இன்றைய அதர்மம் அன்று தர்மமாக இருந்தது!



மகாபாரதம் - 67

என்ன செய்வதென்று தெரியாமல் தருமபுத்திரர் இடிந்து உட்கார்ந்திருக்க, மற்ற சகோதரர்களும் கவலைப்பட, அவசரப்பட்டு சீக்கிரம் சாப்பிட்டு விட்டோமே என்று திரௌபதி வருத்தப்பட, பாண்டவர்கள் திகைத்தார்கள். மிக மோசமான காலம். இன்றையநாள் நன்றாகப் போகப்போவதில்லை என்று வருத்தப்பட்டார்கள். திரௌபதி கைகூப்பினாள். கிருஷ்ணனை நினைத்தாள்.

‘என்னுடைய புடவையை பிடித்து இழுத்து துச்சாதனன் அவமானப்படுத்தியபோது நீர் புடவையாக என்னை காப்பாற்றியதுபோல இந்த சங்கடத்திலிருந்தும் எங்களை காப்பாற்றும்,’ என்று மனமுறுக வேண்டினாள். ‘கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா’ என்று அலறினாள். ருக்மணியின் அருகே பகல்பொழுதில் படுத்துக்கொண்டிருந்த கிருஷ்ணர் சட்டென்று அங்கிருந்து நீங்கி திரௌபதியிடம் வந்தார். ‘‘என்ன வைத்திருக்கிறாய் திரௌபதி? இவ்வளவு தொலைவிலிருந்து வந்தது பசிக்கிறது.

ஏதேனும் கொடு’’ என்று சொல்ல, திரௌபதி வெட்கப்பட்டாள். ‘‘உண்டுவிட்டேன். துர்வாசருக்கே இல்லையென்ற நிலைமை. உங்களுக்கு எப்படித் தருவேன்’’ என்று சொல்ல, ‘‘ஏதேனும் இருக்கும், எடுத்து வா’’ என்று கிருஷ்ணன் கேட்க, திரௌபதி கொண்டுவந்த அட்சயப் பாத்திரத்தை வாங்கி அதன் ஓரம் சிக்கியிருந்த கீரையை மெல்ல வழித்து வாயில் இட்டுக்கொண்டார்.

நன்கு உண்பவரான வாசுதேவருடைய மனம் குளிரும்படி இந்த கீரை அமையட்டும் என்று திரௌபதி வேண்டினாள். பரமபதத்தில் இருக்கின்ற விஷ்ணுவினுடைய மனமும், பூலோகத்திலுள்ள பல உயிர்களுடைய வயிறும் அவர் உண்ட ஒருதுளி கீரையினால் நிறைந்தன. கரை ஏறிய துர்வாச சீடர்களுக்கு கழுத்து வரைக்கும் உணவு உண்டதுபோல இருந்தது. வாயிலிருந்து சுகமான சாப்பாட்டு வாசனை வீசிற்று.

அன்னங்களில் பருப்பும், மிளகும் சிக்கியிருந்தன. நல்ல உணவு உண்டதுபோல நாக்கு புரண்டு தவித்தது. சிறிய ஏப்பங்கள் வெளிவந்தன. ‘‘என்ன இது, உணவு உண்ண வேண்டும் என்று பசியோடு இங்கு வந்தோம். ஆனால் இப்படி வயிறு நிறைந்திருக்கிறதே! தருமர் உணவு ஏற்பாடு செய்திருப்பாரே, என்ன செய்வது? தருமர் நியாயவான். சத்தியவான்.

ஏதோ ஒரு விஷயம் அவரை காப்பாற்றுகிறது. அவரை சோதிக்கலாகாது. நாம் விரைவாக இந்த இடத்தைவிட்டு போய்விடுவோம்’’ என்று சொல்லி துர்வாசர் தன்னுடைய சீடர்களுடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். திரௌபதிக்கும், பாண்டவர்களுக்கும் வந்த துன்பத்தை கிருஷ்ணர் தீர்த்தார். போய் வருகிறேன் என்று விடைபெற்று அவர்களை ஆசிர்வதித்து மறைந்தார்.

