பசி, பஞ்சம் நீக்குவாள் காசி அன்னபூரணி!



பராசக்தி பல வடிவங்கள் கொண்டு பக்தர்களைக் காக்கிறாள். முப்பெருந்தேவிகளாக துர்க்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என உருக்கொண்டு கல்வி, செல்வம், வீரம் ஆகியவற்றை பக்தர்களுக்கு அருள்கிறாள். அதுபோல எல்லா உயிர்களுக்குமே உணவளித்து வறுமைப் பிணியிலிந்து காப்பதையே தன் கடமையாகக் கருதும் அம்பிகையே அன்னபூரணியாக அவதரித்து காசி மாநகரில் திருவருள் புரிந்து வருகிறாள். அன்னபூரணி காசி வந்த வரலாறு என்ன? கந்தமகா புராணத்தில் உள்ள அருணாச்சல மகாத்மியத்திலும், மார்க்கண்டேய புராணத்தின் துணை நூலான காமாட்சி விலாசத்திலும் அன்னபூரணியின் வரலாறு கூறப்பட்டுள்ளது. தேவரும் முனிவரும் எப்போதும் தியானிக்கும் கயிலைவாசன், ஏகாந்தமாக தவத்தில் ஆழ்ந்திருந்த சமயம், பார்வதி தேவி விளையாட்டாக அவர் கண்களைப் பொத்தினாள்.

சூரிய, சந்திரரை வலது, இடது கண்களாகவும், அக்கினியையே நெற்றிக் கண்ணாகவும் கொண்டவர் சிவபெருமான். தேவி அவர் கண்களைப் பொத்தியதால் சூரிய, சந்திரர் தம் ஒளியிழந்தனர். அதனால் உலகம் இருண்டது. அனைத்து உயிர்களும் பரமேஸ்வரனை சரணடைந்தனர். அவர் தன் அக்கினிமயமான நெற்றிக்கண்ணைத் திறந்து உலகிற்கு ஒளியைத் தந்தார். இவை அனைத்தும் கணநேரத்தில் நடந்ததால் பார்வதி தேவி பயந்து உடனே தன் கைகளை ஈசனின் கண்களிலிருந்து எடுத்தாள். கூடவே மனம் கலங்கி அவரிடம் ‘‘நான் விளையாட்டாக தங்கள் கண்களை பொத்தியதால் ஏற்பட்ட பாவம் நீங்க என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும்?’’ எனக் கேட்டாள்.

‘‘நமக்கு இது கண்ணிமைக்கும் நேரமே என்றாலும் உலக உயிர்களுக்கு அது எவ்வளவு காலம் என்று உனக்குத் தெரியாதா தேவி? ஏன் இந்த குறும்புத்தனம்? ஆனாலும் நீ உலகிற்கெல்லாம் அன்னை. ஆகவே உன்னை ஒரு பாவமும் அணுகாது’’ என்றார் ஈசன். அந்த வார்த்தைகளால் சமாதானமடையாத அம்பிகை பூவுலகில் தவம் செய்து உலக உயிர்களுக்குத் தன்னால் ஏற்பட்ட துன்பத்துக்குப் பிராயச்சித்தம் தேட முயன்றாள். ஈசனின் அனுமதி பெற்று தென்திசை நோக்கி புறப்பட்டாள். அந்த சமயம் காசி திருத்தலம் மழையின்றி, கடும் பஞ்சம் பூண்டிருந்தது. மக்கள் பசியினால் துடித்தார்கள். தேவி காசியை அடைந்து அங்கு அற்புதமான ஒரு திருக்கோயிலை உருவாக்கி அன்னபூரணி எனும் பெயரில் நிலைகொண்டாள்.

அவள் திருக்கரத்தில் என்றுமே வற்றாத அட்சய பாத்திரம் எனும் அமுதசுரபியும், பொன்னாலான கரண்டியும் இருந்தன. அவள் உயிர்களுக்கு உணவு வழங்க ஆரம்பித்தாள். அதனால் மக்களின் பசிப்பிணி நீங்கியது. மக்கள் அன்னபூரணியை போற்றிப் புகழ்ந்தனர். அவள் புகழ் திக்கெட்டும் பரவியது. காசியில் கடும்பஞ்சம் நிலவும் வேளையில் அன்னபூரணி தேவி அனைவருக்கும் உணவளிக்கும் செய்தியை அறிந்த மன்னன், தேவியைச் சோதனை செய்ய எண்ணினான். தன் வீரர்களை அவளிடம் அனுப்பி சிறிதளவு தானியம் கடனாகப் பெற்று வரப் பணித்தான். அதன்படி அம்பிகையிடம் வந்த வீரர்கள் மன்னனின் ஆணையைத் தெரிவித்தார்கள். அதற்கு தேவி, ‘‘நான் தானியங்களைத் தர மாட்டேன். வேண்டுமென்றால் உங்கள் மன்னன் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து உணவருந்திச் செல்லலாம்’’ என்றாள்.

