்டது, அதன் வடிவம் மனதினால் நினைக்கப்பட்டது. அதன் வழியே தேனடையைத் தேடிச்சென்று எடுக்கப்பட்டது, அதை புசிப்பதால் நமக்கு தோன்றும் அனுபவம் இனிப்பு. இதைேய அபிராமி பட்டர், ‘அறிந்துகொண்டு’ என்ற வார்த்தையால் நமக்குத் தெளிவாக்குகின்றார். திரு என்ற சொல்லால் உமையம்மையையே குறிப்பிடுகின்றார். வெருவுதல் என்பது சார்ந்து, பற்றி, பிடித்து என்ற பொருட்களில், சாத்திரங்களை சார்ந்தும், குருவருளை பற்றியும், உமையின் திருவடியினை பிடித்தேன் (திருவே வெருவி) என்கிறார் அபிராமி பட்டர்.

அப்படி பற்றியதனாலும், சார்ந்ததாலும், பிடித்ததாலும், பிரிந்தேன் என்கிறார். எதைப் பிரிந்தார்? ‘நின் அன்பர்’ என்ற வார்த்தைகளால் தாமாக அபிராமியின் மேல் அன்பு கொண்டவரை குறிப்பிடவில்லை; மாறாக அபிராமியின் அருளால் அவளுடைய அன்பைப் பெற்றவர்களையே குறிப்பிடுகின்றார், அபிராமி பட்டர். ‘புதுப்பூங்குவளை கண்ணியம் செய்ய கணவரும் கூடி, நம் காரணத்தால் நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப் பண்ணி’ (41) என்ற பாடல் வரிகளால் நன்கு புலப்படும். ‘கூட்டியவா என்னை தன் அடியாரில்’ (80) என்பதனால் இறைவியின் அன்பு நமக்கு இருந்தால் மட்டுமே நாம் அவள் மீது அன்பு ெகாள்ள இயலும் என்கிறார்.

மணிவாசகரும் ‘அவன் அருளாளே அவன்தாள் வணங்கி’ என்று குறிப்பிடுவதாலும் இதை உணரலாம். அபிராமி பட்டர் முன் அவள் நின்று இருக்கின்றாள், அவளை பார்த்தே ‘நீ’ என்கின்ற முன்நிலை ஒருமையை, ஆறாம் வேற்றுமையில் ‘நின்’ என்கிறார். பெருமை என்பதனால் அன்பர்களின் பெருமையை குறிப்பிடுகின்றார். அன்பர் பெருமை என்பதனால் ஒவ்வொரு மனிதரும் தனக்கு வேண்டியவற்றை தருபவரிடத்து மிகுந்த அன்பு கொள்வர். அதுபோல் ஆடு, கோழி, சந்தனக் காப்பு, வளையல் போன்ற ஏதாவது ஒன்றை தனக்கு தரச் சொல்லியும், ெகாடுத்ததன் பின் அல்லது தருவதாக சொன்னதின் பின் அவர்கள் விரும்பிய காரியத்தை ஒரு தேவதை நிறைவேற்றும்.

இதுபோன்ற தெய்வத்தை தனக்கு தெரிந்திருந்தும் அதை வழிபடாமல், எதையும் தராவிட்டாலும் அபிராமியையே வழிபடுபவர் அபிராமி பட்டர்.இதையே ‘வீணே பலிகவர் தெய்வங்கள் பால் சென்று மிக்க அன்பு பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன்’ (64); ‘நன்றே வருகினும் தீதே விளையினும் நான் அறிவது ஒன்றேயும் இல்லை’ (95) என்ற வாக்கியங்களால் தான் மாறுபடாத உறுதிபாடுடையவர் என்பதை விளக்குகிறார். உறுதிப்பாடுடைய அன்பானது ஒருவருக்கு ஒரு பிறவியில் வராது. அதுபோல் ஞானமும் வராது. பலபிறவிகளில் முயற்சி செய்ய வேண்டும்.

மந்திரம் கற்ற ஒருவர் அதை முறையாகப் பின்பற்றி அது பலிக்காது போனால் அடுத்த பிறவியில் அந்த தேவதையே அந்த பலனை தந்தாக வேண்டும். இது சாஸ்திர நிச்சயம். இதையே வள்ளுவர் ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவருக்கு எழுமையும் ஏமாப் புடைத்து (அதிகாரம்: கல்வி, குறள் 398) என்கிறார். முன் பிறப்போடு தொடர்புடையது ஞானம் என்பதை, ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுரராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்’- என்ற மாணிக்கவாசகர் வரியினாலும் அறியலாம். நல்ல உபாசகனுக்கு முன் பிறவித் தொடர்பு தெரியும்.

