நாம் அளிக்கும் நிவேதனங்களை இறைவன் ஏற்றுக் கொள்கிறாரா?நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறார். பழங்களையும் மற்ற நிவேதனங்களையும் இறைவன் சாப்பிடுவதாக வைத்துக்கொண்டால், அவைகளின் எண்ணிக்கை குறையவில்லையே என்ற சந்தேகம் வரலாம். இறைவன் சூட்சும நிலையில் இருப்பவன். அதாவது இறைவனைக் கண்ணால் காண இயலாது, அனுபவித்துத்தான் உணர இயலும். மனிதர்களாகிய நாம் ஸ்தூல வடிவில் இருப்பவர்கள். அதனால் நமக்கான உணவு ஸ்தூல வடிவில் தேவைப்படுகிறது. நாம் அளித்த நிவேதனத்தை இறைவன் ஏற்றுக் கொண்டானா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள பெரிய ஞானியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

சாதாரண மனிதர்களாகிய நாமே பல இடங்களில் நம் அனுபவத்தில் கண்டிருப்போம். நம் வீட்டிலோ அல்லது பெரிய விருந்து நடக்கும் இடங்களிலோ நெய் சொட்டச் சொட்ட சர்க்கரைப் பொங்கலை சாப்பிட்டிருப்போம். அதேபோல ஏதோ ஒரு ஆலயத்தில், அந்த வழியாக நாம் கடந்து செல்லும்போது நம்மை அழைத்து ஒரு சிறு தொன்னையில் பிரசாதம் என்று சொல்லி சர்க்கரைப் பொங்கலை அளித்திருப்பார்கள். அதில் நெய், முந்திரி, திராட்சை போன்றவை பெயரளவில் இருந்தாலும், அதனுடைய ருசி அபரிமிதமானதாக இருக்கும். அதற்குக் காரணம் அந்த பொங்கலானது இறைவனுக்கு படைக்கப்பட்டதே ஆகும். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது பக்தியையும், சிரத்தையையும்தானே தவிர, சர்க்கரைப் பொங்கலில் நெய் இருக்கிறதா, இல்லையா என்பதைப் பார்ப்பதில்லை.

உங்களுக்கு இன்னமும் சந்தேகம் இருந்தால், உங்கள் வீட்டினில் இருவேறு பாத்திரங்களில் ஒரே நேரத்தில் ஒரே சமையல்காரரைக் கொண்டு ஒரே அளவுள்ள பண்டத்தை தயார் செய்யுங்கள். அவற்றில் ஒரு பாத்திரத்தில் உள்ளதை மட்டும் முழு ஈடுபாட்டுடன் வீட்டில் உள்ள பூஜையறையில் நிவேதனம் செய்யுங்கள். நிவேதனம், தீபாராதனை, பிரார்த்தனை ஆகியவற்றை சிரத்தையுடன் முடித்துக்கொண்டு இறைவனுக்கு நிவேதனம் செய்த பிரசாதத்தினை எடுத்துச் சாப்பிடுங்கள். தொடர்ந்து நிவேதனம் செய்யப்படாத மற்றொரு பாத்திரத்தில் தயார் செய்யப்பட்டிருக்கும் பண்டத்தினையும் சாப்பிட்டுப் பாருங்கள்.

நிச்சயமாக இரண்டிற்குமுள்ள வித்தியாசத்தினை அனுபவப் பூர்வமாக உணர்வீர்கள். நிவேதனம் செய்யப்பட்ட பண்டம்தான் அதிகமான ருசியினை உடையதாக இருக்கும். ஆண்டவன் சூட்சும வடிவில் நிவேதனத்தை ஏற்றுக் கொள்கிறான் என்பதால் அதன் அளவு குறையாது. மாறாக ருசி அதிகரித்திருக்கும். ஆண்டவனுக்கு படைக்கப்படும் எந்தவொரு நிவேதனமும் அமிர்தமாக ருசிப்பதன் காரணம் இறைவன் நாம் அளித்த நிவேதனத்தை ஏற்றுக்கொண்டதால்தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

‘கசப்புத்தலை’ நாள் என்றால் என்ன?அந்த நாளில் என்ன செய்ய வேண்டும்?
- ஏ.வடிவேல், திருவண்ணாமலை.

