தானம் என் உயிரை விடவும் மேலானது!மகாபாரதம் - 73

சாவித்திரி-சத்யவானின் கதையை கேட்டு தருமபுத்திரர் மிகப் பெரிய சமாதானம் அடைந்தார். திரௌபதி தனக்கு நேர்ந்தது எதுவும் பெரிய கஷ்டமில்லை என்று நினைத்தாள். பஞ்சபாண்டவர்கள் இடையறாது மனதுக்குள் அந்த உத்தம பத்தினியை துதித்துக் கொண்டே இருந்தார்கள். தெய்வத்துக்கு நிகரான பெண்மணி என்று பாராட்டிக் கொண்டிருந்தார்கள். சாவித்திரி சத்யவானின் கதையை படிப்பவர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இக வாழ்க்கையில் இன்பங்கள் மட்டுமே வரும். துன்பங்கள் எதுவும் நேராது. இன்பங்களினால் அமைதியும், அமைதியினால் கடவுள் ஈடுபாடும், அதனால் உயர்ந்தநிலை சித்திக்கப் பெற்றும், மற்றவர்களுக்கு உதவியும், ஆரோக்யமாக வாழ்வார்கள்.

சாவித்திரியின் கற்பு, பதி விசுவாசம் அவளுக்கு தன் கணவனை மட்டும் மீட்டுத் தரவில்லை. அவளைச் சுற்றியுள்ள பலருக்கு பல்வேறு நல்ல விஷயங்களை கொண்டு வந்து கொடுத்தது. அவள் தன்னை மட்டும் கருத்தில் கொண்டு வாழவில்லை. தன்னுடைய சுற்றத்தார் அனைவரையும் மனதில் நினைத்தாள். மாமனார், மாமியாருக்குண்டான நல்ல விஷயங்களையும், தன் தந்தைக்கு தாய்க்கு தேவையான விஷயங்களையும், அவள் தன் கற்பின் மூலம் எளிதாகப் பெற்றாள். சத்தியவான் அவளுக்கு புருஷனாக மட்டும் இல்லாது அவளுக்கு விசுவாசம் உள்ளவனாக பிரியமுள்ள தோழனாகவும் இருந்தான். இல்வாழ்வில் ஒரு நல்ல படிப்பினை தரக்கூடியது சாவித்திரி சத்யவானின் கதை.

வனவாசம் பற்றிய அச்சம் நீங்கப் பெற்றாலும் மறுபடியும் போர் வரும். அதில் நிச்சயம் ஜெயிப்போம் என்ற நம்பிக்கை தருமருக்கு இருந்தாலும் அவருக்கு கர்ணனைப் பற்றிய பயம் இருந்தது. அதைப்பற்றி வெளியே எவரிடமும் பேசுவதற்குக் கூட அவர் முயற்சி செய்யவில்லை. தனக்குள்ளேயே மருகிக் கொண்டிருந்தார். எப்பேர்பட்ட வீரன். கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவன். அவனை அர்ஜுனன் எப்படி ஜெயிப்பான். வேறு எவரைப் பற்றியும் பயம் இல்லாத எனக்கு கர்ணன் என்று சொன்னாலே மனம் இருண்டு போகிறது. கர்ணனை வெற்றி பெற முடியுமா, இந்தப் போர் எங்கள் பக்கம் ஜெயத்தை கொண்டு வந்து தருமா என்று தனியே அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்.
ஆனால், கர்ணனின் விதி வேறுவிதமாக இருந்தது.

