நல்ல செல்வாக்குடன் இருப்பீர்கள்!என்ன சொல்கிறது, என் ஜாதகம்?

* எனது தம்பி மகளின் ஜாதகம் இணைத்துள்ளேன். அவருக்கு திருமணம் தடைபட்டு வருகிறது. எப்பொழுது திருமணம் நடைபெறும்? ஏதாவது தோஷம் உள்ளதா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?
- ஜெயகாந்தம், பொறையார்.

தங்கள் தம்பி மகளின் ஜாதகத்தில், லக்னாதிபதி செவ்வாய் 10ல் குரு சனியுடன், 7ல் சூரியன், புதன், 8ல் சந்திரன், சுக்கிரன் என்று அமைந்திருக்கிறது. இவ்வமைப்பு களத்திரதோஷத்தை தெளிவாகக் காட்டுகிறது. 7க்குடைய சுக்கிரன் 8ல் இருப்பதும் திருமண பந்தத்தின்மீது அவருக்கு ஈடுபாடு இல்லாததை காட்டுகிறது.

தற்பொழுது உள்ள சூழ்நிலையில் மனக்குழப்பமும், முடிவெடுப்பதில் தயக்கமும் இருப்பது தெளிவாக தெரிகிறது. அருகில் உள்ள பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளையில் தீபம் ஏற்றிவரச் சொல்லவும். ஒரு திங்கட்கிழமை திருவெண்காடு சென்று அங்கு அருள்பாலிக்கும் அகோர மூர்த்திக்கும், ஸ்வேத மகா காளிக்கும், புதனுக்கும் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்துவரவும். குலதெய்வ வழிபாடு மறக்காமல் செய்து வரவும். 2018 ஜூலைக்குள் நல்ல பலனைஎதிர்பார்க்கலாம்.

* நான் நர்சிங் படிப்பு படித்துள்ளேன். எனது ஜாதக அமைப்பிற்கு அரசு வேலை கிடைக்குமா? அல்லது சுயதொழில் செய்யலாமா? சுய தொழில் என்றால் என்ன தொழில் அமையும்?
- தேவி, பாபநாசம், தஞ்சாவூர்.

தங்கள் ஜாதகப்படி லக்னாதிபதி குரு 6ல், பாக்யஸ்தானத்தில் கேது என்ற அமைப்பு உள்ளது. அரசு வேலையை குறிக்கும் சூரியன் 8ல் புதனுடன் இணைந்திருக்கிறார். ஆகவே அரசுவேலை தாமதமாகக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதுவரை தனியாரிடம் வேலை பார்க்கவேண்டிய சூழல்உள்ளது. சுயதொழிலுக்கான வாய்ப்பு 43 வயதுவரை இல்லை. தனியார் வேலையிலேயே நல்ல செல்வாக்குடன் இருக்க வாய்ப்பு அதிகம்.

கிளியே, கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில்
ஒன்றும் இல்லா
வெளியே, வெளி முதல் பூதங்கள் ஆகி விரிந்த
அம்மே
அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே

- என்ற அபிராமி அந்தாதிப் பாடலை தினமும் பாராயணம் செய்து வர அரசு வேலை முயற்சி வெற்றியடையும்.

* என் மகள் எம்.காம். படித்து இருக்கிறார். டி.என்.பி.எஸ்.சி குரூப் படித்து வருகிறார். ஆகஸ்டு மாதம் தேர்வு எழுத இருக்கிறார்.
திருமணம் ஆகிவிட்டது. ஒரு பெண்குழந்தை இருக்கிறது. தற்சமயம் அவருக்கு அடிக்கடி உடல்நலன் பாதிக்கப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அவர் உடல்நிலை சரியாகி விடுமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? தேர்வில் வெற்றி பெற்றுவிடுவாரா?
- ஆர்.ஜெயபிரகாஷ் நாராயணன், மேட்டுப்பட்டி தாதனூர், சேலம்.

