தொடர்பு கொள்வது வேறு, பற்று கொள்வது வேறு!



பகவத் கீதை- 56

‘யத்ருசாலாப ஸந்துஷ்டோ த்வந்த்வாதீதோ விமத்ஸரஸம: ஸித்தாவஸித்தௌ ச க்ருத்வாபி ந நிபத்யதே’‘‘தானாகவே கிடைப்பதைக் கொண்டு திருப்தியடைபவன், இரு நிலைகளிலும் சலனமடையாதவன், கொஞ்சமும் பொறாமை குணமில்லாதவன், தன்னால் சாதிக்க முடிந்ததோ, முடியவில்லையோ இதனால் சிறிதும் பாதிப்படையாதவன் - இத்தகையவன்தான், தான் இயற்றும் கர்மத்தால் பந்தப்படாதவனாக இருக்கிறான்.’’கிடைத்ததைக் கொண்டு திருப்தியடைவது எல்லோராலும் முடியக்கூடியதா? சாதாரண விஷயம் - ஓட்டலுக்குப் போய் ஊத்தப்பம் ஆர்டர் செய்து, வந்தபின் அதை சாப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.

எதிரே அமர்ந்திருப்பவர் ஆனியன் ரவாதோசை ஆர்டர் கொடுக்க, அது அவர்முன் வைக்கப்படுகிறது. பொன்முறுகலாய், நெய் மணக்க மினுமினுத்துக்கொண்டிருக்கும் ரவாதோசையைப் பார்த்து, ‘அடடா, நாமும் இதையே ஆர்டர் செய்திருக்கலாமோ?’ என்று தோன்றுகிறது. ஆர்டர் செய்வதாகிய கர்மாவால் கிடைக்கும் ஊத்தப்பத்தை அமைதியாக ருசிப்பதில்தான் திருப்தி இருக்கிறது. அது இல்லாததால்தான் அடுத்தவர் ஆர்டர் செய்த ரவாதோசை மீது ஏக்கம் எழுகிறது!இந்த ‘திருப்தி’ என்ற அம்சமானது மனிதரை இரட்டை மனோநிலைக்கு உள்ளாக்குகிறது. கிைடத்தவரை போதும் என்று எதிர்பார்க்கும் அவனுக்கு, அது அப்படியே கிடைத்துவிட்டால் உடனே மனோபாவம் மாறிவிடுகிறது.

இன்னும் கொஞ்சம் கிடைத்திருக்கலாமோ? நம் தகுதிக்கு இப்போதைக்குக் கிடைத்திருப்பது சமமானதாகப் பொருந்தவில்லையோ? நம்மைப் போன்றவருக்கு வேறுவகையாக பலன் கிடைத்திருப்பதைப் பார்த்தால், நமக்கு நஷ்டம் அல்லவா ஏற்பட்டுவிட்டது என்றெல்லாம் எண்ணத் தலைப்படுகிறது. அதாவது, கிடைக்கும்வரை திருப்தி அடையத் தயாராக இருக்கும் மனம், கிடைத்த பிறகு, ‘இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம்…’ என்ற ஏக்கத்துக்கு அடிமையாகிவிடுகிறது! ‘லாபத்தில் நஷ்டம்’ என்ற புதிரான ஒரு கணக்கைச் சொல்வார்கள். அதாவது பத்தாயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் ஒருவர் தன் வியாபாரத்தில் ஐந்தாயிரம்தான் லாபம் கிடைத்தது என்றால், அவரைப் பொறுத்தவரை ஐந்தாயிரம் ‘நஷ்டம்’! பொதுவாக, லாபம் என்பது செலவிட்ட தொகைக்கு மேலாகக் கிடைப்பது.

