தீவினையும் பிணியும் கெட்டொழியும்!அருணகிரி உலா - 41

அருணகிரி உலாவில் அடுத்ததாக நாம் செல்லவிருக்கும் தலம், அட்ட வீரத் தலங்களுள் ஐந்தாவதான திருவிற்குடி. திருவாரூர் - நன்னிலம் பேருந்து சாலையில் 5 கி.மீ. சென்று, அறிவிப்புப் பலகையைக் கவனித்து, கிளைப் பாதையில் 1 கி.மீ செல்ல வேண்டும். ஜலந்தராசுரனை வதம் செய்த சிவபெருமான் இங்கு வீரட்டேஸ்வரர் எனும் பெயரில் சிவலிங்க வடிவமாக எழுந்தருளியுள்ளார். கோயிலிலுள்ள சபை ஒன்றில் ஜலந்தரவத மூர்த்தியாகக் காட்சியளிக்கிறார். சிவனார், தான் நிகழ்த்திய எட்டு வீரட்டச் செயல்களில் இந்த ஒன்றில் மட்டுமே எளிய அந்தணக் கோலத்தில் சென்றார். ஜலந்தரனை அறுத்த சக்கரம் பூமியைப் பிளந்து பாதாளம் நோக்கிப் போக முற்பட்டது.

அதனால் பூமி தேவி துன்புற்று ஓலமிட்டாள். பெருமான் அந்தணக் கோலத்தை விடுத்து, சக்கரத்தைக் கைகளில் ஏந்தினார். பூமிதேவிக்கு அருள்செய்தார்; அதே கோலத்தில் விற்குடியில் விளங்குகிறார். ஜலந்தரனின் மனைவி பிருந்தை, இத்தலத்தில் இறந்த கணவனுடன் தீக்குளித்தாள். அவளது சாம்பலில் இருந்து உண்டானதே துளசிச்செடி. எனவே, திருமால், சிவன் இருவருக்குமே உகந்ததாக துளசிச்செடி கருதப்படுகிறது. ஆலயத்தைச் சுற்றிலும் ஏராளமான துளசிச்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. இத்தலம் பிருந்தை மயானம் என்று குறிப்பிடப்படுகிறது. கோயிலினருகே  சங்கு தீர்த்தம், சக்ர தீர்த்தம் எனும் இரு தீர்த்தங்கள் உள்ளன.

இறைவன் சந்நதி மேற்கு நோக்கி உள்ளது. கோயிலுள் நுழையும்போதே மூலவர் சந்நதியைக் காணலாம். ராஜகோபுரம் ஐந்து நிலைகளை உடையது. வெளிப் பிராகாரத்தில் பிருந்தையைத் துளசியாக எழுப்பிய இடமும், திருமால் வழிபட்ட சிவாலயமும் உள்ளன. கொடிமரத்தருகில் ஏலவார் குழலி அம்மை எனப்படும் பரிமளநாயகி வீற்றிருக்கிறார். உள்ளே இடப்புறமாக வலம் வரும் போது ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு மயில் மீதமர்ந்த கோலத்தில் வள்ளி தெய்வானையுடன் குடிகொண்டிருக்கும் சுப்ரமணியரைத் தரிசிக்கிறோம்.

’தத்த னத்தனத னத்த னத்தனன
தித்தி மித்திமிதி மித்தி மித்திமித
தக்கு டுக்குடுடு டுக்கு டுக்குடென சங்கு பேரி
சத்தமுற்று கடல் திக்குலக்கிரிகள்
நெக்கு விட்டு முகிலுக்கு சர்ப்பமுடி
சக்கு முக்கிவிட கட்க துட்ட சுரர் அங்கமாள
வெற்றியுற்ற கதிர் பத்திரத்தை அருளிச்
சுரர்க்கு அதிபதிப் பதத்தை உறு
வித்தளித்து மதிபெற்ற தத்தை மணம் உண்ட வேலா
வெட்கிப் பிரமனைப் பிடித்து முடி
யைக் குலைத்து சிறை வைத்து முத்தா புகழ்
விற்குடிப் பதியில் இச்சையுற்று மகிழ் தம்பிரானே!’’
‘‘குழியுற்ற அத்தியென மங்குவேனோ?’’