லக்னாதிபதி புதனும் செவ்வாயும் பரிவர்த்தனை, 8ல் ராகு, செவ்வாயின் வீட்டில் சனி - இது உங்கள் மகளுடைய ஜாதக அமைப்பு. இதனால் தங்கள் மகளுக்கு வயிறு, ரத்தம் சம்பந்தப்பட்ட நோயும், அதற்குண்டான சிகிச்சையும் தேவைப்படும். அறுவை சிகிச்சைக்கு சாத்தியம் அதிகம். ஆனாலும் பயம் வேண்டாம் 2017 டிசம்பருக்குள் முழுமையாக குணமாகி விடுவார்.

9க்கு அதிபதி சுக்கிரன் 2ல் சூரியன் கேதுவுடன் இருப்பது அரசு வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும் என்றே காட்டுகிறது. ஆனாலும் அரசு வேலை கிடைத்திட வாய்ப்பு அதிகம் உண்டு. ஞாயிறுதோறும் ராகுகாலத்தில் துர்க்கைக்கு 2 நல்லெண்ணெய் தீபம் வீட்டிலிருந்து எடுத்து சென்று ஏற்றி வரவும். இது அவரது உடல்நிலை சீக்கிரம் குணமாவதற்கு கண்டிப்பாக துணை செய்யும். குலதெய்வத்திற்கு திங்கள்தோறும் விரதம் இருந்து, மாலைவேளையில் சிவனுக்கு தீபம் ஏற்றிவர அரசு வேலை கிடைப்பதில் உள்ள தாமதம் நீங்கும். தேர்விலும் வெற்றி பெற அதிக வாய்ப்புகள் ஏற்படும்.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்  மிக நல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும்
உடனே ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே! - என்ற கோளறு பதிகப் பாடலை தினமும் படித்துவர சகல தடைகளும் நீங்கும்.

* என் மகளின் ஜாதகம் இணைத்துள்ளேன். திருமணம் தடைபடுகிறது. பெண் பார்க்க வருபவர்கள் பின்பு வேண்டாம் என்று சொல்லி விடுகிறார்கள். எப்பொழுது திருமணம் நடக்கும்? பரிகாரம் என்ன?
- மாணிக்கம், சேலம்.

லக்னாதிபதி குரு 4ல் ராகுவுடன் சொந்த வீட்டில், களத்திர ஸ்தானாதிபதியும் சொந்த வீட்டில் செவ்வாயுடன் - இப்படி ஜாதகத்தில் ஓர் அமைப்பு இருப்பதால் சிறிது தோஷத்தை ஏற்படுத்தும். ஏமாற்றங்களை சந்தித்து வந்திருக்கும் நீங்கள், உறவில் தகுந்த வரன் அமைந்தால் பொருத்தி பார்க்கவும். ஜூன் 2018க்குள் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. திருசெங்கோடு சென்று ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரருக்கு அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.

கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம்,
கசிந்து பக்தி
பண்ணியது உன் இரு பாதாம்புயத்தில்,
பகல் இரவா
நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து
நான் முன்செய்த
புண்ணியம் ஏது? என் அம்மே. புவி ஏழையும்
பூத்தவளே.

- என்ற அபிராமி அந்தாதிப் பாடலை தினமும் 12 முறை பாராயணம் செய்துவரச் சொல்லுங்கள்.

* எனது மகனின் ஜாதகம் இணைத்துள்ளேன். கடவுள் நம்பிக்கை, பக்தி எதுவும் இல்லாமல் இருந்து வருகிறான். என்ன காரணம்? இறைவனிடம் ஈடுபாடு வர பெற்றோராகிய நாங்கள் என்ன செய்ய வேண்டும்?
- ஒரு வாசகர்.

லக்னாதிபதி சுக்கிரன் 11ல், லக்னத்தில் செவ்வாய், 4ல் கேது. அம்சத்தில் லக்னத்தில் சூரியன் சந்திரன் சேர்க்கை - இவ்வகை ஜாதகம் உடையவர்கள் எதையும் அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள். தங்களுடைய சந்தோஷத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பரிகாரம் எதுவும் தேவையில்லை. அவரே மனம்மாறி இறை வழிபாட்டில் கவனம் கொள்வார். இது நடக்க சில காலம் ஆகலாம். ஆனால், தவறான வழிக்கு செல்லாமல் மட்டும் கவனித்து வாருங்கள்.

ஸ்ரீவாராஹி உபாசகர் ஜோதிடர் தி.ஸ்ரீனிவாசராமன்