பஞ்சம் பசி போக்குவாய் அன்னபூரணி



அன்னம் - அன்னை - அன்னபூரணி
தமிழின் முதல் எழுத்தான ‘‘அ’’கரமும் இறுதி எழுத்தான ‘‘ன்’’ என்ற எழுத்தும் சேர்ந்து உருவானது ‘‘அன்’’ என்ற வேர்ச் சொல்லாகும். இந்த வேர்ச் சொல்லில் இருந்து பல சொற்கள் கிளைத்து எழுந்துள்ளன. அவற்றுள் முதன்மை பெற்றவை அன்னை, அன்னம் என்பனவாகும். ‘‘அன்’’ என்ற அந்த வேர்ச்சொல்லானது வழியாக இருப்பது மனநிறைவைத் தருவது, மேலானது, உயர்ந்தது மேன்மைமிக்கது போன்ற பல பொருகளைக் கொண்டது. ‘‘அன்’’ என்ற வேர்ச்சொல்லுடன் ‘‘ஐ’’ என்ற சிறப்பு எழுத்து சேர்ந்து அன்னை என்னும் சொல் உருவானது. நமக்கு அறிவையும் உணவையும் ஊட்டுபவளும், இந்த உலகிற்கு நாம் வருவதற்கு வழியாக இருப்பவளும், நமக்கு மேலானவளுமாகிய தாய் அன்னை எனப்படுகிறாள். அன்னையால் நாம் வளரவும், வாழவும் இன்பங்களைத் தேடிப் பெறவும் ஊட்டப்படுவது அன்னமாகும்.

அது உடலை வளர்ப்பதோடு அதில் உறையும் உயிரையும் வளர்க்கிறது.‘‘அன்’’ என்ற சொல்லோடு ‘‘அம்’’ என்ற சொல் இணைந்து அன்னம் ஆகியது. அது சோற்றை (உணவை)க் குறிக்கிறது. நாம் நமது உடல் இயங்குவதற்கான சக்திகளைப் பெற வழியாக இருப்பதாலும், உயிரைக் காக்கும் மேலான பொருளாக இருப்பதாலும், உண்டபின் மனநிறைவைத் தருவதாலும் உணவு அன்னம் எனப்படுகிறது. உணவு உடலுக்குச் சக்தி தந்து உயிரைக் காப்பது. அதனால் ‘‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’’ என்றனர் பெரியோர்கள். அன்னம் என்ற சொல் சோற்றைக் குறிப்பதுடன், தூய வெண்ணிறம் கொண்ட பறவையையும் குறிக்கிறது. பறவைகளில் உயர்ந்ததாக அன்னம் இருக்கிறது.

அதை அறிவு, ஞானம் ஆகியவற்றின் குறியீடாகக் கொள்வர். அதை இலக்கியங்கள் ஞானப்பறவை என்று போற்றுகின்றன. மனித குலம் வாழ்விற்குத் தேவையானவற்றைப் பெற அறிவு செயல்பட வேண்டியுள்ளது. ‘‘அறிவை அற்றம் காக்கும் கருவி’’ என்கிறார் திருவள்ளுவர். உலகிலுள்ள பொருட்களை அடைவதற்கு வழியாக இருப்பது அறிவாகும். அது கண்ணுக்குப் புலப்படாத ஆயுதம், அறிஞர்கள் அறிவே ஆயுதம் என்பர். அறிவானது உலகிலுள்ள பொருட்களை அடைந்து உயிரை இன்பமடையச் செய்வதால் அதனைக் குறிக்க, அன்னப்பறவையைக் கொண்டனர். அறிவுக் கடவுள் ஏறி வரும் வாகனமாக அன்னம் இருக்கிறது.

உடலுக்கும் உயிருக்கும் தேவையான சக்திகளைப் பெற உணவைத் தந்து அதன் மூலம் மன மகிழ்ச்சியை அருளும் தேவியாக இருப்பவள் அன்னை பராசக்தி. அவள் உயிர்களுக்கு உணவைத் தந்து காத்தருள மேற்கொண்ட கோலமே அன்னபூரணியாகும். தேவையான உணவை உண்ட உடல் புத்துணர்ச்சி பெறும்போது உயிர் நிறைவை அடைகிறது. உணவால் பெறப்படும் அந்த பூரணத்தை (நிறைவை) அருளும் அன்னை அன்னபூரணியாவாள். அவளை அன்ன வாகனத்தில் பவனி வருபவளாகச் சித்தரிக்கின்றனர். உடல் வளர உணவையும், அதற்குள் இருக்கும் உயிர் வளர்ந்து மேன்மை பெறவும் அருளும் அன்னபூரணியை இங்கு அன்ன வாகனத்தில் கண்டு மகிழ்கிறோம்.

அனந்தவல்லியான அன்னபூரணியின் திருவுருவங்கள்
உலக உயிர்கள் வாழ்வதற்கு ஆதாரமான உணவை வழங்கும் பராசக்தி அன்னபூரணி எனப்படுகிறாள். உலகின் மகாராணியான அன்னபூரணி அனேக ஆபரணங்கள் அணிந்து மணிமுடி சூடி உயர்ந்த சிம்மாசனத்தில் வீற்றிருக்கின்றாள். அவளுக்கு இடப்புறம் சரஸ்வதியும், வலப்புறம் மகாலட்சுமியும் வீற்றிருக்கின்றனர். அன்னபூரணி இடது கையில் உணவுப் பாத்திரத்தையும், வலது கையில் அதை எடுத்து அளிக்கும் சட்டுவத்தையும் (கரண்டியையும்) ஏந்தியுள்ளாள். சிவபெருமான் அவளுக்கு வலதுபுறம் நின்று அவளிடம் பிச்சை ஏற்கின்றார். அவர் வலது கரத்தில் சூலத்தை ஏந்தி நின்று இடது கரத்தை நீட்டிப் பிச்சையைப் பெறுகின்றார்.

அவர் இடது கரத்தில் பிட்சா பாத்திரமான கபாலத்தை ஏந்தியுள்ளனர். காசியில் அன்னபூரணியின் திருவுருவமும், சிவபெருமானின் திருவுருவமும் வழிபாட்டில் உள்ளன. ஆலயங்களில் அமைக்கப்படும்போது அன்னபூரணி தனியாகவே அமைக்கப்படுகிறாள். அவள் பத்மாசனம் அல்லதுசுகாசனத்தில் வீற்றிருப்பவளாகவே சித்தரிக்கப்படுகிறாள். ஓவியர்கள் அன்னபூரணியின் திருவுருவங்களைக் காலங்கள்தோறும் கலை நயம் தோன்ற அமைத்துள்ளனர். இதனால் பலவகையான அன்னபூரணி வடிவங்களைப் பாரததேசம் முழுவதிலும் பரவலாகக் காணமுடிகிறது. வடநாட்டுச் சக்தி கோயில்கள் பெரும்பாலானவற்றில் அன்னபூரணியின் ஓவியம் இடம் பெற்றுள்ளது.

காலங்கள்தோறும் மக்களிடையே வழங்கி வந்த ஆடை ஆபரண சிறப்புக்களை இந்த ஓவியங்கள் தெரியப்படுத்துகின்றன. அவளது ஆடை ஆபரணங்கள் அவளை மகாராணியாகக் காட்டுகின்றன. அவளுக்கு அருகில் நின்று அவள் இடும் பிச்சையை சிவபெருமான் ஏற்கின்றார். இந்த ஓவியங்கள் சிலவற்றில் அம்பிகை அமர்ந்தவாறு உணவிடுவதையும் சிலவற்றில் எழுந்து நின்று உணவிடுவதையும் காண்கிறோம். அன்னபூரணியின் கரத்திலுள்ள அன்னபாத்திரமும் கரண்டியும் கலை எழில்மிக்கதாக இருக்கின்றன. வடநாட்டுப் பாணியில் அமைந்த இந்த ஓவியங்கள் பரவலாக அன்பர்களால் போற்றப்படுகின்றன.

