மக்கள் நலனுக்காக கோயில் சொத்தை விற்ற மன்னவன்!



கேரளம் - திருப்புணித்துறை

கேரள மாநிலம் ‘பரசுராம க்ஷேத்திரம்’ என்ற சிறப்புப் பெயரைக் கொண்ட புண்ணிய பூமி. அங்கே புகழ்பெற்ற சோற்றாணிக் கரையிலிருந்து எர்ணாகுளம் செல்லும் வழியில் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருப்புணித்துறை. இது ஒருகாலத்தில் கொச்சி ராஜ்ஜியத்தின் தலைநகராக, சிறப்பும் பெருமையும் பெற்ற நகரமாகும். கொச்சியை ஆட்சி புரிந்துவந்த ராஜவம்சத்தினரின் குலதெய்வமாகவும், அனைவரையும் காக்கும் கடவுளாகவும் கருதப்படும் தெய்வம், சந்தான கோபாலகிருஷ்ணன் எனும் திருநாமம் கொண்டு திருப்புணித்துறையில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

இன்றும் அந்த ராஜபரம்பரையை சேர்ந்த வாரிசுகள் சிரத்தையுடனும் பரமபக்தியுடனும் வழிபட்டு வருகின்றனர். ஒருகாலத்தில், இவ்வூரைச் சுற்றிலும் ஆலமரங்கள் சூழ்ந்திருந்ததால் ‘பிப்பலாரண்யம்’ என்ற பெயர் இருந்திருக்கிறது. ஒருகாலத்தில் கடல் சூழ்ந்த பிரதேசமாய் இருந்து, பின்னர் சதுப்பு நிலம் ஆனதால் ‘பூணித்துறை’ என்ற பெயரும் பெற்றது. பூணி என்றால் சதுப்பு என்று பொருள்.

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து ‘சந்தான கோபாலகிருஷ்ணரின் விக்ரகத்தை அர்ச்சுனன் தன் அம்பறாத் தூணியில் (பூணி) எடுத்து வந்ததால் ‘பூணித்துறை’ என்றும் பெயர் பெற்றது. மேலும் இதற்கு ‘பூர்ண ஸ்ருதிபுரம்’ என்றும் ‘பூரணத்ரியி’ என்றும் பெயர்கள் உண்டு. இங்குள்ள சந்தான கோபாலகிருஷ்ணனை ‘புரணத்திரயீசா’ என்றும் அழைக்கிறார்கள்.

பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் ஒருங்கே இணைந்த பூரண சக்தியாக மூல விக்ரகத்தில் எழுந்தருளியிருப்பதால் இப்பெயர். அதற்கேற்றாற்போல இக்கோயிலில் வேறு தேவர்களுக்கோ மற்ற கடவுளர்களுக்கோ சந்நதி எதுவும் இல்லை.சந்நதியின் தென்புறத்தில் விநாயகர் மட்டுமே உள்ளார்.

இத்தலத்து இறைவனான சந்தான கோபாலகிருஷ்ணனைப் பிரதிஷ்டை செய்து கோயில் உருவாக்கியவர்களில் அர்ச்சுனனும் ஒருவன். சந்தான கோபாலகிருஷ்ணனின்  விக்ரகத்தை அர்ச்சுனன் இங்கே கொண்டுவந்து பிரதிஷ்டை செய்யக் காரணமென்ன? முன்னொரு காலத்தில் இங்கு வாழ்ந்த ஓர் அந்தணருக்கு அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகள் பிறந்தன. ஆனால் ஒவ்வொரு குழந்தையும் திடீர் திடீரென்று மறைந்துபோனது. என்னவென்று தெரியாமல் தவிக்கின்றனர் பெற்றோர். அப்போது பஞ்ச பாண்டவர்கள் அரசு புரிந்துவந்தனர்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் பஞ்சபாண்டவர்களின் அரசவைக்கு வந்து தங்கள் துக்கத்தை எடுத்துச்சொன்னார்கள். இதைக்கேட்ட பஞ்ச பாண்டவர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினார்கள். அர்ச்சுனன் மட்டும் மாயமாய் மறைந்த அந்தக் குழந்தைகள் அனைவரையும் மீட்டு வருகிறேன்’ என்று கூறி அவர்களுக்கு ஆறுதலளித்தான். மறைந்துபோன ஒன்பது குழந்தைகளையும் மீட்டு வரும்பொருட்டு கிருஷ்ண பரமாத்மாவுடன் புஷ்பரதம் ஏறி வைகுந்தம் நோக்கிப் புறப்பட்டான் அர்ச்சுனன்.