அதாவது முதலீட்டுக்கு  நஷ்டம் ஏற்படாதவகையில் கிடைப்பது. ஆனால், அதற்கும் மேலாகக் கிடைத்ததில் திருப்தி இல்லை; இன்னும் கொஞ்சம் கிடைத்திருக்கலாமே என்ற ஏக்கம்தான் முதலில் நிற்கிறது.வாழ்க்கையின் இரட்டை நிலைகள் ஒன்றுக்கொன்று நேர் எதிரானது என்றாலும், ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பது விசித்திரம்தான். ஆமாம், ஏற்றம் இல்லை என்றால் தாழ்ச்சி ஏது? இன்பம் இல்லாவிட்டால் துன்பம் ஏது? வெறும் இன்பமாகவே வாழ்க்கை அமையுமானால் அதை ‘இன்பம்’ என்று எப்படிச் சொல்ல முடியும்? துன்பம் என்ற ஒன்று இருந்தால்தானே இன்பம் என்பதைப் பகுத்து உணர முடியும்? அதேபோலதான் வாழ்க்கையின் எல்லா இரட்டை நிலைகளும். ஒன்றில்லாவிட்டால் இன்னொன்றைப் புரிந்து கொள்ள முடியாது, உணர்ந்துகொள்ள முடியாது.

உணவில் ஒரே ஒரு சுவைதான் என்றிருந்துவிட்டால், அதையே சாப்பிட்டு நாம் பழகிக்கொண்டு விடலாமே தவிர, மாறுபட்ட இன்னொரு சுவை இல்லாவிட்டால் முதல் சுவையின் அருமை நமக்குத் தெரியாமலேயே போய்விடும், இல்லையா? அதாவது, காரத்தை வைத்துதான் இனிப்பை அறிய முடிகிறது! அதேபோல இன்னொரு உதாரணம் - நட்பும், பகையும். நட்பு இல்லாவிட்டால் பகை இல்லை. பகை உருவாக வேண்டுமானால் ஆரம்பத்தில் நட்பு இருந்திருக்கவேண்டும். அப்படி நட்பு இருந்தால்தான், கருத்து வேற்றுமை உருவாகி, அது மனவேற்றுமையாக மாறி, பகையாக முடிகிறது. ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், அந்தப் பகை, மீண்டும் நட்பாக மாற முடியும் என்பதுதான்!

ஆனால், நட்பு இல்லாவிட்டால் பகை இல்லை என்பதற்காக நட்பே இல்லாமல் வாழ்க்கையை நடத்த முடியுமா? அதனால் நட்பு கட்டாயம் வேண்டும். பகை வரும் என்பதை எதிர்பார்த்தே நட்பை மேற்கொள்ளவேண்டும். அதுதான் சராசரியான, சாமானியனின் வாழ்க்கை. ஆனால், நட்பு பூண்டபோதும், பகை தோன்றியபோதும் இரண்டு நிலைகளையும் யாரால் ஒரேமாதிரியாக பாவிக்க முடிகிறதோ, அவரே ஞானி! பொறாமை எவ்வாறு உருவாகிறது? தனக்குக் கிடைப்பது தன்னுடைய தகுதிக்குக் குறைவானது என்ற கற்பனை எண்ணத்தால் உருவாகிறது. தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோஷப்படத் தெரியாமல், பிறருக்குக் கிடைத்ததைப் பார்த்து, நமக்குக் கிடைத்ததைவிட அது அதிகமானது என்ற ஒப்பீட்டுக் கணக்கீட்டால் உருவாகிறது. தன் தகுதியையும் மீறி, தனக்குக் கிடைக்கவேண்டியது கிடைக்காமல் போவதில் ஒன்றும் நமக்கு வருத்தம் இல்லை;