விவரம் தெரிந்து கொண்ட மன்னனும் அவன் அமைச்சரும் மாறுவேடம் பூண்டு அன்னபூரணி எழுந்தருளியிருந்த திருமாளிகைக்குச் சென்றனர். அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். மன்னனும் அமைச்சரும் மக்களோடு மக்களாய் அமர்ந்து உணவருந்தினார்கள். தேவியின் திருக்கரத்தில் உள்ள தங்கபாத்திரத்திலிருந்து அள்ள அள்ளக் குறையாத உணவு வந்து கொண்டிருந்ததைக் கண்ட மன்னன், அவள் சாட்சாத் பராசக்தியே என்பதனை உணர்ந்தான். தேவியின் திருவடிகளைப் பணிந்தான். ‘‘தாயே என் அரண்மனைக்கு எழுந்தருளி அடியேனை ஆட்கொள்ளவேண்டும்’’ என்று கண்ணீர் மல்கக் கதறினான். அவன் பக்திக்கு மெச்சிய தேவி தன் சுய உருவத்தை அவனுக்குக் காட்டினாள்.

 ‘‘நான் இங்கு தங்கிய காரணத்தால் இனி காசியில் பஞ்சமே ஏற்படாது; அப்படி ஏற்பட்டாலும் நான் உடனே வந்து பஞ்சத்தைத் தீர்ப்பேன். அதோடு நான் தவம் செய்யும் பொருட்டு தென்திசை போக வேண்டும். நீ மக்களைக் கண்ணும் கருத்துமாய் காப்பாயாக’’ என்றாள்.‘‘அம்மா! தங்கள் சாந்நித்யம் எப்போதும் இங்கு நிலைத்தருள வேண்டும்’’ என்று வேண்டிக் கொண்டான் காசி மன்னன். அதன்படி தேவி தன் சாந்நித்யத்தை அங்கு நிறுவி தன் பக்தர்களைக் காத்து அருள்புரிந்து வருகிறாள். இதுவே தேவி அங்கு நிலைகொண்டதற்கான ஆதிகாரணமாகக் கூறப்படுகிறது. கார்த்யாயன மகரிஷி, அம்பிகையே தனக்கு மகளாகப் பிறக்க வேண்டி கடுந்தவம் புரிந்தார். அவர் தவத்தில் மகிழ்ந்த லலிதாதேவி அவருக்கு மகளாகப் பிறந்தாள்.

அந்தக் குழந்தைக்கு கார்த்யாயினி என பெயரிட்டு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தார், மகரிஷி. ஒருமுறை காசியில் பஞ்சம் ஏற்பட்டபோது கார்த்யாயினி காசிக்குச் சென்று அன்னபூரணியாக மாறி, காசியின் பஞ்சத்தை நீக்கி, பின் காஞ்சியில் காமாட்சியம்மன் சந்நதியின் பின்புறம் நிலைகொண்டதாகவும் ஒரு வரலாறு உள்ளது. இந்த அன்னபூரணி தேவியை லலிதையின் உபாங்க தேவதை என சாக்த உபாசகர்கள் வழிபடுகின்றனர். ஆதிசங்கரர் ஒருமுறை அன்னபூரணியிடம், உலகோர் பசி போக்குமாறு துதி செய்தார். ‘நித்யானந்தகரீ’ எனத் தொடங்கும் அந்த துதியின் ஒவ்வொரு ஸ்லோகத்தின் முடிவிலும் ‘பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பனகரி மாதான்னபூர்ணேஸ்வரி’ என முடித்திருப்பார். கருணையின் வடிவாக இருக்கும் அன்னபூரணி தேவியே, எனக்கு பிட்சையிடுவாயாக என்பது அதன் பொருள்.

அந்த அன்னபூர்ணாஷ்டகத்தின் கடைசி ஸ்லோகத்தில் ஞானம், வைராக்யம் இரண்டையும் பிட்சையாக அருள்வாயாக என்று கேட்டு அன்னபூரணியைப் பிரார்த்தித்துள்ளார். மேலும், ‘மாதா ச பார்வதீ தேவீ பிதா தேவோ மஹேஸ்வர: பாந்தவா: சிவபக்தாச்ச ஸ்வதேசோ புவனத்ரயம்’ என்றும் கூறியுள்ளார். தன் பசிக்கான உணவை குழந்தை முதலில் தாயிடமே கேட்கும். அம்மாவிடம் கேட்க இயலாத சூழ்நிலையில் அப்பாவிடம் கேட்கும். ஆதிசங்கரரும் அவ்வழியையே பின்பற்றி எனக்கு பார்வதியான நீயே அம்மா, ஈசனே அப்பா, சிவபக்தர்கள் எல்லாம் உறவினர்கள், மூவுலகங்களும் எனது வீடு என்ற பொருளில் இத்துதியை பாடியுள்ளார்.

