சங்கடங்கள் தீர்த்தருள்வாய், சனிபகவானே!



சனிபகவானின் தாக்கம் யாரையுமே விட்டுவைப்பதில்லை என்பது புராண காலத்திலிருந்தே நிலவிவரும் அனுபவபூர்வமான உண்மையாகும். ஆனாலும் சனிபகவானிடம் முறையிட்டுக்கொண்டால், அவர் தன் சுழற்சியால் ஏற்படும் பாதிப்புகளின் வீரியத்தைக் குறைத்து அவற்றை நாம் தாங்குமாறோ, அவற்றிலிருந்து மீளுமாறோ அருள்வார் என்பதும் புராண காலத்திலிருந்தே கிட்டிவரும் அனுபவமாகும். இந்தவகையில் தசரத சக்கரவர்த்தியே சனிபகவானிடம் இவ்வாறு வேண்டிக்கொண்டு தனக்கு மட்டுமல்ல, தம் நாட்டு மக்களுக்கும் அவர் அருள் கிடைக்கும்படி செய்திருக்கிறார். இதற்காக அவர் சனிபகவானைத் துதித்து ஒரு ஸ்லோகம் இயற்றியிருக்கிறார்.


தசரதருக்கே இப்படி ஒரு இக்கட்டு ஏற்பட்டது எப்படி?

எல்லாமே சுமுகமாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஒருசமயம், அரசவை ஜோதிடர்கள் அவருக்கு ஓர் அதிர்ச்சித் தகவலைத் தந்தார்கள். அதாவது அப்போதைய கிரக அமைப்புப்படி, சனிபகவான் ரோஹிணி நட்சத்திரத்தின் சகடத்தை உடைத்துக் கொண்டு சஞ்சாரம் செய்யப்போவதாகவும், அதனால் பன்னிரண்டு வருடங்களுக்கு நாட்டில் மழை பொழியாது, நீர் வற்றிப் பஞ்சம் ஏற்படும், தானிய விளைச்சல் இருக்காது உயிர்கள் அனைத்தும் பட்டினியால் மடிந்து விடும் என்றும் கூறினார்கள். தான் எத்தனையோ நல்திட்டங்கள் தீட்டி மக்கள் நல்வாழ்வுக்கு வழிசெய்திட்டபோதும், இப்படி இயற்கை உற்பாதங்களால் தீவினை மேகம் சூழப்போகிறதே என்று வேதனைப்பட்டார் மன்னர். உடனே தனது குலகுரு வசிஷ்டர், மந்திரிகள் அனைவரையும் அழைத்து ஆலோசனை கேட்டார்.

சனிபகவான் மீது தசரதன் போர் தொடுத்து அவர் ரோஹிணி நட்சத்திரத்தை உடைக்காமல் தடுக்க வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. அக்கணமே ரதத்தில் ஏறி சனிபகவானுடன் போர்த் தொடுக்கப் புறப்பட்டார் தசரதன். இதைக் கண்ட யாராலும் மாற்றப்பட முடியாத தன்னுடைய சஞ்சாரத்தை திசை திருப்ப முயற்சிக்கும் தசரதனை ஏளனமாகப் பார்த்தார், சனிபகவான். ஆனாலும் சுயநலம் கருதாமல், நாட்டு மக்களின் நலனுக்கே முக்கியத்துவம் கொடுத்து, மிகவும் கொடுமையான கிரகம் என்று பெயரெடுத்த தன்னை தைரியமாக எதிர்க்கத் துணிந்த மன்னனின் நற்குணம் கண்டு பாராட்டவும் செய்தார் சனிபகவான். ஆகவே,  “தசரதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்” என்று அன்புடன் கேட்டார்.

உடனே தசரதன் , “என் நாட்டில் தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் கஷ்டங்கள் எதுவும் வராமல் தாங்கள்தான் காப்பாற்றவேண்டும்,’’ என்று கோரிக்கை விடுத்தார். கூடவே, சனிபகவானைத் துதித்து ஒரு ஸ்தோத்திரம் இயற்றிப் பாடினார். அதுகேட்டு மகிழ்ந்த சனிபகவான் “என்னால் ஏற்படும் பாதிப்புகளை என்னாலேயே தடுக்க முடியாது என்றாலும், அவற்றின் உக்கிரத்தைத் தணிக்குமாறு என்னைக் கருணை காட்ட வைத்தாய். நான் அவ்வாறே செய்கிறேன். அதேசமயம், இத்தோத்திரத்தைத் சொல்லி என்னைத் துதிப்பவர் யாவர்க்கும் என்னால் துன்பமே வராது என்றும் அருள் செய்வேன்,’’ என்று சொல்லி தசரதனை வாழ்த்தினார்.