‘கண்ணியைக் காணும் அன்பு பூணுதற்கெண்ணிய எண்ணமன்றோமுன் செய் புண்ணியமே’ (40) ‘பின்னே திரிந்து உன்அடியாரின் பேணிப் பிறப்பறுக்க முன்னே தவங்கள் முயன்று  கொண்டேன்’ (25)- என்ற வரிகளால் இறைவியினுடைய அன்பர்கள், முன்னே பல பிறவிகளில் அன்பு செய்தவர்களாக இருப்பார்கள். அத்தகைய நெடுங்கால தொடர்புடைய அன்பையே இது காட்டுகின்றது. சந்தர்ப்பத்தாலும், பருவத்தாலும், சூழலாலும் வளர்கின்ற அன்பைப்போல், குறுகியகால தொடர்புடையது அல்ல, மெய் அன்பர்களின் உண்மையான அன்பு. இப்படிப்பட்ட நெடுங்கால அன்பானது இறையருளினாலே மட்டுமே கிடைக்கும் என்பதை, ‘எமையும் தமக்கு அன்பு செய்ய வைத்தார் (31) என்பதனால் குறிப்பிடுகிறார்.

அப்படி மற்ற தேவதைகளை அன்பு செய்தவர்களைவிட, அபிராமியை அன்பு செய்பவர்கள் உயர்வானவர்கள் என்கிறார். படைக்கின்ற பிரம்மா, காக்கின்ற திருமால், அழிக்கின்ற ருத்ரன் ஆகிய இவர்களைக் கடவுளாக வணங்குகிறவர்கள் இதற்குமுன் இறைவியினுடைய அன்பர்களே என்பதை தெள்ளத் தெளிவாக்குகின்றார். இறையன்பு கொண்டவர்களின் ஆற்றலையும் நமக்கு புலப்படுத்துகின்றார்: ‘ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்’ (26) மேற்கண்ட இறைவியை வழிபாடு செய்யும் தேவதைகளையும் குருவையும் பிற உபாசகர்களையும், உண்மையான இறை அன்பர்கள் எப்போதும் பிரிய மாட்டார்கள். இதையே, ‘அன்பர் கூட்டம் தன்னைவிள்ளேன்’ (23) என்கிறார்.

இறைவழிபாட்டிற்கு ஆராதனை என்று பெயர். அதனினும் உயர்ந்ததாக கருதப்படுவது அடியார் வழிபாடாகிய சமாராதனை. இறைவனுக்கு ஒன்றை அர்ப்பணித்தால் அது இறைவனை மட்டுமே சேரும், அதேசமயத்தில் அடியாருக்கு அர்ப்பணித்தால் அது அடியார்க்கு மட்டுமல்லாது இறைவனுக்கும் சேரும் என்பதனால்தான் இறைவழிபாட்ைடவிட இறை அன்பர் வழிபாடு சிறப்புடையதாகிறது. ‘அடியாரைதொழும் அவர்க்கு பல்லியம் ஆர்த்து எழ வெண்பகடூரும் பதம் தருமே’ (91) என்று அபிராமி பட்டர் முன் சொன்ன சமாராதனையையும்விட ஒருபடி மேலேசென்று இறைவன் மட்டுமே அருளக்கூடிய மோட்சம்கூட, அன்பர்களை வழிபட்டால் அடையப்படும் என்கிறார். இருமல், தும்மல் என்றிருந்தால் அவை உடலில் சளி இருப்பதன் அடையாளங்கள். அதுபோல இறைஅன்பு ஒருவருக்கு இருக்குமாயின் அதை எந்த அடையாளத்தால் கண்டுகொள்ளலாம் என்பதை பட்டியல் இடுகின்றார் அபிராமிபட்டர்.