ஆனால், அது அடுத்தவருக்குக் கிடைத்துவிடுகிறதே, அதுதான் வேதனை! இதுதான் பொறாமையின் விதை. ஆனால், ஞானியின் மனதில் இந்த விதை ஊன்றுவதேயில்லை. தனக்குக் கிடைத்ததில் அவனுக்கு திருப்தி ஏற்படுவதுபோலவே, அடுத்தவருக்குக் கிடைப்பதில் அக்கறை காட்ட அவனுக்குத் தோன்றுவதேயில்லை. பகவான் இதை எனக்கு அளித்திருக்கிறார்; அவனுக்கு அதை அளித்திருக்கிறார் என்று பகவான் கருணையை மட்டுமே எண்ணுகிறார். பகவான் அளிப்பதில் தனக்கும், அடுத்தவருக்கும் இடையே எந்த மதிப்பு ஏற்றத் தாழ்வையும் அந்த ஞானியால் ஒப்பிட முடியவில்லை. தான் நோயுற்றிருக்கும்போது ஒருவன் எல்லா தெய்வங்களையும் வேண்டுகிறான்; தன்னை குணப்படுத்துமாறு இறைஞ்சுகிறான்.

இது உடல் பலவீனத்தால், அது விரைவாக குணமடைந்துவிடவேண்டுமே என்ற எதிர்பார்ப்பால் தோன்றும் ஓர் உத்தி. அந்த கட்டத்தில் தன்னைப் பிழைக்க வைக்க அந்தக் கடவுளைத் தவிர யாராலும் முடியாது என்ற நம்பிக்கை, அதைவிட பயம். தன்னைச் சார்ந்திருப்பவர்கள் மீதும், ஏன் மருத்துவர் மீதும் அவநம்பிக்கை உருவாக்குகின்றன, அவனுடைய நோயும் அது தரும் வலியும்! அதே அவனுக்குப் பொருள் நஷ்டம் ஏற்பட்டதென்றால், வசதிகள் குறைந்தனவென்றால் உடனே எல்லா தெய்வங்களையும் திட்ட ஆரம்பித்துவிடுகிறான்! ஏனென்றால் தான் பெறுவது அனைத்தும் இறைவனின் அருளால் என்று அவன் நம்பிக்கொண்டிருந்திருக்கிறான்! உடனிருப்பவர்களை அந்த நஷ்டத்துக்காகத் திட்டினாலும், கோபம் கொண்டாலும், ஏன் வழக்கே போட்டாலும், அந்த ஒவ்வொரு செயலுக்கும் சமமான, சிலசமயம் கூடுதலான எதிர்விளைவுகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதனால் சுலபமான இலக்கு கடவுள்தான்!

இதில் இன்னொரு வேடிக்கையும் உண்டு. அவ்வாறு தான் ஏசுவதால், ஒருவேளை கடவுள் தன் நஷ்டத்தை ஈடுசெய்துவிட மாட்டாரா, வேறு ஏதாவது ஒரு வகையில் லாபம் அளிக்க மாட்டாரா என்ற எதிர்பார்த்தலும் அந்த வசவில் ஒளிந்திருக்கும். ஆனால், என்னதான் வேண்டிக்கொண்டாலும் சரி, பகவான் எப்போது நினைக்கிறாரோ அப்போதுதான் தான் குணமடைய முடியும் என்பதையும், பகவான் நினைப்பதால்தான் தனக்கு நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அவன் உணர்வானானால், இறைஞ்சுதலும் இருக்காது, ஏசுதலும் இருக்காது. கடலிலிருந்து அலைகள் புரண்டோடி வந்து கரையை நனைக்கின்றன, பிறகு பின்வாங்கிச் சென்றுவிடுகின்றன.

மீண்டும் வருகின்றன, செல்கின்றன. அலைகள் எதை எதிர்பார்த்து கரைக்கு வருகின்றன, எதிர்பார்த்த எது கிடைக்காததால் திரும்பிச் செல்கின்றன? அலையின் கர்மா கரையை நோக்கிச் செல்வதும், திரும்புவதும்தான். இந்த கர்மாவில் எந்த எதிர்பார்த்தலும் இல்லை. கரையில் அமர்ந்திருப்பவர்களுக்குக் குளிர்ச்சியான தென்றலைத் தந்துவிட்டு அலைகள் திரும்புகின்றன. அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்பதில் அவை மகிழ்ச்சியடைவதில்லை. ஏனென்றால் அவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பது அலைகளின் நோக்கம் இல்லை. அதேபோல சுனாமியாக அவை விசுவரூபம் கொள்ளும்போது கரையில் இருப்பவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

