அன்னதானத்தின் அருமையை உணர்வோம்!



திருமூலர் திருமந்திர ரகசியம்

அன்னத்தின் பெருமையை வேதம் முதலாக அனைத்து நூல்களும் போற்றி விவரிக்கின்றன. அப்படிப்பட்ட அன்னத்தைப் பற்றித் திருமூலர் சொல்வதைப் பார்க்கலாம். எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு அட்ட அடிசில் அமுது என்று எதிர் கொள்வர் ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பு அறியாரே(திருமந்திரம்-1884) கருத்து: திசைகள் எட்டிலும் தென்படும் அடியவர்க்குப் படைத்த உணவை, இறைவன் ‘அமுதம்’ என்று, தானே விரும்பி வந்து எதிர் கொள்வார்.

ஏன் என்றால், பயிர் விளையும் கழனியை உடையோர், அதனை வீணே கிடக்கவிட மாட்டார்கள். பயிர் செய்து பலன் அடையவே விரும்புவார்கள். அது போல இறைவன் அடியார்கள் தாங்கள் உண்பது, உடலாகிய நிலத்தை வீணே செத்தொழிய விடாது அதன் உள்ளே இருக்கின்ற உயிரை வளர்ப்பதற்காகவே என்பதால், அந்த உணவை அமுதம் என்று ஏற்று மகிழ்வர். உணவு - இதைப் பற்றித் தான் எவ்வளவு தகவல்கள், அறிவிப்புகள், அறிவுறுத்தல்கள்! பிரமிப்பாக இருக்கிறது; பயமாகவும் இருக்கிறது:
1. அன்னத்தை இகழாதே!
2. அன்னத்தை அவமதிக்காதே!
3. அன்னத்தை ஏராளமாக உற்பத்தி செய்!
4. அன்னத்தை அடுத்தவர்க்குக் கொடுத்து உண்!
இவையெல்லாம் அன்னத்தைப் பற்றி
வேதங்கள் சொன்னவை.


அன்னத்தை இகழாதே
உண்ண உட்காரும்போதே, ‘இந்த உணவு நமக்கு ஆரோக்கியத்தை அளிக்கட்டும்’ என்ற எண்ணத்தோடு உட்கார வேண்டும். அதை விடுத்து, ‘எப்பப் பாத்தாலும் இதே சோறு, ரசம், குழம்பு. சே! வெரைட்டியா செஞ்சு தொலைக்கக் கூடாதா?’ எனச் சொல்லக்கூடாது. இதை மற்றொரு விதமாகப் பார்த்தால், ‘நமக்குப் பிடித்ததை நாம் உண்கிறோம். அடுத்தவர்க்குப் பிடித்ததை அவர்கள் உண்கிறார்கள்,’ என்று இருக்க வேண்டுமே தவிர, அடுத்தவர்கள் உண்பதை இகழக்கூடாது.

அன்னத்தை அவமதிக்காதே
சிலர் தம் வீடுகளில் தட்டில் ஏராளமான உணவிருக்க, அதன் மேலேயே கைகளைக் கழுவி, அப்படியே எழுந்திருக்கும் அவலத்தைக் காணலாம். நம்மைத் தேடிவரும் பெரிய மனிதர்களை அலட்சியப்படுத்துவது தவறு. மறுபடியும் அவர்கள் நம் வீட்டுப்பக்கம் வரமாட்டார்கள். அதுபோல, அன்னம் என்பது மிக மிக முக்கியமானது. எத்தனையோ பேர் ஒருவேளை சோற்றுக்குக்கூட வழி இல்லாமல் இருக்கும்போது, நமக்கு இது கிடைத்ததே என்று உண்ண வேண்டுமே தவிர, உயிர் காக்கும் அந்த உணவிலேயே கை கழுவுவது மிகப் பெரும் பாவம். அவமானப்படுத்தப்பட்ட முக்கியஸ்தர்கள், மறுபடியும் நம்மை நெருங்காததைப் போல, நம்மால் அவமானப்படுத்தப்பட்ட உணவு, மறுபடியும் நம்மை நெருங்காமலே போய் விடக்கூடும். ஆகவே எந்தவொரு விதத்திலும் அன்னத்தை அவமானப்படுத்தக் கூடாது.
எப்படியாயினும் சரி, அன்னத்தை வீணாக்கக் கூடாது.