கர்ணன் தன் அற்புதமான மாளிகையில், அழகான படுக்கையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவன் கனவில் ஒரு அந்தணன் வந்து நின்றான். உயரம், கூர்மையான மூக்கு, ஒளிமிகுந்த கண்கள், கோதுமை நிறம், தேஜஸ்ஸான முகம். கனவுக்குள் வந்த அந்தணரை இவர் சாதாரணமானவர் இல்லை என்பதை கர்ணன் கண்டு கொண்டான். ‘‘நீங்கள் யார்? எதற்கு அந்தணன் வேடத்தில் வந்திருக்கிறீர்கள். உங்களை எங்கோ பார்த்தது போல் இருக்கிறது. எங்கோ பரிட்சயமானதுபோல் இருக்கிறது. நான் உங்களை கைகூப்பித் தொழுகிறேன். உங்களை வணங்குகிறேன். என்னை ஆசிர்வதிக்க வேண்டும்’’ என்று பணிவுடன் கூறினான். விழி விரிய அன்போடு அவரைப் பார்த்தான். பலமுறை பாதம் தொட்டான். வந்த அந்தணர், முகம் மலர்ந்தார்.

‘‘கர்ணா, நீ சுத்தமான மனதுடையவன். அதனால் என்னை ஊடுருவி பார்க்கிறாய். நான் சூரியன். என் மீது நீ கொண்ட பிரேமையை நான் அறிவேன். என்னை பூஜிக்கும் உன் முறையில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். எனக்கு நீ பிரியமானவன். என் அம்சத்தை உன்னுள் நீ கொண்டிருக்கிறாய்.கர்ணா, ராதேயா உன்னிடம் ஒரு எச்சரிக்கை செய்வதற்காக வந்தேன். மிகப் பெரிய போர் வரப் போகிறது. அந்தப் போரில் நீ துரியோதனன் பக்கம் இருக்கிறேன் என்று முடிவு செய்து விட்டாய். அந்தப் போரில் நீ தோற்க வேண்டும் என்பதற்காக இந்திரன் மாறுவேடம் அணிந்து ஒரு அந்தணனைப் போல் நுழைந்து உன்னிடம் யாசகம் கேட்பான். வீடோ, பசுவோ, செல்வமோ அல்லாது, உன் காது குண்டலங்களையும், கவசத்தையும் கொடு என்று கேட்பான். காது குண்டலங்களும், கவசமும் நீ பிறக்கும்போதே உன்னோடு பிறந்தவை. என்னால் உனக்கு ஒரு பாதுகாப்புக்காக தரப்பட்டவை.

அந்த பாதுகாப்பை எடுக்க வேண்டும் என்ற ஆசையோடு தீய எண்ணத்தோடு இந்திரன் வருகிறான். இதை நான் கேள்விப்பட்டேன். அந்த தந்திரத்திலிருந்து உன்னை காப்பாற்ற இங்கு வந்திருக்கிறேன். ராதேயா எனக்குப் பிரியமானவனே, அப்படி வந்து கேட்கின்ற அந்தணனிடம் உனக்கு இது தருகிறேன், அது தருகிறேன், அப்படித் தருகிறேன், இப்படித் தருகிறேன் என்று விதம்விதமாகப் பேசி அவன் கேட்பதை சாமர்த்தியமாக விலக்கி விடு. தரமாட்டேன் தருவதற்கு இல்லை என்று சொல்ல மாட்டாய். ஆனால், எதைக் கேட்கிறானோ அதைத் தவிர மற்றதெல்லாம் தருவதற்கு முயற்சி செய். அவன் நொந்துபோய் நகர்ந்து விடட்டும். எதுவும் வேண்டாம் என்று போய் வரட்டும். அந்த கவசமும், குண்டலங்களும் அமிர்தத்திலிருந்து வெளிவந்தவை. அமிர்தத்தில் ஊறியவை.