அன்னப்பனும் அன்னபூரணியும்
அம்பிகை அன்னபூரணியாக இருப்பதைப் போலவே சிவபெருமான் அன்னப்பனாக இருக்கிறான். அவன் அன்னத்தின் வடிவமாவான். சிவபெருமானை அன்ன வடிவில் வழிபடும் விழாவே ஐப்பசிப் பெளர்ணமி அன்னாபிஷேக விழாவாகும். இந்நாளில் இறைவன் மீது சோற்றைச் சாற்றி அதன் மீது வடை, அதிரசம் போன்றவற்றை அலங்காரமாக அணிமணிகளாகச் செய்து இறைவனை அன்ன வடிவினனாக வழிபடுகின்றனர். ஆழ்வார் ‘‘உண்ணும் சோறும் பருகும் நீரும் கண்ணனே’’ என்றார். இறைவன் அன்னமாக இருக்கிறான். அவனது அம்சமான அன்னத்தை உண்ணும்போது ஒரு நிறைவும் புதியதெம்பும் சக்தியும் உண்டாகின்றன.

அப்போது மனத்திற்கும் உடலுக்கும் நிறைவு உண்டாகிறது. அந்த நிறைவை (பூரணத்தை) அருள்பவளாக சக்தி இருக்கிறாள். மலராகச் சிவனும், அதன் மணமாகச் சக்தியும், மணியாகச் சிவனும், அதன் ஒளியாகச் சக்தியும் இணைந்திருப்பது போல அன்னமாக (உணவாகச்) சிவனும் அதனால் உண்டாகும் நிறைவாக பராசக்தியும் இருக்கின்றனர். இறைவன் அன்னப்பனாகவும், இறைவி அன்னபூரணியாகவும் இணைந்தே இருக்கின்றனர். சிவபெருமான் அன்னப்பன் என்ற பெயரில் அருள்பாலிப்பது போலவே அவரது ஆணையை ஏற்று அப்படியே நடத்தும் பைரவ மூர்த்திக்கும் அன்னப்பன் என்பது பெயரானது.

அன்ன விநோதனும் - அன்னபூரணியும்
அன்னபூரணிதேவி பராசக்தியின் அம்சமாக இருந்தாலும், சிவாலயங்களில் அவளைச் சிவபெருமானின் தேவியாகத் தனிக்கோயில் நாச்சியாராக வைத்து வழிபடும் வழக்கம் இல்லை. அவளைத் தனித்தெய்வமாகத் தனிக்கோயில் வைத்து வழிபடும் வழக்கமே உள்ளது. சோறுடைய நாடு என்று போற்றப்படுவதும், தென்னகத்தின் நெற்களஞ்சியமாக இருப்பதுமான சோழநாட்டில் சில ஊர்களில் சிவபெருமானின் தனிக்கோயில் நாச்சியாருக்கு அன்னபூரணி என்ற பெயர் வழங்குகிறது. இவள் அன்னபாத்திரம் சட்டுவம் ஏந்தியிருப்பதில்லை. பிற ஆலயங்களில் இருப்பது போலவே நான்கு கரங்களுடன் தாமரை, ஜெபவடம், அபய, வரத முத்திரைகளைத் தாங்கியுள்ளார்.

இவற்றில் பெருமை பெற்றது திருச்சோற்றுத் துறையாகும். திருவையாறுக்கு அருகில் அமைந்துள்ள திருச்சோற்றுத்துறை திருவையாற்று சப்தஸ்தானத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள இறைவனின் பெயர் தொலையாச் செல்வர். இவருக்குச் சோற்றுத்துறை அப்பர் என்பதும் பெயராகும். வடமொழியில் இதனை ஓதவனனேசுவரர் என்று அழைக்கின்றனர். ஓதனம் என்ற வடமொழிச் சொல்லுக்குச் சோறு அல்லது உணவு என்பது பொருள். இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் பெயர் அன்னபூரணி என்பதாகும்.

இவள் இறைவன் அளிக்கும் சோற்றை அன்பர்களுக்கு அளித்து அவர்களைப் பூரணத்துவம் அடையச் செய்கிறாள். இவள் நாம் நினைக்கும் வகையில் அன்ன பாத்திரம் கரண்டியுடன் அமர்ந்த கோலத்தில் இல்லை. நான்கு கரங்களுடன் நின்ற கோலத்திலேயே காட்சி தருகிறாள். இத்தலத்தில் ஒரு சமயம் வயல்களில் ஒன்று சோறாகவே விளைந்ததாம். அதை அப்படியே எடுத்து அன்பர்கள் அருந்தி மகிழ்ந்தார்களாம். அந்த வயலுக்கு அன்னம் படைத்த வயல் என்பது பெயராயிற்று. இங்கு வாழ்ந்து வந்த அருளாளன் என்ற வேளாளனுக்குச் சிவபெருமான் ஆணையின்படி அம்பிகை அட்சய அன்னபாத்திரம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.

மதுரை அடுத்த திருஆப்பனூர் என்னும் தலத்தில் ஓரன்பர் மணலை உலையிலிட்டுச் சமைக்கச் சிவபெருமான் அந்த மணலைச் சோறாக்கினார். அதனால் அவருக்கு அன்ன விநோதர் என்பது பெயராயிற்று. கும்பகோணம் வட்டத்தில் அன்னவாசல் என்னும் ஊர் உள்ளது. இங்குள்ள சிவாலயத்தில் வீற்றிருக்கும் பெருமானுக்கு அன்னபூரணேசுவரர் என்பது பெயராகும். அன்னை அன்னபூரணி என்று அழைக்கப்படுகிறாள். கும்பகோணம் - நீலத்த நல்லூர் சாலையில் உள்ள அரூரில் தான்தோன்றீசுவரர் ஆலயம் உள்ளது. இங்கு எழுந்தருளியிருக்கும் அம்பிகையின் பெயர் அன்னபூரணியாகும். இவள் வடிவம் பெரியதாகவும் அழகாகவும் இருக்கிறது.

குறையாத நிறையாத பாத்திரங்கள் (அட்சய பாத்திரமும் - பிரம்ம கபாலமும்)
சிவபெருமானின் கரத்தில் பிரம்மனின் தலையோடாகிய பாத்திரம் இருக்கிறது. இதனைப் பெரிய கபாலம் எனவும் கூறுவர். கபாலத்தை ஏந்துவதால், சிவபெருமானுக்குக் கபாலி என்பது பெயரானது. அந்தக் கபாலம் எப்போதும் நிறைவதில்லை. யார் எதைப் போட்டாலும் உடனே அதனோடு ஒன்றி விடும். அதனால் அது காலியாகவே இருக்கும். அது பலிபாத்திரம் எனவும் அழைக்கப்படும். புராணங்கள் திருமால் தனது நெற்றியில் இருந்து உதிரத்தைப் பெருகச் செய்து அதை நிறைத்தார் என்றும், மகாலட்சுமி உணவிட்டு நிறைத்தாள் என்றும் கூறுவர். ஆனாலும், அது ஏதுமற்ற வற்றல் கலனாகவே இருக்கிறது. உணவு இருந்த ஈரப்பசை கூட இல்லாது வற்றிய கலமாக இருக்கிறதாம்.

அவனது தேவியான அன்னபூரணி ஒரு பாத்திரத்தை ஏந்தியுள்ளாள். அது உணவுப்பாத்திரம். அள்ள அள்ளக் குறையாதது. எடுக்க எடுக்கத் தொடர்ந்து நிறைவது. அவள் அந்தப் பாத்திரத்தில் இருந்து தங்கக் கரண்டியால் உணவை எடுத்து அன்பர்களுக்கு வழங்குகிறாள். அதில் ஒரு சிறு பகுதியை உண்டதுமே வயிறும் மனமும் நிறைந்து விடுகின்றன. எப்போதும் வயிறு, மனம் ஆகியவற்றை நிறையச் செய்பவளாக இருக்கும் அன்னையை அன்னபூரணி என்று அழைக்கிறோம். இப்படி கணவன் மனைவியுமாக இருக்கும் இருவரும் ஏந்தும் பாத்திரங்கள் முரண்பட்ட எதிரெதிரான குணங்களைக் கொண்டிருப்பது சிந்தனைக்கு விருந்தாக இருக்கின்றது.

