அன்னதானத்தில் மகிழும் அன்னபூரணி



வானும், நிலவும்
வனச்சோலை மலரும்
வனப்பும், மணமும்
உன் எழில் பிம்பமடி!
பூமியை கர்ப்பமாய் தாங்கி
வளியால் மூடி-உயிர்கள்
படைத்தருளும் பராசக்தி-சகல
ஜீவராசிக்கும் உணவுதரும் அன்னபூரணி!
தங்ககரண்டியில் பால்சோறு பரிமாறி
தரணி செழிக்க படியளக்கும் பைரவி!
காசிநகர் வறுமை நீக்கிய காத்யாயினி!
கருணை,பொறுமையாளும் புவனேஸ்வரி!
நீரின்றி உலகேது-தாயே

உன் அருளின்றி உயிரேது!
சிவம் உடம்பு சக்தி இயக்கம்
உலகமே சிவசக்தி மயம்!
உலகுக்கு உணவளிக்கும் விவசாயி
அன்னபூரணி அவதாரம்!
நிலமெனும் சிவமதை சக்தியால் உழுது
விளைபயிர் உருவாக்கும் தெய்வம்!
எத்தனை மனிதர், எத்தனை வணிகர்
எத்தனை நெஞ்சம், எத்தனை வஞ்சம்!
மனதின் நீரோட்டம் -அதன் கரையில்
எத்தனை வகை தேரோட்டம்!
சக்தியை கருத்தில் ஏற்றி
சகல உயிருக்கும் உணவளிப்போம்!
பகிர்ந்துண்டு பாசத்துடன் வாழ்வோம்!
அன்னதானத்தில் மகிழ்வாள் அன்னபூரணி!
நெல்மணி உருவாகும் ஆற்றலறிந்து
உணவை வீணாக்காது உண்போம்!
வயிறுக்கு விருந்தாகும் உணவு!
உயிருக்கு மருந்தாகும் உணவு!
முத்து, பவளம், வைரம், வைடூரியம்
அணிகள் பூண்டு பசும்பொன் தேரேறி
பவனி வரும் பவானி-உயிர்கள்
பசிப்பிணி நீக்கி வாழ்த்தும் சிவகாமி!
கல்வியில் சிறந்தோர் கயமை புரிவரோ!
செல்வத்தில் சிறந்தோர் செவிடாய் இருப்பரோ!
பசித்தவருக்கு உணவு மறுக்காமல் வழங்கி
பராசக்தி மனம் குளிரவைப்போம்!
மேகமாய், மழையாய், உரமாய், பயிராய்
இரவியாய், மதியாய், நெல்மணி முத்தாய்
விதையாய், மரமாய், கனியாய் சுவைக்கும்
சூட்சும ஆற்றலில் சக்தி தத்துவமறிவோம்!

- விஷ்ணுதாசன்