எண்ணம் திண்ணமானால், செயல் வண்ணமாகும்!குறளின் குரல் - 71

வாழ்க்கையில் முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கென்றே சிறப்பான ஓர் அதிகாரம் திருக்குறளில் படைக்கப் பட்டிருக்கிறது. `வினைத் திட்பம்’ என்ற அறுபத்தேழாம் அதிகாரம், செயல்களைச் செய்து வாழ்வில் சாதனை படைக்க விரும்பும் இளைஞர்கள் தங்கள் மனப்போக்கை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என அழகாகவும் அறிவுபூர்வமாகவும் விளக்குகிறது. உண்மையில் இந்த அதிகாரத்தின் மூலம் இளைஞர்களுக்கு அவர்கள் ஏற்கத் தக்க வகையில் ஓர் உளவியல் பாடமே நடத்துகிறார் வள்ளுவப் பெருந்தகை.
 
வினைத் திட்பம் என்ப தொருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.
செயல்உறுதி என்பது ஒருவனின் மன உறுதியே ஆகும். மற்றவை எதுவும் அதற்குச் சமமாகாது.

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.
துன்பம் வருவதற்கு முன்னரே அதை நீக்க முயலுதலும் அப்படித் துன்பம் வந்துவிட்டால் அதன்பொருட்டுக் கலங்காதிருத்தலும் செயலை வெற்றிகரமாகச் செய்து முடிக்க விரும்புவோர் மேற்கொள்ளும் இயல்புகளாகும்.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.
செய்யும் தொழிலைச் செய்து முடித்தபின் இதைச் செய்தோம் என வெளிப்படுத்துதலே சிறப்பானதாகும். அல்லாது இடையிலேயே அதைப் பற்றிய விவரங்களைக் கசிய விட்டால், அது தீராத துன்பத்தைத் தருவதாய் அமையும்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.
சொல்வது எல்லோர்க்கும் சுலபம்தான். ஆனால் சொன்னபடிச் செய்வதே கடினம்.

வீறெய்தி மாண்டார் வினைத் திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.
செயல்திறனால் பெருமையடைந்து உயர்ந்தவர்களை மன்னன் மட்டுமல்ல, மக்களும் போற்றுவர்.

எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்.
எண்ணியவர்கள் தம் எண்ணம் சிதறாமல் உறுதியானதாக இருக்குமானால், அவர்கள் எண்ணியதை எண்ணியவாறு எய்தப் பெறுவார்கள்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.
உருவத்தைப் பார்த்து யாரையும் ஏளனம் செய்ய வேண்டாம். உருள்கின்ற மிகப் பெரிய தேருக்கு மிகச் சிறிய அச்சாணி எவ்வளவு முக்கியமானதோ அதுபோன்றவர்கள் உலகில் உண்டு.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்.
தெளிவுடன் முடிவெடுத்த செயலை மனங்கலங்காமலும் சோர்வு கொள்ளாமலும் காலந்தாழ்த்தாது செய்து முடிக்கவேண்டும்.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.
ஒரு செயலைச் செய்கின்றபோது, முதலில் துன்பம் மிக வந்தாலும், இறுதியில் அச்செயல் இன்பம் தரப்போவதை எண்ணி, கலங்காது துணிவுடன் செய்து முடித்தல் வேண்டும்.

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.
வேறு எந்த வகையான உறுதி உடையவராக இருந்தாலும் செயலில் மனஉறுதி கொள்ளாத ஒருவரை உலகம் ஏற்காது. நார்மன் வின்சென்ட்பீல், டேல் கார்னகி போன்ற வெளிதேச சுயமுன்னேற்றச் சிந்தனையாளர்கள் இன்று சொல்லும் பல அரிய கருத்துகளையெல்லாம் பலப்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே தெளிவாகச் சொல்லிவிட்டது நம் வள்ளுவம். `பவர் ஆஃப் பாசிடிவ் திங்கிங்’ என்ற தம் புத்தகத்தில் நார்மன் வின்சென்ட் பீல், `மனம் தான் நினைப்பதை வாழ்வில் வடிவமைத்துக் கொள்கிறது’ என்கிறார். மனம் என்ன நினைக்கிறதோ அது உடலையே கூட மாற்றும் என்கிறார் அவர்.

செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவனுக்குக் கால் சுண்டுவிரல் முணுமுணுவென்று வலித்தது. மருத்துவர்கள் பலரை நாடிச் சென்றான். ஆனால் மருத்துவர்கள் சரி செய்ய இயலாது என்று கைவிரித்துவிட்டார்கள். ஒரு பாதிரியார் அவன் கடவுளைப் பிரார்த்தனை செய்தால் குணம் பெறலாம் என அவனுக்கு நம்பிக்கை தந்தார். அவன் நாள்தோறும் தனக்குத் தெரிந்த விதத்தில் பிரார்த்தனை செய்யலானான். அவன் பிரார்த்தனை இதுதான்: கடவுளே! நானும் தொழிலாளி. நீயும் தொழிலாளி. நாம் இருவருமே கால் சம்பந்தப்பட்ட தொழிலாளிகள். நான் செருப்புத் தயாரிக்கிறேன். நீ அதை அணியும் கால்களைத் தயாரிக்கிறாய். 

நான் தயாரித்த செருப்பு நெடுநாள் உழைக்காமல் உரிய காலத்திற்கு முன்பாகவே பிய்ந்துபோனால் நான் காசு வாங்கிக் கொள்ளாமல் பழுது பார்த்துத் தருகிறேன். அதுபோல நீயும் தொழில் தர்மத்தைச் சரிவரக் கடைப்பிடிக்க வேண்டும் அல்லவா? என் காலைத் தயாரித்த நீ ஏன் சரியாகத் தயாரிக்கவில்லை? என் இறுதிநாள் வரை உழைக்க வேண்டிய என் சுண்டுவிரல் இப்போதே பழுதாகியிருப்பது என்ன நியாயம்? என் சுண்டுவிரலைக் காசு வாங்கிக் கொள்ளாமல் நீ பழுது பார்த்துத் தரவேண்டியது உன் கடமை!’ வேடிக்கையான பிரார்த்தனை. ஆனால் உளப்பூர்வமாகச் செய்யப்பட்ட பிரார்த்தனை. என்ன ஆச்சரியம்! மருத்துவர்கள் வியப்படையும் வகையில் ஒரே மாதத்தில் அவன் சுண்டுவிரல் சரியாகிவிட்டது. நார்மன் வின்சென்ட் பீல் எழுதும் இந்த உண்மைச் சம்பவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

அவன் சுண்டுவிரலைக் குணப்படுத்தியது கடவுளா அல்லது நம்பிக்கையா? இல்லை நம்பிக்கைதான் கடவுளா? மனத்துக்குள் கடவுள் இருப்பதாகச் சொல்கிறார்களே? ஒருவேளை அவரவர் மனமேதான் அவரவர் கடவுளோ? `எண்ணிய எண்ணியாங்கு எய்துப’ என்கிறாரே வள்ளுவர், எண்ணம் உறுதியோடிருந்தால் எதையும் விரும்பியபடி அடைய முடியும் என்பதற்குச் சான்றல்லவா இந்த சம்பவம்! எந்தத் துறைசார்ந்த பிரமுகரிடமும் அவருடைய வெற்றி பற்றிக் கேள்வி கேட்டாலும், நான் இளம் வயதிலேயே இந்தத் துறைக்கு வரவேண்டும் என ஆசைப்பட்டேன்!’ என்றுதானே தங்கள் நேர்காணலைத் தொடங்குகிறார்கள்! அவர்கள் எண்ணம் திண்ணமாக இருந்ததால் எண்ணியதை எண்ணியாங்கு அவர்கள் எய்தி விட்டார்கள். வள்ளுவர் வகுத்த விதியை அவர்கள் அறியாமல் இருக்கலாம்.

ஆனால் வள்ளுவர் வகுத்த விதி அவர்கள் வாழ்வில் செயல்பட்டிருப்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. ஜேம்ஸ் ஆலன் என்கிற ஒரு தத்துவமேதை பல அறிஞர்களைக் கவர்ந்தவர். செக்கிழுத்த செம்மலான சுதந்திரத் தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளையும் அவரால் கவரப் பட்டவர்களில் ஒருவர். தாம் சிறையில் இருந்தபோது, ஜேம்ஸ் ஆலன் நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் சிதம்பரம் பிள்ளை. அகமே புறம், ‘வலிமைக்கு மார்க்கம்’, ‘மனம்போல வாழ்வு’, ‘மெய்யறிவு’ போன்ற சின்னச் சின்ன நூல்கள் அவை. ஆனால் பெரிய பெரிய வாழ்க்கை உண்மைகளைத் தம்முள் அடக்கியவை.