அன்னத்தை ஏராளமாக உற்பத்தி செய்
மின்சாரத்தின் அவசியத்தைச் சொல்லும்போது, ‘தேவையில்லாதபோது மின் சாதனங்களை அணைத்து விடுங்கள், வீணாக விளக்குகளை எரிய விடாதீர்கள், இதுவே மின் உற்பத்திக்குச் சமம்’ எனும் அறிவிப்பைப் பார்த்திருக்கலாம். உணவில்லாமல் ஒருக்காலும் வாழமுடியாது. அப்படிப்பட்ட உணவை நமக்களிக்கும் விவசாயிகளுக்கு நாம் ஏதேனும் பாராட்டு விழா நடத்துகிறோமா? ஆகையால் அன்னத்தை ஏராளமாக உற்பத்தி செய் என்பது, அதை உற்பத்தி செய்பவர்களை ஆதரி என்ற பொருளையும் தரும்.

அன்னத்தை அடுத்தவர்க்குக் கொடுத்து உண்
‘உண்ணும் போது ஒரு கைப்பிடி’ என்று திருமூலர் ஏற்கனவே கூறியிருக்கிறார். ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என மணிமேகலை காப்பியம் கூறுகிறது. நம் வழிபாட்டு முறைகள் அனைத்திலும், வழிபாட்டின் முடிவில் அன்னதானத்தை விசேஷமாகக் குறிப்பிடுவார்கள். ‘அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா’ என்று இறைவனையும் அன்னதானப் பிரபுவாகவேப் போற்றி மகிழ்கிறோம். இயன்றவரை அடுத்தவர்க்குக் கொடுத்து உண்பது மிகவும் சிறந்தது. இவ்வாறு கொடுப்பதில் உள்ள உயர்வைப் பற்றி திருமூலர் விவரிக்கிறார். பசியுடன் வந்தவர்களுக்கு கொடுக்கப்படும் உணவை, தெய்வமே வந்து ‘ஆகா, இது அமுதம்!’ என்று ஏற்றுக் கொள்கிறதாம். அதாவது, ஏழையர்க்குப் படைக்கப்படும் உணவு இறைவனுக்கே படைக்கப்பட்டதாகும்.

ஆனால் ‘அடியார்க்குப் படைக்கப்பட்ட உணவு’ என்று சொல்கிறாரே திருமூலர்? அடியார் என்ற சொல்லுக்கு, ‘இறைவனின் அடியார்கள்’ என்பது மட்டும் பொருள் அல்ல; சொல்லாலும் செயலாலும் யாரையும் அடிக்காதவர்களே, யார் மனதையும் புண்படுத்தாதவர்களே, திருமூலர் குறிப்பிடும் அடியார்கள். அப்படிப்பட்ட நல்லவர்களுக்குப் படைக்கப்பட்ட உணவு, ஆண்டவனுக்கே படைக்கப்பட்டதாகும் என்பது திருமூலர் கருத்து. உத்தமமான விவசாயி, நன்கு விளையும் தன் நிலத்தை ஒருபோதும் தரிசாகப் போட்டு வைக்க மாட்டார். அவர் தன் நிலத்தை நன்றாக உழுது பயிரிட்டு, அடுத்தவர் பசியைத் தீர்த்து அவர்களையும் வாழ வைப்பார்.

அதுபோல, அடுத்தவருக்குக் கொடுத்து உண்பவர்கள், அதற்காகவே தங்கள் உடலைப் பாதுகாத்து வாழ்வார்கள். விவசாயி தன் நிலத்தைப் பயன்படுத்தி அடுத்தவரை வாழவைப்பதைப் போல, நல்லவர்களும் ‘அடுத்தவர்க்கு அன்னதானம் செய்து அவர்களை வாழ வைப்பதற்காகவே தன் உடல் எனும் எண்ணத்துடன் வாழ்வார்களாம். தெய்வ அருள், தானே தேடி வந்து வாழ்விப்பதை இதிகாச, புராணங்கள் கதை கதையாகச் சொல்கின்றன. அதைச் சொல்லி வழிகாட்டுகிறார் திருமூலர்:

பிச்சையது ஏற்றான் பிரமன் தலை தன்னில்
பிச்சையது ஏற்றான் பிரியாள் அறம் செய்யப்
பிச்சையது ஏற்றான் பிரமன் சிரம் காட்டிப்
பிச்சையது ஏற்றான் பிரமன் பரமாகவே
(திருமந்திரம் - 1887)

இப்பாடல் அபூர்வமானது. போன பாடலில், அடுத்தவர்க்கு இடச்சொன்ன திருமூலர், இப்பாடலில் இறைவனே பிச்சை கேட்டுத் திரிவதாகச் சொல்கிறார். கூடவே அதற்கான காரணங்களையும் கூறுகிறார். பிச்சை எடுப்பது இழிவானது என, பற்பல நூல்கள் சொல்கின்றன. இருந்தாலும் அதே நூல்களில், ‘கற்கை நன்றே கற்கை நன்றே; பிச்சை புகினும் கற்கை நன்றே’ எனும் வாக்கும் இடம் பெற்றிருக்கிறது. இதற்கு ‘பிச்சை எடுத்தாவது படி’ என மேம்போக்காகச் சொன்னாலும், மற்றோர் ஆழ்ந்த பொருளும் உண்டு ‘கல்விமான்கள் என்னதான் வறுமை (பிச்சை எடுத்து வாழும்) நிலையில் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாது அவர்களிடம் போய்ப்படி’என்பதே ஆழ்ந்த பொருள்.