சூரியனால் கொடுக்கப்பட்ட வரம் இருந்தாலும் அது தக்கநேரத்தில் உதவி செய்யாமல் இருந்தது. உதவி செய்ய, துன்பம் நீக்க, சோதனையில் வெற்றிபெற தெய்வம்தான் துணை என்பது தருமபுத்திரருக்கு தெளிவாகத் தெரிந்தது. அந்தணர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் தினந்தோறும் சந்தித்தபடி காம்யவனத்தில் பல பகுதிகளிலும் பாண்டவர்கள் சந்தோஷமாக நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

மழை, குளிருக்கு தாங்கும்படியாக அழுத்தமான மிகப் பெரிய பர்ணசாலை அமைத்து, சுற்றிலும் முள்வேலி பரப்பி, பாம்புகள், பூச்சிகள் உள்ளே வராதபடிக்கு முள்வேலிக்கு அப்பால் ஆழமான குழியைத் தோண்டி அதன்மீது நகரக்கூடிய மரப்பாலம் அமைத்து அங்கே திரௌபதியை பாதுகாப்பாக குடிவைத்தார்கள்.

காடுகளை அழித்து நாடாக்குவது என்பது அன்றைய காலகட்ட தர்மமாக இருந்தது. கிராமங்கள் ஐந்து சதவீதமும், நகரங்கள் மூன்று சதவீதமும்தான் இருந்தன. மற்ற இடங்களெல்லாம் புல்வெளியாகவும், மணற்பாங்காகவும், அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருந்தன. காடுகளில் துஷ்ட மிருகங்கள் வசித்து பல்கிப் பெருகின. ஜனத்தொகை பெருகிக் கொண்டே வந்ததால் விவசாயம் செய்வதற்குக் காடுகளை அழிக்கவேண்டிய கட்டாயம் வந்தது.

அதைத்தவிர வனங்களிலே இருக்கின்ற மிருகங்கள் கிராமங்களின் பக்கமோ, நகரத்தின் பக்கமோ வந்துவிடும் என்பதால், அவற்றை வேட்டையாடவேண்டிய கட்டாயமும் மனிதர்களுக்கு இருந்தது. அதை தங்களுடைய கடமையாக க்ஷத்ரியர்கள் கருதினார்கள். காடுகள் அழிப்பதின் ஆரம்பகட்டமாக துஷ்ட மிருகங்களை வேட்டையாடுவது முக்கியமாக இருந்தது. பசுக்களை புலியும், சிறுத்தையும், சிங்கமும் கொன்று விடுவதால், நிலங்களை யானைகள் பாழாக்குவதால் அவற்றை அழித்தொழிக்க வேண்டிய அவசியம் பரதகண்டத்து மனிதர்களுக்கு இருந்தது.

விவசாயிகளுக்காகவும், காடுகளுடே போகின்ற வியாபாரிகளுக்காகவும், வனத்திலே அமைதியாக ஜபதபங்களும், தியானமும் செய்ய வேண்டியிருந்த அந்தணர்களை காப்பாற்றக் கருதியும், க்ஷத்திரியர்கள் வனமிருகங்களை ஒடுக்கி காடுகளில் உள்ள மரங்களை வெட்டி விளைநிலங்களை உருவாக்கினார்கள். கிராமங்களை உருவாக்கினார்கள். காடுகள் மிதமிஞ்சி இருந்தன என்பதுதான் அன்றைய பரத
கண்டத்தின் நிலைமை.

மழை பெறுவதற்கு காடுகள் உதவி செய்தாலும், அந்த அடைமழையின் காரணமாக தாவரங்கள் செழித்து நெருக்கமாக வளர்ந்தன. இன்றைய நகரங்களின் வீடுகள்போல அன்றைய காடுகள் காற்று புகாத வண்ணம், நீர் வடியாதவண்ணம் இருட்டுப் பாகமாவும், புதைச் சேறாகவும், மூங்கிலால் சுவர்போல எழுப்பப்பட்டதாகவும், பெரிய மரங்களின் இலைகள் உதிர்ந்து, அவை உரமாகி இன்னும் உச்சாணி கிளைவரை செழித்து வளர்வதற்கு வகைசெய்பவையாகவும் இருந்தன.