காசி யாத்திரையும், அன்னபூரணி பரிசளிப்பும்
முன்னாளில் காசி யாத்திரை மேற்கொண்டு கங்கையில் நீராடி காசி விசுவநாதரையும், அங்குள்ள அன்னபூரணி முதலான தெய்வங்களையும் தரிசித்து மீள்வது எளிது அல்ல. அப்படிச் சென்று வருபவர்கள் அங்கிருந்து உலோகத்தால் செய்யப்பட்ட சிறிய அளவிலான அன்னபூரணியின் திருவுருவங்களை வாங்கி வந்து அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் அளிப்பது வழக்கம். அன்பர்கள் வாய் அகன்ற சிறிய பாத்திரத்தில் அரிசியை நிரப்பி, அதன் மீது தமக்கு அளிக்கப்படும் அன்னபூரணியின் திருவுருவத்தை வைத்துப் பூஜை மாடத்தில் நிலைப்படுத்துவது வழக்கம்.

தினமும் சமைக்கும்போது அன்னபூரணி பாத்திரத்தில் இருக்கும் அரிசியில் இருந்து ஓரிரு அரிசிகளையாவது எடுத்துச் சமையல் அரிசியில் சேர்த்துக் கொள்வர். பூஜை மாடத்து அன்னபூரணி பாத்திரத்தில் அரிசி குறைந்ததும் நல்லநாள் பார்த்து அதில் அரிசியை நிரப்புவர். அல்லது வெள்ளிக்கிழமையில் அரிசியை நிரப்புவுது வழக்கம். சில வீடுகளில் ஒன்றுக்கும் மேலாக பல அன்னபூரணி சிலைகளையும் வைத்திருக்கின்றனர்.

காசியின் முதன்மைத் தெய்வமாகக் காசி விஸ்வநாதர் இருந்தாலும், காசியின் மகாராணி அன்னபூரணியே ஆவாள். அவள் அருளால் காசியில் வாழும் எவரும் எந்த நாளிலும் பட்டினியாக இருந்ததில்லை. அதனால் அவள் உருவத்தைக் காசி நகரில் இருந்து வாங்கி வந்து அன்பர்களுக்கு கொடுப்பது வழக்கம். அன்பர்களும் காசி அன்னபூரணியே தம் வீட்டுக்கு வந்ததாக எண்ணி அதை பெற்றுப் பூசை மாடத்தில் வைத்து வழிபடுவது வழக்கம். முன்னாளில் பெரும்பாலான வீடுகளில் கங்காதீர்த்தமும், காசி அன்னபூரணியின் திருவுருவமும் பூசையில் இருந்து வந்துள்ளது.

காஞ்சிபுரம் காமாட்சி கோயிலில் அன்னபூரணி
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலின் முதற் பிராகாரத்தில் அம்பிகைக்கு முன்னால் உள்ள காயத்ரி மண்டபத்திற்குச் செல்லும் வழியில் அன்னபூரணியின் சந்நதி அமைந்துள்ளது. இது தென்கிழக்குத் திசையை நோக்கியதாகும். பண்டகாசுரன், பண்டாசுரன் போன்ற அசுரர்களை வதம் செய்த பாவம் தீர, அம்பிகையே அன்னபூரணியாக ஒரு கையில் அன்னபாத்திரமும், மறுகையில் சட்டுவமும் ஏந்தி, தர்மபீடத்தில் அமர்ந்து, 32 தர்மங்களைச் செய்ததை நினைவூட்டும் வகையில், இந்தச் சந்நதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்நதியின் நேர்பார்வையில் உள்ள வாசல், தர்மத் துவாரம் என்றும், வலதுபுறத்தில் உள்ள வாசல் பிட்சா துவாரம் என்றும் அழைக்கப்படுகின்றன.

அன்பர்கள் தர்மத் துவாரத்தின்  வழியாக அன்னபூரணியை வணங்கி வழிபட்டபின், பிட்சா துவாரத்தின் வழியாக பவதி பிட்சாம்தேஹி அன்னபூரணி என்று அவளிடம் பிரார்த்திக்க வேண்டும். இந்த அம்பிகைக்கு தினமும் வழிபாடு நடத்தப்படுகிறது. ஐப்பசி, அமாவாசை மாலை வேளையில், பலவிதமான நிவேதனங்களை வைத்து சிறப்பு தீபாராதனையும் நிவேதனங்களும் நடைபெறுகின்றன. ஐப்பசி பெளர்ணமியன்று மாலை அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. கார்த்திகை பெளர்ணமி நாளில் பஞ்சதீபங்கள் ஏற்றப்பட்டு, அவற்றில் ஒன்று இந்த அன்னபூரணியின் சந்நதியிலும் வைக்கப்படுகிறது.

திருவீழிமிழலை அன்னபூரணி
தானம் செய்வதும் தருமம் செய்வதும் வாழ்வில் உயர்ந்த பலனை அளிக்கின்றன. அது பாவத்தைப் போக்கிப் புண்ணியத்தை அளிக்கிறது. அனைத்து தலங்களுமே தானம், தருமம் தவம் ஆகியவற்றைச் செய்வதற்கு உரிய தலங்களாக இருக்கின்றன, என்றாலும்  சில தலங்களில் சில தருமங்கள் ஒன்றுக்குப் பன்மடங்காக அளிக்கின்றன. இவ்வகையில் அன்னதானம் செய்வதற்குரிய தலங்களில் ஒன்றாக இருப்பது திருவீழிமிழலையாகும். இது அன்னத்தின் அன்னபூரணி க்ஷேத்திரமாக இருக்கிறது. சோழநாட்டுப் பாடல் பெற்ற தலம். மேலும், திருமால் தவம் செய்து சக்ராயுதம் பெற்ற இடமுமாகும். ஒரு சமயம் திருமால், ததீசி என்ற முனிவரிடம் கோபம் கொண்டு அவரை அழிக்க விரும்பினார். தனது வலிய சக்ராயுதத்தை அவர் மீது ஏவினார்.

அந்தச் சக்ராயுதம் முனிவரின் உடலை மோதி வெட்ட முயன்றது. முனிவரின் தேகம் வஜ்ர மயமாக இருந்ததால், அந்தச் சக்கரம் கூர் மழுங்கித் தேய்ந்து அழிந்தது. திருமால், தனது வலிமைமிக்க சக்ராயுதம் அழிந்ததால் பெரிய வருத்தம் அடைந்தார். திருமால் தனது சக்கரத்தை இழந்து போனதை அறிந்து அசுரர்கள் அவர் மீது போர் தொடுத்தனர். வலிமைமிக்க ஆயுதம் கைவசம் இல்லாததால் திருமால் அவர்களுக்கு அஞ்சி ஓடி ஒளிய வேண்டியதாயிற்று. தேவர்கள் அவரது நிலையைக் கண்டு துன்பமடைந்தனர். அவர்கள் திருமாலிடம், ‘‘மதுசூதனா! சிவபெருமான் ஜலந்தரனை அழிப்பதற்காக ஒரு சக்கரத்தைத் தோற்றுவித்தார். அது அவனை அழித்த பின் அவரது திருவடியில் பதிந்திருக்கிறது. நீங்கள் சிவபெருமானை ஆராதித்து அதைப் பெற்றுக் கொள்ளுங்கள்’’ என்றனர்.

அவர்களது யோசனையின்படி திருமால் பூவுலகிற்கு வந்தார். வீழிச் செடிகள் நிறைந்த வனம் ஒன்றில் அழகிய சிவலிங்கம் இருக்கக் கண்டார். அங்கு அவர் மனதில் அமைதி குடிகொண்டது. அந்த இடம் சிவபூஜைக்கு ஏற்ற இடம் என்று தீர்மானித்தார். அங்கிருந்த லிங்கத்தைத் தொழுதார். வானத்திலிருந்து அழகிய பெரிய விமானமொன்றை எடுத்து வரச் செய்து அந்த லிங்கத்திற்கு ஆலயமாக அமைத்தார். விண்ணிலிருந்து கொண்டு வரப்பட்டதால் அதற்கு விண்ணிழி விமானம் என்பது பெயராயிற்று. திருமால் அந்த லிங்கத்திற்கு வீழிநாதர் என்று பெயர் சூட்டி தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு அர்ச்சித்து வந்தார். சிவபெருமான் அவருடைய ஒப்பற்ற பூசையால் பெரிதும் மகிழ்ந்தார். அவருக்கு அருள்புரியத் திருவுள்ளம் கொண்டார். என்றாலும் அவருடைய பக்தியின் மாண்பை வெளிப்படுத்தும் வகையில் ஒரு திருவிளையாடல் புரியக் கருதினார்.