இறந்தவருக்கான கரும காரியத்தினை செய்து முடித்த மறுநாள் கசப்புத்தலை நாள் என்று தமிழகத்தின் வட மாவட்டங்களில் சொல்வது வழக்கம். இந்த நாளை சுபஸ்வீகரண நாள் என்று சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அதாவது, ஒருவர் இறந்தவுடன் அவரது வாரிசுகளும், பங்காளிகளும் பத்துநாள் தீட்டு என்ற பெயரில் தலையில் எண்ணெய் தடவாது, நெற்றியில் மங்கலச் சின்னங்களை அணியாது இறந்தவரின் நினைவாகவே இருப்பார்கள். இந்த நாட்களில் உணவுப் பழக்கத்திலும் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். பத்து இரவுகள் முழுமையாக கடந்த பின்னர் அவரவருக்கு உரிய சம்பிரதாயப்படி 11 முதல் 16 நாட்களுக்கு உள்ளாக கரும காரியத்தினை சிரத்தையுடன் செய்து முடிப்பர்.

கரும காரியத்தினை செய்து முடித்த மறுநாளில் இருந்து இறந்தவரின் வாரிசுகளும், பங்காளிகளும் வழக்கம்போல் தங்கள் பணியில் ஈடுபட வேண்டும் என்பதற்காகவும் மற்ற வீடுகளில் நடக்கும் சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும் சுபஸ்வீகரணம் என்ற நிகழ்வினைச் செய்வார்கள். அதாவது, தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்து, ருசிமிகுந்த நல்ல உணவுகளை உட்கொண்டு புத்துணர்ச்சியோடு வழக்கமான பணியில் ஈடுபடுவர். தீட்டு காப்பவர்களின் தலை காய்ந்துபோய் வறட்டு நிலையில் இருக்கும் என்பதால் இந்த நாளில் நன்றாக எண்ணெய் தேய்த்து தலைமுடியினை கசக்கிக் குளித்து பார்ப்பவர்களின் கண்களுக்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த நாளை கசப்புத்தலை நாள் என்று அழைத்தார்கள். கசப்புத்தலை நாளில் கறி எடுக்க வேண்டும் என்றும் சொல்வார்கள்.

அதாவது, எவ்வாறு வைகுண்ட ஏகாதசியின்போது விரதம் இருந்து மறுநாள் துவாதசி நாளில் 21 வகையான காய்கறிகளுடன் உணவினை உட்கொள்கிறோமோ, அதேபோல விதவிதமான காய்கறிகளை அந்த நாளில் உண்டு மகிழ வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லி வைத்தார்கள். ஆனால், இந்த சொல்வழக்கு காலப்போக்கில் மருவி, கசாப்புக்கடையில் தலைக்கறி எடுக்க வேண்டும் என்பதால் இந்த நாளுக்கு கசப்புத்தலை என்று பெயர் என்றும், இந்த நாளில் கட்டாயம் அசைவ உணவினை சாப்பிட வேண்டும் என்றும் ஒரு சிலர் மாற்றுக் கருத்தினை பரப்பி வைத்துள்ளார்கள். இது முற்றிலும் தவறான ஒன்று.

கசப்புத்தலை நாளில் கட்டாயம் கறி என்று சொல்லப்படும் அசைவ உணவினைச் சாப்பிட வேண்டும் என்று நம் பெரியவர்கள் யாரும் விதிமுறையை வகுக்கவில்லை. சுபஸ்வீகரணம் என்று சாஸ்திரம் சொல்வது சுபத்தினை அதாவது, மங்களகரமானவற்றை சுப ஸ்வீகரணம் செய்துகொள்ள வேண்டும், அதாவது, ஏற்றுக்கொள்ள வேண்டும், இறந்தவரைப் பற்றிய துக்க நினைவுகளை மறந்து, அந்தநாள் முதல் வழக்கம்போல் உலக வாழ்வினில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டதே கசப்புத்தலை அல்லது சுபஸ்வீகரண நாள் ஆகும். அதனை விடுத்து கசப்புத்தலை நாளில் அசைவ விருந்து சாப்பிட்டே ஆக வேண்டும் என்று சொல்வது அபத்தமான வாதம்.

