கம்போடியாவில் காரைக்கால் அம்மையார்!கம்போடியா நாட்டின் சியாம் ரீப் நகரத்துக்கு அருகே பான்டி என்ற சிவாலயம் அமைந்துள்ளது. தற்பொழுது இது பந்தியாய் சிரே என அழைக்கப்படுகின்றது. அங்கோர்வாட் ஸ்ரீமஹாவிஷ்ணு கோயிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கம்போடியாவின் பண்டைய தலைநகர்களான யசோதரபுரம், அங்கோர்தாம் (அங்கோர்வாட்) ஈஸ்வரபுரம் என்பனவற்றில் ஈஸ்வரபுரம்  என அழைக்கப்பெற்ற ஊரில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. இதனுடைய பண்டைய பெயர் திரிபுவனமகேஸ்வரம் என்பதாகும். பாரத கண்டத்தின் 56 தேசங்களையும், தமிழ் மன்னர்களே ஆண்டு வந்துள்ளனர். இவர்களால் நியமிக்கப் பெற்ற சிற்றரசர்கள் 56 தேசங்களிலும் அவர்களுடைய பிரதிநிதிகளாகப் பொறுப்பேற்றிருந்திருக்கிறார்கள்.

எனவே தமிழக கலைப்பாணி கோயில்கள் கடல் கடந்த அவர்களது ராஜ்ஜியத்திலும் நிர்மணிக்கப்பட்டுள்ளன என்பது ஊர்ஜிதமாகிறது. கி.பி. 967ல், முதலாம் ராஜராஜனின் காலத்தில் கெமர் அரசனாக இருந்த ராஜேந்திரவர்மன், கம்போடியாவில் ராஜேந்திர  சோழன் என்னும் சோழ இளவரசனின் தாயும் முதலாம்  ராஜராஜனின் தேவியுமான, திரிபுவன மகாதேவியின் பெயரில், ஈஸ்வரபுரம் என்னும் ஊரை உருவாக்கினான். அதில் திரிபுவன மகேஸ்வருக்காக, திரிபுவனமகேஸ்வரம் என்னும் திருக்கோயிலை உருவாக்க சோழப் பேரரசனால் உத்தரவிடப் பெற்றுள்ளான். இளவரசன் மீது அதிக நேசம் கொண்டிருந்த கெமர் அரசனான ராஜேந்திரவர்மன், போரில் தான் பயன்படுத்திய தேர் ஒன்றினையும், கலை வேலைப்பாடு மிக்க உயர் ஜாதி கல் ஒன்றினையும், இளவரசனுக்குப் பரிசுப் பொருட்களாக அனுப்பியுள்ளான்.

இத்தகவலை கரந்தைச் செப்பேடும், இக் கோயிலில் உள்ள முதலாம் குேலாத்துங்க சோழனின் கல்வெட்டும் தெரிவிக்கின்றன. வந்தியாய் சிரே என்னும் கெமர் மொழிச் சொல்லுக்கு ‘‘அணங்குக் கோட்டம்’’ என்பது பொருளாகும். இந்த திருக்கோயில் முழுவதும், ஆங்காங்கே அதிக அளவில் தென்படும் கந்தர்வக்கன்னி சிற்பங்களே இவ்வாறு அழைக்கப்படுவதற்குக் காரணமாகும். இதனை கெமர் அரசனின் அரசவை அறிஞனான விஷ்ணுகுமாரனும், ஹர்ஷவர்மனின் பேரனுமான யக்ஞவராகனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். 500 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்திருந்த ஈஸ்வரபுரம் ஊருக்கு, இத்திருக்கோயிலின் ராஜ கோபுரம், நுழைவாயிலாக அமைந்திருந்துள்ளது. இந்த பெருங் கோபுரத்தின் முகப்பில் ஐராவதம் மீது இந்திரன் அமர்ந்திருக்கும் சிற்பம் முகப்பில் காணப்படுகிறது. 

ராஜகோபுரத்திலிருந்து கோயிலுக்கு உள்ளே செல்லும் 67 கி.மீ. நீளமான இராஜ பாதை உட்சுற்றுடன் இணைகிறது. கிழக்கு நோக்கிய மூன்று செவ்வக வடிவில் அமைந்துள்ள வளாகங்கள் மூன்று திருச்சுற்றுகளால் சூழப்பட்டுள்ளது. இது ராஜகோபுரத்தின் வாயிலுடன் இணையும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிச்சுற்றில் கிழக்கும், மேற்குமாய் அமைந்திருக்கும் இரு வாயில்களையும் சுற்றி சுண்ணத்தால் எழுப்பப்பட்டுள்ள சுவர் உள்ளது. இதுவே மூன்றாவது சுற்றாகும். மேற்கு வாயிலை அலங்கரிக்க அதன் மேல் பக்கத்தில், அசுர
சகோதரர்கள் கண்டனும், உப கண்டனும், தேவலோகப் பேரழகி திேலாத்தமையை அடைய தமக்குள் போரிடும் சிற்ப தொகுதி இடம் பெற்றுள்ளது.