பொருள்: தத்தனத்தன... என்று சங்கும், முரசும் ஒலிக்க கடலும் எண்கிரிகளும் நெகிழ, மேக இடி ஒலியைக் கேட்டு ஆதிசேடனது முடிகளும், கண்களும் துன்பம் உற, வாள் ஏந்திய கொடிய அரக்கர்கள் மாள, வெற்றி ஒளி வேலாயுதத்தைச் செலுத்தியவனே! தேவர்களுக்குத் தலைமைப் பதவி அருள் செய்து, ஐராவதம் வளர்த்த கிளியாகிய தேவசேனையை மணம் செய்து கொண்ட வேலவனே!பிரமன் வெட்கும்படியாக அவனது குடுமித்தலையை அலைவித்துச் சிறையிலிட்டவனே! (‘‘இதன் பொருள் கருதாய், சிட்டி செய்வது இத்தன்மையதோ எனச் செவ்வேள் குட்டினான் அயன் நான்கு மா முடிகளும் குலுங்க’’ - கந்தபுராணம். பிரணவத்தின் பொருள் கூறத் தெரியாது பிரமன் விழித்தபோது முருகன் அவனைக் குட்டிச் சிறையில் இட்டான்).

ஜீவன் முக்தர்கள் புகழ்ந்து கூறுகின்ற திருவிற்குடிப் பதியில் விருப்பமுற்று வாழ்பவனே! (விலைமாதர் மயக்கில் பட்டு) படுகுழியில் விழுந்த யானை போல் மனம் குலைந்து நிற்பேனோ? முருகனை வணங்கி வலம் வரும்போது மஹாலட்சுமி, பைரவர், நவகிரகங்கள், பிடாரி ஆகியோரைத் தரிசிக்கிறோம். ஞான தீர்த்தம் எனும் கிணறு உள்ளது. தூணிலிருக்கும் ஸர்வஸித்தி ஆஞ்சநேயரும், தெற்கு முகமாக நிற்கும் பைரவரும் நாம் தரிசிக்க வேண்டிய மூர்த்திகளாவர். ஜலந்தரவத மூர்த்தியின் ஐம்பொன் திருமேனி, கண்டு மகிழ வேண்டிய ஒன்றாகும். இவர் வலது உள்ளங்கையில் சக்கரம் ஏந்தியுள்ளார்.

ஏனைய கரங்களில் மான், மழு ஏந்தி ஒரு கையில் ஆயுத முத்திரை தாங்கியுள்ளார். உக்கிராண அறையின் வாசலில் சந்திரன் காட்சியளிக்கிறார். துவார பாலகர்களை வணங்கி, துவார கணபதியையும் வணங்கி உள்ளே சென்றால், கருவறையைக் காணலாம். மூலவர் சுயம்பு; சதுர ஆவுடையார். இப்பெருமானை வணங்குவோர்க்குத் தீவினையும் பிணியும் கெட்டொழியும் என்கிறார் ஞானசம்பந்தர்:

‘‘பூதஞ் சேர்ந்திசை பாடலர் ஆடலர்
 பொலிதர நலமார்ந்த
பாதஞ் சேரிணச் சிலம்பினர் கலம் பெறு
 கடலெழு விடமுண்டார்
வேதம் ஓதிய நாவுடையானிடம்
 விற்குடி வீரட்டம்
சேரும் நெஞ்சினர்க்கு அல்லதுண்டோ பிணி
 தீவினை கெடுமாறே’’ 