உடைமைகள், உயிர்கள் என்று எல்லாவற்றையும் இழக்கிறார்கள். இதற்காகவும் அந்த அலைகள் வருத்தப்படுவதில்லை. அந்த சமயத்தில் அவை அத்தகைய கர்மாவை இயற்றவேண்டியிருந்தன, இயற்றின. நஷ்டம் ஏற்படுத்துகிறோமே என்ற குற்ற உணர்வு அவற்றுக்கு இல்லை. அவற்றைப் பொறுத்தவரை சுனாமியாக பிரமாண்டம் கொள்வதும் அவற்றின் ஒரு கர்மாதான்! ஓட்டப் பந்தய வீரன் ஒருவன் ஒவ்வொரு போட்டியிலும் தவறாது வெற்றியும், பதக்கங்களும் பெறுவான். வெற்றியும், பதக்கமும் அவனுடைய இலக்கு என்பது மேலோட்டமாகத் தெரிந்தாலும், ஓர் உண்மையான விளையாட்டு வீரன் தான் போட்டியில் பங்கேற்பதை மட்டுமே பிரதானமாகக் கருதுகிறான்.

இத்தகையவனால்தான் தனக்குத் தோல்வி ஏற்படும்போது அந்த வலியை உணராமல் இருக்க முடிகிறது, தன்னை மீறி வென்றவரைப் பாராட்டவும் முடிகிறது! ஆக, இரு நிலைகளிலும் ஒரே மனநிலையில் இருப்பவனும், எதையேனும் சாதித்தாலும் அல்லது சாதிக்காவிட்டாலும் தன் சுயம் பிறழாமல் இருப்பவனும், தான் இயற்றும் கர்மங்களால் எந்தவகையிலும் பந்தப்படுவதில்லை என்று அர்ஜுனனுக்குச் சொல்கிறார் கிருஷ்ணன். கதஸங்கஸ்ய முக்தஸ்ய ஞானாவஸ்திதசேதஸ யக்ஞாயாசரத கர்ம ஸமக்ரம் ப்ரவிலீயதே (4:23)

‘‘எதிலும் பற்றற்றவனாய், ஞானத்தில் திடமான சித்தம் உடையவனாய், தன் கடமையை ஒரு யக்ஞமாகச் செய்பவனாய் திகழும் ஒருவன் இயற்றும் கர்மாக்கள் எல்லாம் எந்தக் கேட்டையும் விளைவிக்காது!’’பற்று எதில் வேண்டுமானாலும் வரலாம், யார் மீதும் வரலாம். அது மனதின் இயல்பு. ஆனால், அதைப் பற்றிக்கொண்டே இருக்காததும், சட்டென விலகிவிடுதலும், மனதுக்கும் மீறிய ஒரு ஞானியின் இயல்பு. ‘தன்னுடையது’ என்று எதில் உரிமை கொண்டாடினாலும் அதில் பற்று ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. உலகியல் துன்பங்களுக்கு இதுதான் காரணம். நமக்கு உரிமையாயிருப்பவற்றுடன் நாம் தொடர்பு வைத்துக்கொண்டிருக்கலாமே தவிர, பற்று வைத்துக்கொள்வது கூடாது என்பது பகவான் கிருஷ்ணனின் அறிவுரை.