காசியில் அருளும் அன்னபூரணி தேவி தன் திருக்கரங்களில் ஒரு கையில்  உள்ள தங்கப் பாத்திரத்தில் பால் சோற்றை ஏந்தியுள்ளாள். உலகிலுள்ள ஜீவன்களின் பசியாற அவள் தன் மறுகையில் உள்ள தங்கக்கரண்டியால் அள்ளி அள்ளி அந்த பால்சோற்றை அனைவருக்கும் அளிக்கிறாள். அந்த பால் சோற்றோடு ஞானத்தையும் சேர்த்தளித்து நம் வயிற்றுக்கு மட்டுமல்லாமல், ஆத்மாவிற்கும் உணவிடுபவளாகத் துலங்குகிறாள். காசி விஸ்வநாதர் சந்நதிக்குச் செல்லும் வழியில் துண்டி விநாயகரை தரிசித்து பின் சற்று தொலைவில் அன்னபூரணி தேவியின் ஆலயத்தை அடையலாம். அழகிய சித்திர வேலைப்பாடுகளுடன் கூடிய நுழைவாயிலின் வலது புறம் பாதாளலிங்கமும், இடது புறம் சிறிய கிணறும் உள்ளன. மராட்டியர் கால கட்டிட அமைப்புடன் ஆலயம் திகழ்கிறது.

அதன் நடுவில் சந்நதிக்கு முன் அஷ்டகோண வடிவில் அமைந்த மண்டபத்தை பன்னிரண்டு கற்தூண்கள் தாங்குகின்றன. கருவறையில் மூன்று வாயில்கள் உள்ளன. தென்கிழக்கு நோக்கிய வாயிலிலிருந்து அன்னபூரணியை தரிசிக்கலாம். மற்ற இரண்டு வாயில்களும் தர்மத்வாரம், பிக்ஷத்வாரம் என அழைக்கப்படுகின்றன. அதன் மூலமாக பக்தர்கள் அன்னையின் அருளைப் பெறுகின்றனர். காசியில் தங்க அன்னபூரணி தரிசனம், தீபாவளிப் பண்டிகையை ஒட்டிய மூன்று நாட்கள் மட்டுமே கிட்டும். இருபுறமும் தேவி-பூதேவியர் வீற்றிருக்க அருளும் தேவியிடம், பிட்சாண்டிக் கோலத்தில் விஸ்வநாதப் பெருமான் பிட்சை கேட்கும் அற்புதத் திருக்கோலத்தைக் காண இரு கண்கள் போதாது. சுத்த தங்கத்தால் ஆன அன்னபூரணியின் திருவுருவம் கண்களைக் கூசச்செய்யும் ஒளியுடன் பிரகாசிக்கும்.

இடக்கரத்தில் தங்கக்கிண்ணம் ஏந்தி வலக்கரத்திலுள்ள தங்க அகப்பையால் ஈசனுக்கு படியளக்கிறாள் தேவி. அவள் அணிந்திருக்கும் நவரத்ன கிரீடம் மேல் தங்கக் குடை அணி செய்கிறது. சொர்ண புடவை பூண்டு, மார்பிலும் கழுத்திலும் நவரத்ன ஆபரணங்கள் மின்ன, பத்மாசனத்தில் அன்னை கம்பீரமாக வீற்றிருக்கிறாள். ஒரு ஆள் உயரத்தில் பிட்சாடனர் வெள்ளி விக்ரகமாக திருவோடு ஏந்தி அன்னபூரணியிடம் பிட்சை கேட்கும் பாவனையில் அலங்கரிக்கப்படுகிறார். நாகாபரணத்தை அணிந்து இடுப்பில் புலித்தோலுடன் ஒரு கையில் உடுக்கையும், மறுகையில் பிரம்ம கபாலமும் ஏந்திய அவரது அழகே அழகு. அங்கே தீபாவளி சமயத்தில் இந்த அன்னபூரணி தேவி லட்டுத் தேரில் பவனி வருகிறாள். பிறகு அந்த லட்டை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருகிறார்கள்.