(பூத கணங்கள் ஒன்று சேர்ந்து இசை பாடவும் ஆடவும் பொலிவு பெற்று விளங்கும் திருவடிகளில் சிலம்பணிந்த பெருமான், பாற்கடலில் தோன்றிய  ஆலகால விஷத்தை உண்டவர்; வேதங்கள் ஓதிய திருநாவை உடைய அப்பிரான் அமர்ந்திருக்கும் விற்குடி வீரட்டத்தைச் சிந்திக்கும் அடியார்களுக்கன்றி மற்றவர்களுக்குத் தீவினையும் பிணியும் கெட்டொழியும் வழி ஏதும் உண்டோ?) கருவறைக் கோட்டத்தில் பிரம்மா, திருமால், தட்சிணாமூர்த்தி, நர்த்தன விநாயகர், ஆகியோர் அருள்கின்றனர். சண்டிகேஸ்வரரை வணங்கி கோயிலிலிருந்து வெளியே வருகிறோம்.

அருணகிரியார் திருப்புகழ் பாடிய மற்றொரு திருத்தலம் இன்று மதுரமாணிக்கம் எனப்படும். ‘‘த்ரியம்பகபுரம்’’ என்று தணிகைமணி டாக்டர். வ.சு.செங்கல்வராயப்பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளதைப் படித்தபோது அங்கு செல்ல ஆவல் மேலிடுகிறது. அன்பர் வலையப்பேட்டை திரு.கிருஷ்ணன் அவர்கள் வழிகாட்டுதலின்படி ஊரைத் தேடிக்கண்டு பிடித்தோம். திருவாரூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் தலம். கும்பகோணம்-திருவாரூர் சாலையில் ‘‘எண்கண்’’ எனும் தலத்திற்கு எதிர்த்திசையில் ஊருக்குள் சென்று, வயல் வெளிகளுடே பயணித்து, இத்தலத்தை அடைந்தோம். (அருகிலுள்ள மற்றொரு பிரசித்தி பெற்ற ஊர் சேங்காலிபுரம்).

மதுரமாணிக்கத்தில், அருணகிரியார் காலத்தில் விளங்கிய திருக்கோயில், காலப் போக்கில் எந்தச் சுவடும் இல்லாமல் அழிந்து விட்டது. சில ஆண்டுகளுக்கு முன், இறைவன் அருளால் முருக பக்தர்கள் சிலர் ஒன்று திரண்டு வயல் வெளியிலேயே லிங்க மூர்த்தத்தைத் தேடிக்கண்டெடுத்தனர். ‘செளபாக்யகெளரி உடனுறை த்ரயம்பகேஸ்வர’ருக்குச் சிறு கோயில் எழுப்பப்பட்டு 2015ம் ஆண்டு கும்பாபிஷேகமும் செய்யப்பட்டது. இறைவன், இறைவியரையும், விநாயகர், முருகன், அருணகிரிநாதர், சண்டிகேசர் ஆகியோரையும் வணங்கி, திருப்புகழை அர்ப்பணிக்கிறோம்.

‘‘செரு நினைந்திடும் சினவலி அசுரர்கள்
 உகமுடிந்திடும்படி எழுபொழுதிடை
செகமடங்கலும் பயமற மயில்மிசை தனிலேறித்
 திகுதிகுந்திகுந் திகுதிகு திகுதிகு
தெனதெ னந்தெனந் தெனதென தெனதென
 திமிதிமிந்திமிந் திமிதிமி திமியென வருபூதம்
கரையிறந்திடுங் கடலென மருவிய
 உதிர மொண்டு முண்டிட அமர் புரிபவ!
கலவி அன்புடன் குறமகள் தழுவிய முருகோனே!
 கனமுறுந் த்ரியம்பகபுர மருவிய
கவுரி தந்த கந்த! அறுமுக! என இரு
 கழல் பணிந்து நின்றமரர்கள் தொழவல பெருமாளே!
(விளை தனம் கவர்ந்திடு பல மனதியர்
 அயல் தனங்களும் தமதென நினைபவர்
வெகுளியின் கண் நின்று இழிதொழில் அது அற அருள்வாயே).