மரங்களை வெட்டி எடுத்தல் என்பது மனித எத்தனத்திற்கு அதிகமான காரியம். எனவே, அதை தீயிட்டு கொளுத்துதலையும் அவர்களே செய்து வந்தார்கள். அன்றைய தர்மம் இன்றைக்கு அதர்மமாக இருக்கிறது. இன்றைய தர்மம் அன்று அதர்மமாக இருந்தது. ஆண்களோடு பேசுவதுகூட கூடாது என்பது திருமணமான பெண்களின் விதியாக இருந்தது. ஆனால், இன்று பேசுவது உரிமை என்று வந்துவிட்டது!

பிந்து மகரிஷியின் ஆணைப்படி திரௌபதியை தனியாக ஆசிரமத்தில் விட்டுவிட்டு அந்தணர்களை காப்பாற்றுவதற்காகவும், கொடிய விலங்குகளை கொல்வதற்காகவும் திசைக்கு ஒருவராக பாண்டவர்கள் பிரிந்து வேட்டையாடச் சென்றுவிட்டனர். அந்தநேரம் சிந்துதேச மன்னனான ஜெயத்ரதன் திருமண விருப்பத்தோடு சால்வ தேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான். தன்னை ஆடம்பரமாக அலங்கரித்துக் கொண்டிருந்தான். பல மன்னர்கள் சூழ பேச்சும், சிரிப்புமாக காம்யவனத்திற்கு வந்து சேர்ந்தான்.

திரௌபதி வந்து நிற்பதையும், திண்ணையையும், வாசற்படியையும் சுத்தம் செய்வதையும், குனிந்து கோலமிடுவதையும், கூரைமீது இருந்த கொடிகளை இழுத்து, வேறு திக்கில் படர விடுவதையும் பார்த்தான். எல்லா அசைவுகளிலும் திரௌபதி மிகவேகமாக அவன் மனதைக் கவர்ந்தாள். மானிடப் பெண்ணா... இவ்வளவு அழகா... இந்த வனத்தில் இவளுக்கு என்ன வேலை? எந்த மகரிஷியின் மனைவி? இவ்வளவு அழகானப் பெண்ணை இந்த வனத்தில் பார்த்துவிட்டு நான் எந்த ஊருக்குப் போய் எவளை திருமணம் செய்வது? எதற்கு திருமணம் செய்வது? இவள் கிடைத்தால் போதுமே.

இதோடு என் பெண் ஆசை ஒழிந்து விடுமே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். ‘‘இவள் யாருடைய மனைவி என்று கேட்டு வா. இவ்வளவு அழகிய பெண்ணை நான் பார்த்ததே இல்லை. எவ்வளவு அழகிய புருவங்கள். மனதை கவரும் இடுப்பு. எவ்வளவு பெரிய கண்கள். இந்தப் பற்கள் எவ்வளவு அழகாக இருக்கின்றன. உடலின் மத்திய பாகம் எத்தனை சிறியதாக இருக்கிறது. இவள் திருமணமான பெண் போலத்தான் தோன்றுகிறாள். யாரிவள் கணவன் என்று உடனே விசாரித்து வா.

இவள் கிடைத்தால் போதும், இவள் கிடைத்தால் போதும்” என்று உடன் வந்திருந்த கோடிகாவிடம் சொல்லிப் பரவசப்பட்டான். குண்டலங்கள் அணிந்த கோடிகா அந்த புல்மேட்டில் ஏறி திரௌதியை நெருங்கினான். ‘‘நான் கோடிகா. கோடிகாசிய மன்னன். நீ யார்? இந்த அடர்ந்த வனத்தில் உன்னைப் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கிறது. இவ்வளவு அழகிய பெண்ணான நீ முட்களும், புதர்களும் நிறைந்த இந்த வனத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்? இந்தக் காடு உனக்கு பயம் தரவில்லையா.