அவை உன் உடம்பில் இருக்கும்வரை உன்னைக் கொல்ல எவராலும் முடியாது. உன்னைக் கொன்றால்தான் துரியோதனன் தோற்றவனாவான். துரியோதனனை தோற்கடிக்க தேவர்கள் சிலர் திட்டமிட்டிருக்கிறார்கள். நீ துரியோதனன் பக்கம் சேர்ந்ததற்காக பல தேவர்கள் வருத்தப்படுகிறார்கள். இனி, அதைப்பற்றி பேசுவதற்கில்லை. அதனால் சொல்கிறேன். இந்திரன் அந்தணன் வேடத்தில் வரும்போது உனக்கு அது தெரிந்து விடும். நான் உணர்த்துவேன். இந்திரனை தவிர்த்து விடு’’ என்று பிரியத்தோடு சூரியன் பேசினார். ‘‘அந்தணனாய் வந்த சூரியதேவா, பலகோடி நமஸ்காரம். உங்களை வெளிப்படுத்தியதற்கு என் நன்றிகள். என் தெய்வமே, உன்னைத்தவிர வேறு எவரையும் நான் வணங்கியதே இல்லை. இந்த உலகத்தினுடைய ஆதாரசக்தி நீ, வேறு எவரை நான் வணங்குவது.

உன்னுடைய அற்புதமான இருப்புதான் பூமியை வளர்க்கிறது. உன்னால்தான் உயிர்கள் வாழ்கின்றன. வளர்கின்றன. சூரியதேவா என் பொருட்டு என்னை எச்சரிக்க என் கனவில் அந்தண ரூபம் எடுத்து வந்தது நான் செய்த பாக்கியம். இதற்கு என்ன நன்றி சொல்ல முடியும். ஆனால், யார் எது கேட்டாலும் கொடுத்து விடுவது என்ற விரதத்தை நான் மேற்கொண்டிருக்கிறேன். என்னுடையது என்று இங்கு எதுவும் இல்லை என்கிறபோது, இதில் தரமாட்டேன் என்று எப்படிச் சொல்வது. என்னுடைய உயிர் பற்றியும், என் ஜெயித்தல் பற்றியும் பேசுகிறீர்கள். இதெல்லாம் எப்போதோ முடிந்த காரியம்தானே. பிறகு இதில் நான் புதிதாக ஒரு விதியை ஏற்படுத்த முடியுமா. கடைசிவரை கர்ணன் தானம் தந்து கொண்டே இருந்தான். உயிர் பிரியும் நேரத்திலும் தானம் தந்தான் என்ற புகழ் மிக உயர்வானது.

என் உயிரை விடவும் மேலானது. இந்த உலகத்தில் விரதத்தை ஒதுக்கி வைத்து விட்டு நான் உயிர் இழந்தால் சரித்திரத்தில் இடம்பெறாத ஒரு சாதாரண மன்னனாக, வில்லாளியாக இருப்பேன். இந்த விரதம்தான் எனக்கு புகழ் சேர்க்கும். எனக்கு மரணம் நேர்ந்தாலும் என் புகழ் மறையாது.’’சூரியன் மெல்ல கூர்மையானார்.‘‘தவறு ராதேயா. நீ இறந்த பிறகு உன் புகழ் இருந்து என்ன, இல்லாது போனால் என்ன, பிணத்தின் மீது மாலை போட்ட பிறகு அதன் வாசனைபற்றி பிணத்திற்கு ஏதேனும் அக்கறை உண்டோ. நீ நெடுநாள் உயிர் வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. அதை தந்திரத்தால் ஜெயிக்க முயல்கிறார்கள். நேரிடையாக நின்று உன் கவசத்தையும், குண்டலத்தையும், யுத்தத்தில் அறுக்க முடியாது. தானம் கேட்பதற்காக வருகிறார்கள். இது கயமைத்தனம்.

இந்திரனுடைய மோசமான குணம். அவன் அர்ஜுனனுக்கு ஆதரவானவன். அர்ஜுனன் உன்னைக் கொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறவன். எனவே, தயவுசெய்து என் பேச்சைக் கேள். அந்தணனாக வரும் இந்திரனை ஏதேனும் சொல்லி மனம் மாற்றிவிடு. இல்லை என்று சொல்லாது, இது தருகிறேன் அது தருகிறேன், அப்படித் தருகிறேன் இப்படித் தருகிறேன் என்று தொடர்ந்து பேசி அவனை வெறுத்துப் போகச் செய். அவன் கேட்பனவற்றை மட்டும் கொடுத்து விடாதே. உன் குண்டலங்களும், கவசமும்தான் உன்னை பாதுகாக்கின்றன. அது இருக்கும் வரை உனக்கு மரணம் இல்லை’’ என்று மறுபடியும் வற்புறுத்த,‘‘என்மீது கோபம் கொள்ளக்கூடாது சூரியதேவா. நான் உன்னால் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

