பிரசாதங்கள்பிள்ளைகள் பள்ளிக்கூடத்திலிருந்து படிப்பு, விளையாட்டு, பிரயாணம் என்று களைத்துதான் வருவார்கள். அப்போது அவர்களுக்குப் பிடித்தமான, அதேசமயம் அவர்கள் உடலுக்கு பலம் தரக்கூடிய சில சிற்றுண்டி வகைகளை அளிக்கலாம். வழக்கம்போல இவ்வாறு தயாரிக்கும் சிற்றுண்டிகளை பூஜையறையில் இறைவனுக்கு நிவேதனம் செய்துவிட்டு அப்புறம் குழந்தைகளுக்குக் கொடுத்தால் அவர்கள் உடல்நலத்துக்கு இறையருளும் கிட்டும். சிறுவர்களுக்கான அத்தகைய சிற்றுண்டி வகைகள் சில இதோ:

த்ரிபாகம்

என்னென்ன தேவை?
கடலை மாவு - 1 கப்,
பால் - 2 கப்,
சர்க்கரை அல்லது வெல்லம் - 1/2 கப்,
நெய் - 1/4 கப், முந்திரி அல்லது பாதாம் பவுடர் - 1/2 கப்.

எப்படிச் செய்வது?
வெறும் கடாயில் முந்திரி அல்லது பாதாமை வறுத்து ஆறியதும் பொடித்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில்  எண்ணெய் இல்லாமல் கடலை மாவைக் கொட்டி வாசனை வரும்வரை வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் பால் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் கலந்து மீண்டும் அடுப்பில் வைத்து கைவிடாமல் கிளறி, பொடித்த முந்திரியை சேர்த்து கிளறவும். அவை நன்கு சுருண்டு வரும்போது சர்க்கரை அல்லது கெட்டியான வெல்லப்பாகு, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பின் கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்துக் கிளறவும். இந்த கலவை அதிகம் கெட்டியாக இல்லாமல் அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி, கைவிடாமல் கிளறி சூடாக சிறு சிறு கிண்ணத்தில் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: கடலை மாவிற்கு பதில் கேழ்வரகு மாவிலும் செய்யலாம்.

சாக்லெட்

என்னென்ன தேவை?
கோக்கோ பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்,
பால் பவுடர் - 1/2 கப்,
பொடித்த சர்க்கரை - 1/2 கப்,
உப்பு இல்லாத வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - 1/4 கப்,
வெனிலா எசென்ஸ் - 6 துளிகள்.

எப்படிச் செய்வது?
பால் பவுடரையும், கோக்கோ பவுடரையும் நன்கு சலித்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் தவாவில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பாகு பதத்திற்கு காய்ச்சவும். பாகு பதம் வந்ததும் வெண்ணெய் சேர்த்து கலக்கவும். இத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக சலித்த கலவையை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் கிளறவும். இது லேசாக கெட்டியாக வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.

குறிப்பு: விரும்பினால் நறுக்கிய பேரீச்சை, உடைத்த பாதாம், முந்திரியை சேர்க்கலாம். கலவையை விருப்பமான மோல்டு மற்றும் ஐஸ் டிரேயிலும் ஊற்றி ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து எடுக்கலாம்.

நட்ஸ் டிரைஃப்ரூட்ஸ் லாலிபாப்

என்னென்ன தேவை?
பேரீச்சம் பழம் - 200 கிராம்,
நெய் அல்லது வெண்ணெய் - 1/4 கப்,
கோக்கோ பவுடர் - 1½ டேபிள்ஸ்பூன்,
வறுத்த வெள்ளரி, பூசணி விதை - தலா 1 டீஸ்பூன்,
வறுத்த ஆளி விதை, வறுத்து கரகரப்பாக பொடித்த முந்திரி,
பாதாம் - தலா 1 டேபிள்ஸ்பூன்,
தேன் - தேவைக்கு, லாலிபாப் குச்சிகள் அல்லது டூத் பிக் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?
பேரீச்சம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி 1/2 கப் சூடான தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். இத்துடன் தேன் சேர்த்து லேசாக மசிக்கவும். பின் கோக்கோ பவுடர், வறுத்த விதைகள், முந்திரி, பாதாம் சேர்த்து நெய் அல்லது வெண்ணெயை உருக்கி சிறிது சூடாக ஊற்றி கலந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்து குச்சிகளில் சொருகி பரிமாறவும். லாலிபாப் பிடிக்காத குழந்தைகள் உண்டா என்ன?

சர்க்கரைவள்ளிக் கிழங்கு டிலைட்

என்னென்ன தேவை?
பெரிய சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 1,
பெரிய முழு தேங்காய் - 1,
பொடித்த வெல்லம் - 1 கப்,
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,
வறுத்த முந்திரி - 10,
நெய் - 1 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?
வெல்லத்தை கரைத்து வடித்து பாகு காய்ச்சி கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி 1 கப் தண்ணீர் சேர்த்து திக்கான முதல் பால், பின் மீண்டும் 1 கப் தண்ணீர் சேர்த்து இரண்டாம் பால் எடுத்துக் கொள்ளவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வாயகன்ற, அடி கனமான பாத்திரத்தில் இரண்டாம் பால், சர்க்கரைவள்ளிக்கிழங்கு துருவல் சேர்த்து மிதமான தீயில் நன்றாக வேகவிடவும். நன்கு வெந்ததும் முதல் தேங்காய்ப்பால், வெல்லப்பாகு சேர்த்து கெட்டியாக ஒரு கொதி வந்ததும் ஏலக்காய்த்தூள் கலந்து இறக்கவும். முந்திரியால் அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: வெல்லத்திற்கு பதில் சர்க்கரை அல்லது கருப்பட்டியும் சேர்க்கலாம்.

- சந்திரலேகா ராமமூர்த்தி