முள்ளையும், பாம்புகளுக்கான பள்ளங்களையும் வைத்துக் கொண்டா நீ தைரியத்துடன் இருக்கிறாய்? நீ தேவகுமாரியா? இந்திரனின் மாளிகையிலிருந்து வந்திருக்கிறாயா? உன்மீது எனக்கு மரியாதை அதிகரித்திருக்கிறது. அதோ, அந்தத் தங்கத்தேரில் அமர்ந்து உன்னையே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பவர் சௌஜல தேசத்து மன்னனான ஜெயத்ரதன். அவனுடைய நண்பர்களோடும், அவனுடைய படைகளோடும் நாங்கள் பயணப்பட்டிருக்கிறோம்.

காம்யவனத்தின் அழகுகண்டு சற்று இளைப்பாறினோம். இங்கு உன்னைக்கண்டதும் இந்த காம்யவனமே தனித்த சோபை பெற்றுவிட்டது. அழகிய கேசம் உடையவளே, எங்களைப் பற்றி உனக்கு அறிமுகம் செய்து விட்டோம். சௌஜல தேசத்து அற்புதமான மன்னனான ஜெயத்ரதன் படைகளின் வலிமையைப் பார். அவனுடைய வலிமைமிக்க சகோதரர்கள் இந்திரனைச்சுற்றி தேவதைகள் நிற்பதைப்போல அவனுக்குப் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

நீ யாருடைய மனைவி? யாருடைய மகள்? கதம்ப மரத்தின் கிளையை வளைத்து நீ நிற்கின்ற இந்த கோலமே உன்னை பேரழகியாக காட்டுகிறது. அங்கு அத்தனைப் பேரும் திகைத்து நிற்பதைப் பார்” என்று புகழ்ந்து சொன்னான். திரௌபதி கதம்ப மரத்தின் கிளையை விட்டுவிட்டு தன்னை போர்த்திக்கொண்டாள். ‘‘புருஷன் இல்லாத நேரத்தில் நான் பரபுருஷனோடு பேசக்கூடாது.

ஆனால், உனக்கு பதிலளிக்க இங்கு வேறு ஆணோ, பெண்ணோ, ரிஷிகளோ, அந்தணர்களோ இல்லை. அதனால் வேறு வகையற்று உன்னோடு நான் பேசவேண்டிய அவசியம் ஏற்படுகிறது,’’ அந்த அரசன் பேசிய மரியாதைக்கு மகிழ்ந்து திரௌபதி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். ‘‘நான் துருபதராஜனின் மகள். கிருஷ்ணை என்று என்னை எல்லோரும் அறிவார்கள்.

நான் பஞ்சபாண்டவர்களான தருமர், பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவரின் மனைவி. அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாட நாலாதிசைக்கும் போயிருக்கிறார்கள். யுதிஷ்டிரர் கிழக்கு பக்கமாகவும், பீமன் தெற்கு பக்கமாகவும், அர்ஜுனன் வடக்கு பக்கமாகவும், நகுல- சகாதேவர் மேற்குப் பக்கமாகவும் போயிருக்கிறார்கள். நீங்கள் குதிரைகளை அவிழ்த்துவிட்டு இளைப்பாறிக் கொள்ளுங்கள். நான் உணவு தயாரித்து உங்கள் சேவகர்கள் மூலம் உங்கள் இடத்திற்கு அனுப்புகிறேன்” என்று அவசரமாக பர்ணசாலைக்குள் புகுந்தாள்.

அவளைப் பற்றிய செய்தியை சுமந்துகொண்டு நண்பன் ஜெயத்ருதனிடம் போய் திரௌபதியின் சிறப்புகளை விவரித்தான். மற்றவர்களும் அருகே நெருங்கிவந்து காதுகொடுத்துக் கேட்டார்கள். ‘‘என்ன நண்பனடா நீ. அவ்வளவு அற்புதமான ஒரு அழகியை நான் மோகிக்கிறேன் என்று தெரிந்த பிறகும், அவளை இழுத்து வந்து என் மடியில் அமர வைக்காமல் வெறுமே ஜாதகத்தை கேட்டு வந்து நிற்கிறாயே.