வைகுந்தத்தில், ஸ்ரீமந் நாராயணன் சபையில் ஒன்பது குழந்தைகள்! அவரவர் வயதுக்கேற்ப, பெற்றோருடன் நின்றிருந்தனர். ‘‘என்ன ஆச்சர்யம்? இவர்கள், இங்கு எப்படி எதற்காக வந்துள்ளனர்?’’ என்று பிரமிப்புடன் கேட்டான் அர்ச்சுனன். அதற்கு ஸ்ரீமந் நாராயணன், ‘‘அர்ச்சுனா! எனது அவதாரம்தான் கிருஷ்ணன். பூர்ண அவதாரம் இது. இருப்பினும் இதில் மானிடர்களின் அமைப்புகள் பல்வேறு காலகட்டத்தில் இருக்க வேண்டிய நிர்பந்தத்தால் தெய்வீகத் தன்மையைக் கூடுதலாக்கி மானிடத்தன்மையை மிதமாக்கி நரஹரி ரூபனாக, கிருஷ்ணனாக வடிவெடுத்தேன்.

இந்த வடிவத்தைக் கண்டு மகிழ்ந்திட கிருஷ்ணனை இங்கு வரவழைக்க வேண்டுமல்லவா? பஞ்ச பாண்டவர்களின் பாதுகாப்பை தனது அவதாரத்தின் மையமாகக் கொண்ட கிருஷ்ணனை உனது வாயிலாக இங்கு கொண்டுவர நான் போட்ட திட்டம்தான் குழந்தைகள் காணாமல் போனது!’’ என்று விளக்கினார். பாம்பணை மீது பள்ளிகொண்டிருக்கும் மந் நாராயணனைத்தான் இதுகாறும் நாம் சேவை செய்திருக்கிறோம். ஆனால் பாம்பணை மீது ‘அமர்ந்த’ கோலத்தில் தனக்குத் திருக்காட்சி அளித்ததோடில்லாமல் வைகுந்த தரிசனமும் கிட்டியது அர்ச்சுனனுக்கு.

உடனே அர்ச்சுனன் மெய்சிலிர்த்து கண்களில் கண்ணீர் மல்க, ‘‘சுவாமி, தங்களின் இந்தத் திவ்யக் காட்சியைக் கண்ட மாத்திரத்திலேயே எனது பிறப்பின் பயனை அடைந்துவிட்டேன். இந்த அற்புதமான காட்சியை பூவுலகில் அனைவரும் கண்டு நற்கதியடைய அருள்புரிய வேண்டும்!’’ என்று சிரம் தாழ்த்தி வணங்கி நின்றான் அர்ச்சுனன். நரஹரி ரூபனான கிருஷ்ணனைக் கண்டு மகிழ்ந்தார் ஸ்ரீமந் நாராயணன்.

தன் உருவத்தையே பார்த்த ஸ்ரீமந் நாராயணனுக்கு ஓர் அலாதியான ஆனந்தம் ஏற்பட்டது. அதுபோலத்தான் ஸ்ரீமந் நாராயணனும் தன்னுடைய அவதாரம்தான் கிருஷ்ணன் என்றாலும், அந்த அவதார நிலையை தனது இருப்பிடமான வைகுந்தத்திலேயே கண்டு மகிழ விரும்பியிருக்கிறார்! அர்ச்சுனன் விரும்பியதுபோலவே ஆதிசேஷன் மீது அமர்ந்திருக்கும் கோலமாய் அழகிய விக்ரகம் ஒன்றை ஸ்ரீமந் நாராயணன் அளித்தார்.

அதோடு நில்லாமல் மாயமாய் மறைந்த ஒன்பது குழந்தைகளை அவர்களின் பெற்றோருடன் மீண்டும் பூவுலகிற்கே அனுப்பிவிட்டார். இவர்கள் வழிவந்தவர்கள்தான் இன்று திருப்புணித்துறை நகரில் ‘புலியென்னூர்’ என்ற குடும்பத்தாராக வாழ்ந்து வருகிறார்கள். ‘சந்தான கோபால கிருஷ்ண’ விக்ரகத்துடன் பூமிக்கு வந்த கிருஷ்ணரும் அர்ச்சுனனும் சிலையை பிரதிஷ்டை செய்யத் தகுந்த இடம் எதுவென்று பார்த்துவரும்படி விநாயகப் பெருமானை அனுப்பி வைத்தனர்.