கண்டனும், உப கண்டனும், வலது கரத்தில் தண்டம் போன்ற ஆயுதத்தை தாங்கிய வண்ணம் போரிட, இடது கரத்தால் திலோத்தமையை ஆளுக்கு ஒரு புறம் பிடித்து இழுக்க, அவரவர் பக்கத்து ஆட்கள் தரையில் அமர்ந்த வண்ணம் கைத்தட்டி அவரவர் தலைவர்களை மகிழ்வோடு உற்சாகப்படுத்தும் இந்த சிற்ப தொகுதிக்குள் நவரசமும் ததும்பி வழிகின்றது. இந்த அதி அற்புத சிற்பத் தொகுதி தற்பொழுது பாரிஸ் அருங்காட்சியகம் ஒன்றில் இடம் பெற்றுள்ளது.கிழக்கு வாயிலை சீதையை ராவணன் கவர்ந்து செல்லும் காட்சி அலங்கரிக்கிறது. இரண்டுமே பெண்களை கைப்பற்ற முயற்சிக்கும் காட்சிகளாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது! கிழக்கு, மேற்கு வாயில்கள், இரண்டு பாலங்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மூன்றாம் சுற்று, அகழியால் சூழப் பெற்றுள்ளது.

இரண்டாவது சுற்று அல்லது நடுச்சுற்று கிழக்கும், மேற்கும் இரு கோபுரங்களால் இணைக்கப் பெற்றுள்ளது. உட்புறம் செங்கற் சுவர்களாலும் வெளிப்புறம் சுண்ணாம்புச் சுவர்களாலும் கட்டப் பெற்றுள்ளன. மேற்கு கோபுரத்தில் வாலியும், சுக்ரீவனும் போரிட்டுக் கொள்ளும் சம்பவம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளளது. கிழக்கு கோபுரத்தில் மகர வேலைப்பாடுகளுக்கு நடுவே எல்லாம் வல்ல இறைவன் திருநடனம் புரியும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த சிற்பத் தொகுதியில், இறைவனார் ஆடல்புரிய, அதற்கு தக்கவாறு அவரின் இடது புறம் ஒருவன் அமர்ந்து மத்தளம் கொட்ட அவரின் வலது புறம், காரைக்காலம்மையார் அமர்ந்த நிலையில், தம் முகத்தை நிமிர்த்தி, இறைவனின் திருநடனத்தைக் கண்டுகளிக்கும் பேற்றினைப் பெற்ற நிறைவோடு தாளக் கருவியில் தாளம் தட்டியவாறு உள்ளார்.

இறைவனிடம் வேண்டிப் பெற்ற இவரது உடல் பேய் உருவாகவும், எலும்புக் கூடாகவும், விரித்த தலை முடியுடன், முற்றிலும் அழகிழந்த பேய் முகத்துடன் அமர்ந்துள்ள திருக்காட்சி. அண்டம் ஓர் அணுவாம், பெருமை கொண்ட அணு, ஓர் அண்டமாம் என்பது போல இந்த கோயில் என்னும் அண்டத்திற்குள், அணு அளவிற்கு சிறிய சிற்பமாக அமைந்து மற்ற எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு பேரண்டமாகத் தோன்றிப் பரவசப்படுத்துகின்றது. 63 நாயன்மார்களில், எம்பிராட்டிகளாக பாண்டியன் தேவி மங்கையர்கரசியும், காரைக்காலம்மையாரும் இடம் பெற்று வழிபாட்டிற்கு உரியவர்களாக விளங்குகின்றனர்.