துடிப்பாக ஒரு நண்பன் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். நீ துடிப்பானவன் அல்ல. போய் அவளை அழைத்து வா.” என்று சீறினான் ஜெயத்ருதன். ‘‘இல்லை. அவள் பதிவிரதாதேவி. பஞ்சபாண்டவர்களின் மனைவி. பஞ்சபாண்டவர்களின் வீரதீரம்பற்றித் தெரியாதா? யாரைப் பகைத்துக்கொள்வது என்பதில் ஒருவன் கவனம் செலுத்தவேண்டும். நீ தவறானபடி ஆசையை வளர்ப்பதை விட்டுவிட்டு போய் அந்தப் பெண்ணிடம் பேசிப்பார்.

உனக்கு தானாக அவள்மீது மரியாதை எழும். உன் ஆசைகள் அறும்.” என்று புத்திமதி சொன்னான். புத்திமதிகள், கெட்டவர்களுக்குப் பிடிக்காது. மோக வயப்பட்டவர்களுக்கு தன் மோகம் மட்டுமே செயலாக இருக்கும். மற்றவை சிறிதளவுகூட முக்கியத்துவம் பெறாது நகர்ந்து விடும். ‘‘நான் போய்ப் பேசிவருகிறேன். நான் போய் அழைத்து வருகிறேன். நீ விலகி நில்” என்று சொல்லி, மற்ற நண்பர்களைப் பார்த்து ஏளனச் சிரிப்பு சிரித்தவாறு அவன் புல்மேடு ஏறினான்.

‘‘அடிக் கிருஷ்ணை, பஞ்சபாண்டவர்களின் மனைவியா நீ? செல்வமெல்லாம் இழந்து நகரத்தைவிட்டு காட்டிற்கு வந்து பேரவஸ்தைப்படுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னுமா நீ அவர்களைச் சுற்றிக் கொண்டிருக்கிறாய்? அறிவுள்ளப் பெண்கள் செல்வம் இழந்த கணவனை உபாசிக்க மாட்டார்கள்.

அக்கறை செலுத்த மாட்டார்கள். இவ்வளவு பெரிய அழகியாக இருந்து உனக்கு அறிவில்லையே. எதற்கு அவர்கள் பின்னே சுற்றுகிறாய்? வா, வந்து என் தேரில் ஏறிக்கொள். என் திரண்ட செல்வத்தை மனமாற அனுபவி. என் அரண்மனை அற்புதமானது. ஆயிரக்கணக்கான தாதிகள் உண்டு. இந்தக் காட்டில், இந்த குடிசையில் எப்படித்தான் வசிக்கிறாயோ! மழைக்கும் ஆகாது. வெய்யிலையும் காக்காது. பிடிவாதம் பிடிக்காதே. தேவையற்று கோபம் கொள்ளாதே. வீரதீர சொற்களைச் சிதறடிக்காதே.

அறிவோடு யோசி. உனக்கு நான் வேண்டுமா அல்லது அந்த அனாதைகளா?” என்று அகம்பாவத்துடன் கேட்டான். ‘‘சீ! எவ்வளவு வெட்கம் கெட்ட பேச்சு,’’ திரௌபதி படம் எடுத்த பாம்புபோல சீறினாள். ‘‘புருஷர்கள் இல்லாத இடத்தில் உள்ளே நுழைந்து வாய்க்கு வந்ததை உளறுகிறாயே, நீ மன்னனா? உன்னால் மக்களுக்கு எப்படி நன்மை செய்ய முடியும்? தீமையே உருவாகி நிற்கிறாயே, உனக்கு அன்னியமான பெண்ணிடமே இப்படி ஆசை வைக்கிறாயே, உனக்கு அடங்கிய பெண்கள் மீது நீ எத்தனை ஆளுமை செய்திருப்பாய்!