ஐந்து ஆண்களுக்கு ஒரு மனைவி என்று வாழ்ந்த திரௌபதியை அம்மனாக வணங்குவது ஏற்புடையதா?அதன் தத்துவத்தை விளக்குங்கள்.
 - ராமகிருஷ்ணன், ஆரணி.

இந்த தத்துவத்தினை விளக்க மஹாபாரதத்திலேயே ஒரு கிளைக்கதை உண்டு. ஒருமுறை பாண்டவர்களின் வனவாசத்தின்போது கிருஷ்ணர் அவர்களைச் சந்திக்க வந்தார். ஒரு வருடத்திற்கு ஒரு கணவருடன் வாழ்ந்து வருவதை வழக்கத்தில் கொண்டிருந்த திரௌபதி அன்று பீமனுடன் சேர்ந்து வாழத் துவங்கும் நாளாக அது அமைந்திருந்தது. எப்படி இந்தப் பெண்மணி குற்ற உணர்ச்சி ஏதுமின்றி ஐவரையும் கணவனாக ஏற்றுக் கொண்டு வாழ்கிறாள் என்று பீமனுக்கு மனதில் ஒரு சஞ்சலம். பீமனின் முக வாட்டத்தைக் கண்டு கிருஷ்ணர் அவனது மனநிலையை ஊகித்துக் கொண்டார்.

கிருஷ்ண பரமாத்மா தன் மனோநிலையை அறிந்துகொண்டுவிட்டார் என்பதை உணர்ந்த பீமன், “கிருஷ்ணா, இத்தனை நாள் எனக்கு அண்ணியாக இருந்தவள், இதுநாள்வரை என் தாய் ஸ்தானத்தில் இருந்தவள் இன்றுமுதல் ஒரு வருடத்திற்கு என் மனைவி என்றால் என்னால் அதனை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்” என்று வாய் திறந்து கேட்டுவிட்டான்.“பீமா, சற்று பொறுத்திருந்து இன்றிரவு நடப்பதைப் பார்”, என்று கண்ணபிரான் அவனுக்கு அறிவுரை சொல்கிறார். அன்று நள்ளிரவில் திரௌபதி வெளியே போக, பீமனும், கண்ணனும் அவளுக்குத் தெரியாமல் பின்தொடர்ந்து போகிறார்கள். அவர்கள் இருவரும் மறைந்திருந்து பார்க்கும் வேளையில் தீயினை மூட்டி திரௌபதி அந்தத் தீயில் விழுகிறாள். மனம் பதைத்த பீமன் அவளைக் காப்பாற்றுவதற்காக ஓட முயற்சிக்க, பரந்தாமன் அவனைத் தடுத்து அங்கே பார் என்கிறார்.

ஆச்சரிய மிகுதியுடன் தீக்குழியை நோக்கிய பீமனின் கண்களுக்கு திரௌபதி தெரியவில்லை. சாக்ஷாத் அகிலாண்டேஸ்வரியாகிய மஹாசக்தி பீமனின் கண்களுக்குத் தெரிகிறாள். அவளைத் தீ சுடவில்லை. அவளே நெருப்பு, அவளே நீர், அவளே நிலம், அவளே காற்று, அவளே ஆகாயம், சர்வமும் அவளே என்பதை பீமனுக்கு புரிய வைக்கிறார் கிருஷ்ண பரமாத்மா. “பீமா, நீங்கள் ஐவரும் பஞ்சபூதங்கள் என்றால், உங்களை ஆளும் மஹாசக்தி திரௌபதி, அவளுக்குள் நீங்கள் அடக்கமே அன்றி, உங்களுக்குள் அவள் அடக்கம் அல்ல. நீங்கள் ஐவரும் ஐம்புலன்கள் என்றால், உங்கள் உடலில் உள்ள ஜீவாத்மா இவள். ஜீவாத்மா எப்படி பரமாத்மாவிற்குள் ஐக்கியம் ஆகிறதோ, அதேபோல நீங்கள் அனைவரும் அவளுள் ஒடுங்குவீர்கள்,