ஒருவரின் ஆழ்மன எண்ணம்தான் அவரின் வாழ்க்கையையும் அவர் அடையும் வெற்றிகளையும் சமைக்கிறது என்பது ஜேம்ஸ் ஆலனின் தேர்ந்த முடிபு. வள்ளுவரின் வினைத் திட்பம் என்ற அதிகாரத்தின் முடிந்த முடிபும் இதுவேதான். பெரும் செல்வ வளம் மிக்க மாபெரும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தினர் நடத்திய கப்பல் கம்பெனிக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ.சி.யால் நடத்த முடிந்தது எதனால்? அவரின் உறுதியான எண்ணத்தால்! எண்ணினார். எண்ணியதை எய்தினார். காரணம் அவர் எண்ணிய எண்ணம் திண்ணியதாக, பலவீனங்கள் அற்றதாக இருந்தது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அஞ்சி நடுங்க வைத்த உயர்தர மேடைப் பேச்சாளர் அவர்.

வ.உ.சி.யைப் போலவே பின்னாளில் இன்னொரு தமிழ் எழுத்தாளரும் ஜேம்ஸ் ஆலனின் வாழ்க்கைக் கோட்பாடுகளால் கவரப்பட்டார். அவர் சில ஆண்டுகள் முன்பாகக் காலமானவரும், மிகச் சிறந்த சுயமுன்னேற்ற எழுத்தாளருமான டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. பல அருமையான சுயமுன்னேற்ற நூல்களை அவர் எழுதத் தூண்டுகோலாக இருந்தவை ஜேம்ஸ் ஆலனின் நூல்களே. உண்மையில் வள்ளுவர் குறுகத் தரித்த குறளில் எழுதியவற்றின் விரிந்த விளக்கமே ஜேம்ஸ் ஆலன் சிந்தனைகள். வள்ளுவம் சொல்லும் உண்மை பரமஹம்ச தத்துவத்திலும் இருக்கிறது. ராமகிருஷ்ண பரமஹம்சர் வண்ணத்துப் பூச்சியின் வாழ்வைப் பற்றி அழகாகச் சொல்கிறார்.

அது கூட்டுப் புழுவாக இருந்தது. ஊர்ந்து செல்லக் கூடியது அது. கனவு கண்டால்கூட அடுத்த நிலையான நடந்து செல்வது பற்றித்தான் கனவு காணலாம். அதுவோ ஆசை காரணமாகக் கொஞ்சம் அதிகமான கனவையே காண்கிறது. கூட்டுப் புழு, நடப்பதற்கல்ல, பறப்பதற்கே கனவு காண்கிறது! மண்ணில் ஊர்ந்து செல்லும் புழு விண்ணில் பறந்துசெல்ல விரும்புகிறது! அதற்காக இரண்டு செயல்களைச் செய்கிறது அது. ஒன்று, தன்னால் பறக்க முடியும் என்று ஆழ்மனத்தில் நம்பத் தொடங்குகிறது. விடாமல் ஒரே சிந்தனையாய் அந்த எண்ணத்தை மனத்தில் தேக்கிக் கொள்கிறது. இன்னொன்று அந்த நம்பிக்கையை வேறு யாரும் கலைத்து விடாதபடி தன்னைச் சுற்றிக் கூடு கட்டிக் கொள்கிறது!
குறிப்பிட்ட காலத்திற்குப் பின் அதன் கனவு பலிக்கிறது.

அது தன் கூட்டை உடைத்துக் கொண்டு பறக்கிறது, வண்ணத்துப் பூச்சியாக! எண்ணிய எண்ணியாங்கு எய்துவதற்கு பரமஹம்சர் சொல்லும் இந்த வண்ணத்துப் பூச்சியும் கூட ஓர் உதாரணம் தானே? அப்துல்கலாம் சொன்னாரே, `கனவு காணுங்கள்!’ என்று? அப்படி நடந்துகொள்ள வண்ணத்துப் பூச்சிகளுக்குக் கற்றுக் கொடுத்தது யார்? வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? இப்படிச் செய், அப்படிச் செய் என்று அடுத்தவர்களுக்குச் சொல்லிக் கொண்டிராதே. சொன்னபடி நீ நட. சொல்வது சுலபம். சொல்கிறபடி நடப்பது கடினம்,’ என எச்சரிக்கை செய்கிறார் வள்ளுவர். அறிவுரைகளை அள்ளி வீச இங்கு ஆட்கள் நிறைய உண்டு. ஆனால், அறிவுரைப்படி நடக்கத்தான் யாரையுமே காணோம். குறைந்த பட்சம் அறிவுரையைச் சொன்னவராவது, தான் சொன்ன அறிவுரையைப் பின்பற்ற வேண்டுமல்லவா?