எத்தனை இம்சை செய்திருப்பாய்! கேவலமான மன்னன் என்று எப்படி பெயரெடுத்திருப்பாய்! பாண்டவர்களின் பலம்பற்றி உனக்கு அறவே தெரியாதா? நல்ல மனிதர்களின் சகவாசம் உனக்கு ஏற்பட்டதே இல்லையா? அதோ நிற்கிறதே அவ்வளவு பெரிய கும்பல், அதில் ஒருவன்கூடவா நல்லவன் இல்லை, ஒருவன் கூடவா உன்னை தடுக்கவில்லை?”

‘‘தர்மம் பற்றியா பேசுகிறாய் கிருஷ்ணை?” அவன் கொஞ்சலாக பேச்சை ஆரம்பித்தான். ‘‘மன்னர்களுடைய தர்மம் பற்றி உனக்குத் தெரியாதா? உலகத்தில் உள்ள பெண்களும், ரத்தினங்களும் வலிமையுள்ள மன்னருக்குச் சொந்தமானவை.” ‘‘கேட்பாரற்று வாழும் பெண்களின் கதியை எனக்கு சட்டமாகக் கொள்கிறாயா? என்னுடைய கணவர்கள் மிகப்பெரிய வீரர்கள். யட்ச, கந்தர்வ, ராட்சஸர்களோடு போர்புரியும் திறன் உடையவர்கள். அதர்மர்கள் மீது மிகுந்த கோபமுடையவர்கள்.

நாகப்பாம்பின் விஷம்போல வீர்யம்மிக்க கோபம் அவர்களுடையது. தபஸ்விகள், வித்வான்கள், பத்தினிப் பெண்கள் ஆகியோர் வனவாசிகளாக இருந்தாலும், கீழ்த்தரமாக பேசுவது கூடாது என்பது உனக்குத் தெரியாதா? மனிதர்களில் உன்னைப்போல நாய்கள்தான் இவ்விதம் குரைக்கும். பாதாளச் சாக்கடையில் விழுவதற்கே நீ முயற்சி செய்துகொண்டிருக்கிறாய்.

உன்னைக் காப்பாற்ற யாரும் இல்லை. உன் வீரத்தை பெரிதாக நினைக்கிறாயா? மதயானை எதிரே வரும்போது, அதை ஒரு சிறிய கொம்பினால் எதிர்ப்பதுபோல இருக்கிறது உன் செய்கை. தூங்குகின்ற சிங்கத்தின் பிடரியை பிடித்து இழுத்து அதை வெறியேற்றுவதுபோல் இருக்கிறது உன் காரியம். கோபம் கொண்ட பீமசேனனின் கர்ஜனையை கேட்கும்போது உன்னால் நிற்கக்கூட முடியாது. சுருண்டு விழுந்து விடுவாய். உனக்கு கர்வம் வந்திருப்பதும் நீ அழிவதற்குத்தான்.”

‘‘இன்னும் என்ன பேசிக் கொண்டிருக்கிறாய்?” நண்பன் ஒருவன் சீறினான். ஜெயத்ரதன் அவனை வியப்போடு பார்த்தான். ஒரு சிறிய தேசத்தின் இளவரசனான அவனுடைய நண்பன் அவளுடைய போர்வையைப் பற்றி அப்படியே இழுக்க நினைத்தான். அவளைத் தூக்க முயற்சித்தான். ‘‘தொடாதே, விலகி நில்” அவள் தன் போர்வையை வேகமாக உதற, அவன் சுவரில் அடிபட்டு கீழேவிழுந்தான். அவனை தூக்கிக் கொண்டு போனார்கள்.