ஒவ்வோர் இடமாகத் தேடிக்கொண்டு வந்தவர், திருப்புணித்துறையைத் தேர்ந்தெடுத்தார். அர்ச்சாவதார மூர்த்தியை எடுத்துவரும்போது வழியில் விநாயகரின் அமர்ந்த நிலையைப் பார்க்காமல் அர்ச்சுனன் காலால் இடறப்பட, விநாயகர் தெற்கு நோக்கித் திரும்பிய நிலைக்கு வந்துவிட்டார் என்கிறது தலவரலாறு. அதனாலேயே இந்த வைணவக் கோயிலில் விநாயகரைக் காண்கிறோம்.

இத்திருத்தலத்தில், உலகிலேயே மிக உயர்ந்த செல்வமான மக்கட்செல்வத்தை வேண்டுவோர்க்கு அளித்திடும் சந்தான கோபாலகிருஷ்ணனாக இங்கு ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியுள்ளார். சந்தான கோபாலகிருஷ்ண மந்திரம் பலகோடிமுறை இங்கு ஜபிக்கப்பட்டு வருவதால், மக்கட் செல்வமில்லாதவர்கள் இங்கு பகவானை தரிசனம் செய்துவிட்டு அவருக்கு நைவேத்தியம் செய்த பாயசத்தை தம்பதிசமேதராக உண்டால் கண்டிப்பாக சந்தான பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.

நாராயணீயத்தை இயற்றிய நாராயண நம்பூதிரி திருப்புணித்துறையில் அர்ச்சாவதாரம் கொண்டுள்ள ஸ்ரீமந் நாராயணனின் இந்த அரவின் மீது அமர்ந்த திருவடிவத்தை - சந்தான கோபாலகிருஷ்ணனின் அழகு வடிவமாக 92வது சதகத்தில் வர்ணித்துள்ளார். கிழக்கு நோக்கியுள்ள கோபுரம் அழகாக வண்ணம் தீட்டிய அலங்கார வாசலுடன் அமைந்திருக்கிறது. கேரள கலாசாரத்திற்கேற்ப மிக உயரமான 18 தீபத்தட்டுகளுடன் கூடிய விளக்கு முன்னால் கட்டியம் கூறி நிற்கிறது.

கோபுர வாசலை அடுத்து யானை மண்டபம் உள்ளது. அருகில் பலிக்கல் மண்டபம் உள்ளது. அதையடுத்து நமஸ்கார மண்டபம் உள்ளது. இங்குள்ள எல்லா மண்டபங்களும் சிற்ப வேலைப்பாடுகள் நிறைந்து மிகவும் எழிலுடன் காட்சியளிக்கின்றன. பிராகாரத்தின் தென்பகுதியில் உள்ள நுழைவாயிலில் ஒருகாலத்தில் ராஜகுடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்திவந்தனர். அதை அடுத்துள்ள உயரமான பால்கனியிலிருந்துதான் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருவிழா கொண்டாட்டங்களைக் கண்டுகளித்தனர்.

பரசுராமர் ஏற்படுத்திய பூமி என்பதாலோ என்னவோ கேரளத்தில் திரும்பிய இடங்களில் எல்லாம் கிருஷ்ணன் கோயில்களைக் காணலாம். ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு சந்நதிக்கும் ஒரு பெயர் இடப்பட்டிருந்தாலும் அநேகமாக கருவறையில் அருள்பாலிக்கும் மூலவர் விக்ரகம் மகாவிஷ்ணுவாகத்தான் இருப்பார்.