உனக்கு இந்த உண்மை புரிய வேண்டும் என்பதற்காக இந்தக் காட்சியைக் காட்டினேன், இந்த உண்மை உனக்குள் உறைந்து போகட்டும், இவளை விடக் கன்னியோ அல்லது பத்தினியோ இவ்வுலகில் இல்லை. அனைத்தும் இவளே, இந்த உண்மைதான் உங்கள் ஐவரையும் திரௌபதி மணம்புரிந்ததாக சித்தரிக்கப்படுகின்ற காட்சி இதன் உள்ளே உள்ள இந்தத் தத்துவத்தை உணர்ந்தவர்கள் என்னை உணர்ந்தவர்கள் ஆவார்கள், நீ கவலை இல்லாமல் இரு”, என்று கிருஷ்ண பரமாத்மா பீமனுக்கு திரௌபதியின் வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்தியதாக அந்தக் கதை நீள்கிறது. இந்தக் கதையின் அடிப்படையில் திரௌபதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பூக்குழி இறங்குதல் என்ற பெயரில் தீக்குண்டத்தில் பக்தர்கள் இறங்குகிறார்கள். இந்து மதத்தில் உள்ள இதிகாசங்களும் புராணங்களும் பெண்களை என்றுமே இழிவாகச் சொன்னதில்லை. அடிமைப்படுத்தி பார்க்கவும் இல்லை. பெண்களை பராசக்தியின் அம்சமாக நோக்குவதே நம் மதத்தின் அடையாளம்.

‘கேட்ட மூட்ட செவ்வாய்கிழமை’ என்ற சொல்வழக்கின் பொருள் என்ன?
 - ஸ்ரீவித்யா, காஞ்சிபுரம்.

கேட்டை நட்சத்திரமும், செவ்வாய்கிழமையும் ஒன்றாக இணைந்து வருகின்ற நாள் மிகவும் விசேஷமானது. அன்றைய தினத்தில் செய்யப்படுகின்ற விசேஷ பூஜைகளும், பரிகாரங்களும் உடனடியாக பலனைத் தரக்கூடியவை. இதனை நமக்கு உணர்த்தும் வண்ணம் கேட்டை முட்டும் செவ்வாய்கிழமை என்ற பொருளில் வந்த சொற்றொடர் கேட்ட மூட்ட செவ்வாய் என்று மருவி இருக்கிறது.

புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் செய்த பாவம் போய்விடுமா?
- திருமலைவாசன், விழுப்புரம்.

அறிவிற்குத் தெரிந்து, வேண்டுமென்றே செய்கின்ற பாவங்கள் நிச்சயமாகப் போகாது. அறிந்தும், அறியாமலும் செய்கின்ற பாவங்கள் மனதை உறுத்துகின்ற காலத்தில், மனம் திருந்திய நிலையில் தவறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து அதற்கு பிராயச்சித்தம் தேடுகின்ற நிலையில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் செய்த பாவம் தொலையும்.

எவனொருவன் தான் செய்தது தவறு என்பதை உணர்ந்து, அந்த தவறுக்காக மனதளவில் வருந்துகின்றானோ, அவனுக்கு மட்டுமே புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் பாவம் போகும். தனது அடிப்படைக் குணத்தினை மாற்றிக் கொள்ளாது, தொடர்ந்து பாவச்செயலில் ஈடுபடும் ஒருவன் புண்ணிய நதியில் நீராடுவதால் மட்டும் அவனது பாவம் நிச்சயம் போகாது. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

கரிநாள் என்றால் என்ன? எதன் அடிப்படையில் இந்த நாட்களை குறிப்பிடுகிறார்கள்?
 - ராம்மோகன், அம்பத்தூர்.