இந்த வைபவம் மிகவும் விமரிசையாக நடக்கிறது. தலையில் ரத்தின மகுடம், உடலெங்கும் மணிகளாலான பல்வேறு ஆபரணங்கள், நவரத்தினங்களும் வைர, வைடூரிய, மரகத, பவழ, கோமேதக, புஷ்பராக, மாணிக்கங்கள் ஜொலிக்கும் பொன் நகைகளோடு தேவி அருள்புரிகிறாள். இந்த அன்னபூரணி சந்நதிக்கு எதிரில் ஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சக்ர மேரு உள்ளது. பூஜைகள், லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை முதலானவை இந்த மேருவிற்கும் செய்யப்படுகின்றன. கேரள மாநிலத்தில் உள்ள செருக்குன்னம் எனும் ஊரில் புகழ்பெற்ற அன்னபூரணி ஆலயம் அமைந்துள்ளது. அங்கு அன்னையை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவருக்கும் சாப்பாடு அளிப்பார்கள். இரவு வேளையில் ஆலயத்தின் அருகில் உள்ள மரத்தில் ஒரு சோற்று மூட்டையை கட்டி விடுவார்கள்.

திருடர்களும் சமூக விரோதிகளும் அங்கே நடமாடினால் அவர்களும் பசியாற வேண்டும் என்பது தேவியின் விருப்பம்! அப்படி நல்லோர் அல்லாதவர்களுக்குக் கூட அருளும் பரம கருணாமூர்த்தி, அன்னபூரணி. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலய பிராகாரத்திலும் காயத்ரி மண்டபத்திற்குச் செல்லும் வழியிலும் தேவி அன்னபூரணி அருள்கிறாள். ஐப்பசி மாதம் இந்த அன்னைக்கு அன்னாபிஷேகம் நடக்கும். இவள் சந்நதியில் தர்ம துவாரம், பிக்ஷத்துவாரம் எனும் இரு துவாரங்கள் உள்ளது விசேஷம். இந்த அன்னபூரணியை வணங்கி பிக்ஷத்துவாரத்தின் வழியாக ‘பவதி பிக்ஷாம்தேஹி’ என கையேந்தி பிச்சை கேட்டால் தேவி நம்மை எவ்வித கஷ்டமும் இல்லாமல் உணவளித்துக் காப்பாள். இது லட்சக்கணக்கான பக்தர்களின் அனுபவம். இந்த தேவியை வணங்கி பிறருக்கு நல்லதை மட்டுமே நினைத்து வாழ்ந்து வந்தால் உலகில் பஞ்சம் எனும் சொல்லிற்கே இடமில்லை.

அனைத்து ஜீவராசிகளுக்கும் உணவளிக்கும் உரிமையை அன்னை பார்வதிக்கு அளித்திருந்தார் ஈசன். ஒரு சமயம் திருக்கயிலையில் ஈசன் பார்வதியோடு உரையாடிக் கொண்டிருந்தார். அந்த சமயம் ஈசன் பார்வதியிடம் ‘‘தேவி அனைத்து உயிர்களுக்கும் உணவளித்து விட்டாயா?’’ என கேட்டார். அனைவருக்கும் அன்னம் பாலித்து விட்டேன் என்றாள் தேவி. அப்போது ஈசன் தன் இடுப்பிலிருந்த சிறு பாத்திரத்தை எடுத்து திறந்து பார்த்தார். அதில் ஒரு எறும்பு இருந்தது. அதன் வாயில் அரிசி நொய் ஒட்டிக் கொண்டிருந்தது! ‘‘தேவி நீ ஜீவராசிகளுக்கு உணவளிக்கும்  முன்னேயே அந்த எறும்பை இந்த பாத்திரத்தில் வைத்தேன். சகல ஜீவராசிகளுக்கும் நீ படியளந்தது இதில் நிரூபணமாயிற்று,’’ எனக் கூறி தேவியைப் பாராட்டி ஆசிர்வதித்தார். அன்னபூர்ணாஷ்டகம், அன்னபூர்ணாபஞ்சரத்னம் போன்ற துதிகளால் அன்னபூரணி தேவியை ஆராதித்து அவள் திருவருள் பெறலாம்.

அர்காபாமருணாம் பராவ்ருததநூமாநந்த பூர்ணாநநாம்
முக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்
தேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்
த்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம் பாம் ப்ரவலம்பாலகாம்

பொதுப் பொருள்: அன்னபூரணி அம்பிகை உதய சூரியனைப் பழிக்கும் செந்நிறத்தோடு மந்தஹாஸம் ததும்பும் பூரண சந்திரனைப் போன்ற திருமுகத்தோடு முக்தாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். அன்னையின் கைகளில் அம்ருதம் போன்ற அன்னபாத்திரம் பிரகாசிக்கின்றது.

மந்திரம்:
‘ஓம் ஹ்ரீம் ரீம் க்லீம் ஓம் நமோ பகவத் யன்னபூர்ணே
மமாபிலிக்ஷித மன்னம் தேஹி ஸ்வாஹா’
மேலே குறிப்பிட்ட அன்னபூர்ணா மந்திரத்தை குருமூலம் உபதேசம் பெற்று சொல்லி வந்தால், குறைவற்ற அன்னம், ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்றவற்றோடு தேவியின் திருவருளையும் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை.

தொகுப்பு: ந.பரணிகுமார்