உன்னையே நினைத்துக் கொண்டிருப்பவன். தெய்வமே ஆனாலும் கொடுத்த வாக்குறுதியை மீறுவது ஆண்மையல்ல. நான் வாக்கு தத்தம் செய்திருக்கிறேன். யார் என்ன எப்போது கேட்டாலும் தருவேன் என்று சொல்லியிருக்கிறேன். அதை மீற ஒருநாளும் முடியாது. என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நான் அதிகப்பிரசங்கித்தனமாகச் சொல்லவில்லை. என் விரதத்தை என்னால் குலைக்க முடியாது என்று உங்களுக்குச் சொல்ல விரும்புகின்றேன்.’’‘‘சரி, இதுதான் விதி என்றால் உன்னோடு பேசி என்ன பயன். சரி. இப்படிச் செய். வருபவன் இந்திரன் என்று புரிந்து கொண்டதும் அவனிடம் சக்தி ஆயுதத்தை கேள். அந்த சக்தி ஆயுதம் அர்ஜுனனை ஒழிக்கும். வேறு எதனாலும் சாவு இல்லாத அர்ஜுனனை சக்தி ஆயுதம் கொல்லும்.’’

‘‘சூரியதேவா, உங்கள் பேச்சை கேட்கிறேன். கவச குண்டலங்கள் கேட்டால் கொடுத்து விட்டு அதற்கு பதில் சக்தி ஆயுதம் வாங்குகிறேன். அந்த சக்தி ஆயுதத்தால் அர்ஜுனனை ஒழித்துக் கட்டுகிறேன். அர்ஜுனன் ஒழிந்தால் பஞ்ச பாண்டவர்கள் ஒழிந்தார்கள். பஞ்ச பாண்டவர்களை அழிப்பதே துரியோதனனின் எண்ணம். எனக்கு ஆதரவு அளித்து மன்னனுக்கு நான் தரும் பரிசு இது. ஒரு தேரோட்டியின் மைந்தனுக்கு அரச பதவி கொடுத்து அவனுக்கு நண்பனாக வைத்து எங்கும் எனக்கு மரியாதை செய்கின்ற துரியோதனனுக்கு நான் செய்யும் நன்றிக் கடன் இது.’’
பலவீனமாக அந்த அந்தணர் சிரித்தார்.

‘‘தேரோட்டி மகனா, கர்ணா நீ யாரென்று இப்போதைக்குச் சொல்ல முடியாது. உனக்கு தெரிய வேண்டிய நேரத்தில் தெரிய வரும். ராதேயா என்று ஊர் உன்னை அழைத்தாலும் நீ யார் என்பதை ஒருநாள் அறிந்து கொள்வாய். அன்று உன் மனம் என்ன பாடுபடுமோ தெரியவில்லை. என் ஆசிகள். உன் விரத மகிமை வளரட்டும். நீ சொல்வதுபோல மரணம் என்பது உடலுக்கு உண்டு. ஒருவன் புகழுக்கு மரணமே இல்லை. இந்த உலகம் பிரளயத்தால் மூடப்படும் வரை உன் சரித்திரமும், உன் பெயரும், உன் தானமும் நிலைத்து நிற்கும். வாழ்க கர்ணா’’ என்று சொன்னார். கனவு கலைந்தது. படுக்கையில் எழுந்து உட்கார்ந்து கண்ட கனவை கர்ணன் நினைத்துக் கொண்டான். எழுந்து மெல்ல மாளிகையின் சுற்றுப்புறங்களில் நடந்தான்.