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் கரிநாள் என்பது “சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கின்ற நாள்” என்பதே. அதாவது அன்றைய தேதியில் சூரியக் கதிர்வீச்சின் தாக்கம் பொதுவாக அந்த மாதத்தில் இருக்க வேண்டிய சராசரியை விட அதிகமாக இருக்கும். நமது முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக ஆராய்ந்து முடிவு செய்து வைத்திருக்கும் நாட்கள் இவை. இந்நாட்கள் வருடத்திற்கு வருடம் மாறுபடாதவை (சிஷீஸீstணீஸீt ஷீஸீமீ). தமிழ் மாத தேதிகளின் அடிப்படையில் இந்நாட்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தை மாதம் 1, 2, 3 ஆகிய நாட்கள் கரிநாட்கள் என்று கணக்கிட்டு வைத்திருப்பார்கள்.

இது ‘அஷ்டமி, நவமி’ போன்றோ அல்லது ‘பரணி, கிருத்திகை’ போன்றோ திதிகள் அல்லது நட்சத்திரங்களின் அடிப்படையில் அமைந்தது அல்ல. சூரியனின் தீட்சண்யம் அதிகமாக இருக்கும்பொழுது, நமது உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும், ஹார்மோன்களும் சராசரிக்கும் சற்று கூடுதலாக அதிக அளவில் தூண்டப்படுகின்றன. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படுதல், டென்ஷன் ஆதல், ஆராயாமல் உடனுக்குடன் முடிவெடுத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு அதிக வாய்ப்பு உண்டாகும்.இது போன்ற காரணங்களால் கரி நாட்களில் சுபகாரியங்கள் செய்வதைத் தவிர்த்திருக்கிறார்கள்.

இது வானவியல் (கிstக்ஷீஷீஸீஷீனீஹ்) ரீதியாக அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து நிர்ணயம் செய்யப்பட்ட நாட்களேயன்றி ஜோதிடவியல் (கிstக்ஷீஷீறீஷீரீஹ்) ரீதியாக அப்படியே கடைபிடித்து வரும் விஷயங்களுக்குள் அடங்காது. பிரதி மாதந்தோறும் வருகின்ற கரிநாட்களின் விவரம் :சித்திரை & 6, 15ம் தேதி; வைகாசி &7, 16, 17; ஆனி & 1, 6; ஆடி &2, 10, 20; ஆவணி & 2, 9, 28; புரட்டாசி &16, 29; ஐப்பசி & 6,20; கார்த்திகை& 1, 10, 17; மார்கழி & 6, 9, 11; தை&  1, 2, 3, 11, 17; மாசி& 15, 16, 17; பங்குனி & 6, 15, 19.

‘ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்’ என்கிறார்களே..அப்படி என்றால் என்ன?
 - மணிகண்டன், நெல்லிக்குப்பம்.

“அவங்க ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்....” என்று சதா சண்டை போட்டுக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துச் சொல்வது வழக்கம். உண்மையில் ஏழாம் பொருத்தம் நன்றாய் இருந்தால் மிகவும் அன்யோன்யமாய் இருப்பார்கள். பின் எப்படி இந்த சொற்றொடர் வழக்கில் வந்தது என்பதைக் காண்போம். ஒவ்வொருவரின் ஜாதகத்திலும் ஏழாம் இடம் என்பது ஒரு ஆணுக்கு அவனது மனைவியையும், பெண்ணுக்கு அவளது கணவனையும் குறிக்கும் என்பதை ஜோதிடர் சொல்லக் கேட்டிருப்போம். ஏழாம் இடம் என்பது வாழ்க்கைத் துணைவரை மட்டுமல்லாது நண்பர்கள், பழகும் தன்மை, வெளிவட்டாரத் தொடர்பு என பல்வகைப்பட்ட இணைவுகளைக் குறிக்கும். லக்னம் என்பது ஜாதகரின் குணாதிசயத்தையும், ஏழாம் இடம் என்பது அவனது தொடர்பாளர்களின் குணங்களையும் குறிக்கும்.