தொடர்பு அற்றுப்போனால் அது காலப்போக்கில் மறதியின் கணக்குக்குப் போய்விடும். ஆனால், பற்று ஏற்படுமானால் அது எத்தனை காலமானாலும் நினைவின் கணக்கிலேயே தங்கிவிடும். அலைக்கழிக்கச் செய்யும் ஆற்றல் பற்றுக்கு உண்டு. ‘மழையில் நனைத்து, வெயிலில் வாட்டி…’ என்று சொல்வார்களே அதுபோன்ற அவலம். ஒரு விஷயத்தில் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம் என்றால் இன்னொரு விஷயம் துக்கத்தை சுமந்து வருகிறது! இதுவே வாழ்க்கை முறையாகிவிட்டது. அதேசமயம் இப்படித்தான் வாழ்க்கை என்று பல அனுபவங்கள் நமக்கு உணர்த்திய பின்பும் சந்தோஷப்படாமலோ, துக்கப்படாமலோ நடுநிலையாக இருக்க முடிகிறதா, இல்லையே!

ஒரு வீடு தீப்பற்றி எரிகிறது. வீட்டு உரிமையாளன் பதறித் துடிக்கிறான். ‘அய்யோ, நான் பார்த்துப் பார்த்துக் கட்டிய வீடாயிற்றே, இப்படி அநியாயமாக அழிந்துபோகிறதே!’ என்று கதறுகிறான். அப்போது அவனுடைய மகன் அவனிடம் ஓடோடி வந்து, ‘அப்பா, கவலைப்படாதீர்கள். இந்த வீட்டை நாம் கட்டியபோதே இன்ஷூர் செய்திருக்கிறோம். நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலிருக்கிறது. கவலைப்படாதீர்கள். இழந்த வீட்டுக்கான ஈடு நமக்குக் கிடைத்துவிடும்,’ என்று சொல்லி ஆறுதல்படுத்துகிறான்.வீட்டு சொந்தக்காரனுக்கு இப்போது மகிழ்ச்சி. மறுபடியும் புதிதாகத்தான் வீடு கட்டவேண்டும் என்றாலும், செலவு குறித்து கவலை இல்லை, அல்லவா?

ஆனால், இன்ஷூரன்ஸ் கம்பெனியோ, அவன் சமர்ப்பித்த ஆவணங்களில் ஏதோ வில்லங்கம் இருப்பதால் ஈட்டுத் தொகை கொடுக்க முடியாது என்று கை விரித்துவிடுகிறார்கள். இப்போது வீட்டு சொந்தக்காரன் மீண்டும் ஒப்பாரி வைக்கிறான். இழந்தபோது அழுகை, அது மீண்டுவிடும் என்று தெரிந்தபோது சந்தோஷம், மீளாது என்று தெரியவந்தபோது மறுபடி அழுகை! எதனால் இப்படி? வீட்டின் மீது வைத்திருக்கும் பற்றால்தான். சொந்த வீட்டின் மீது பற்றில்லாமல் இருந்துவிட முடியுமா என்று கேட்கலாம். முடியாதுதான். ஆனால், அந்த வீட்டைத் தீப்பற்றாதபடி கட்டி முடித்திருந்தால் இழப்பு இல்லை.

அல்லது முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, எந்தக் கையூட்டும் கொடுக்காமல் இன்ஷூர் செய்திருந்தால், வேறு எந்த காரணத்துக்காகவாவது அந்த வீடு தீப்பற்றியிருந்தாலும், நஷ்ட ஈடாவது கிடைத்திருக்கும். அதாவது, செய்யும் கர்மாவில் பூரணத்துவம் இல்லாதபோதுதான் சந்தேகமும், பயமும், தகுதிக்கு மீறிய எதிர்பார்த்தலும் உருவாகும். துரதிருஷ்டவசமாக அந்த விளைவுகளும் அழிவுபூர்வமாகவே அமையும். அதனால்தான் எதிலும் பற்றற்றவனாய், ஞானத்தில் திடமான சித்தம் உடையவனாய், தன் கடமையை ஒரு யக்ஞமாகச் செய்பவனாய் ஒருவன் திகழவேண்டும் என்று பரமாத்மா அர்ஜுனனுக்குச் சொல்வதாக நமக்குஅறிவுறுத்துகிறார்.

(தொடரும்)

- பிரபுசங்கர்