திருப்புணித்துறையில் உள்ள ஆலயத்தை கிருஷ்ணன் கோயில் என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், அவரது திருநாமமோ ‘சந்தான கோபாலகிருஷ்ணன்’ என்பதாகும். அங்குள்ள மூலவர் விக்ரகம் புதுமையானதாகவும் அபூர்வமான கோலத்திலும் உள்ளது. பெரிய வடிவில் அமைந்துள்ள மூல விக்ரகம் பஞ்சலோகத்தால் ஆனது. ‘இப்படித்தான் இந்த மூலவர் விக்ரகம் இருக்க வேண்டும் என்று திருக்கோயிலைச் சார்ந்த அனைவரும் ஒரு வடிவத்தை தங்கள் சிந்தையில் தேக்கி வைத்திருந்தார்கள்.

அப்படிச்செய்ய பலமுறை முயன்றும் விக்ரகம் சரியாக அமையவில்லை. ஸ்தபதி ஒருவரிடம் பஞ்சலோகத்தால் அழகிய கிருஷ்ணனின் திருவுரு ஒன்றை வடிக்கச்சொல்லி கோயில் அதிகாரிகளும் அந்த ஊரின் மேட்டுக்குடி மக்களும் கூறினார்கள். அந்தநேரத்தில் அந்த வட்டாரத்திலேயே வேலாசாரி என்ற அந்த ஸ்தபதிதான் பிரசித்தி பெற்றவரும் வல்லுனரும் ஆவார். இருப்பினும் என்ன காரணத்தினாலோ அவர்கள் நினைத்ததுபோல் சிற்பம் வடிவம் பெறவில்லை. பலமுறை முயன்று பார்த்தார் ஸ்தபதி.

ஏமாற்றம்தான் மிஞ்சியது. பஞ்ச லோகம் உருகும் உலைக்கு எதிரே அமர்ந்திருந்தார் ஸ்தபதி. உயர்ந்த உஷ்ண நிலையில் பஞ்ச லோகங்கள் குழம்பாய்க் கொதித்துக் கொண்டிருந்தது. ஏமாற்றத்தால் விரக்தியடைந்திருந்த ஸ்தபதி தன்னை மறந்த நிலையில் ‘‘கிருஷ்ணா, அழகிய உருவாய் வா. அற்புத வடிவில் வா. சிற்ப வடிவே வா!’’ என்று வேகமாகப் பலமுறை கூறிய வண்ணமிருந்தார். நேரம் சென்றது.

திடீரென்று அந்த ஸ்தபதி ‘கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று கதறிக்கொண்டு பஞ்ச லோகங்கள் குழம்பாய் கொதிக்கும் அந்த உலையில் குதித்தார். திரவமாய் உருகிய நிலையிலிருந்த பஞ்ச உலோகங்களுடன் அவரது உடலும் கரைந்து கலந்துவிட்டது. உடனே ஒரு அற்புதம் நிகழ்ந்தது. யாருடைய உதவியுமில்லாமல் அந்த பஞ்சலோகக் குழம்பு அவர்கள் நினைத்த வடிவமைப்பில் வடிந்து நின்றது. கூடியிருந்தோர் அனைவரும் மெய்சிலிர்த்துப் பேச்சிழந்து நின்றனர்.

இந்த ஆச்சர்யமான நிகழ்ச்சியின் நினைவாக ‘படாகத்தி’ என்றும் ‘மூசாரி உற்சவம்’ என்றும் பெருந்திருவிழாவாக ஆவணி மாதத்தில் கொண்டாடுகிறார்கள். இந்த பிம்பம் செய்த பிறகு மீதமிருந்த உலோகத்தை பட்டுத்துணியில் மூட்ைடயாகக் கட்டி சுவாமியின் தோளில் தொங்க விட்டிருக்கிறார்கள். பட்டுத்துணி நைந்துபோனால் வேறொரு துணியில் கட்டி வைக்கிறார்கள். எப்போதாவது இந்த பஞ்சலோக உலோகத்தைப் பரிசோதனை செய்ய வேண்டியிருந்தால் உதவியாக இருக்கும் என்பதற்கான ஏற்பாடு இது.

கருவறையில் சந்தான கோபாலகிருஷ்ணன் நாகாசனத்தில் அற்புதக் கோலங்கொண்டு அழகே உருவாய் வீற்றிருக்கிறார். மூலவரான இவர் ஐந்துதலை கொண்ட நாகாசனத்தில் மகாவிஷ்ணுவாகத்தான் காட்சியளிக்கிறார். மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தியிருக்கிறார். கீழ் வலக்கரத்தில் பத்மம் வைத்திருக்கிறார். இடக்கையை ஊன்றியபடி உள்ளார்.