விடியலில் குளித்துவிட்டு, தன்னுடைய பூஜை அறைக்குப்போய் விளக்குகளுக்கு நடுவே அமர்ந்து சூரிய காயத்ரி சொன்னான். பல நிமிடங்கள் கழித்து கண் விழித்து சூரியனை நோக்கி, கைகூப்பி ‘இரவு ஒரு கனவு வந்தது. தேவரீர் அழகிய அந்தணனாக வந்தீர். எப்படியெல்லாம் பேசினோம். நான் விரதத்தை குலைக்க மாட்டேன் என்று சொன்னேன். என்னை மன்னித்து ரட்சிக்க வேண்டும்.’சூரியதேவர் அவனுக்கு மட்டும் கேட்கும் அசரீரியாக, ‘ஆமாம் வந்தது நானே. இந்திரன் உன்னை நோக்கி வருவான். கவனமாக இரு. மறுபடி சொல்கிறேன். உன் பிறப்பின் ரகசியம் ஒருநாள் உனக்குத் தெரிய வரும். நீ ராதையின் மகன் அல்ல. தேரோட்டியின் மகன் அல்ல’ என்று சொல்லி அமைதியானார்.

எது பற்றியும் கவலைப்படாது தான் வணங்கும் தெய்வத்திடமும், தன்னுடைய விரத மகிமையைச் சொல்லி அந்த உறுதியை காட்டியதற்கு நிறைவு பெற்று கர்ணன் பூஜை அறையிலிருந்து திரும்பினான். என்ன கர்ணனின் ரகசியம். மகாபாரதக் கதை தொடர்ந்து சொல்லப்படுகிறது. குந்தி போஜன் என்ற அரசனுடைய அரசவைக்கு துர்வாசர் என்கிற அந்தணர் வந்தார். உயரமாகவும், அழகாகவும், கருமையான தாடியுடனும், உச்சியில் முடித்த குடுமியுடனும், அகன்ற மார்புடனும், உறுதியான கால்களுடனும் கமண்டலமும், தண்டமும் ஏந்தி வந்தார்.
‘‘அரசனே, உன்னுடைய அரண்மனையில் சிலகாலம் தங்கி இருக்க விரும்புகின்றேன். என்னை மிக கவனமாக நீ சிஷ்ருஷை செய்ய வேண்டும். பணிவிடை செய்ய வேண்டும். நான் அமர்ந்த ஆசனத்தில், படுத்த படுக்கையில் வேறு யாரும் படுக்கக் கூடாது.

உணவு தாமதமாகக் கூடாது. என் போக்குவரத்து பற்றி கேள்வி கேட்கக் கூடாது. நான் நியமங்களோடும் இருப்பேன். இல்லாதும் இருப்பேன். எனக்குத் தேவையான பொருட்கள் தயாராக இருக்க வேண்டும். மிகக் கவனத்தோடு எனக்கு பணிவிடை செய்ய வேண்டும். அப்படி செய்வாயாகின் உனக்கு அது நன்மை பயக்கும். இல்லையெனில் தீமை சேரும்.’’குந்தி போஜன் கை கூப்பினான்.‘‘உங்களை நான் அறிவேன். உத்தமமான உங்களைப்போன்ற ஆத்மாக்களை தரிசிப்பதே பெரும் பாக்கியம். நீங்கள் தங்குவதே என் பாக்கியம். உங்களை கவனித்து பணிவிடை செய்ய என்னிடம் ஆட்கள் உண்டு. ஆயினும் என்னுடைய மகள் ப்ருதா என்பவளை அதற்காக நியமிக்கிறேன்.