லக்னம் என்பது 0 டிகிரி என்றால் ஏழாம் இடம் என்பது அதன் நேரெதிர் துருவமான 180வது டிகிரி ஆகும். ஒரு காந்தத்தின் வடதுருவமும், தென்துருவமும் ஒன்றோடொன்று ஈர்ப்பு கொள்வது இயற்பியல் விதி. ஜோதிட ரீதியாக சற்று விளக்கமாகவே பார்ப்போம்... மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய். அதன் ஏழாவது ராசியான துலாம் ராசிக்கு அதிபதி சுக்கிரன். செவ்வாய் வீரமுடைய ஆண்மைத்தன்மை உடைய கிரகம். சுக்கிரனோ அழகு நிறைந்த பெண்மைத்தன்மை நிறைந்திருக்கும் கிரகம். இவர்கள் இருவரும் அடிப்படையில் நேரெதிரான குணங்களைக் கொண்டவர்களாக இருந்தாலும் ஒருவர்மீது ஒருவர் ஈர்ப்பு உள்ளவர்கள். இதே கருத்து சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட ரிஷபத்திற்கும் அதன் ஏழாமிடமான விருச்சிகத்திற்கும் பொருந்தும்.

அதேபோல் மிதுன, கன்னி ராசிகளுக்கு அதிபதி புதன். அவற்றின் ஏழாம் ராசிகளான தனுசு, மீனத்திற்கு அதிபதி குரு. இயற்கையில் குரு நீதி, நேர்மை, நியாயம் என்று நேரான வழியில் பயணிப்பவர். எதற்காகவும் தன் கொள்கையைத் தளர்த்திக் கொள்ளாதவர். புதன் இடத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொள்ளும் தகுதி படைத்தவர். சூரியனை அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்கள் எதற்கெடுத்தாலும் கௌரவம் பார்ப்பார்கள். கௌரவத்திற்குக் குறைவான செயலை ஒருபோதும் செய்ய மாட்டார்கள். அதேநேரத்தில் அதற்கு ஏழாமிடமான கும்ப இராசிக்கு அதிபதி சனி. சனியை ராசிநாதனாகக் கொண்டவர்கள் கௌரவம் என்பதை சற்றும் எதிர்பாராது காரியத்தில் மட்டும் கண்ணாய் இருப்பார்கள்.

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்கள் அமைதி, அடக்கம், சுறுசுறுப்பு, சுத்தம், சுகாதாரம் ஆகியவற்றிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பவர்கள். கடகத்திற்கு ஏழு ஆகிய மகரத்திற்கு அதிபதி சனி என்பதால் சோம்பல், அழுக்காய் இருத்தல் என நேரெதிர் குணங்களை நிரம்பப் பெற்றவர்கள். திருமணத்திற்கு பத்து பொருத்தம் பார்க்கும்போது ஏழாவதாக வருகின்ற ராசி அதிபதி பொருத்தம் என்பதும் இந்த அடிப்படையில் வகுக்கப்பட்டதே ஆகும். ராசி அதிபதி பொருத்தம் நன்றாக இருந்தால் ரஜ்ஜூ உட்பட வேறெந்த பொருத்தமும் பார்க்க தேவையில்லை என்பது முக்கியமான ஜோதிட விதி. ராசிகளும் அவற்றின் ஏழாம் இராசிகளும் பின்வருமாறு : மேஷம் & துலாம் (செவ்வாய் - சுக்கிரன்); ரிஷபம் - விருச்சிகம் (சுக்கிரன் - செவ்வாய்); மிதுனம் - தனுசு (புதன் -  குரு); கடகம் - மகரம் (சந்திரன் - சனி); சிம்மம் -  கும்பம் (சூரியன் - சனி); கன்னி - மீனம்  (புதன் - குரு).

மேற்கண்டவாறு ராசிகளைக் கொண்ட தம்பதிகள் தங்களுக்குள் சதா சண்டையிட்டுக் கொண்டிருப்பது போல் தோன்றினாலும், உண்மையில் அவர்களுக்குள் அன்யோன்யம் அதிகமாக இருக்கும். பரஸ்பரம் புரிந்துகொள்ளும் தன்மையும் பிறரை விட அதிகமாகக் கொண்டிருப்பார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். “அவங்க ரெண்டு பேருக்கும் ஏழாம் பொருத்தம்....” என்பதை இனி ஆதர்ச தம்பதியரைப் பார்த்தும் சொல்லலாம் அல்லவா.!

- திருக்கோவிலூர் K.B.ஹரிபிரசாத் சர்மா