வலது காலைக் குத்திட்டுக்கொண்டு இடதுகாலைக் கீழே தொங்கவிட்டபடி அமர்ந்திருக்கிறார். இது ஒரு அற்புதமான திருக்கோலம். கருவறைக்குப் பின்புறமுள்ள ஒரு சிறு பலகணி வழியாக அனந்தனை தரிசிக்கலாம். கருவறையின் தென்புறம் உள்ளடங்கிய பகுதியில் ஒரு கணபதி வீற்றிருக்கிறார். இந்தக் கோயிலில் பக்தர்களை மிகவும் கவர்வது வட்டமான கருவறையைச்சுற்றி வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும் பித்தளை பிம்பங்கள்தான்.

அதில் எத்தனையோ விதமான தெய்வ வடிவங்களையும் புராண நிகழ்ச்சிகளையும் வடித்திருக்கிறார்கள். வடகிழக்குப் பகுதியில் ஒரு பெரிய குளம் இருக்கிறது. அர்ச்சுனன் தன் வில்லைத் தரையில் குத்தியதும் கங்கை தீர்த்தம் இங்கு பெருகி வந்ததாம். இதில் நீராடி சுவாமி தரிசனம் செய்வது மிகவும் பயனுடையதாகும். இந்தக் குளத்தில் நீர் எப்போதும் வற்றியதில்லையாம். குளத்தின் அருகே புனிதமான கிணறு ஒன்றும் உள்ளது. இறைவனின் நைவேத்தியத்திற்கும் அபிஷேகத்திற்கும் இக்கிணற்று நீரைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

அருள், பொருள், ஆனந்தம் என்ற முப்பொருளுமான பகவானின் கருணை லோகாயத சுகங்கள், சந்தோஷமான குடும்பத்தின் முக்கிய லட்சணமான குழந்தைச் செல்வங்கள் அனைத்தையும் தந்தருளவல்லது என்பதால் இவர் அர்ச்சாவதாரங்களிலேயே பூரணத்துவம் பெற்றவர் இந்த சந்தான கோபாலகிருஷ்ணன் என்றும் வர்ணிக்கப்படுகிறார். இத்திருக்கோயில் மூன்று விதமான உற்சவங்கள் சிறப்பாகவும், விமரிசையாகவும் நடைபெறுகின்றன.

நவம்பர் டிசம்பர் மாதங்களில் ‘அங்கு ராத்திரி’ என்ற பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ‘த்வதிஜி’ என்ற உற்சவமும், பகவானின் ஜென்ம நட்சத்திரமான உத்திரத்தில் மாபெரும் உற்சவமும் நடைபெறுகின்றன. திருப்புணித்துறைப் பகுதியில் நிறைய எள்ளுச் செடிகள் இருந்ததால், எள்ளை எடுத்துக் கசக்கி எண்ணெய் பிழிந்து சுவாமிக்கு திரிவிளக்கு ஏற்றினான் அர்ச்சுனன். இந்தத் திரிவிளக்கில் படியும் மை மிகவும் விசேஷமானதாகக் கருதப்படுகிறது.

இங்கு சந்தான கோபால கிருஷ்ணனுக்கு முக்கிய வழிபாடு நல்லெண்ணெய் விளக்குதான். கேரளாவில் உள்ள சில முக்கிய கோயில்களின் தலபுராணங்களில் மகான் வில்வ மங்கள் சுவாமியாரின் பெயரும் இணைக்கப்பட்டு, அவர் அங்கு எழுந்தருளிய சுவையான நிகழ்ச்சிகளும் விவரிக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு சமயம் கார்த்திகை மாத உற்சவத்தின் நான்காம் நாளான கேட்டை நட்சத்திரத்தன்று, ஸ்ரீவில்வ மங்கள் சுவாமிகள் இந்தக் கோயிலுக்கு வந்தபோது கருவறையில் சுவாமியைக் காணவில்லையாம். அப்போது பதினைந்து யானைகளுடன் சீவேலி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தென்பிராகாரத்துக்கு வந்த சுவாமியாரின் கண்களுக்கு, பாலகிருஷ்ணன் ஒரு யானை மீதிருந்து மற்றொரு யானைக்குத் தாவித் தாவி விளையாடிக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது.