 திருமூலர்் முதல் வரியில், பிரம்மன் தலையில் சிவபெருமான் பிச்சை ஏற்றதையும், இரண்டாவது வரியில் சிவபெருமான் அம்பிகையிடம் பிச்சை ஏற்றதையும் சொல்கிறார். இந்த இரண்டும் நமக்குப் பற்பல படிப்பினைகளைச் சொல்லிக் கொடுக்கின்றன. தொடக்கத்தில் சிவபெருமானுக்கு, ‘பஞ்ச முகேஸ்வரன்’ எனும் பெயருக்கு ஏற்றபடி, ஐந்து முகங்கள் இருந்தன. பிரம்மனுக்கும் ஐந்து தலைகள். பிரம்மனுக்கு, ‘சிவனுக்கும் ஐந்து தலைகள், எனக்கும் ஐந்து தலைகள். நான் எதற்காக அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும்?’ என்ற எண்ணம் தோன்றியது. ஆகவே பிரம்மாவின் ஐந்தாவது தலை, ‘உனக்கும் ஐந்து தலை; எனக்கும் ஐந்து தலை’ எனச் சிவபெருமானிடமே வாதம் பேசி, வம்பு செய்தது. அகம்பாவம் பிடித்த அந்த ஐந்தாவது தலையை சிவபெருமான் அப்படியே கிள்ளி எடுத்தார். கிள்ளியெடுத்த அந்தப் பிரம்மாவின் கபாலம் தன் கையில் ஒட்டிக்கொள்ள அதிலேயே ஈசன் பிச்சை எடுத்தார்.

இது கதை. இக்கதை என்ன சொல்ல வருகிறது? கறுப்பான நூலில் நெய்யப்பட்ட துணி கறுப்பாக இருப்பதைப் போல, அகம்பாவம் பிடித்துப் பேசிய பிரம்மதேவரால் படைக்கப்பட்ட மனிதர்களும் அகம்பாவத்தால், ஆட்கொள்ளப்பட்டவர்களாகவே இருந்தார்கள். பிரம்மதேவரின் அகம்பாவம் பிடித்த அந்த ஐந்தாவது தலை நீக்கத்திற்குப் பிறகு, பிரம்மாவின் படைப்பில் அகம்பாவம் அகன்றுவிட்டது. ஆனால், முன்னால் படைக்கப்பட்ட ஜீவர்களின் அகம்பாவம் நீங்க வேண்டாமா? அதற்காக சிவபெருமான் பிரம்ம கபாலத்தைக் கொண்டு, ‘ஆவணம் முதலான தீய குணங்களை இதில் இடுங்கள்,’ எனச் சொல்லிப் பிச்சை எடுக்கிறாராம். இத்தகவலை, ‘இடுபலி கொடு திரி இரவலர்’ என அருணகிரிநாதர், தேவேந்திர சங்க வகுப்பில் விவரிக்கிறார்.

அடுத்து, தன்னுடலில் பாதி கொண்டு பாகம் பிரியாள் எனும் திருநாமம் பெற்ற அம்பிகை, முப்பத்திரண்டு அறங்களைச் செய்வதற்காகவும் சிவபெருமான் பிச்சை எடுக்கிறாராம். அடுத்தது நானே பரம்பொருள் என ஆணவம் கொண்டிருந்த பிரம்மனின் தலையைக் கிள்ளி, அந்தக் கபாலத்தில் பிச்சை எடுத்தது, பரம்பொருள் தன்மையை நிரூபிக்கவும் எனச் சொல்லிப் பாடலை நிறைவு செய்கிறார் திருமூலர். திருமூலர் சொன்னபடி, அன்னத்தின் பெருமையை உணர்வோம். அடுத்தவர்க்கு இயன்றவரை அன்னம் அளிப்போம். நல்லவர்க்கு உதவி அவர்களை ஆதரிப்போம். ஆட்டிப் படைத்து அல்லல் விளைவிக்கும் தீய குணங்களை இறையருளால் நீக்க முனைவோம்.

(மந்திரம் ஒலிக்கும்)
 
- பி.என்.பரசுராமன்