மதுவிலக்குப் பிரசாரம் செய்ய ஆவேசம் வரவேண்டும் என்பதற்காக மதுவை அருந்தி விட்டு வந்த கதைதான்!   சொன்னவரே தான் சொல்லும் சொல்லைப் பின்பற்றாதபோது, கேட்பவர்கள் எப்படிப் பின்பற்றுவார்கள்? மேடையேறிப் பேசும்போது ஆறுபோலப் பேச்சு, கீழே இறங்கிப் போகும்போது சொன்னதெல்லாம் போச்சு!` என்கிறது சந்திரபாபு பாடி, நடித்த பழைய திரைப்பாடல். சிரிப்பு வருது சிரிப்பு வருது, சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!’ என்று தொடங்கும் அந்தப் பாடலை ‘ஆண்டவன் கட்டளை’ திரைப்படத்திற்காக எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். உருவத்திற்கும் செயலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே உருவத்தைக் கண்டு எள்ளி நகையாடாதீர்கள்! உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!’ என்கிறார் வள்ளுவர். வாழ்வின் பெருமைகளைத் தீர்மானிப்பது வெளி உருவமல்ல.

செய்யும் செயல்களே. உருவம் தற்செயலாக இயற்கையில் நேர்வது. ஆனால், செயல்களோ விரும்பி உழைத்து நாமே உருவாக்குவது. அகத்தியர் குறுமுனி, குள்ளமானவர். ஆனால் தமிழ்க் கடல் அவர். அகத்தியர் கடலை உண்டார் என வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் சொன்னபோது எல்லோரும் வியப்பில் ஆழ்ந்தார்கள். எப்போது அந்தக் காலப் புலவரான அகத்தியர் வறுத்த வேர்க்கடலையை உண்டார் என அதிசயித்தார்கள். ஆனால், புராண கால அகத்தியர் ஒருமுறை கடல் வற்றிப் போகும்படி கடல் நீர் முழுவதையும் அருந்தினார் என கி.வா.ஜ. விளக்கியபோது கேட்டவர்கள் அந்தத் தமிழ்நயத்தைப் புரிந்துகொண்டு, ரசித்துச் சிரித்தார்கள். நீர்க்கடலை உண்ட தமிழ்க் கடலான அகத்தியரை அவர் குள்ளமானவர் என்பதற்காக நாம் குறைவாக நினைக்க முடியுமா?

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் தேதியன்று பிறந்தவர் தேசத் தலைவர்களில் ஒருவரான லால்பகதூர் சாஸ்திரி. ரஷியத் தலைநகரான தாஷ்கண்ட்டில் மரணமடைந்தவர். கடந்த காலத்தில் அரியலூரில் ஒரு பெரும் ரயில் விபத்து நடந்தது. 1956 நவம்பர் 23ல் நடந்த அந்த விபத்தில் 142 பயணிகள் காலமானார்கள். 110 பேர் காயமடைந்தார்கள். 200க்கு மேற்பட்டோர் சடலங்களே கிடைக்காமல் மண்ணில் புதைந்துபோனார்கள். பெருமழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பெரிய விபத்து அது. அப்போது ரயில்வே மந்திரியாக இருந்த லால்பகதூர், அந்த விபத்திற்குப் பொறுப்பேற்று உடனே தம் பதவியை ராஜினாமா செய்தார்.

நாற்காலி ஆசையே இல்லாமல் அப்படிச் செய்ய எத்தனை உயர்ந்த உள்ளம் இருக்க வேண்டும்? லால்பகதூர் சற்றுக் குள்ளமானவர். ஆனால், யோசித்துப் பாருங்கள். அவரைப் போல் உயர்ந்தவர்கள் இன்று அரசியலில் எத்தனை பேர் உண்டு? உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!’ என வள்ளுவர் எழுதிய வரியின் விளக்கமல்லவா அவர் வாழ்வு? திருக்குறள் ஒரு மிகச் சிறந்த உளவியல் நூல். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்’ என்று, மாசற்ற மனத்தோடு இருப்பதே அறங்களில் எல்லாம் தலையாய அறம் என கம்பீரமாக அறிவித்த நூல். மனத்தைச் செம்மைப்படுத்துவதன் மூலம் வாழ்வின் வெற்றிகள் அனைத்தையும் ஒருவன் அடைய முடியும் என்ற உயர்ந்த வாழ்க்கை விதியை விளக்குகிற உலகப் பொதுமறை அது. இளைஞர்கள் படிப்பதற்காக மட்டுமல்ல, பின்பற்றப்படவும் காத்துக் கொண்டிருக்கிறது அது.

(குறள் உரைக்கும்)

- திருப்பூர் கிருஷ்ணன்