போரையே நினைந்திருக்கும் கோபமும் வலிமையும் உடைய அசுரர்கள், யுகம் முடிவது போன்று போரிட எழுந்த போது உலகத்தார் பயம் நீங்க மயில் ஏறி வந்தவனே! திகுதிகு.... திமியென வந்த பூதங்கள், கரை கடந்து எழுந்த கடல் போல உள்ள ரத்தத்தை மொண்டு குடிக்கும்படி போர் புரிந்தவனே! இணைந்து நிற்கும் குறமகள் வள்ளியை அன்பு பூண்டு தழுவிய குமரனே! பெருமை வாய்ந்த த்ரியம்பகபுரம் எனும் தலத்தில் வீற்றிருக்கும் பார்வதி தேவி அருளிய கந்தனே, அறுமுகனே என்று விளித்து உனது இரு திருவடிகளையும் பணிந்து நின்று தேவர்கள் தொழுதற்குரிய பெருமாளே!

(பெருகியுள்ள தனத்தை அபகரிக்கும் பலவித எண்ணங்களை உடையவர்களும், பிறருடைய தனத்தையும் தமதென்று நினைப்பவர்கள் ஆகிய பொதுமகளிரின் கோப மொழிகளில் சிக்கித் தவிக்கும் என் செயல் இனி அற்றுப் போக அருள்வாயாக!) எல்லாம் வல்ல இறைவனுக்கே, அவன் குடியிருந்த புண்ணியத் தலத்தை முனைப்புடன் மீட்டுத் தந்திருக்கும் அடியார்கள் திருப்பாதங்களை வணங்கி, திரியம்பகத்திலிருந்து புறப்படுகிறோம். அடுத்ததாக நாம் செல்ல விருக்கும் திருத்தலத்தைப் பற்றிக் கூறுமுன்னர், அத்தலம் பற்றிய ஒரு சிறு செய்தியைத் தெரிந்து கொள்வோம். தஞ்சைக் கோயில்கள் பற்றிய கட்டுரைத் தொடரை எழுத எண்ணியபோது, ஆசிரியர் பரணீதரன் மஹாபெரியவாளை அணுகினார். ‘‘எந்தத் தலத்தை முதலில் வைத்துத் துவங்கலாம்?’’ என்று பெரியவாளிடம் அவர் கேட்டிருந்தார்.

பதினைந்து நாட்களில், அப்போது சதாராவில் முகாமிட்டிருந்த மஹாபெரியவா அனுப்பியதாக அன்பர் ஒருவர், குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களது, ‘‘குடவாயிற் கோட்டம்’’ என்ற அழகிய நூலை சென்னையிலுள்ள பரணீதரனிடம் கொண்டு வந்து கொடுத்தார். உணர்ச்சிப் பெருக்குடன் அப்புத்தகத்தைப் பிரசாதமாகக் கருதிப் பெற்றுக் கொண்ட பரணீதரன் அவர்கள் தனது கட்டுரைத் தொடரை, இன்று, ‘‘கொடவாசல்’’ என்றும் ‘‘குடவாசல்’’ என்றும் அழைக்கப்படும் ‘‘குடவாயில்’’ தலத்தையே முதல் தலமாகக் கொண்டு எழுதத் துவங்கினார் என்பது செய்தி. இவ்வாறு மஹாபெரியவாளால் பெரிதும் போற்றப்பட்ட திருக்குடவாயில் கோணேஸ்வரர் கோயிலை நோக்கி இனி பயணிப்போம்.