அந்த ஸ்தோத்ரம்:
நம: க்ருஷ்ணாய நீலாய ஸிதிகண்ட நிபாயச
நம: நீல மயூகாய நீலோத்பல நிபாயச
நமோ நிர்மாம்ஸதேஹாய தீர்க்கஸ்ருதி ஜடாயச
நமோ விஸால நேத்ராய ஸுஷ்கோதர பயானக
நம: பௌருஷகாத்ராய ஸ்தூலராம்னே சதே நம:
நமோ நித்யம் க்ஷுதார்த்தாய ஹ்யத்ருப்தா சதே நம:
நமோ கோராய ரௌத்ராய பீஷணாய கராளிநே
நமோ தீர்க்காய ஸுஷ்காய கால தம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமஸ்தே கோர ரூபாய துர்நிரீக்ஷ்யாய தே நம:
நமஸ்தே ஸர்வபக்ஷாய வலீமுக நமோஸ்துதே
ஸூர்யபுத்ர நமஸ்தேஸ்து பாஸ்கரே பயதாயினே
அதோத்ருஷ்டே நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே
நமோ மந்தகதே துப்யம் நிஷ்ப்ரபாய நமோ நம:
தபனாஞ்ஜாத தேஹாய நித்ய யோகதராயச
க்ஞாநசக்ஷுர் நமஸ்தேஸ்து காஸ்யபாத்மஜ ஸூனவே
துஷ்டோ ததாஸி ராஜ்யம் த்வம் க்ருதோ ஹரஸி தத்க்ஷணாத்
தேவாஸுர மநுஷ்யாஸ்ச ஸித்த வித்யாத ரோரகா:
த்வயா விலோகிதஸ்தேபி நாஸம் யாந்தி ஸமூலத:
ப்ரஸாதம் குருமே ஸௌரே ப்ரண்த்யா ஹி த்வமர்த்தித:
ஏவம் ஸ்துதஸ்ததா ஸௌரிர் க்ரஹராஜோ மஹாபல:
அப்ரவீச்ச சனிர் வாக்யம் ஹ்ருஷ்டரோமாது பாஸ்கரி:
ப்ரீதோஸ்மி தவ ராஜேந்த்ர ஸ்தோத் ரேணானேன ஸம்ப்ரதி
அதேயம் வா வரம் துப்யம் ப்ரீதோஹம் பிரதாமிச.

பொதுப்பொருள்: ‘‘மயில் கழுத்து போன்ற நீல நிறமுள்ள சனிபகவானே, தங்களுக்கு நமஸ்காரம். கறுமை நிறம் கொண்டாலும், ஈர்க்கும் சக்தியுள்ளவரே, நமஸ்காரம். நீலோத்பல மலர் போன்ற நிறமுள்ளவரே, மெலிந்த உடல், நீண்ட காது, நீள்முடி கொண்டவரே, குறுகிய வயிறுள்ளவரும், சற்றே அச்சுறுத்தும் தோற்றமும், நீண்ட கண்களையும் உடையவரே, கோபம் கொண்டவராகவும், பயத்தை உண்டாக்குபவருமாக உள்ளவரே நமஸ்காரம். சூரிய பகவானின் புத்திரரும், அபயம் அளிப்பவரும், கீழ்ப்பார்வை கொண்டுள்ளவரும், பிரளயத்தை உண்டாக்குபவரும், நிதானமாகச் செயல்புரிபவரும், ஞானக்கண் கொண்டவருமான தங்களுக்கு நமஸ்காரம்.

தாங்கள் மகிழ்ந்தால் அரசபதவியைக் கொடுப்பீர்கள். கோபம் கொண்டால் அந்த நிமிடமே அதை பறிப்பீர்கள். தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், சித்தர்கள், கல்விமான்கள் என யாவரும் தங்கள் பார்வை பட்டால் துன்பத்தை அடைகிறார்கள். சூரியபகவானின் புத்திரனே, வணங்கி உங்களை யாசிக்கிறேன். எனக்கு அருள்புரிய வேண்டும். தங்களால் ஏற்படும் தாக்கங்கள் எங்களைப் பெரிதும் பாதிக்காதபடி பாதுகாத்தருள வேண்டும்.’’ தத்தமது ஜாதகப்படி சனிபகவானின் பாதிப்புக்கு ஆட்பட்டிருக்கும் அனைவரும் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் இந்த தசரத  துதியை உளமாறச் சொல்லிவந்தால், தீவினைகள் குறையும் அல்லது இல்லாமலேயே போகவும் கூடும்!


தொகுப்பு: ந.பரணிகுமார்