ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துவிட்டது!



ஆடி கிருத்திகை - அழகன் தரிசனம் என்ற தலைப்பில் அமர்ந்த முருகன், பெண்கள் வழிபடாத முருகன், லிங்கவடிவ முருகன், பெண்அலங்கார முருகன், மெகாமுருகன் என முருகப்பெருமானின் ஆச்சரியப்படவைக்கும் அரிய திருக்கோலங்களைத் தொகுத்து வழங்கி ஆடிமாதத்திற்குத் தனிச் சிறப்பு தந்துவிட்டீர்கள்.
- பாபுகிருஷ்ணராஜ், கோவை.

தரணி எழுதிய சகல நோயும் தீர்க்கும் சாம்பார் சாத பிரசாதம் பற்றிய தகவல் படித்து வியந்தேன். ஆடிக்கிருத்திகை, அழகிரி தரிசனம் படங்களைக் கண்டதும் நேரில் போய் தரிசனம் செய்த மனநிறைவு கொண்டேன்.
- இல.வள்ளிமயில், திருநகர், மதுரை.

எல்லாம் வழங்கிய இறைவனுக்கு, இல்லை, இல்லை சமுதாயத்திற்கு நன்றிக்கடனாக நாம் என்ன செய்கிறோம் என்ற கேள்வி சமுதாயத்தில் ஒவ்வொருவரும் தனக்குத்தானே கேட்டுக்கொள்ளவேண்டிய முக்கியமான கேள்வி. ‘மேன்மக்களே, மேன்மக்களே...’ அதைத்தான் வலியுறுத்தியது.
- கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் ஆடிப்பூர அலங்காரம் பக்தி பரவசப்படுத்தியது. வடமாநில ‘பண்டரிபுரம்’ யாத்திரை என்றென்றும் பாதுகாத்து வைக்கப்படவேண்டிய பொக்கிஷம். ஆடிமாத ஆடிக்கிருத்திகையில் கிடைத்திட்ட வேல(வ)ன்  காப்பு பதிகம் கண்களில் ஆனந்தக் கண்ணீரை வரவழைத்துவிட்டது.
- சுகந்தி நாராயணன், வியாசர்பாடி.

நடைப்பயணமாக பல நூறு கிலோ மீட்டர் பாதயாத்திரை சென்று லட்சோப மக்கள் பண்டரிபுர விட்டலனை தரிசிக்கிற மகத்தான மாபெரும் ‘வர்காரி யாத்திரை’ பற்றிய கட்டுரை பிரமிப்பில் ஆழ்த்திவிட்டது. உலக வழிபாட்டு அதிசயங்களில் ஒன்றான இந்த யாத்திரையின் மகத்துவத்தை நினைத்து மனம் சிலிர்த்தது.
- அயன்புரம், த.சத்திய நாராயணன்.

ஆடி ஸ்பெஷல் அட்டைப்படம் ஆடிமாத அருளாசி வழங்கியது. ‘மேன்மக்களே...’ மனதை மென்மைபடுத்தியது! தெளிவு பெறுஓம் சர்மா அவர்களின் பதில்கள் அருமை! ஞானஒளி ஆன்மிக காற்று மனதை வருடியது. குறளின் குரல், எதிர்கால சந்ததிகளின் நலனை எதிரொலித்தது. பக்தி தமிழ், அருணகிரி உலா ஆன்மிக தொண்டாற்றுகின்றன. அர்த்தமுள்ள இந்து மதம், ஆன்மிக பலனை அருள்கிறது. திருமூலர் திருமந்திர ரகசியம் வாழ்க்கையின் படிப்பினை தந்தது. பல பரிமாணங்களில் ஆன்மிகம் மிளிருகிறது!
- இரா.வைரமுத்து, ராயபுரம், சென்னை-13.

தானம் செய்வது கோடான கோடி நன்மை என்பதை பாலகுமாரன் ‘மகாபாரதம்’ மூலம் உணர்த்தியுள்ளார். ஆன்மிகம் ஒவ்வொரு இதழும் தேன்சுவைதான்.
- சு.இலக்குமணசுவாமி, மதுரை.

பூரத்தில் அவதரித்த பரிபூரணி என்ற ஒரு சிறிய கவிதையில் ஆண்டாள் நாச்சியாருக்கும் ஆடிப்பூரம் வைபவத்திற்கும் உள்ள ஆன்மிக தொடர்புகளை அட்டவணைப்படுத்தியிருந்தார் விஷ்ணுதாசன். எளிய படைப்பு ஆனால், சீரிய படைப்பு. பாராட்டுகள்.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மேன் மக்களின் அருமைகளையும் பெருமைகளையும் அழகாகப் புரிந்துகொள்ள வைத்தார் பொறுப்பாசிரியர். தன்னலம் பாராமல் சேவை செய்வதே மேன்மக்களின் அடிப்படைத் தகுதிகள் என்பதை நயமாக உணரவைத்திருந்தார்.
- எஸ்.எஸ்.வாசன், வந்தவாசி.

ஆண்டாளின் அட்டைப்படம் அற்புதம். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரத்தைக் கொண்டாடும் வகையில் அட்டைப்படம் வெகு அழகாக அமைந்திருந்தது. எத்தனை முறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் புதுப்புது அர்த்தங்களையும் மனத் தெளிவையும் தருவது கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் என்பதை உறுதியாக சொல்லலாம்.
 -  ப.த. தங்கவேலு, பண்ருட்டி-607 106.