வையம் (பூமி)
துரகம் (அன்று குதிரை - இன்று சொந்த வாகனம்)
மதகரி (அன்று யானை - இன்று அரசு வாகனம்)
மாமகுடம் (அன்று தலைகிரீடம் - இன்று பெரும் பதவி)
சிவிகை (அன்று பல்லக்கு - இன்று மதிப்பு ஊர்தி)
பெய்யும் கனகம் - பொன்மழை (அளவிற்கு மீறிய செல்வம்)
பெருவிலை ஆரம் - செல்வந்தர்களின் வெற்றி பதக்கம் (கௌரவம்) இவை அனைத்தும் ‘பிறைமுடித்த ஐயன் திருமனையாள் அடித்தாமரைக்கு அன்புமுன்பு செய்யும் தவமுடையார்க்கு உளவாகிய சின்னங்களே’ (52) என்கிறார். அதாவது, அபிராமியை அன்பு செய்பவர்களுக்கு உரிய சிறப்பான அடையாளங்களாக இயல்பாகவே, கேட்டுப் பெறாமல் அமையும்.

இப்படிப்பட்ட அடியார்களின் மிக்க பெருமைகளை ‘எண்ணாத கரும நெஞ்சால்’ - நெஞ்சம் என்ற சொல்லை வெவ்வேறு பொருளில் அபிராமி பட்டர் பயன்படுத்தியிருக்கிறார். அதன் இலக்கணம் சிறப்பு, இழிவு, இன்றியமையாமை இவற்றைச் சார்ந்தது. நெஞ்சம் என்ற சொல்லுக்கு  இருபதிற்கும் மேற்பட்ட பொருள்களைக் குறிப்பிடுகின்றார். அவற்றில் சிலவற்றை இங்கு காண்போம். நெஞ்சத்தின் வடிவம் - மனிதன் தன்னைத் தவிர தனக்கு வெளியில் உள்ள அனைத்தையும் புலன்களின் (ெமய், வாய், கண், மூக்கு, செவி) வழி (தீண்டல், சுவைத்தல், பார்த்தல், நுகர்தல், கேட்டல்) பெற்ற தகவல்களை

மென்மை, வன்மை, சூடு, குளிர்ச்சி - மெய் பதிவு
கசப்பு, உவர்பு, துவப்பு, கார்ப்பு, புளிப்பு, இனிப்பு - வாய் பதிவு.
கருமை, செம்மை, வட்டம், கட்டம், பருத்த, சிறுத்த, உருவம் - விழி பதிவு.
மல்லிகை வாசனை, கழிவு நீர் துர்நாற்றம் - மூக்கு பதிவு
இசை, பேச்சு ஒலி - செவி பதிவு

இவ்வாறு நெஞ்சமானது ஐந்து வழிகளில் பெறும் தனித்தனி தகவல்களை ஒருங்கினைத்த தொகுப்பிற்கு நினைவு என்று பெயர். உதாரணமாக, கரும்பு என்று சொன்ன உடனேயே கரும்பு என்கின்ற எழுத்து ஒலியின் சேர்க்கையான சொல்லாக காதுக்கும், கரும்பு என்ற சொல்லை கேட்ட உடனேயே நம் உள்ளத்தில் அதன் ஒருங்கிணைந்த வடிவம் தோன்றும், அந்தத் தோற்றமே கரும்பு என்ற உணர்வு. இந்த உணர்வானது முதன் முறையாய் கரும்பை பார்த்தவர்க்கு பதிவாகும். ஏற்கெனவே பார்த்தவர்க்கு அது எதிரே இல்லாதபோதும் தோன்றும். இதுவே நினைவு. இதையே பட்டர், ‘ஊரும் முருகும் சுவை ஒளி ஊறொலி ஒன்றுபடச் சேரும் தலைவி சிவகாம சுந்தரி’ (68) என்று அம்பிகைக்கும் உவமையாக்குகிறார்.

புலன்களானது வெளியிலிருக்கும் பொருள்களை பற்றும்போது உள்ளிருந்து நினைவுகள் மேலேவரும். இதையே ‘சன்னிதானம்’ என்ற சொல்லாய் கூறுவர். இந்த நினைத்தலை தொழிலாக கொண்டது மனது. ‘நெஞ்சில் நினைகுவிரேல்’ (54) மனிதன் கருமம் இரண்டு வகையாகும். ஒன்று மேற்கண்ட வகையில் புலன்களின் வழி தகவல்களைப் பற்றி நினைவுகளாய் தேவையானபோது வெளியில் வருவது, இது பொதுச் செயல் (சாமான்ய கருமம்) எனப்படும். மனதின் சிறப்பு செயலானது, அதில் பதிந்துள்ள நினைவுகளின் வழி உடலை இயக்கவும், நிறுத்தவும் செய்து அதனால் சுகம், துக்கம் என்ற அனுபவத்தை ஏற்படுத்தும்.

(தொடரும்)

- முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்