இந்த அபூர்வக் காட்சியைக் கண்டு ரசித்து ஆனந்தக் கண்ணீர் பெருகிக் கொண்டிருந்தாராம் ஸ்ரீவில்வ மங்கள் சுவாமிகள். அன்று அவர் நின்ற இடத்தில் தற்போது ஒரு ‘பலிக்கல்’ இருக்கிறது. அதற்கு தினமும் பலியிடும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. திருக்கேட்டை நாளன்று வில்வ மங்கள் சாமியாருக்குத் தரிசனம் கிடைத்ததால் அந்த விழாவிற்கு ‘திருக்கேட்டைப் புறப்பாடு’ என்று பெயர். அன்றைய தினம் திருச்சந்நதியில் வைக்கப்படும் தங்கக் குடம் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளால் நிரம்பி வழியும்.

இத்திருக்கோயிலில் கார்த்திகை மாதம் நடைபெறும் உற்சவம்தான் முக்கியமானதாகும். மாதத்தின் எல்லா நாட்களிலும், ஒட்டன் துள்ளல், கதகளி, கிருஷ்ணனாட்டம், சாக்கியார் கூத்து, குறத்தி ஆட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும், பாட்டுக் கச்சேரிகளும், வாணவேடிக்கைகளும் அமர்க்களப்படும். மூர்த்தி, தலம், தீர்த்தம் என்று மூவகையிலும் உயர்ந்துள்ள இத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீமந் நாராயணனின் அருளைப்பெற பக்தர்கள் எளிதாக வந்து செல்ல மற்றொரு அதிசயமும் நடந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் கொச்சியை ஆண்டு வந்த அரசர், திருப்புணித்துறை கிருஷ்ணன்மீது மாளாத பக்தி கொண்டிருந்தார். உற்சவக் காலத்திற்கென்று பதினைந்து யானைகளையும், அவற்றுக்கு உற்சவ நாட்களில் அணிவித்திட தங்கத்தாலான பட்டயங்களையும் கோயிலுக்குப் பரிசாக அளித்தார். அந்தசமயத்தில் ஆங்கிலேயர் அரசு நாடெங்கும் ரயில்பாதை போட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கொச்சி அரசர் ஆங்கிலேயர்களை அணுகி ஷோரனூர்-கொச்சி வழியில் இருப்புப்பாதை போட்டுத் தரும்படி கேட்டுக் கொண்டார்.

ஆங்கிலேய அரசு அதற்குத் தம்மிடம் போதிய பொருள் இல்லை என்றுகூறி மறுத்துவிட்டது. இந்த வழியாக ரயில்பாதை அமைந்தால் போக்குவரத்து எளிதாகி நாட்டு மக்கள் அனைவரும் திருப்புணித்துறை திருத்தலத்திற்கு வந்து, ஸ்ரீமந் நாராயணனைத் தரிசித்து வாழ்க்கையில் ஆனந்தம் பெற முடியுமே என்று யோசித்த மன்னர், கோயில் யானைகள் பதினான்கின் தங்கப் பட்டயங்களை விற்று அதில் வந்த பணத்தால் ஷோரனூர்-கொச்சி ரயில் பாதையை அமைத்தார்.

நாட்டு மக்கள் இறைவனை வழிபட்டு அவர்களின் வாழ்க்கை மேன்மை அடைவதற்காகக் கோயில் பணத்தை உபயோகிப்பது தவறில்லை என்ற முற்போக்கான எண்ணத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்த கொச்சி அரசரின் பெருமையை இன்றும் ஷோரனூர்-கொச்சி ரயில்பாதை பறைசாற்றுகிறது. அரவத்தின் மீது அமர்ந்த பரந்தாமனின் திருக்கோயில் நம் பாரத தேசத்தில் பல்வேறு இடங்களில் இருப்பினும் திருப்புணித்துறையில் இருக்கும் பகவானின் அர்ச்சாவதாரம் ஆச்சர்யமானது, அதிசயமானது, அரிதானதுமாகும். தன்னையே வேற்று உருவில் காண இச்சை கொண்ட ஸ்ரீமந் நாராயணனின் திருவிளையாடலின் விளைவே நமக்குக் கிடைத்த அற்புதத் திருத்தலம் திருப்புணித்துறை.

- டி.எம்.இரத்தினவேல்