அவர் பூசை செய்து வரும் வேளையில் பூசைக்கு வைத்திருந்த ஆயிரம் மலர்களில் ஒன்றை மறையும்படிச் செய்தார். அர்ச்சனை செய்து கொண்டே வந்த திருமால் வழிபாட்டில் ஒரு மலர் குறைவதைக் கண்டார். வேறு பூவைப் பறித்து வர எழுந்தால் பூசையில் குறைவு நேரிடும் என்பதால் தனது மலர் போன்ற கண்ணைப் பெயர்த்து ஆயிரமாவது மலராக இட்டு அர்ச்சனையை நிறைவு செய்தார். சிவபெருமான் சிவலிங்கத்திலிருந்து வெளிப்பட்டு அவருக்குக் காட்சியளித்தார். திருமாலுக்கு அழகிய கண்களை அளித்ததுடன் அவருக்குத் தாமரைக் கண்ணன் என்ற பெயரையும் சூட்டினார். வடமொழியில் அது பத்மாக்ஷன் என வழங்குகிறது. பின்னர் அவர் விரும்பியபடியே தனது பாதத்தில் பதிந்திருந்த சக்ராயுதத்தை எடுத்து அவருக்குத் தந்தார். திருமால் அதைப் பெற்று மகிழ்ந்தார். அன்று முதல் சிவபெருமானுக்குச் ‘‘சக்ரதானர்’’ என்பது பெயராயிற்று.

அன்று முதல் வீழிமிழலை வரதான புரங்களில் ஒன்றாகவும், மகிமைகள் பெற்ற தலமாகவும் ஆனது. அதனால் அனேக முனிவர்களும், ரிஷிகளும், பக்திமான்களும் இங்கு வந்து தங்கி சிவவழிபாடு செய்தனர். அப்படி இங்கு வந்து தங்கிய முனிவர்களில் கார்த்தியாயனர் என்பவரும் ஒருவர். இவரது மனைவி சுமங்கலை இவர்களுக்கு நெடுநாட்களாக மகப்பேறு வாய்க்கவில்லை. அவர்கள் தமக்கு ஒரு பெண் பிறக்க வேண்டும் என்றும், அவளைச் சிவபெருமான் வந்து திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்றும் விரும்பினர். முனிவர் பிள்ளைபேறு வேண்டிப் பிரார்த்தித்து புத்திரகாமேஷ்டி வேள்வியைச் செய்தார். வேள்வித் தீயின் நடுவில் அம்பிகை அன்னபூரணியாகத் தோன்றினாள். அவளை முனிவரும் அவரது மனைவியும் வணங்கினர்.

அவள், ‘‘காசியில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதைத் தீர்க்க நான் அங்கிருக்க வேண்டியுள்ளது. சில நாட்களில் அது தீர்ந்ததும் இங்கு வந்து உங்களுக்கு மகளாகத் தோன்றுவேன்.’’ என்று அம்பிகை வரமளித்து விட்டு மறைந்தாள். சில நாட்கள் கழித்து பராசக்தி அன்னபூரணி தாம் வாக்களித்தபடியே அவர்களுக்கு மகளாகத் தோன்றினாள். அவளுக்குக் கார்த்தியாயினி என்று பெயரிட்டு அழைத்தனர். உரிய பருவத்தில் சிவபெருமான் வந்து அவளை மணந்து கொண்டார். அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருக் கல்யாண விழா நடைபெறுகிறது. திருவீழிமிழலையில் உள்ள விண்ணிழி விமானம் என்னும் பெயர் கொண்ட கருவறையில் திருமால் ஆயிரம் தாமரை மலர் கொண்டு போற்றிய சிவபெருமான் வீழிநாதர் என்ற பெயருடன் அழகிய சிவலிங்கமாக எழுந்தருளியுள்ளார்.

அவருக்குப் பின்புறம் ஏறத்தாழ எட்டடி உயரம் கொண்டவராகச் சிவபெருமானும், ஆறடி உயரம் கொண்டவளாக திருமணக்கோலத்தில் அன்னை பராசக்தியும் நிற்கின்றனர். இங்குள்ள சிவபெருமானை நித்த மணவாளன் என்றும், அம்பிகையைக் கார்த்தியாயினி என்றும் அழைக்கின்றனர். கருவறையின் உள்ளேயே கோமுகிக்கு அருகில் அன்னபூரணியின் வடிவமும் இருக்கிறது. இதை வெளியில் இருந்து பார்க்க முடியாது. இங்கு பராசக்தி அன்னபூரணியாகக் காட்சியளித்ததுடன், முனிவர் தம்பதிகளுக்கு மகளாகவும் வாழ்ந்து அருள் புரிந்திருக்கிறாள். அவளைத் தேடி வந்து சிவபெருமான் திருமணம் புரிந்து கொண்டிருக்கின்றார்.

இந்தக் காரணங்களால் திருவீழிமிழலை அன்னபூரணித் தலமாகவும், கல்யாணம் அருளும் தலமாகவும், கண்ணொளி வழங்கும் தலமாகவும், உடல்வலிமை தலமாகவும் போற்றப்படுகிறது. கருவறையில் சிவலிங்கத்திற்கு அருகில் அன்னபூரணி வீற்றிருப்பதும் வேறெங்கும் காண முடியாததாகும். இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு வாழ்வில் எப்போதும் வேண்டியபோது விரும்பியவாறு உணவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசு நாயனாரும் வருகை புரிந்து சில நாட்கள் தங்கி இருந்தார்கள். அப்போது இப்பகுதி பஞ்சகாலமாக இருந்தது. இறைவன் அவர்களுக்கு நாள்தோறும் படிக்காசு வழங்கினான். அதைக் கொண்டு அவர்கள் தம் அடியவர்களுக்கு அமுதூட்டினார். இப்படி அடியவர்கள் அன்னதானம் செய்த தலமாகவும் திருவீழிமிழலை விளங்கியது.

ஊரிடும் பிச்சை கொள்வதென்னே..?
இன்று நாம் ஆதரவற்றவர்களாகவும், உழைத்து வாழ இயலாத, உடல்குறைவால் வாடுபவர்களுமாக இருக்கும் எளிய மக்களுக்கு உணவிடுதலையும், சில்லறைக் காசுகளைப் போடுவதையும் பிச்சை இடுதல் என்கிறோம் உண்மையில் பிச்சையிடுதல் என்பது உயர்ந்த ஞானவான்களுக்கு உணவு இடுதலைக் குறிப்பதாகும். இப்போதும் வேதாந்த மடங்களில் இருக்கும் தத்துவ ஞானிகளுக்கும், துறவிகளுக்கும் உணவிடுதலை பிச்சை இடுதல் என்றே அழைக்கிறோம். இதனைப் பிட்சாவந்தனம் என்பர். இதற்கு பிச்சையிட்டு வந்தித்தல் (வணங்குதல்) என்பது பொருளாகும். முன்னாளில் தவ வாழ்க்கை மேற்கொள்பவர்களும், தத்துவக் கல்வி பயிலும் மாணவர்களும் பிச்சை எடுத்து உண்பதே வழக்கம். இதற்கான நெறிமுறைகள் அனேகம் இருக்கின்றன.

இப்படி பிச்சை ஏற்கச் செல்பவர்கள், ‘‘பவதி பிட்சாந்தேஹி அன்னபூரணி’’ என்று விளிப்பது வழக்கம். இதற்கு பிச்சை கேட்டு வந்திருக்கிறேன். பிச்சை இடுவாய் அன்னபூரணி என்பது பொருளாகும். பிச்சை இட வரும் பெண் ஒரு தட்டில் அன்னத்தையும் மறுகையில் அதைப் போடும் கரண்டியுடன் வரும் கோலம் அன்னபூரணி வடிவை நினைவூட்டுவதாக இருப்பதாலும், அவள் அளிக்கும் சோற்றை உண்பதால் உடலும் மனமும் நிறைய வேண்டும் என்பதாலும் அவளை அன்னபூரணியாகவே போற்றுவது வழக்கம். ஊருக்குப் படியளந்து உயிர்களை வாழ வைப்பவன் சிவபெருமான். அந்தச் சிவபெருமானே திருவிளையாடல் புரியக் கருதி பிட்சாடனராகச் செல்லுகிறான்.