அவள் ஒழுக்கமுடையவள். விரதங்கள் பல இருந்து பண்பட்டவள். அவள் சிறுமியாயினும் தெளிவானவள். நன்கு வளர்க்கப்பட்டவள். அவளிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கிறேன். கவலைப்படாமல் என் அரண்மனையில் தங்கி இருங்கள்.’’குந்தி போஜன் அரண்மனையில் துர்வாசர் என்கிற அந்த அந்தணர் தங்கினார். குந்திபோஜன் தன் மகளை அழைத்தான்.‘‘ப்ருதா, மிக முக்கியமான பணி ஒன்றை உனக்குத் தர விரும்புகின்றேன். உத்தமமான மனிதர்களை நாம் கொண்டாடுவது நம் குல வழக்கம். ஒரு அரசனுடைய முக்கியமான காரியமும் அது. அந்த மாதிரி ஞானவான்களை தொலைவிலிருந்து பார்த்தாலே நல்லது. அவர் வர அவருக்கு அருகே இருந்து அவருக்கு வேண்டுவன செய்வது நமக்குக் கிடைத்த பாக்கியம். இது உனக்கு நன்மை தரும் என்பது மட்டுமல்லாது, நம்முடைய குலத்திற்கே உதவிகளைச் செய்யும்.

இதில் குறை ஏற்பட்டால் உனக்கு மட்டுமே தொந்தரவு இல்லை, நம் குலமே பாதிக்கப்படும். எனவே, ப்ருதா அவருக்கு கவனத்துடன் பணிவிடை செய்து நன்மைகளை அடைவாயாக.’’ என்று வேண்டினான்.அவனுடைய மகள் ப்ருதா அதை ஏற்றுக் கொண்டாள்.‘‘என்னுடைய வேலைகளை நான் கவனமாகச் செய்வது வழக்கம். மற்றவர்களை எதிர்பார்க்காது, நானே என் காரியங்களை செவ்வனே செய்வேன். பல விரதங்களை நான் திறம்பட கடைபிடித்திருக்கிறேன். விடியலில் துயில் எழுவதும், அதிகம் தூக்கத்திற்கு ஆட்படாது இருத்தலும், பசித்தபோது சிறிதளவு உண்ணுதலும் எனக்கு இயல்பானவை.

நான் சுறுசுறுப்பாக இருக்கக்கூடிய ஆசனங்களையும், மூச்சுப்பயிற்சியும் பெற்றிருக்கிறேன். உங்களால் நன்கு வளர்க்கப்பட்டிருக்கிறேன். பண்டிதர்களால் பலதும் போதிக்கப்பட்டிருக்கிறேன். எனவே, என்னிடம் நீங்கள் கொடுத்த பொறுப்புகளை செவ்வனே செய்வேன்’’ என்று வணங்கினாள். அரண்மனைக்கு ஓடி ஒரு பெரிய யாக மண்டபத்தில் துர்வாசரை தங்க வைத்து, அவருக்குண்டான படுக்கைகளையும், ஆசனங்களையும், உண்பதற்கான இடங்களையும், அவர் விரும்பி உண்ணுகின்ற பொருட்களை சேகரித்தும் சோர்வின்றி சுறுசுறுப்பாக இயங்கினாள்.

துர்வாசர், இதோ வருகிறேன், உணவு தயாராக வை. என்று சொல்லி வெளியே போவார். மாலை தான் திரும்புவார். உணவு தயாராக இருக்கிறதா, எனக்கு பசியில்லை. உறக்கம் வருகிறது என்பார். அவருக்கு அந்த சிறுமி கால் பிடித்து விடுவாள். அவர் உண்ட பிறகு தான் உண்ண வேண்டும் என்ற நியதியை பின்பற்றி இருப்பதால் உண்ணாமலேயே இருப்பாள். உண்பதற்குக் கூட நேரம் இருக்காது. அவர் உறங்கிய பிறகு மெல்ல அடுக்களைக்குப் போய் ஆறிய உணவை உண்டு அமைதியாக படுத்துக் கொள்வாள். அவர் அசைகின்ற சப்தம் கேட்டதும் எழுந்து உட்கார்ந்து கொள்வாள். அவர் எழுந்ததும் கட்டளைக்கு தயாராக இருக்கிறேன் என்று எழுந்திருப்பாள். நல்ல உணவை தயார் செய்து விட்டு, அடாடா இதையா சொன்னேன். எனக்கு எளிய உணவு போதுமே என்பார். அதற்கும் அவள் தயாராக இருந்தாள்.

(தொடரும்)

- பாலகுமாரன்