ஆணுக்குப் பெண்ணும் சமம் என்பதை பக்தியிலும், பாட்டிலும் நிலை நாட்டியவர்கள் அல்லவா அவர்கள்!கி.பி. 5ம் நூற்றாண்டைச் சேர்ந்த காரைக்காலம்மையார், இல்லறம் என்னும் நல்லறத்தை சிறப்பாக நடத்தி வந்தபொழுது, இவரை தெய்வீகப் பெண் என்பதை உணர்ந்த கணவன், உடனேயே இவரை விட்டு அகன்றுவிடுகின்றான். கணவனுக்கு தேவையற்ற இந்த சதை அழகு, தனக்கு வேண்டாம் என இறைவனிடம் கூறி துறவறத்திலேயே யாரும் துணியாத நிலையான பேய் வடிவினை வரமாகக் கேட்டுப் பெற்றார் காரைக்காலம்மையார். அதன் பிறகு இறைவன் அருளால் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலையைப் பாடிய பிறகு, கயிலை மலையான் தரிசனம் காண விரும்பி கயிலைக்குச் சென்றவர், இறைவன் திருவிடத்தைக் காலால் மிதித்து கடக்க விரும்பாமல், தலையால் நடந்து செல்ல,

சிவபெருமான் ‘‘வாரும் என் அம்மையே’’ என அழைக்க,
‘‘பிறவாமை வேண்டும். மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னடியை மறவாமை வேண்டும்.
மகிழ்ந்து வாடி இன்னும் வேண்டும் நான் இறைவா!
நீ ஆடும்போது உன்னடியின் கீழ் இருக்க வேண்டும்’’

- என்பதை வரமாகக் கேட்டார். உடனே ஈசன்,  திருவாலங்காட்டிற்குச் சென்று தனது ஊர்த்துவ தாண்டவமதைக் காணக் காத்திருக்கச் சொல்லி திருவாய் மலர்ந்தருளினார். அதோடு, ஆலங்காட்டினை அவர் வந்தடைய, வழியும் காட்டி அருளியுள்ளார். அங்கு காரைக்காலம்மையார் ஈசனின் திருநடனத்தை காணும் பேற்றினைப் பெற அது முதற்கொண்டு, ஆடவல்லானின் சிற்பத் திருமேனியின், திருவடி கீழ் பேயாரும் இடம்  பெற வைப்பது சிற்ப மரபாகியது. சோழ மன்னர், அதை கம்போடியாவிலும் காண சாத்தியமாக்கிவிட்டார்.

நடுச்சுற்றில் சிதைந்துள்ள வெளிச் சுவரில் நரசிம்மரின் இரணிய வதம் இடம் பெற்றுள்ளது. காலத்தைக் குறிக்கும் காலன் சிற்பம் காலம் பல கடந்தும் காலத்தை வென்று நின்று நிலைத்துள்ளது. கோபுரங்களுக்கிடையே சிதைந்த உட்சுவருக்குள் உள்ள முதலாம் சுற்றின் தென் கிழக்கு மற்றும் வடகிழக்கு மூலைகளில் கம்போடிய மரபுப்படி நூலகங்கள் என அழைக்கப்படும் விமானம் தாங்கிய சந்நதிகள் உள்ளன. வடபுற நூலகத்தின் கிழக்கு வாயிலில் காண்டவ வனதகனம் சிற்பம் இடம் பெற்றுள்ளது. மேற்கு வாயிலில் கம்சவதம் சிற்பம் கவினுற காணக்கிடைக்கிறது. தென்புற நூலகத்தின் கிழக்கு வாயிலில் ஈசனாரின் கயிலைக் காட்சியும், ராவணன் கயிலையைப் பெயர்க்கும் காட்சியும் இணைந்தே இடம் பெற்றுள்ளன. மேற்கு வாயிலில் காமதகனச் சிற்பம் இடம் பெற்றுள்ளது.

இவற்றுக்கு மத்தியில் பேரழில் சிற்ப தொகுதிகள் நிறைந்த, அருள்மிகு, திரிபுவனமகேஸ்வரரின் கருவறை அமைந்துள்ளது. அரம்பையர்கள் நிறைந்த அரங்கமும் துவார பாலகர்களின் சிற்பங்களும், சிற்ப விற்பனர்களின் கைவண்ணத்தில் மின்னி மிளிர்கின்றன. ‘கெமர் கலையின் மாணிக்கம்’ என கொண்டாடப்படும் இத்திருக்கோயில், சுற்றுலாப் பயணிகளின் கலைத் தாகத்தை தீர்க்கும் தேவாமிர்தமாக உள்ளது. இத்திருக்கோயில் 11ம் நூற்றாண்டில் திருப்பணி செய்விக்கப் பெற்றுள்ளதை இக்கோயில் கல்வெட்டு தெரிவிக்கின்றது. கி.பி. 1303 வரை பக்தர்களின் வழிபாட்டில் இருந்துள்ளது. அதன் பிறகு கி.பி. 1914ல் காட்டுக்குள் மறைந்திருந்த இத்திருக்கோயில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது.

- இறைவி