அவனும் பிச்சை ஏற்பவர், வழக்கப்படி கூறும் ‘‘பவதி பிட்சாந்தேஹி’’ அன்னபூரணி என்றே கேட்கிறான். அன்னபூரணியைத் தன் இடப்பாகத்தில் கொண்டிருப்பவனும் அவளுக்கு அந்த தகுதியை வழங்கியவனுமான அவனே இப்படிக் கேட்பது வியப்பாக இருக்கிறதல்லவா? காஞ்சிபுரத்திற்கு வந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள் கச்சி ஏகம்பரை வழிபட்டார். பின்பு ஓணகாந்தன்தளி என்னும் ஆலயத்தை அடைந்து அங்கு வீற்றிருக்கும் பெருமானைப் போற்றிப் பதிகம் பாடினார். அங்கு அருளிச் செய்த பதிகத்தில் சிவபெருமானிடம், ‘‘பெருமானே உமது மனைவியான பராசக்தி யார் வந்து எதைக் கேட்டாலும் இல்லை என்னாது வழங்கும் காமகோட்டத்தை இவ்வூரிலேயே அமைத்து அதில் அறப்பெருஞ்செல்வியாக வீற்றிருந்து அறம் செய்து கொண்டிருக்கின்றாள்.

அப்படி இருக்க, நீரோ ஊர்ப் பெண்கள் இடும் பிச்சைக்காக வீதிகளில் அலைந்து பிச்சை கேட்டுத் திரிகின்றீர்களே. அது மிகவும் விந்தையாக இருக்கிறது என்கிறார்? அவர் ‘‘கச்சிமூதூர்க் காமக் கோட்டம் உண்டாக நீர் ஊரிடும் பிச்சை கொள்வதென்னே ஓணகாந்தன் தளியுளீரே’’ என்று கேட்கின்றார். அன்னை காமாட்சி அன்னபூரணியாக இருக்கச் சிவபெருமான் ஊரவர் இடும் பிச்சைக்காக பூத கணங்களுடன் வீதிகளில் ஆடியும் பாடியும் வீணை இசைத்தவாறும் செல்வது விந்தை தானே?


கிராமீய தெய்வ ஆலயங்களில் அன்னபூரணி
அன்னபூரணி என்றதும் நமக்கு அன்னை பராசக்தியே நினைவுக்கு வருகிறாள். இப்போது நாம் சொல்லப்போவது அன்னையின் அம்சத்தில் தோன்றி கிராமிய தெய்வங்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் அன்னபூரணிகளையாகும். பெரும்பாலும் இவை காளி வடிவங்களாகவே இருக்கின்றன.

செப்பறை அன்னபூரணி
நெல்லை மாவட்டத்தில் திருநெல்வேலியில் இருந்து ஏறத்தாழ 10 கி.மீ. தொலைவில் ராஜவல்லிபுரம் என்னும் ஊர் உள்ளது. ஊருக்குத் தெற்கே 2 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆறு ஓடுகிறது. அங்கு ஆற்றின் வடகரையில் அழகிய கூத்தர் கோயில் என்னும் பெரிய சிவாலயம் உள்ளது. இங்கு கோயிலைச் சுற்றி செப்பறை என்னும் ஊர் இருந்ததாகவும், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் அவ்வூரே அழிந்து விட்டதாகவும் வரலாறு கூறுகிறது. பின்னாளில் ஆறை அழகப்ப முதலியார் என்னும் இப்பகுதியின் ஆட்சியாளர் கோயிலை மட்டும் முன்பிருந்தபடியே புதுப்பித்துக் கட்டியதாகக் கூறுகின்றனர்.

இவ்வூரின் காவல்தெய்வமாக இருப்பவள் அன்னபூரணி என்னும் காளி தேவி ஆவாள். இவள் ஆலயம் ராஜவல்லிபுரத்திலிருந்து செப்பறை அழகிய கூத்தர் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ளது. வடக்கு நோக்கிய இக்கோயிலில் காளிதேவியே அன்னபூரணி என்னும் பெயரில் வீற்றிருக்கிறாள். பழனியில் சாதுசாமிகள் என்பவர் உடல் ஊனமுற்றவர்களுக்கும் சாதுக்களுக்கும் நண்பகல் உணவிட வேண்டும் என்று விரும்பினார்கள். அப்போது அத்தலத்தில் மலையில் வீற்றிருக்கும் கிராமதேவதையான அழகு நாச்சியம்மன், அவரது அன்னதான பணிக்குத் தான் துணையிருப்பதாக வாக்களித்ததாக அவரது வரலாறு கூறுகிறது.

திருவெற்றியூர் அன்னபூரணி
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் திருவெற்றியூர், தொண்டியிலிருந்து தென்மேற்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது. காளையார் கோயிலுக்கு அருகிலும் உள்ள தலம். இங்குள்ள சிவன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் வன்மீகநாதர், பழம்புற்றுநாதர் எனவும், இறைவி பாகம் பிரியாள் என்றும் அழைக்கப்படுகின்றனர். தலமரம் வில்வம். திருமாலுக்கு ஏற்பட்ட நோயை இத்தல இறைவனை வழிபட்டு அவர் போக்கிக் கொண்டதாகக் கூறப்படுவதால், மக்களுக்கும் வேண்டுதல் தலமாகத் திகழ்கிறது. மக்கள் ஆடு, மாடு, கோழி போன்றவற்றைக் காணிக்கையாகச் செலுத்துகின்றனர். சிவகங்கை சமஸ்தானத்துக்கு உட்பட்ட கோயில்.

இவ்வூரில் கிராம தேவதையாக வீற்றிருக்கும் அம்மனுக்கு அன்னபூரணி என்பது பெயராகும். இவள் அசுரனைச் சம்ஹரித்து அன்பர்களுக்கு அருள்புரிந்தவளாவாள். மண்ணுலகில் பலரையும் துன்புறுத்திக் கொடுமைகள் செய்து வந்த பண்டாசுரன் என்ற அசுரனை அழிக்க அன்னை பராசக்தி மண்ணில் அவதரித்தான். பண்டாசுரன் பல்வேறு வடிவங்களில் உருமாறி அன்னையை ஏமாற்றினான். உலகைக் காக்கும் அன்னை, அசுரன் உருமாறி வேடிக்கை காட்டுவதைப் பார்த்துப் புன்னகைத்தாள். இறுதியில் அவனுக்கு அழிவு காலம் வந்தது. அவனை அழிக்க உறுதி பூண்டு போரிட்டு அன்னபூரணி அம்மன் வெற்றி பெற்றாள். அன்னை வெற்றி பெற்ற இடமே வெற்றியூர். அதனால் இவ்வூருக்கு வெற்றியூர் எனப் பெயராயிற்று.

கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி வேங்கை மார்பனோடு போரிட்டு வெற்றி பெற்ற இடமும் இதுவேயாகும். அதனாலும் இவ்வூரின் பெயர் வெற்றியூர் என வழங்கலாயிற்று. இதனைக் காளையார் கோயில் புராணமும், அன்னபூரணி அம்மன் கும்மிப் பாட்டும் உறுதிப்படுத்துகின்றன. மேல்மலையனூர் அன்னபூரணி மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் சிறிய சந்நிதியில் ஒரு பெண் தெய்வம் நின்ற கோலத்தில் இருக்கிறது. இத்தேவியை ஆயிரம் பேருக்கு அன்னம் படைத்த அன்னபூரணி என்கின்றனர். ஒரு சமயம் பெருந்திரளான மக்கள் இங்கு குழுமியபோது உணவின்றித் தவித்தனர். அப்போது அங்காள பரமேஸ்வரி ஒரு பெண்ணாகத் தோன்றி, அங்கிருந்த அனைவருக்கும் உணவு கொடுத்தாள். பிறகு அவள் நிலையாக நின்றாள். அன்பர்கள் அவளுக்கு அங்கு நினைவு ஆலயம் அமைத்தனர். அதுவே ஆயிரம் பேருக்கு அன்னம் படைத்தவள் ஆலயமாகத் திகழ்கிறது.