‘‘இன்னொரு முறை இந்த முயற்சி நடந்தால் நான் பிராணஹத்தி செய்து கொள்வேன்,” என்று அவள் உரக்கக் கத்தினாள். ஆனால், திரௌபதியின் பர்ணசாலைக்குள் ஆறேழு அரசர்களும், இளவரசர்களுமாக ஜெயத்ரதனின் நண்பர்கள் அடைத்துக்கொண்டு நின்றார்கள். அவளுக்கு வேறுவழியே இல்லை என்று தெளிவாகத் தெரிந்தது. ‘‘என் புருஷர்கள் மீது நான் வைத்திருக்கின்ற பிரேமை உண்மை என்றால், நான் கற்புக்கரசி என்றால் அவர்களால் நீங்கள் அத்தனைபேரும் வதைபடுவீர்கள் என்பது நிச்சயம்.”

திரௌபதி அவர்களை நோக்கி நடக்க அவர்கள் வழிவிட்டார்கள். அவள் புல் சரிவில் இறங்கி நடந்து பாதையில் ஏறி ஜெயத்ரதனின் தேரில் ஏறி உட்கார்ந்தாள். ஜெயத்ரதன் சந்தோஷமாய் வெற்றி கூச்சலிட்டான். மற்றவர்கள் எதிரொலித்தார்கள். உற்று கவனித்தால் திரௌபதி என்கிற பெண்ணுக்கு ஏற்படுகின்ற இந்த இரண்டாம் முறை அவமானம் அன்றைய வாழ்வின் நிலையை நமக்குச் சொல்கிறது.

வலிமைமிக்க க்ஷத்ரியர்கள் தாங்கள் வைத்ததே சட்டம் என்ற நினைப்போடு பொதுமக்களின்மீது தங்கள் ஆட்சி அதிகாரத்தை செலுத்திக்கொண்டிருந்தார்கள். உலகம் முழுவதும் தங்கள் காலின் கீழ் இருக்கிறது. அத்தனை மக்களும் தங்களின் அடிமை என்ற நினைப்பிலேயே அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். தர்மத்தின் பக்கம் நிற்பது என்பது அவர்களுக்கு வெறும் மனப்பாடப் பகுதியாக இருந்தது. வாழ்வின் ஒருபகுதியாக மாற அவர்களுக்குச் சொல்லித் தரப்படவில்லை. அவர்கள் அதை ஏற்கவும் இல்லை.

ஒரு பர்ணசாலையில் அழகிய ஒரு பெண் இருப்பின் அவள் தனக்குத்தான். க்ஷத்ரியனிடம் எந்த  தர்மத்தைக் குறித்து பேசமுடியும்? சொத்து குறித்தோ, செல்வம் குறித்தோ, நதிநீர் பங்கீடு குறித்தோ அல்லது பசுக்கள் குறித்தோ அவனோடு பேச முடியுமா? அந்தநேரம் என்ன தோன்றுகிறதோ அதைத்தான் கட்டளையாகச் சொல்லுவான். அவனுக்கு என்ன விருப்பமோ அதைத்தான் தர்மமாகப் பேசுவான்.

இதுதான் பூபாரம். இதுதான் பூமியின் அவஸ்தை. பெண்களின் அழுகுரல் எங்கு அதிகமாக ஒலிக்கிறதோ, அங்கு காற்றில் விஷம் கலந்தது போன்ற உத்பாதங்கள் ஏற்பட்டு விடுகின்றன. கடல் ஊருக்குள் வருகிறது. ஆனால், பூமியின் இந்த எதிர்ப்புகளையெல்லாம் புறக்கணித்துவிட்டு தொடர்ந்து வன்முறையே தன் தர்மம் என  க்ஷத்ரியர்கள் கொள்கிறபோது அவதாரம் ஏற்படுகிறது.

கிருஷ்ணனுடைய காரியம் இந்த க்ஷத்ரியர்களின் முதுகெலும்பை முறித்தல். இதற்கு மகாபாரதத்தில் பல்வேறு விதமான சாட்சியங்கள் இருக்கின்றன. சாதுக்களை ரட்சித்தல் என்பது க்ஷத்ரியர்களை அவர்கள் இடத்தில் நிலை நிறுத்துதல் என்றுதான் அர்த்தம். தேர் நகர்ந்தது. திரௌபதியை எங்கே அழைத்துப் போவது என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

(தொடரும்)

பாலகுமாரன்