திருவாரூர்-கும்பகோணம் சாலையில் ஆரூரிலிருந்து 16 கி.மீ. தொலைவிலுள்ளது குடவாசல் எனும் திருக்குடவாயில். ஊரிலுள்ள நான்கு ராஜ வீதிகளுக்கு நடுவே அமுததீர்த்தம் எனப்படும் குளக்கரையில் மேற்கு நோக்கி விளங்கும் புராதனமான கோயில். செங்கற்களால் கட்டப்பட்டிருந்த பழைய கோயிலைக் கற்கோயிலாகவும், யானை ஏற முடியாத மாடக் கோயிலாகவும் மாற்றி அமைத்தவன் கோச் செங்கட்சோழன். காஸ்யப முனிவருக்கு விநதை, கத்ரு தேவி என இரு மனைவியர் இருந்தனர். இளையவளின் சூழ்ச்சியால் விநதை கடும் துயரத்திற்கு ஆளானபோது, அவளது மகனான கருடன் தேவலோகம் சென்று, அம்ருத கலசத்தை எடுத்துவந்தான். எதிரே வந்த மஹாபயங்கரன் என்ற அசுரன் அம்ருத கலசத்தைத் தான் பெற எண்ணி கருடனுடன் போர் புரிந்தான்.

கருடன் கலசத்தைப் புற்றின்மேல் வைத்துவிட்டு அசுரனுடன் போரிட்டு அவனை மாய்த்துப் பின் குடத்தை எடுக்க முற்பட்டபோது, புற்றுக்குள்ளிருந்த சிவபெருமான், அதை உள்ளே இழுத்துக் கொண்டுவிட்டார். கருடன் தன் மூக்கினால் புற்றைப் பிளக்க, குடத்துடன் லிங்க மூர்த்தியைக் கண்டான். பிரளய காலத்தில் குடந்தையில் விழுந்த அம்ருதகலசத்தின் வாய்ப்பாகம் இவ்விடத்தில் விழுந்து காலப்போக்கில் லிங்கமாகி, புற்றினால் மூடப்பட்டிருந்தது. அந்த லிங்கமே கருடனுக்குக் காட்சியளித்தது. இறைவன் விரும்பியபடி அத்தலத்திலேயே ஆலயத்தை எழுப்பினான் கருடன். ருத்ரசம்ஹிதையில் வரும் கோணேச தலத்தின் புராணத்தில் இந்நிகழ்ச்சி குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலில் மிக அற்புதமான கருடன் சிலை அதிக கவனிப்பின்றி விளங்குவது கண்டு மனம் வருத்தமுற்றது.

முன்னொரு காலத்தில் கருடன் சிலையின் தலை பின்னமடைந்து பின் சீர் செய்யப்பெற்றதாகக் கூறுவர். கோபுர வாயில் கடந்து உள்ளே செல்லும்போதே கொடிமரம், பலிபீடம், நந்தியை தரிசித்தபின் முதலில் காட்சியளிப்பவள் அன்னை ப்ரஹந்நாயகி எனப்படும் பெரியநாயகி. இங்கு துர்க்கைக்கு தனிச் சந்நதி இல்லை. அன்னையே பிரஹந்துர்க்கையாக விளங்குகிறாள். இரண்டாம் கோபுரம் கடந்து உள்சுற்றில் வலம் வரும்போது ‘‘மாலை விநாயகரை’’ தரிசிக்கிறோம். சாயரட்சை பூஜையில் இவருக்கே முதல் வழிபாடு நடத்தப்படுகிறது. ஆலால சுந்தரர், பறவை நாச்சியார், நடராஜர் ஆகியோரைத் தரிசித்து வலம் வரும்போது காய்த்துக் குலுங்கும் பலாமரத்தைக் கண்டு மகிழ்கிறோம். உட்பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் கிழக்கு நோக்கி நிற்கும் குடவாயிற் குமரனை ஆவலுடன் தரிசிக்கிறோம்.

‘‘ஆறிரண்டு மலர்க்கண்ணும் ஆறிரண்டு
திருக்கையும் அரவிந்தம் போற்
கூறிரண்டு சேவடியும், முடியாறும்,
படைத்தமரர் கோனுக்காக
மாறிரண்டு கொண்டிருந்த
மனத்தோடு கீழ்மேலாம் வன்சூர் மாவை
வேறிரண்டு கூறுபட வேலெறிந்த குமரனடி
விரும்பி வாழ்வாம்’’
(திருவிளையாடற் புராணம்)

(உலா தொடரும்)

- சித்ரா மூர்த்தி