கேரளாவில் அமைந்துள்ள அன்னபூரணி ஆலயங்கள்
பரசுராம க்ஷேத்திரம் என்று புராணங்கள் போற்றும் கேரளாவில் அன்னபூரணிக்கென அமைந்த ஆலயங்கள் சில உள்ளன. அவற்றில் மிகவும் புகழ் பெற்றது புதுக்கோடு அன்னபூரணி க்ஷேத்திரமாகும். பாலக்காடு மாவட்டத்தின் மேற்கு எல்லையில் அமைந்திருப்பது புதுக்கோடு என்னும் ஊராகும். திருச்சூரின் எல்லையும் இதற்கு அருகிலிருக்கிறது. பாலக்காட்டையும், திருச்சூரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடக்கன்சேரி என்னும் நகரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது. திருச்சூரிலிருந்தும், பாலக்காட்டிலிருந்தும் ஏறத்தாழ 40 கி.மீ. தொலைவில் புதுக்கோடு அமைந்துள்ளது. மேற்படி நகரங்களில் இருந்து நிறைய பேருந்து வசதிகள் இருக்கின்றன.

பரசுராம க்ஷேத்திரமான கேரளாவில் பரசுராமர் மகாதேவரான சிவாலயங்களையும், மகாவிஷ்ணு ஆலயங்களையும் அமைத்ததுடன் 108 பகவதி ஆலயங்களையும் அமைத்தார். இதில் ஒன்றாகவும், சிறப்பு மிக்கதாகவும் இருப்பது இந்த அன்னபூரணி ஆலயமாகும். பெரிய இரண்டு பிராகாரங்களுடன் திகழும் இக்கோயிலின் தலைவாயில் கிழக்குநோக்கி இருந்தாலும் கருவறை மேற்கு நோக்கியவாறு அமைந்துள்ளது. கருவறையில் நான்கடி உயரம் கொண்டவளாக நாற்கரங்களுடன் பகவதி இருக்கிறாள். மேற்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன் கரங்களில் அபய வரத முத்திரைகளைத் தாங்கியுள்ளாள். (பொதுவாக அன்னபூரணி வடிவம் இரண்டு கரங்களுடன் வலது கரத்தில் பரிமாறும் கரண்டியையும், இடக்கரத்தில் உணவுப் பாத்திரத்தையும் ஏந்தியவளாகவே அமைந்திருக்கும். கேரளாவிலும், கர்நாடகத்திலும் அமைந்துள்ள பெரும்பாலான அன்னபூரணி வடிவங்கள் அப்படி இல்லாமல் மேற்கரங்களில் சங்கு, சக்கரம் முன்கரங்களில் அபய வரத முத்திரைகளைத் தாங்கி நின்ற கோலத்திலேயே காட்சி தருகின்றனர்.)

இங்கு இவளைச் சாந்ததுர்க்கை என்றும் போற்றுகின்றனர். இங்கு நவராத்திரி விழா பெருஞ்சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. யானைகள் மீது அன்னபூரணி ஊர்வலமும் அன்னபூரணிக்குத் தேரோட்டமும் நடத்தப்படுகிறது. இத்தலத்தில் அன்னபூரணிக்குச் செய்யப்படும் சந்தனக் காப்பு தனிச் சிறப்புமிக்கதாகவும் உள்ளது. கோயிலின் முதற்பிராகாரத்தின் நான்கு பக்கங்களிலும் மாடங்கள் அமைந்துள்ளன. இவை வாதில் மாடம் என்று அழைக்கப்படுகிறது. முன்னாளில் இங்கு அறிஞர்கள் கூடி விவாதித்துக் கல்வியைப் பெருக்கினர். மாணவர்களுக்குப் பாடங்களைப் போதித்து வந்துள்ளனர். (இந்தப் பிராகாரத்தில் கருவறை நோக்கியவாறு தங்கக் கொடிமரம் அமைந்துள்ளது. நவராத்திரியின் போது கொடியேற்றி விழா நடத்தப்படுகிறது)

இரண்டாவது பெரிய பிராகாரம் ஆனைப் பந்தி என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏராளமான ஆனைகள் இருந்ததாகக் கூறுகின்றனர். இப்போது நவராத்திரியின் போது இங்கு கலை விழாக்கள் நடத்தப்படுகின்றன. கோயிலில் நாள் வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன. நாள்தோறும் பகலிலும், மாலையிலும் அன்பர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்தலத்தில் அம்பிகைக்கு நிவேதிக்கப்படும் பாயசம் மிகவும் புகழ்பெற்றதாகும். (இது இடிச்சுட்டு பிழிஞ்சின பாயசம் என்று அழைக்கப்படுகிறது) அன்னபூரணி ஆலயத்திற்கு வடக்கில் மகாதேவர் (சிவன்) ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சிவராத்திரியின் போது பெரிய கலை விழாக்களும் அன்னதானமும் சிறப்பாக நடைபெறுகின்றன.

இந்தப் புதுக்கோடு அன்னை அன்னபூரணியின் அருளால் முழுவதும் செழிப்பாக வளத்துடன் இருப்பதாகக் கூறுகின்றனர். கோயிலின் நான்கு பக்கங்களிலும் பெரிய அறிஞர்கள் வாழ்ந்த அக்கிரகாரங்கள் இருக்கின்றன. இக்கோயிலை நடுவில் மடம் தேவஸ்தானம் நிர்வாகித்து வருகின்றது. ஆதியில் இந்த அம்பிகை குட்டநாட்டுக்கு அருகிலுள்ள துர்த்தலா என்னுமிடத்தில் இருந்ததாகவும், அங்கிருந்து இங்கு குடியேறிய அந்தணர்களால் இங்கு கொண்டு வந்து நிலைப்படுத்தியதாகவும் கூறுகின்றனர். தமிழகப் பிராமணர்களால் நித்திய பூஜைகளும் நவராத்திரியின்போது தந்திரிமார்களால் சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகின்றன.

செருகுன்னு அன்னபூரணி க்ஷேத்திரம்
கேரளத்திலுள்ள புகழ் பெற்ற மற்றுமோர் அன்னபூரணி க்ஷேத்திரம் செருகுன்னு அன்னபூரணி ஆலயமாகும். மக்கள் இவளைச் செருகுன்னிலம்மா அன்னபூரணேசுவரி என்று அழைக்கின்றனர். இவள் தங்கக் கரண்டியை ஏந்தியிருப்பதாகக் கூறுகின்றனர். கேரளாவிலுள்ள கண்ணணூர் மாவட்டத்தில் தாலிப்பரம்பா என்னுமிடத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்த ஊர் செருகுன்னு. ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவிலுள்ள சிறிய குன்றின் மீது அன்னபூரணி ஆலயம் அமைந்துள்ளது. ஆதியில் இந்தக் குன்று சோற்றுமலையாக இருந்ததாம். சோற்றுக்குன்று என்பதே மருவி செருகுன்று என்றானது என்கின்றனர்.

சிறிய குன்று என்பதை சிறு குன்று என்று அழைக்க அது செருகுன்றானது என்றும் கூறுகின்றனர். கோயில் பசுமை படர்ந்து எழில் மிகுந்த சூழலில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆலயத்தினைக் கட்டும் போது கற்களுக்கு நடுவில் பிடிப்புக்காக அவலோடு வெல்லத்தைக் கலந்து வைத்துக் கட்டியதாக நம்புகின்றனர். கோயிலுக்கு அருகில் ஏறத்தாழ 2½ ஏக்கர் பரப்புள்ள பெரிய குளம் இருக்கிறது. இது எப்போதும் வற்றுவதில்லை என்கின்றனர். இங்கு நவராத்திரி தனிச் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது.

இந்த மாதம் 11-11-2017 அன்று பைரவாஷ்டமி என்று பைரவருக்குரிய நாளாக வழிபடப்படுகிறது. அதையொட்டி,  இந்த இதழில் பைரவர் குறித்த அரிய தகவல்களை அங்காங்கு கொடுத்திருக்கிறோம். படித்துப் பயனடையுங்கள்.
* செட்டிநாடு என்று சொல்லப்படும் நகரத்தார் சீமையில் அஷ்டபைர வர்களுக்கான எட்டு தலங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள திருப்பத்தூர் கோயில் பைரவரின் சிரஸ்தானமாகவும், வைரவன்பட்டி இதய ஸ்தானமாகவும் இலுப்பைக்குடி பாதஸ்தானமாகவும் கூறப்படுகிறது.
* வைரவன்பட்டி கோயிலைச் சார்ந்த நகரத்தார்கள் எழுதத் தொடங்கும் போது வைரவசாமி சஹாயம் என்று எழுதிய பின்னரே விஷயத்தைத் தொடர்ந்து எழுதும் வழக்கம் கொண்டுள்ளனர்.
*கும்பகோணம் மகாமக திருக்குளத்தைச் சுற்றி 16 கோயில்கள் உள்ளன. (மகா லிங்கங்கள்). இவற்றுள் 8வது லிங்கத்தின் பெயர் பைரவேஸ்வரர் லிங்கம், 16வது லிங்கத்தின் பெயர் க்ஷேத்திர பாலேஸ்வரர் லிங்கம் ஆகும்.
*பைரவர் திகம்பரராகத் திகழ்ந்த போதிலும் அன்பர்களுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளித் தருபவர். பண்டை நாட்களில் அரசர்கள் பொக்கிஷ சாலைகளில் பைரவரை நிறுவிச் சிறப்புப் பூஜைகள் செய்து வழிப்பட்டனர். அதனால் நிதிச் சாலையில் பொன் குவிந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கையாகும். அவர் பொன்னை இழுத்துத் தருபவர் என்னும் பொருள்பட ‘‘ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர்’’ என்று அழைக்கப்படுகின்றார்.
*சிதம்பரத்தில் சிவபெருமான் அந்தரத்தராக (வான் வடிவினராக) நடமிடும் பொற்கோயிலின் உள்ளே எழுந்தருளியுள்ள பைரவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என்று அழைக்கப்படுகின்றார். உலாத்திருமேனியாக உள்ள இப்பெருமான் திகம்பர கோலத்தில் நின்றவாறு காட்சியளிக்கின்றார். மேற்கரங்களில் டமருகம் பாசம் விளங்க கீழ்கரங்களில் சூலமும் கபாலமும் உள்ளன. தலை மீது ஜ்வாலாமுடி உள்ளது.
*குழந்தை பாக்கியம் இல்லாத கணவன் மனைவியர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவருக்கு சிகப்பு அரளினால் பைரவ ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்தால் விரைவில் சந்தான பாக்கியம் கிடைக்கும்.
*திபெத்திய, பெளத்த நூல்களில் 84 வகை பைரவத் திருவுருவங்களும், தியான நெறிகளும் கூறப்படுகின்றன. வஜ்ரயான நூல் வஜ்ர பைரவரையும் அவரின் சக்தியாம் வஜ்ரவாராகியையும் குறிப்பிடுகின்றது.
* வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரங்களில் வில்வ தளங்களினாலும், வாசனை மலர்களாலும் பைரவருக்கு ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்வதால் வறுமை நீங்கி செல்வம் பெருகும்.
* ஆந்திர மாநிலத்தில் நாகலாபுரத்திற்கு அருகில் உள்ளது, வைப்புத் தலங்களில் ஒன்றான காரிக்கரை. இப்போது ராமகிரி என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள வாலீசுவரர் ஆலயத்தினையொட்டி பைரவருக்கான தனி ஆலயம் உள்ளது. இது சிறந்த பிரார்த்தனைத் தலமாகும். இந்த சந்நதியில் கல்லாலான நாய் உருவங்கள் நிறைய உள்ளன.
*  சென்னையை அடுத்துள்ள திருஒற்றியூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பைரவருக்கான தனிச் சிற்றாலயம் கருவறை உள்மண்டபம், மகர மண்டபத்துடன் காணப்படுகிறது. கருவறை மீது அழகிய ஒற்றைக் கலசம் கொண்ட விமானம் உள்ளது. இச்சந்நிதிக்கு அருகில் பைரவ தீர்த்தம் உள்ளது.* பைரவர் திருமேனியின் முன்னால் மிளகை சிறு துணியில் சிறு மூட்டையாக கட்டி அகல்விளக்கில் வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்தால் இழந்த பொருளும் சொத்துக்களும் திரும்பக் கிடைக்கும்.
* சூரியன் மகனான சனீஸ்வரன் தன்னுடைய அண்ணன் யமதர்மனால் அலட்சியப்படுத்தப்பட்டு, கௌரவக் குறைவை அடைந்தார். அவருடைய தாய் சாயா தேவியின் அறிவுரையின்படி பைரவரை வழிபட்டு அவருடைய அருளால் நவக்கிரகங்களில் ஒருவராக கிரக பதவி கிடைக்கப் பெற்றார். பைரவர் சனீஸ்வரனுக்கு குருவாக விளங்கி அருட்பாலிக்கின்றார். பைரவருக்கு சனிக்கிழமைகளில் ஸஹஸ்ரநாம அர்ச்சனை செய்வதால் சனீஸ்வரரும் மகிழ்ச்சியடைந்து ஏழரைநாட்டுச் சனி, அஷ்டமத்துச் சனி முதலிய சனிக் கிரக உபாதைகளை முழுவதையும் நீக்குவதுடன் நல்ல யோகமான பலன்களையும் அருள்கிறார்.
* தோத்திர நூல்களில் இவர் சிவந்த நிறம் கொண்டவர். வாயு வேகத்தில் பயணம் செய்பவர். தீயோரை அழிப்பவர். சந்திரனைத் தலையில் தரித்தவர். வலிய உடலை உடையவர். சிவந்த கண்களை உடையவர். மாயையில் வல்லவர்; மந்திரங்களின் காவலர். பூதர்களின் தலைவர் என்று பலவாறு குறிக்கப்படுகின்றார்.
*ஜைனத்தில் (சமணம்) மிக விரிவான பைரவ வழிபாடு, தொண்ணூற்றாறு பைரவக் கோலங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. மிக விரிவான உபாசனா நெறிகளால் உலகின் பேராற்றல்களைத் தன்வயப்படுத்தல் (Controlling of Universal forces) இதன் பயனாகும். திருத்தொண்டர் புராணத்தில், நாவுக்கரசர் நீற்றறை இருப்பு (அனல்); நஞ்சுண்ணல் (பெளதிகப் பொருள்கள்); யானை (பூமியின் பெருவிலங்குகள்) இவற்றினை வென்ற சாதனையை ‘நம் சமய உபாசனைகளால் பெற்ற பலம்’ என சமணர்கள் குறிப்பிடுவதாக சேக்கிழார் விளக்குகிறார்.
*ஐக்கியவாத சைவ சமயத்தவர்கள் ‘ஆன்ம லிங்கத் திருமேனியாயமர்ந்து அருளும் பரசிவமே பரம் பொருள்’ என வழிபடுவதால் வீர சைவர்கள் என வழங்கப்படுவர். பைரவ, வீரபத்திரமூர்த்திகளைக் குருநாதர்களாகக் கொள்வர்.
*வாமம் (சாக்தம்) பிரிவினரும் பைரவரையும் பைரவியையும் வணங்குபவர்கள்.
* கொங்கு மண்டலத்தில் அனைத்து சிவாலயங்களிலும் பைரவர் சிறப்புடன் வழிப்படப்படுகின்றார் என்றாலும் (திருப்பூரை அடுத்த) நல்லூர் முதலிய தலங்களில் வடுகமூர்த்தி
வழிபாட்டுடன் தனிச்சிறப்பு கொண்டவராய்ப் போற்றப்படுகின்றார்.
*தாராபுரத்திற்கு அருகிலுள்ள தலம் குண்டடம் ஆகும். இதில் வடுகநாதர் என்ற பைரவருக்குத் தனி ஆலயம் அமைந்துள்ளது. இம்மண்டலத்திலுள்ள அநேக தோட்டங்களில் பைரவரைக் காவல்தெய்வமாக அமைத்திருப்பதையும் காணலாம்.
* காஞ்சிபுரத்தில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர, சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் உள்ளது. இதற்கு அருகில் பைரவர் எட்டு உருவங்கள் தாங்கி, எட்டு லிங்கங்களை வைத்து வழிபட்ட வைரவேச்சுவரம் என்ற சிவாலாயமும் உள்ளது. இக்கோயிலிலுள்ள பைரவரின் அழகிய உலாத் திருமேனி காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ஆலயத்தில் உள்ளது.
* காஞ்சிபுரத்திற்குத் தென்மேற்கில் அழிபடைதாங்கி என்னுமிடத்தில் பைரவருக்கான தனி ஆலயத்தைக் காண்கிறோம். காஞ்சிபுரத்திற்குத் தெற்கில் உள்ள பெருநகர் என்ற பிரம்ம நகரில் பிரம்மதேவன் சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது சிரத்தைக் கிள்ளிய பைரவ சிவனுக்கும் தனிச் சந்நதி அமைத்து வழிபாடு செய்தான். அந்த திருவுருவத்தை இக்கோயிலில் காணலாம்.
* உத்திரமேரூருக்கு அருகில் உள்ள சில மலைகளிலும், திருக்கழுக்குன்றத்திற்கு அருகிலுள்ள செம்பாக்கம் மலைமீதும் பைரவருக்கான தனி ஆலயங்கள் உள்ளன. செம்பாக்கத்தில் மலைமீது ஏறுவது சிரமமாக உள்ளது என்பதால் ஊருக்குள்ளேயே தனி ஆலயத்தை அமைத்துள்ளனர்.
* வடுகர், யோகினி, க்ஷேத்திரபாலகர், கணபதி, சர்வபூதம் - இவற்றை கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, ஈசானம் முதலான திசைகளில் வைத்து அன்னத்தின் மூலம் பலி போடுவர். மற்றொரு முறை தென்கிழக்கு என்ற முறையில் நான்கு திசைகளில் (மூலைகள்) பிரதிஷ்டை செய்து பலியினைப் போடுவர்.
* ஆதிபைரவரின் சக்கரத்தை வழிபடுவதால் எதிரிகள் அழிவர் என்பது ஒரு கருத்து. தத்துவ ரீதியாக, எதிரிகள் என்பவர்கள் பரம்பொருளாகிய சிவபெருமானை (பைரவ திருமேனி கொண்ட ரூபம்) அடைய முடியாதபடி தடுக்கும் மனிதனின் ஐம்புலன்களே ஆவர்.
* காசி யாத்திரை மேற்கொள்வோர் தமது யாத்திரை நிறைவு நாளில் இறுதியாக பைரவர் ஆலயத்தை தரிசித்து இச்சந்நதியில் காசிக் கயிறு பெற்றுத் தம் ஊருக்குத் திரும்புவர். கங்கைக்கரையின் 64 கட்டங்களில் 64 பைரவர்கள் உள்ளனர்.
* தாராபுரத்திற்கு அருகிலுள்ள தலம் குண்டடம் ஆகும். இதில் வடுகநாதர் என்ற பைரவருக்குத் தனி ஆலயம் அமைந்துள்ளது. இம்மண்டலத்திலுள்ள அநேக தோட்டங்களில் பைரவரைக் காவல்தெய்வமாக அமைத்திருப்பதையும் காணலாம்.
* உத்திரமேரூருக்கு அருகில் உள்ள சில மலைகளிலும், திருக்கழுக்குன்றத்திற்கு அருகிலுள்ள செம்பாக்கம் மலை மீதும் பைரவருக்கான தனி ஆலயங்கள் உள்ளன. செம்பாக்கத்தில் மலைமீது ஏறுவது சிரமமாக உள்ளது என்பதால் ஊருக்குள்ளேயே தனி ஆலயத்தை அமைத்துள்ளனர்.
* சென்னையை அடுத்துள்ள திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் பைரவருக்கான தனிச் சிற்றாலயம் கருவறை உள்மண்டபம், மகர மண்டபத்துடன் காணப்படுகிறது. கருவறை மீது அழகிய ஒற்றைக் கலசம் கொண்ட விமானம் உள்ளது. இச்சந்நதிக்கு அருகில் பைரவ தீர்த்தம் உள்ளது.
* ஆந்திர மாநிலத்தில் நாகலாபுரத்திற்கு அருகில் உள்ளது, வைப்புத் தலங்களில் ஒன்றான காரிக்கரை. இப்போது ராமகிரி என்றழைக்கப்படுகிறது. இங்குள்ள வாலீசுவரர் ஆலயத்தினையொட்டி பைரவருக்கான தனி ஆலயம் உள்ளது. இது சிறந்த பிரார்த்தனைத் தலமாகும். இந்த சந்நதியில் கல்லாலான நாய் உருவங்கள் நிறைய உள்ளன.
* சிதம்பரத்திற்குக் கிழக்கில், திருக்கழிப்பாலை என்னும் பாடல் பெற்ற பதியில் பைரவர் தனிச் சிறப்புடன் உள்ளார். மக்கள் இந்த சிவாலயத்தை பைரவன் கோயில் என்றே அழைக்கின்றனர்.
* கும்பகோணம்-மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் உள்ள க்ஷேத்திரபாலபுரத்தில் பைரவருக்குத் தனி ஆலயம் உள்ளது. நான்கு கரங்களோடு வாகனம் இன்றி மிகப் பெரிய உருவத்தோடு கால பைரவராக இவர் விளங்குகிறார்.
* திருப்பத்தூர் அருகே பெரிச்சியூர்கோயில் திருச்சுற்றில் பைரவருக்குத் தனி சந்நதி உள்ளது. விமானத்தில் பைரவ வாகனத்தைக் காணலாம். கருவறையினுள் சாளுக்கிய கலைப்பாணியில் க்ஷேத்திரபாலகர் திகழ்கிறார்.
* பாண்டிய நாட்டில் பைரவர் வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. இலுப்பைக்குடி, மாத்தூர், ஆமூர், கொத்தப்புள்ளி போன்ற ஊர்களில் பைரவர் திருவடிக்குக் கீழே இரண்டு நாய் வாகனங்களைக் காணலாம்.
* சப்தமாதர்களான பிராம்ஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி இவர்களுக்குப் பதியாக அசிதாங்க பைரவர், ருரு பைரவர், சண்டபைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர் ஆகியோர் அமைவர். எட்டாவது மூர்த்தமான சம்ஹார பைரவருக்கு சண்டிகை உடனிருந்து அருள்பாலிக்கிறாள்.
* காஞ்சிபுரத்தில் அஷ்டபைரவர்களும் வழிபட்ட எட்டு லிங்கங்களும் கொண்ட கோயில், பிள்ளையார்பாளையத்தில் உள்ளது. இத்திருமடத்தில்தான் மாதவச் சிவஞான சுவாமிகள் பல ஆண்டுகள் இருந்து பல நூல்களைச் இயற்றினார்கள் இவரது தலைமை மாணக்கரான கவிராட்சச கச்சியப்ப முனிவரின் சமாதியும் இம்மடத்தில் தனித்து விளங்குகிறது.
* இலுப்பைக்குடி நகரத்தார் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் முதலில் ‘‘வேணும் வயிரவ மூர்த்தி துணை’’ என்று எழுதுவது வழக்கம். இங்கே வயிரவன் கோயில் என்ற நகரத்தார் கோயிலும் சிறப்புடன் விளங்குகிறது.
* பிரம்மசிரச்சேதர், உக்ரபைரவர், பைரவர், க்ஷேத்ரபாலகர், வடுகர், ஆபதுத்தாரணர், சட்டைநாதர், கஞ்சுகன், கரிமுக்தன், நிர்வாணி, சித்தன், காபாலி, வாதுகன் - இவையெல்லாம் பைரவரின் வெவ்வேறு பெயர்களே.

- பூசை.ச.அருணவசந்தன்